சேக்கிழார் பாடல் நயம் – 152 (ஒப்பில்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
இலை மலிந்த சருக்கம்
ஆனாய நாயனார் புராணம்
திருத்தொண்டர் புராணத்தின் இலைமலிந்த சருக்கத்தின்கண் அமைந்த ஆனாய நாயனார் புராணம் இனி இப்புராணத்தில் கூறப்பெறும் முன் வரலாற்றைக் காண்போம்.சோழ நாட்டில் மழநாடு எனப்பெற்ற நீர்வளம் நிறைந்த நாட்டில், வயலில் கரும்பும் வாழையும் செந்நெல்லும் விளைந்தன. வயல்களை மருங்கில் மான்களும் ஆடுகளும் தாவிக் குதித்தன. இவ்வாறு ஒப்பற்ற வளம் மிகுந்த மழநாட்டைச் சேர்ந்த திருமங்கலம் என்ற ஊரில், வயல் வளத்துக்கேற்ற மனவளமும் அறவளமும் பெற்றோர் நிறைந்த ஆயர் குலத்தில் ஆனாயர் என்ற அடியார் இருந்தார். அவரைப் பற்றிச் சேக்கிழார் கூறுகிறார்,
பாடல் :
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்;
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலின்
பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.
பொருள்:
(அவர்) ஆயர்குலத்தை விளக்கம் செய்திட இவ்வுலகில் வந்து அவதரித்தவர்; தூயஒளி வீசுகின்ற திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; வாக்கினாலும், உண்மைபெற வழுத்தும் மனத்தினாலும் செயல் வகையினாலும் பேயோடாடுகின்ற சிவபெருமான் றிருவடிகளை யல்லது வேறொன்றினையும் பேணாதவர்.
விளக்கம்:
குலத்தை விளக்கிடஎன்ற தொடரில், குலத்தை விளக்குதலாவது சிவ வழிப்பாட்டில் நிறுத்தி வழிகாட்டுதல். இவர் அவதரித்த குலம் என்று இவரால் குலம் உலகில் விளங்கப் பெறுதல் என்றலுமாம். திருத்தொண்டத் தொகையினுள் திருமூலரும் இந்நாயனாரும் ஆகிய இவரே ஆயர் குலத்தவராவர், அவருள் சிவ யோகியாரான திருமூலர், இறந்துபோய்க்கிடந்த மூலன் என்ற இடையனது உடலினுட் புகுந்து மூலராய் விளங்கியவர். எனவே, இந்நாயனார் ஒருவரே ஆயர் குலத்திற்றோன்றியபடி சிவனடியாராய் விளங்கி அந்நிலையே சிவலோகத்திலும் வாழ்பவர். ஆதலின் இவ்வாறு சிறப்பித்தார்.
உதயம் செய்தார் – கதிரவன் போலத் தம்மைச்சுற்றிய அனைவருக்கும் ஒளியைச் செய்தார் என்பதைக் காட்டுகிறது.
தூய சுடர்த் திருநீறு விரும்பு தொழும்பு என்ற தொடர் திருநீற்றின் தூய்மையையும் ஒளியையும்குறித்தது! தொழும்பு என்பது திருநீறு வீடு தரும் சாதனம் என்று கொண்டு அதற்குத் தொண்டு புரிதல். “நீற்றினை நிறையப் பூசுதலும், நீறு பூசினாரைக் காணில் காதல் கொள்ளுதல் – உள்ள முருகுதல் – போற்றுதல் – அவர் வேண்டுவன செய்தல் முதலியவையும் திருநீற்றுத்தொண்டு எனப்படும். சிவபெருமான் திருத்தொண்டாவன திருநீற்றுத் தொண்டேயாம் என்றலும் பொருந்தும்.
வாயினின்மெய்யின் வழுத்தும் மனத்தின் வினைப்பாலின் என்ற அடி, வாக்கு, மனம், காயம் என்ற மூன்றையும் குறித்தது. அவற்றின் வழியே செய்யும் திருத்தொண்டையும் குறித்தது.
மெய்யின் வழுத்தும் மனத்தின் – மெய் – உண்மை. உண்மை கூர்தரச் சிந்திக்கும் மனத்தினால். உண்மை கூர, நினைப்பவர் மனத்தினுள் இறைவர் வெளிப்பட நின்றருளுவர்.
“நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே, புக்குநிற்கும்
பொன்னார்சடைப் புண்ணியன்”,
“கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை”,
“வஞ்சனையா லஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானை” ,
“மெய்மையன் பருள்மெய்மை மேவினார்”
முதலிய திருவாக்குக்கள் காண்க.
வினைப்பால் – என்பதற்குச் செயலின் பொதுமை என்றும், மெய் – உடம்பு – காயம் – என்றும் கொண்டு, வாய், மெய், மனம் என்ற மூன்றின் செயலால் எனத் தனித்தனி கூட்டி உரைத்தலுமாம்.
“மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயத்,
தானிடத்து ஐந்தும் ஆடும் அரன்பணிக் காக வன்றோ”
என்று சிவஞான சித்தியார் கூறும்.
பேயுடன் ஆடும் பிரான் சிவபெருமான். பேய் – சிவகணமாகிய சுத்த தத்துவ உடம்புடைய நற்கணம். சிவபூதங்கள். பௌதிகமாகிய வாயு சரீரமுடைய பைசாசங்களல்ல .
“பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்”
என்றகாரைக்கால் அம்மையார் திருப்பாட்டும்
“பாரிடம் பாணி செய்யப் பறை கட்சிறு பல் கணப் பேய்,
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதை யாத கொள்கை”
என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் கண்டு பொருளுணர்ந்து கொள்க.
பேயோடாடி என்பது நிகண்டில் சிவபெருமானது பெயர்களிலொன்றாக ஓதப்படுதலும் காண்க. பேயோடாடுதல் அவரது நித்தியத்துவம் பரத்துவம் முதலிய தன்மைகள் குறிக்கும்.
அடி அல்லது பேணாதார் – எதிர்மறையாற் கூறினார் நியதி பிழையாமையும் உறுதிப்பாடும் குறித்தற்கு.
இப்பாட்டால் ஆனாயரது உயிரின் நிலையாகிய அகவாழ்வாகிய சிவச்சார்பு கூறப்பட்டது. வரும்பாட்டில் உடல் பற்றிய புறவாழ்வாகிய உலகநிலை கூறுவார். உயிர்பற்றிய அகவாழ்க்கையின் சிறப்பு நோக்கி அதனை முன்வைத்தோதினார்