கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 41

0

-மேகலா இராமமூர்த்தி

அனுமனை எதிர்த்துவெல்ல இயலாமல் சம்புமாலியைத் தொடர்ந்து தன் சேனைத் தலைவர்களும் மாண்டதை அறிந்து பெருஞ்சினமுற்ற இராவணன், தானே போருக்குப் புறப்பட எத்தனித்த வேளையில் அவனைத் தடுத்துத் தன்னைப் போருக்கு அனுப்ப இறைஞ்சினான் வீரன் ஒருவன்! அவன் வேறு யாருமல்லன்; இராவணனின் அருமை மைந்தன் அக்ககுமாரன்!

”தந்தையே! விலங்குகளை எதிர்த்துப் போர்புரிவது உமக்கு இழுக்கு! அதிலும் அற்பக் குரங்கோடு நீர் பொருவதை நான் பொறுப்பதற்கில்லை. ஆதலால், அப்பணியை நானே செய்து அக்குரங்கினைப் பிணித்துவருவேன்” என்று சூளுரைத்துத் தந்தையின் அனுமதிபெற்றுத் தேரேறிப் புறப்பட்டான் அவன்.

சேனைகள் சூழ கணக்கிலா ஆயுதங்களோடு தன்னைநோக்கி வந்த அக்ககுமாரனைக் கண்ட அனுமன், ”நீலமலைபோல் தோன்றும் குற்றமற்ற உருவுடைய இவன், பத்துத் தலைகள் உடைய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரங்கொண்ட இந்திரனை வென்ற இந்திரசித்தனும் அல்லன்; அவர்களினும் மேம்பட்டவனாய்த் தோன்றுகின்றான்; போர்த்தொழிலில் வல்லானான முருகக் கடவுளும் அல்லன்; கேடில்லா வீரமிகு இக்குமரன் யாரோ?” என்று சிந்திக்கலானான்.

பழி இலதுஉரு என்றாலும்
பல்தலை அரக்கன் அல்லன்
விழிகள் ஆயிரமும் கொண்ட
வேந்தை வென்றானும் அல்லன்
மொழியின் மற்றுஅவர்க்கு மேலான்
முரண்தொழில் முருகன் அல்லன்
அழிவுஇல் ஒண்குமரன் யாரோ
அஞ்சனக் குன்றம்
  அன்னான்.  (கம்ப: அக்ககுமாரன் வதைப் படலம் – 5687)

ஏற்கனவே இராவணன் இந்திரசித்தன் ஆகியோரை அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது கண்டவன் அனுமன் என்பதால் அக்ககுமாரன் இராவணனோ இந்திரசித்தனோ அல்லன் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட்டான். அறநெறியில் செல்லாத இவ் அரக்கர் சார்பில் முருகன் வாரான் என்பதால் அக்ககுமாரன் முருகன் அல்லன் என்பதையும் தீர்மானித்தவன், இராவணன் இந்திரசித்தன் ஆகியோரின் மேம்பட்ட வீரனிவன் என்பதையும் பார்த்த மாத்திரத்தில் கணித்துவிட்டான்.

அக்ககுமாரன் அனுமனைப் பார்த்து, அரக்கர் குழாத்தைக் கொன்றது இக்குரங்குதானா?” என்று எள்ளி நகையாடிய வேளையில் அதனைத் தடுத்த அவனுடைய தேர்ப்பாகன், ”ஐய! நான் சொல்வதைக் கேள்! உலகில் நடைபெறும் செயல்கள் இத்தன்மையானவை என்று நாம் துணிந்துரைக்க இயலுமா? உன்னெதிரில் நிற்பவனைக் குரங்கு என இகழல் வேண்டா! நம் அரசனாகிய இராவணனை எதிர்த்துநின்று வென்ற வாலி ஒரு குரங்கு எனும்போது மேலும் நாம் சொல்வதற்கு வேறு ஏதாவது உள்ளதா? எனவே நான் சொன்னதை மனத்தில்கொண்டு வெற்றிபெற வேண்டும் எனும் எண்ணத்தோடு செல்வாயாக!” என்றான் அக்ககுமாரனிடம்.

அன்னதாம் அச்சொல் கேட்ட சாரதிஐய கேண்மோ
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல்அம்மா
மன்னனோடு எதிர்ந்தவாலி குரங்குஎன்றால் மற்றும் உண்டோ
சொன்னது துணிவில்கொண்டு சேறிஎன்று உணரச் சொன்னான்.
(கம்ப: அக்ககுமாரன் வதைப் படலம் – 5689)

இராவணன் வாலியின் வாலில் சிறைப்பட்டதைக் குறிப்பாலுணர்த்திக் குரங்கு ஏளனத்துக்கு உரியதன்று என்பதை அக்ககுமாரனுக்கு உணர்த்திய தேர்ப்பாகனின் நுண்ணறிவு பாராட்டுதற்குரியது.

சாரதியின் சொற்களால் சீண்டப்பெற்ற அக்ககுமாரன், மூவுலகிலுள்ள குரக்கினத்தையும் பூண்டோடு அழிப்பதாய்ச் சூளுரைத்துப் போரில் இறங்கினான்.

அனுமனுக்கும் அக்ககுமாரனின் படைகளுக்கும் கடும்போர் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்களை மறலிக்கு விருந்தாக்கிய மாருதி, அக்ககுமாரனோடு நேரடிப் போரில் இறங்கினான். அவர்களின் போரைக் காணும் ஆவலில் தேவர்களும் வானில்வந்து கூடினர். கண்டவர் மருளும் வண்ணம் நிகழ்ந்த அப்போரின் முடிவில் அக்ககுமாரனைத் தன் வாலில் கட்டிய அனுமன், அவ் அரக்கனின் பற்கள் உதிரும்படிக் கன்னத்தில் அறைந்து, மேகத்திடமிருந்து புறப்படும் மின்னல்கூட்டங்கள் கீழே விழுவதுபோல் அவன் காதிலுள்ள குண்டலங்களிலிருந்த இரத்தினங்கள் அழிந்துசிந்த, குகையினிடத்துப் பாம்பு தொங்குவதுபோல் அவனுடைய குடல்கள் வெளியே தொங்க, வயிரம்போன்ற உறுதியான தன் கையால் அவனைக் குத்தி ஒருபுறத்தே குதித்தான். குருதிவெள்ளம் தரையில் ஓட அதில் அக்ககுமாரனை வீழ்த்தி, அவனைத் தன்னிரு கைகளாலும் தேய்த்து உருத்தெரியாமல் ஆக்கி அனுமன் அழித்ததைக் கண்டு எஞ்சியிருந்த அரக்கர்படை அஞ்சி ஓடியது.  

இராவணனிடம் காவல்வீரர்களாய்ப் பணிபுரிந்த விண்ணவர்கள் அக்ககுமாரனின் மரணத்தை அவனிடம் தெரிவித்தனர். அதனை இராவணனின் அருகிருந்து கேட்ட அக்ககுமாரனின் தாயும் மயன் எனும் அசுரச் சிற்பியின் மகளுமான மண்டோதரி, கயல்மீன் போன்று மதர்த்திருக்கும் தன் கண்கள் இரண்டும் நீர் சிந்தவும், காளமேகத்தை ஒத்த முறுக்கிவிட்ட கூந்தல் மண்ணிலுள்ள புழுதியில் புரளவும், பிரமதேவன் மகனாகிய புலத்திய முனிவரின் மகனாகிய விச்ரவஸ் என்பவரது மகனாகிய இராவணனின் பாதங்களில் வீழ்ந்து வயிற்றில் அடித்துக்கொண்டு கதறிப் புலம்பினாள். 

கயல்மகிழ் கண்இணை கலுழி கான்றுஉக
புயல்மகிழ் புரிகுழல் பொடி அளாவுற
அயன்மகன் மகன்மகன் அடியின் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறுஅலைத்து அலறி மாழ்கினாள். (கம்ப: அக்ககுமாரன் வதைப் படலம் – 5715)

அக்ககுமாரனைப் பெற்றவள் அல்லவா? அதனால்தான் அவனைப் பெற்ற வயிற்றில் அடித்துக்கொண்டு அந்தப் பெருந்துயரத்தைத் தாங்கமாட்டாமல் அழுதாள் அந்த அபலை.

தன் இளவல் இறந்த செய்தி அறிந்த மேகநாதன் (இந்திரசித்து), போருக்கு ஆயத்தமானான். தம்பியை நினைக்குந்தொறும் அவன் கண்கள் நீரைப் பொழிந்தன. கோபத்தோடு தன் வில்லைப் பார்த்து, ”கொம்புகளில் தாவும் ஒரு குரங்கால் என் தம்பியா அழிந்தான்? இல்லை…இராவணனின் புகழன்றோ அழிந்தது!” என்றுகூறி வருந்தியவன் இராவணனைக் காண அவன் அரண்மனைக்கு விரைந்து வந்தான்.

அழுத கண்களோடு தந்தையின் இணையடி தொழுதவன், ”தந்தையே! நீ ஆலோசனை இல்லாமல் செயலாற்றுகின்றாய்; பின்பு அதற்காக வருந்துகின்றாய். கிங்கரர்கள், சம்புமாலி, பஞ்சசேனாபதிகள் என்று போருக்குச் சென்ற வீரர்களும் அவர்களோடு சென்ற சேனையும் திரும்பவில்லை எனும்போது அவர்களை வென்றது வெறும் குரங்கு என்று நாம் சொல்லலாமா? சிவன் பிரமன் திருமால் எனப்படும் மும்மூர்த்திகளின் வடிவே அக்குரங்கு என்று நாம் கருதவேண்டும்.” என்றான் இராவணனிடம்.

கிங்கரர் சம்புமாலி கேடுஇலா ஐவர்என்று இப்
பைங்கழல் அரக்கரோடும் உடன்சென்ற பகுதிச்சேனை
இங்குஒரு பேரும்மீண்டார் இல்லையேல் குரங்குஅது எந்தாய்
சங்கரன் அயன்மால் என்பார்தாம் எனும் தகையதுஆமே.
(கம்ப: பாசப் படலம் – 5726)

”ஆயினும் எந்தையே கவலைப்பட வேண்டாம்! ஆற்றல்மிகு அக்குரங்கை நான் பற்றிவருவேன்” என்றுரைத்துப் போருக்குப் புறப்பட்டான் இந்திரசித்து. அவனோடு சென்று அனுமனை எதிர்த்த அலகிலா அரக்கர்கள் பிணங்களாய்க் குவிந்தனர்; குருதி, கடலாய் ஓடியது. போரில் வருத்தமென்பதே அறியாத மேகநாதன், ”ஆற்றலாளர்களான அரக்கர்கள் அனைவரும் போரில் மாய்ந்தனர். இவர்களை எதிர்த்துவென்றதோ ஒரே ஒரு குரங்கு” என்றெண்ணி ஏக்கம் கொண்டவனாய், ”இனி, இராமன் மற்றுமுள்ள வானரப் படைகளோடு வந்து எதிர்த்தால் எப்படை கொண்டு அவனை வெல்வது?” என்று சிந்தித்தான்.

தேரில்வரும் இந்திரசித்தை நோக்கிய அனுமன், ”இவன் இந்திரசித்தனே” எனத் தெளிந்தான். அடுத்து அனுமனுக்கும் இந்திரசித்துக்கும் கடும்போர் தொடங்கிற்று. போரில் தேரினை இழந்த இந்திரசித்து, மின்னல் வேகத்தில் வானத்தை அடைந்து அங்கிருந்து அயன்படையாகிய பிரம்மாத்திரத்தை மனத்தால் பூசித்து, அதனைத் தன் தடக்கையில் ஏந்தி அனுமன் தோள்களைக் குறிவைத்து எய்தான். பாய்ந்துசென்ற அவ் அத்திரம் அனுமனின் தோள்களை இறுகப் பிணிக்கவே அவன் கீழே சாய்ந்தான்.

தன்னைப் பிணித்திருப்பது பிரம்மாத்திரம் என்றறிந்த அனுமன் அதனை அவமதித்தல் அழகன்று என்றெண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போலிருந்தான். அனுமனின் வலிமை அடங்கியது என்று கருதிய இந்திரசித்து அவனருகில் வந்தான்.

வர பலத்தால் பிரம்மாத்திரத்தை வீழ்த்தும் ஆற்றல் அனுமனுக்கிருந்தும் பிரம்மதேவனைப் பெருமைப்படுத்தவேண்டும் எனும் நோக்கில் அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் அவன். அத்தோடு இராவணனிடம் நேரடியாகத் தான் கூறவிரும்பும் கருத்துக்களைத் தெரிவிக்க இவ்வாறு பிணிப்புண்டு செல்வது உதவியாய் இருக்கும் என்ற எண்ணமும் அதற்குக் காரணம்.

இதுவரை அனுமனுக்கு அஞ்சி ஒளிந்துநின்ற அரக்கர்கள் அவன் பிரம்மாத்திரத்தால் கட்டப்பட்டிருக்கின்றான் என்பதைக் கண்டதும் துணிவுகொண்டு அவனருகில் வந்து, அவன் உடலைப் பிணித்திருந்த அவ் அத்திரத்தைப் பற்றியிழுத்து ஆரவாரித்தனர்.

அனுமனைக் கட்டியிழுத்துக்கொண்டு இலங்கை வீதிகளில் சென்றனர் அரக்கர்கள். இந்திரசித்து அனுப்பிய தூதர்கள் இராவணனிடம் சென்று, ”நும் மகன் இந்திரசித்து ஏவிய அயன்படையால் வானரம் கட்டுண்டது” என்ற நற்செய்தியைத் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் அனுமன் பிணிப்புண்ட செய்தியைத் திரிசடை வாயிலாய் அறிந்து கலங்கிய சீதை, “இராமனது திருவாழியைக் காட்டிப் போகவிருந்த என்னுயிரை அழியாது காத்தாய்; என் அரிய உயிரை அழியாது காத்த உன்னை ஊழிக் காலம் வாழ்வாய் என ஆசியுரைத்தேன். அது பொய்க்காது உன் வாழ்நாளை நீட்டிக்கும். உன் மலைபோன்ற தோள்களின் வலிமையைப் போரில் காட்டிய நீ, முடிவில் சிறைப்பட்டு அரும்பழியை உண்டாக்கிக் கொண்டாயே!” என்று வருந்திப் புலம்பினாள்.

ஆழிகாட்டி என் ஆர்உயிர் காட்டினாய்க்கு
ஊழிகாட்டுவென் என்று உரைத்தேன் அது
வாழி காட்டும்என்று உண்டு உன்வரைப் புயப்
பாழிகாட்டி அரும் பழி காட்டினாய்.
(கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5838)

”இராமன் என்னை மீட்டுச் செல்ல வருவான் என்று நம்பிக்கை ஊட்டினாயே; இப்போது அதனை நீயே அழித்துவிட்டாயே!” என்றுரைத்து மூர்ச்சையானாள்  சீதை.

பிணிப்புண்ட அனுமனை இழுத்துச் சென்ற அரக்கர் குழாம், இராவணன் அரண்மனையை அடைந்தது. அங்கே சிவப்புநிறம் செறிந்த ஆடை அரைக் கச்சுடன் விளங்க, வரிசையாய்க் கோக்கப்பெற்ற முத்துக்களாலான மாலை முதலிய அணிகள் முழுநிலவினது ஒளியைப் பரப்ப வீற்றிருந்த இராவணனின் ஓலக்கத் தோற்றமானது, இருளானது செவ்வானத்தை ஆடையாய் உடுத்திக்கொண்டு, உடுக்களை அணிகலன்களாய் அணிந்துகொண்டு சந்திரனாகிய வெண்கொற்றக் குடையின்கீழ் கொலுவீற்றிருந்தது போலிருந்தது என்று வருணிக்கின்றார் கற்பனை வல்லாரான கம்பர்.

சிந்துராகத்தின் செறிதுகில் கச்சொடு செறிய
பந்தி வெண்முத்தின் அணிகலன் முழுநிலாப் பரப்ப
இந்து வெண்குடை நீழலில் தாரகைஇனம் பூண்டு
அந்தி வான்உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன.
(கம்ப: பிணிவீட்டுப் படலம் – 5847)

கொலுவீற்றிருந்த இராவணனைக் கண்டான் அனுமன். அவனுள் சினம் பொங்கிற்று. இவன் காதல் மகளிர் அஞ்சி ஓடும்படி, இவனோடு போரிட்டு, இவன் தலைகளைத் திசைக்கொன்றாய் உருட்டித் தள்ளினால் என்ன? எனும் எண்ணம் அனுமனுள் கிளர்ந்தது. மீண்டும் சிந்தித்தவன், ”இந்த இராவணனை அவ்வளவு எளிதில் வெல்ல இயலாது! இவனோடு போர்புரிந்து காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தேனானால் இன்னும் ஒரு மாதமே பிழைத்திருப்பேன் என்றுரைத்த சீதைக்கு நானே அழிவைத் தேடுபவன் ஆவேன்; எனவே தூதனாய் இருப்பதே நன்று” என்று முடிவுசெய்து இராவணன் அருகில் சென்று நின்றான். 

இராவணனை வணங்கிய இந்திரசித்து, ”குரங்கு வடிவிலுள்ள ஆண்மையாளனான இவன், சிவனைப் போலவும் திருமாலைப் போலவும் போர்செய்த சிறந்த வீரன்” என்று அனுமனை அவன் தகுதிக்கேற்ற வகையில் சிறப்புற இராவணனுக்கு அறிமுகப்படுத்தினான். அனுமனைத் தன் வீரமகன் புகழ்கின்றானே என்று சினமுறவில்லை இராவணன்; ஏனெனில், அவனே அனுமனின் பெருவலியை இதுவரை நடந்த போர்நிகழ்வுகளால் நன்கு அறிந்துகொண்டிருந்தான்.

இந்திரசித்தின் மொழிகளைக் கேட்டபின்பு அனுமனைச் சீற்றத்தோடு நோக்கிய இராவணன், “சக்கராயுதம் ஏந்திய திருமாலோ? வச்சிராயுதம் ஏந்திய இந்திரனோ? நீண்ட சூலாயுதத்தை உடைய சிவபெருமானோ? தாமரையில் தோன்றிய பிரம்மதேவனோ? அஞ்சாமையும் பல தலைகளும் உடையவனாய் பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேடனோ? யார் நீ? இலங்கையைப் பொருதழிக்கும் பொருட்டு உன் இயற்கை வடிவை மறைத்துக்கொண்டு வந்திருக்கின்றாய். உன்னை இங்கே ஏவியவர் யார்? உண்மையைச் சொல்!” என்று அதட்டிக் கேட்கவும்,
”முதலும் நடுவும் முடிவுமில்லாது, இறப்பு நிகழ்வு எதிர்வு எனும் காலக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு, சூலம் சக்கரம் சங்கு கரகம் ஆகியவற்றை விட்டு, ஆலிலை தாமரை கயிலாயம் ஆகிய தொன்மையான இடங்களையும்விட்டு அயோத்தியில் சக்கரவர்த்தித் திருமகனாய்த் தோன்றிய இராமனுக்கு அடிமைத்தொழில் செய்பவன் நான்; அனுமன் என் பெயர். நன்னுதலாள் சீதையைத் தேடிக்கொண்டு நாற்பெரும் திசைகளிலும் சென்ற தலைவர்களுள் தென்திசையில் வந்த சேனைத் தலைவனான வாலி மகன் அங்கதனின் தூதனாக நான் ஒருவன் இங்கு வந்தேன்” என்று தன்னைப் பற்றியும் தான் வந்ததன் நோக்கத்தைப் பற்றியும் தெளிவாய் இராவணனுக்குத் தெரிவித்தான் அனுமன்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

1.கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

2.கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

3.கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

4.கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *