மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்!

0
2

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா. 

மங்கையர்கள் கூடுகிறார் மனமுருகப் பாடுகிறார்
பொங்கிவரும் பக்தியினால் புலருமுன்னே எழும்புகிறார்
எழும்பாத மங்கையரை எழுந்துவர வேண்டுகிறார்
எம்பிரான் திறமுரைத்து எல்லோரும் பாடுகிறார்

ஆதியொடு அந்தமும் ஆண்டவனே என்கின்றார்
மாலறியா நான்முகனும் மலைக்கநிற்பா னென்கின்றார்
பரஞ்சோதி என்கின்றார் பருங்கருணை யென்கின்றார்
எழுந்திருந்து வந்திடுவீர் ஈசன்புகழ் பாடிடுவோம்

முத்தன்ன வெண்ணகையீர் முகமகமலர்ந்து வந்திடுவீர்
அத்தன் ஆனந்தன் அவன்புகழைப் பாடிடுவோம்
சித்தம் அழகுடையீர் சிவனடியைப் பரவிடுவோம்
முத்தத்தில் நிற்கின்றோம் முகமலர்ந்து வாருங்கள்

விண்ணாகி நிற்கின்றான் மண்ணாகி நிற்கின்றான்
வேதாமாய் நாதமாய் வியாபித்தும் விரிந்துள்ளான்
கண்ணார் அமுதமுமாய் காணுகிறான் கண்ணுதலான்
காலையிலே நீராடிக் கழல்பணிவோம் எழுந்திடுவீர்

சிவன்புகழைப் பாடுகிறோம் செவியதனைக் கேட்கலையோ
அவன்புகழைக் கேட்காத அச்செவியும் நற்செவியோ
வன்செவியை வைத்திருக்கும் மாதரசே எழுந்திடுவாய்
மாதேவன் புகழ்பாடி மார்கழியில் மகிழ்ந்திருப்போம்

பகலிரவு எல்லாமே பரஞ்சோதி நினைப்பென்பாய்
படுக்கையினை அணைத்தபடி படுத்திருக்கும் மாயமென்ன
நேசமென்பாய் பாசமென்பாய் நினைப்பெல்லாம் இறையென்பாய்
எழுந்தோடு வந்திடுவாய் ஏத்திடுவோம் இறைநாமம்

தித்திக்கப் பேசினாய் திரும்பவும் உறங்குகின்றாய்
வண்ணக் கிளிமொழியார் வந்திட்டோம் வாசலுக்கு
கண்ணைத் துயின்று காலத்தைப் போக்காதே
கண்ணுக் கினியானைப் பாடிடுவோம் வந்திடுவாய்

கோழிகூவும் சத்தமும் குருகுகளின் சத்தமும்
காதினிக்குக் கேட்கலையா காலையென்று தெரியலையா
ஊழி முதல்வனாய் உயர்ந்துதிருக்கும் பரம்பொருளை
உணர்வுடனே பாடுகிறோம் உடனெழுந்து வந்திடுவாய்

பெருந்துயரைத் தீர்க்கும் பரம்பொருளைப் பாடுகிறோம்
பரம்பொருளே கடைத்தேற்றும் தீர்த்தமாய் ஆகியுள்ளான்
அவன்புகழைச் சேர்ந்திருந்து அனைவருமே பாடிப்பாடி
ஆடிடுவோம் நீர்நிலையில் அமைந்திடுமே நல்வாழ்வு

அப்பனைப் பாடுவோம் அம்மையையைப் பாடுவோம்
அருந்திறத்தைப் பாடுவோம் அருங்கலைத்தை பாடுவோம்
அறியாமை போயகல அனைவருமே சேர்ந்தொன்றாய்
அதிகாலை நீராடி அகமெண்ணிப் பாடிடுவோம்

ஆணாகிப் பெண்ணாகி அலியாக நிற்கின்றான்
அனைத்துக்கும் காரணமாய் ஆகியும் இருக்கின்றான்
அண்ணா மலையான் அருள்சுரக்கும் ஊற்றாவான்
அவன்புகழைப் பாடிநின்று அனைவரும் நீராடிடுவோம்

வாதவூர்ப் பிறந்தார் மணிமணியாத் தமிழ்கொண்டு
பேரறிவாம் பெரும்பொருளை பாடுகிறார் பக்தியுடன்
மார்கழியில் நீராட மங்கையர்கள் அழைக்கவென
திருவெம்பாப் பாட்டாக தித்திப்பாய் வழங்கியுள்ளார்

அதிகாலை வேளையிலே அனைவருமே எழுந்திருந்து
அரன்நாமம் அகமெண்ணி ஆடிடுவோம் நீர்நிலையில்
நீர்நிலையில் ஆடுகையில் நினைவெல்லாம் நிமலனிடம்
நிறைந்திருக்க வேண்டுகிறார் வாதவூர்ப் பெருமகனார்

மார்கழியை மனமிருத்தி ஆண்டாளும் வேண்டுகிறாள்
மார்கழியின் மகத்துவத்தை மனமிருத்தப் பாடுகிறாள்
சைவமும் வைணமும் சங்கமிக்கும் காலமாய்
மார்கழியை ஆக்கிவிட்டார் அடியார்கள் இருவருமே

திருப்பாவை திருவெம்பாவை திவ்வியமாய் இருக்கிறது
திருவருளை மனமிருத்த திருவமுதாய் வாய்த்திருக்கு
ஏலோரெம் பாவாய் இதயத்தில் அமர்கிறது
எல்லோரும் இறையெண்ணி இதையோதி இருந்திடுவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.