கேரளத்தின் கூடியாட்டம்
விசாலம்
இயற்கைக் காட்சிகள் நிறைந்த மாநிலம் நமது கேரளாதான். அங்கு இருக்கும் கோயில்களும் மிகவும் சரித்திரப் புகழ் பெற்றவை. மிகவும் பழமை வாய்ந்தவை. சாதாரணமாக ஸ்ரீ ராமர் கோயிலை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு லட்சுமணன், பரதன், சத்ருக்கினன், என்று நாலு சகோதரர்களுக்கும் தனித்தனிக் கோயில் உள்ளன.
ஒரு முறை நான் கேரளாவுக்குச் சென்ற போது, திருச்சூருக்குச் செல்ல நல்ல வாய்ப்புக் கிடைத்தது. அந்த இடத்தில் வடக்கத்திநாதன் கோயிலும் இருந்தது. இது மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கோயில். அங்கு எனக்கு ஒரு விதமான ஆட்டம் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. சாதாரணமாகவே இசை, நாடகம், நடனத்தில் நான் அதிக ஆர்வம் காட்டுவதால் அந்த ஆட்டத்தைப் பார்க்கவும் போனேன். அது பார்க்க கதக்களியாட்டம் போல் இருந்தது “ஓ இது கதக்களி ஆயிற்றே”என்று பெரிதாகச் சொல்ல ஒருவர் “அல்லா..,, இது கூடியாட்டமாணு”என்றார். எனக்கு கதக்களிக்கும் கூடியாட்டத்திற்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, இதைப்பற்றி அறிய அங்கு நன்கு தெரிந்த வேறு ஒருவரிடம் இதைப் பற்றிக் கேட்டேன்.
அவர் சொன்ன தகவல்,,, இந்தக் கூடியாட்டம் “யுனெஸ்கோ” அங்கீகாரம் பெற்ற ஒன்று , இந்தக் கூடியாட்டம் குழுவை ஒரு தடவை பைன்குளம் ராம சாக்கியர் என்பவர் 1980-ம் ஆண்டில் பாரிஸுக்கு அழைத்துச் சென்றார், அங்கு மிகப் பிரமாதமாக ஆடிக் கலைஞர்கள் புகழ் பெற்றனர். பின் அடுத்து அடுத்து ஹாலந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இவர்கள் அழைக்கப்பட்டு இந்த ஆட்டம் உலக அளவில் பிரபலமானது. “மார்கி” என்ற அமைப்பு இதில் ஆர்வம் எடுத்து “யுனெஸ்கோ”வின் அங்கீகாரம் பெற வழி செய்தார், ஆகையால் இந்தக் கூடியாட்டம் மேலை நாட்டவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரிந்து இருக்கிறது.
நான் அந்த நிகழ்ச்சியில் பல மேலை நாட்டவர்களைக் கண்டேன், எல்லோரும் பொறுமையாகக் கடைசி வரை இருந்து பின் நிகழ்ச்சி முடிந்தவுடன் நின்று கரகோஷம் எழுப்புகிறார்கள் மரியாதை கொடுக்கிறார்கள். கூடியாட்டக்கலையை கேரளத்தின் ஒரு குறிப்பிட்ட இனத்தவரே செய்கின்றனர். இது பரம்பரையாக வரும் ஒன்று, இதில் சாக்கியார் நம்பியாரென்ற இருப்பிரிவுகள் உண்டு. சாக்கியார் என்பவர்கள் ஆண் பாகத்தை ஏற்கின்றனர். நம்பியார் என்ற பிரிவில் வருபவர்கள் நடிகைகள், இசைக் கலைஞராகப் பங்கு ஏற்கின்றனர். இவர்கள் இணைந்து ஆடும் ஆட்டமே கூடியாட்டம். இந்த நாட்டியத்தில் அபிநயம் மிகவும் முக்கியம். பரதமுனி இயற்றிய நாட்டிய சாஸ்திரத்தை இது அடிப்படியாகக் கொண்டுள்ளது.
அபிநயத்தில் ஒரு சம்பவத்தைக் காட்சியாக அபிநயித்து, தத்ரூபமாய் நம் கண் முன்னால் நிறுத்தி அந்தக் கதையை உணர்த்துவது….. நவரசங்களும் கண்களினாலும் முகபாவத்தினாலும் உணரவைக்கும் விதம் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவர்கள் புருவத்தை மட்டுமே பாம்பு போல் நெளிய விட்டு அசைக்கும் விதம் அருமை. இதற்குக் கடும் பயிற்சி செய்திருக்க வேண்டும். ஒப்பனை என்று எடுத்துக் கொண்டால் இது கதக்களி போல் தான் உள்ளது. ஆனால் முகத்தைச் சுற்றி இருக்கும் வெள்ளை நிறம் {இதற்குச் சுட்டி என்கிறார்கள்]அகலத்தில் சிறிதாக இருக்குமாம், கதக்களியில் சற்றுப் பெரிதாக இருக்குமாம். தவிர மூக்கின் மேல் ஒரு வெள்ளை உருண்டை இருக்கிறது.
இதுவும் கதக்களியைவிடச் சின்னதாக இருக்கிறது.மிகவும் நுணுக்கமாகப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு இது விளங்கும் என நினைக்கிறேன், இந்த ஒப்பனையில் சாதாரண மானிடர்கள், அரக்கர்கள், அரசர்கள் போன்ற பாத்திரங்களை அவர்களது ஒப்பனை மூலம் அறியலாம். அரக்கர்களுக்குக் கறுப்பு அதிகம் தெரிகிறது. இதன் மூலக்கதை அநேகமாக மஹாபாரதம் இராமாயணம் புராணங்களைக் கொண்டதாக இருக்கின்றன.
நான் பார்த்த அன்று ஜடாயு வதம் நடந்தது. அப்பப்பா ஜடாயுவின் இறக்கைகள் வெட்டுப் பட அது துடித்தத் துடிப்பும் மரணக்காட்சியும் உடலைச் சிலிர்க்கச் செய்தது. ஆட்டம் ஆரம்பமாதற்கு முன் ஒரு பெரிய பித்தளைக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு கடைசி வரை எரிந்து கொண்டு இருக்கிறது. பின் நங்கை ஸ்லோகங்கள் விருத்தமாகப் பாட ஆரம்பிக்கிறார், அதற்கு ஏற்ப வாத்தியங்களும் சேர்ந்து களைக்கட்டுகிறது. ஒரு வரியையே பலதடவை பாடுகிறார். ஒவ்வொரு வரிக்கும் வெவ்வேறு அபிநயங்கள் செய்து அந்தக் கதையைச் சொல்லி விடுகிறார்கள், மலையாள மொழியிலும் சில சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் அர்த்தத்துடன் பாடப்படுகின்றன, கதை தெரிந்தவர்களுக்கு மிகவும் ரசிக்க முடிகிறது. பெரிய காட்சி அமைப்போ நீண்ட வசனங்களோ ஒருவர்க்கொருவர் சம்பாஷணையோ இல்லாமலும் வெறும் அபிநயத்திலேயே ஆட்டம் ஆடிப் புரிய வைக்கின்றனர் இதற்கு “மிழா” என்ற வாத்தியம் அதற்கு ஏற்ப ஒலிக்கிறது.
அவர்கள் ஒப்பனையில் கறுப்பு மை சுண்டு விரலால் கண்முடிவிலிருந்து காது வரை இழுத்தது போல் பட்டையாகத் தெரிகிறது. தெய்வீகப் பாத்திரமாக இருந்தால் பச்சை நிறம் பூசப்படுகிறது. கழுத்து நிரம்பிய தங்க மாலைகள், பச்சை சிவப்பு பதித்த கிரீடங்கள், உடலில் மஞ்சள் கலரில் பட்டு வஸ்திரம் கையில் கங்கணம் ……. பெரிய பூ மாலை முழங்கால் வரைத் தொங்க, இருவர் மயில் இறகு விசிறியால் வீச, இரு விளக்குச் சுடர் ஒளியில் அவர் ஆட ஆரம்பிக்கிறார், ஒருவர் ஆஞ்சநேயர் போல் உடல் முழுவதும் ரோம ஆடை அணிந்து முகத்தில் செந்தூரம் பூசி வாலைத் தன் கையில் பிடித்துக் கொண்டு பெரிய ஆசனம் மீது அமர, அசல் அனுமாரே நம் முன் வந்து விடுகிறார். சூர்ப்பனகை, மண்டோதரி, திரௌபதி போன்ற வேஷங்களைப் பெண்கள் ஏற்கின்றனர்.
முன்பு கோயில் மண்டபங்களில் இது விடிய விடிய நடக்குமாம். இப்போது இயந்திர வாழ்க்கையில் மாலை ஆரம்பித்து இரவில் முடித்து விடுகின்றனர், கூடியாட்டம் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று ,,,, ,தமிழ்நாட்டின் தெருக்கூத்து போல் அபிநயத்துடனும் நல்ல தாளத்துடனும் நம்மைக் கவர்கிறது.