சொர்க்கத்திற்குப் போகும் வழி மதம் அல்ல

நாகேஸ்வரி அண்ணாமலை

சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி பீடத்தின் தலைவர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் நாட்களைக் கழித்தார். ஒரு வழக்கு தீர விசாரிக்கப்பட்டு அதன் முடிவு தெரியும் வரை குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி ஆக மாட்டார் என்பார்கள். அதே சமயம் நெருப்பின்றிப் புகையாது என்ற பழமொழியும் இருக்கிறது. நம் நீதிமன்றங்கள் செயல்படும் வேகத்தில் குற்ற சாட்டப்பட்டவர் இறந்து பல வருடங்கள் கூட ஆகிவிடலாம். காஞ்சி பீடத் தலைவர் வழக்கும் இம்மாதிரி முடியலாம்.  அவர் குற்றவாளியா என்று தெரியாமலே போய்விடலாம். இருப்பினும் சைவ சமயத்தவர்களுக்குத் தலைவராக விளங்கும் காஞ்சி மடத் தலைவர் தன் மீது எந்த வித சந்தேகமும் மற்றவர்களுக்கு ஏற்படாத வகையில் அல்லவா நடந்து கொள்ள வேண்டும்? இறைவனுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் தூது போக வேண்டிய இவர்கள் மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகலாமா?

இன்னொரு சம்பவம் நடந்தது அமெரிக்காவில். 1960-இன் மத்தியில் அமெரிக்காவில் குடியேறிய பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் ‘ஹரே கிருஷ்ணா’ என்ற பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தார்.  உண்மை, எளிமை, போதைப் பொருள் உட்கொள்ளாமை, திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளாமை போன்ற மிகச் சிறந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. உடல் சார்ந்த இன்பங்களை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க வாழ்க்கையில் அலுத்துச் சலித்தவர்கள் இதில் சேர்ந்தனர். அப்படிச் சேர்ந்தவர்களில் சுவாமி பக்திபாதாவும் ஒருவர்.  இவர் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் மகனாகப் பிறந்தார். அவரின் தந்தைக்கு கிறிஸ்வத மதத்தின் மேல் மிகுந்த ஈடுபாடு உண்டு. தன் பிள்ளைகளையும் அம்மதத்தின் மேல் பற்று ஏற்படும்படி வளர்த்தார்.  பக்திபாதா வளர்ந்து பெரியவனானதும் ஒரு பெயர் பெற்ற கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். அதன் பிறகு ‘அமெரிக்காவில் மதம்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இன்னொரு மாணவனோடு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடித் திரிந்த இவரை ஹரே கிருஷ்ணா இயக்கம் ஈர்த்தது. அதில் சேர்ந்து பலரின் மதிப்பிற்குரிய தலைவராக உயர்ந்தார். ஆனால் இவரை விமர்சித்த இரண்டு பக்தர்களை ஆட்கள் மூலம் கொலை செய்தார். எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டுக் கடைசியாக இந்தியாவிற்குப் போய் அங்கு மரணமடைந்தார். இவர் சிறைக்குச் செல்லும் முன் இவருக்கு அத்தனை பக்தர்கள்!

இந்து சமயத் தலைவர்கள் இப்படியென்றால் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கே தலைவராக விளங்கும் இப்போதைய போப் என்ன செய்தார் தெரியுமா? உலகின் பல இடங்களில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது பலருக்கு கோபமும் வெறுப்பும் இருக்கும் சமயத்தில் பதினான்காம் நூற்றாண்டில் யாரோ என்னவோ முஸ்லீம்களைப் பற்றிக் கூறியதை இப்போது சொல்லிக் கொண்டிருந்தார். உலகில் அமைதியைக் காக்க வேண்டிய மதத் தலைவர்களில் ஒருவராக விளங்க வேண்டிய இவர் இப்படிப் பேசி முஸ்லீம்களின் மீது இன்னும் துவேஷத்தை வளர்க்க வேண்டுமா?

எத்தனையோ கிறிஸ்துவ மத போதகர்கள் தங்கள் சர்ச்சில் ஊழியம் புரிந்த சிறு பையன்களோடு உடலுறவு வைத்துக் கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளிவருகின்றன. எத்தனையோ குழந்தைகளின் மன நலனை இது பாதித்திருக்கிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பங்கு பெறப் போகும் வேட்பாளர்களில் முதன்மையாக இருக்கும் மிட் ராம்னி (Mitt Romney)  என்பவர் அமெரிக்கா உலக நாடுகளிலேயே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதாக ஒரு தேர்தல் கூடத்தில் கூறியிருக்கிறார்.  என்ன மடமை!  இந்திய அரசியல்வாதிகள் கூட இவ்வளவு அபத்தமாகப் பேச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் 11/11/2011 அன்று வெளி வந்த ஒரு விளம்பரத்தில் கிறிஸ்து மதத்தில் மிகுந்த பற்றுள்ள ஒருவர் இப்படிக் கூறுகிறார்:”அமெரிக்கக் கிறிஸ்தவர்களே!  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (9/1/2008) உங்களுக்கெல்லாம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தேன்.  இப்போது மறுபடி இயேசு கிறிஸ்துவின் சிறந்த செய்தியை மறுபடி உங்களுக்குக் கூறுகிறேன். உலக சரித்திரத்தைப் பார்த்தால் இறைவன் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் நாடுகளைத்தான் முதல் இடத்தில் வைத்திருந்திருக்கிறார்.உதாரணமாக, பழங்கால ரோமாபுரி அரசு, போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து.  இக்காலக் கட்டத்தில் கடவுளின் கருணை அமெரிக்காவின் மேல் விழுந்திருக்கிறது.  அதனால்தான் அமெரிக்கா இன்று உலகிலேயே முதலில் இருக்கிறது.  இறைவன், அதாவது இயேசு கிறிஸ்து, காட்டிய வழியிலிருந்து நாம் விலகிச் சென்றால் முதல் இடத்தை அமெரிக்காவிடமிருந்து இறைவன் பறித்துக் கொள்வார்.  இறைவனின் வழியை விட்டு விட்டு நியாயமான நடைமுறை (rational pragmatism)  வழியைப் பின்பற்றுவதை விட்டு விட்டு இறைவன் கூறிய வழியைப் பின்பற்றுங்கள்.  அப்போதுதான் அமெரிக்காவிற்கு இறைவனின் தொடர்ந்த ஆதரவு கிடைக்கும்”

இயேசு பிறப்பதற்கு முன் எத்தனையோ சமூகங்கள் தோன்றியிருக்கின்றன; எத்தனையோ நாகரீகங்கள் மலர்ந்திருக்கின்றன; எத்தனை கலைகள் பிறந்திருக்கின்றன. இவை எல்லாம் மனித இனத்தைச் சேர்ந்தவை இல்லையா? இவையெல்லாம் சிறப்புற விளங்கவில்லையா?

முஸ்லீம் தலைவர்கள் பலர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். அவர்களின் வேதப் புத்தகமான குரானை இப்போது இவர்களுக்குப் பிடித்த மாதிரி விளக்குகிறார்கள். இறைவன் அன்பே வடிவானவன் என்று எல்லா மதங்களும் கூறுகின்றன. அப்படி அன்பே வடிவான இறைவனின் தூதனாக இவ்வுலகிற்கு வந்த, இஸ்லாம் மதத்தை ஸ்தாபித்த முகம்மதுநபி குரானில் சொல்லியிருப்பதாக இப்போதைய முஸ்லீம் தலைவர்கள் சொல்லுவதை ஆதரித்திருப்பாரா? இப்போது பெண்களுக்கு ஒரு நீதி, ஆண்களுக்கு ஒரு நீதி என்று குரான் போதிப்பதாகக் கூறுகிறார்கள்.  இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் இறைவன் படைத்த மனிதர்களில் ஆண்களையும், பெண்களையும் வேறுபாடாக நடத்தியிருப்பாரா?

ஒவ்வொரு மதத் தலைவரும் தன்னுடைய மதம்தான் பெரிது என்று பேசிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு மதத்திற்குள்ளும் அத்தனை பிரிவுகள்.  இயேசு கிறிஸ்துவின் பெயரில் தொடங்கப்பட்ட கிறிஸ்துவ மதத்தில் இன்று அத்தனை பிரிவுகள். இயேசு ஒருவர்தான் இறைவனின் தூதர், அவர் ஒருவர்தான் வணக்கத்திற்குரியவர் என்று வாதாடும் கிறிஸ்துவர்கள் எல்லோரும் ஏன் ஒரே விதமாக இயேசுவை வழிபடவில்லை? இயேசு ஒருவர்தான் கடவுள் அல்லது கடவுளின் தூதர் என்று கூறும் இவர்களுக்குள் ஏன் இத்தனை சண்டைகள், சச்சரவுகள்?

இந்துக்களுக்குள் கேட்கவே வேண்டாம். வைஷ்ணவம், சைவம் என்று அத்தனைப் பிரிவுகள். வைஷ்ணவப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், தான் உண்மை விளம்பி என்றும் விஷ்ணுதான் உண்மையான கடவுள் என்றும் மற்றக் கடவுள்கள் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆணித்தரமாகக் கூறுகிறார்.  இப்படித்தான் எல்லாம் நடந்தது என்பதற்கு அவரால் விஞ்ஞான முறையில் விளக்கம் கூற முடியுமா? அதே போல்தான் சைவர்களும்.  சிவனை விட்டால் வேறு கடவுள் இல்லை என்கிறார்கள். எல்லோரும் தாங்கள் வணங்கும் கடவுள்களை வழிபட்டால்தான் சொர்க்கத்திற்குப் போகலாம் என்கிறார்கள்.  சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை இவர்கள் எப்படி நிரூபிப்பார்கள்?

இந்தியாவில், பல வருடங்களுக்கு முன் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு பெண்ணைச் சந்தித்தேன்.  இவள் தன் தாயைப் பார்த்துக் கொள்வதற்காகத் தன் ஊரிலிருந்து வந்திருந்தாள்.  அப்படி வந்திருந்த இடத்தில் ஞாயிறு தோறும் வாரவழிபாட்டிற்கு சர்ச்சுக்குப் போவதோடு இடையிடையே பைபிள் பற்றிய சொற்பொழிவிற்கும் போய் வந்தாள்.  உடல்நலம் இல்லாமல் இருக்கும் தாய்க்கு உதவ வந்த அவள் ஏன் இப்படித் தாயைத் தனியே விட்டுவிட்டு அடிக்கடி சர்ச்சிற்குப் போகிறாள் என்று எனக்கு ஆதங்கமாக இருக்கும். ‘பைபிள் சொற்பொழிவில் அப்படி என்ன நன்மை உனக்குக் கிடைக்கிறது?’ என்றேன். ‘அந்தச் சொற்பொழிவுகளைக் கேட்டால் இறைவனோடு எப்படிப் பேசலாம் என்று நமக்குப் புரியும் என்றாள்.  ‘இவர்களுடைய சொற்பொழிவுகளைக் கேட்காமலேயே இறைவனோடு என்னால் பேச முடியும்.  இவர்களின் உதவி எனக்குத் தேவையில்லை’ என்றேன்.  ‘உங்களால் பேச முடியும் என்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் இறைவன் என்ன சொல்கிறார் என்று உங்களுக்குப் புரிவதற்கு இந்த மாதிரி சொற்பொழிவுகள் உங்களுக்கு உதவும்’ என்றாள்.  மேலே கூறிய கொலைகாரர்களும் ஏமாற்றுக்காரர்களுமா இறைவனிடம் நாம் எப்படிப் பேச வேண்டும் என்று கற்றுத் தரப் போகிறார்கள்?

மனிதர்கள் எல்லோருக்கும் மத நம்பிக்கை இல்லை.  ஆனால் பலருக்கு வாழ்க்கையில் சிக்கித் திணறி உழலும் போது இறைவன் தேவைப்படுகிறது.  ஒரு அமெரிக்க இளைஞனிடம் – இவன் கிறிஸ்தவச் சின்னமான சிலுவையைக் கழுத்தில் தொங்கப் போட்டிருப்பான் – ‘இயேசு இறந்து பின் உயிர்த்தெழுந்தார் என்பதை இப்போதும் நம்புகிறாயா?’ என்று கேட்டேன்.  அதற்கு அவன் கூறிய பதில் சுவாரசியமாக இருந்தது.  “எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்ததைப் பற்றி நான் அது உண்மையா அல்லது பொய்யா என்று ஆராய முற்படுவதில்லை.  எனக்கு எதிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.   அதனால் அதை உண்மை என்று நம்புகிறேன்.  இப்படி எனக்கு நம்பிக்கை இருந்தாலும் சர்ச்சுக்குப் போவதை நான் விரும்புவதில்லை.  ஏனெனில் அங்குள்ள பாதிரிமார்கள் காணிக்கை என்ற பெயரில் என்னிடம் உள்ள எல்லாக் காசுகளையும் பறித்துக்கொள்கிறார்கள்’ என்றான்.

உங்கள் எல்லோருக்கும் இந்த இளைஞன் போல் எதிலாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.  வாழ்க்கையின் சூறாவளியில் சிக்கித் திணறி ஓரத்திற்குத் தள்ளப்படும்போது உங்கள் கஷ்டங்களை முறையிட ஒருவர் வேண்டும்.  அதற்காக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் விரும்பும் வடிவில் இறைவனைச் சிருஷ்டித்துக் கொள்ளுங்கள்.   அவரிடம் முறையிடுங்கள்.  நீங்கள் முறையிடும் போது செவி சாய்க்காத இறைவன் மத போதகர்கள் உங்கள் சார்பில் முறையிடும்போதா செவி சாய்க்கப் போகிறார்?  மேலே குறிப்பிட்ட மத போதகர்கள் அப்பழுக்கில்லாதவர்களாக இருந்தால் அவர்கள் உதவியை நாடலாம்தான்.  ஆனால் அவர்கள் அப்படி இல்லையே.

நான் சொல்வதெல்லாம் இதுதான்.  உங்களுக்கு ஒரு மதம் தேவைப்படுகிறதா?  உங்களுக்குப் பிடித்த மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.  அந்த மதத்திற்குரிய இறைவனை உங்கள் மனதிற்குப் பிடித்த உருவில் சித்தரித்துக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டங்களுக்குச் செவி சாய்க்க ஒருவர் தேவைப்படும்போது அவரிடம் முறையிடுங்கள்.  எப்போதும் உண்மையே பேசுங்கள்; உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.  உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படி நீங்கள் மற்றவர்களை நடத்துங்கள்.  கணவன் மனைவிக்குத் துரோகம் புரிய நினைத்தால் அவனது மனைவியின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கட்டும்.  ‘என் மனைவி எனக்குத் துரோகம் செய்தால் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?’ என்று தன்னையே கேட்டுக் கொள்ளட்டும். அதே மாதிரிதான் மனைவியும்.  வேலைக்காரர்களை நடத்தும் போதும் அப்படித்தான்.  ‘என் வீட்டில் வந்து இவள் இத்தனை வேலை இந்தச் சம்பளத்திற்காக செய்கிறாளே, இவள் வீட்டில் போய் நான் இதே மாதிரி இப்படிச் செய்வேனா?’ என்று சிந்தித்துப் பாருங்கள்.  நீங்கள் அவளை நடத்தும் விதமே மாறிவிடும்.  உலகில் எல்லோரும் உண்மை உள்ளம் படைத்தவர்களாக, பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்பவர்களாக நடந்துகொண்டால் உலகில் எத்தனையோ கொடுமைகள் குறையும்.

இறைவன் இல்லை என்று வாதாடும் பலர் நல்ல உள்ளம் படைத்தவர்களாக, மனசாட்சிக்குப் பயந்தவர்களாக நடந்து கொள்கிறார்கள்.   அதே சமயம் தினமும் கோவிலுக்குப் போகும் எத்தனையோ கயவர்களும் எத்தர்களும் உண்டு.  தாங்கள் செய்யும் தவறுகளை இறைவன் மன்னித்து விடுவார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.  அது எத்தனை மடமை!  எப்போதும் உண்மை பேசுபவர்களும் மனச்சாட்சிக்குப் பயந்து நடப்பவர்களும் பிறர் இடத்தில் தங்களை வைத்துப் பார்த்து நடப்பவர்களும் எப்போதும் நியாயமாக நடந்து கொள்பவர்களும் மட்டுமே இறைவனுக்குப் பிரியமானவர்கள்.  இவர்களுக்கு இறை நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி.  இவர்களே மனிதரில் மாணிக்கங்கள்.  இவர்கள் காட்டும் வழியை வேண்டுமானால் பின்பற்றுங்கள்.  சொர்க்கம் என்ற ஒன்று இருந்தால் அதில் நிச்சயமாக உங்களுக்கு இடம் இருக்கும்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சொர்க்கத்திற்குப் போகும் வழி மதம் அல்ல

 1. “சொர்க்கத்திற்குப் போகும் வழி” நடுநிலையோடு எழுதப்
  பட்டுள்ளது. தூய மனமும் அர்ப்பணிப்பு உணர்வும்
  இருந்தால் போதும் இறைவனை அடையலாம் என்பதை
  கண்ணப்ப நாயனாரின் பக்தி காட்டுகிறது. நாளெல்லாம்
  பூஜை செய்கின்ற சிவகோசரியாருக்கு காட்சி கொடுக்காத
  இறைவன் ஆறு நாட்களிலேயே கண்ணப்ப நாயனாருக்கு
  முக்தி கொடுத்த புராணம் நாம் அறிந்ததே. திருவள்ளுவர்
  “மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
  தாளுளாள் தாமரையி னாள்.” என்ற குறளில் சோம்பேறிகளிடம்
  மூதேவி குடியிருப்பாள் என்றும் சோம்பல் இல்லாதவனின்
  காலில் சீதேவி குடியிருப்பாள் என்றும் சொல்லுவதை
  நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 2. என் சிந்தனையை மறைக்காமல், நிதர்சனமாக, விமரிசிப்பதை மன்னிக்கவும். இந்த கட்டுரையில் ஆதங்கம் புரிகிறது. அர்த்தம் புரியவில்லை. காரணம்: தொடர்பில்லாத விஷயங்களை கோர்த்து அளித்தது. எனக்கு புரிந்த சில தெளிவுகள்: 
  1.நெருப்பின்றிப் புகையாது என்ற பழமொழியின் ஒவ்வாமை யாவரும் அறிந்ததே. அது ஒரு சந்தேஹப்பிராணியின் குதர்க்க வாதம்.
  2. சுவாமிகள் ஜயேந்திரர்,பக்திபாதா, போப்பாண்டவரின் பேச்சு, கிருத்துவ விளம்பரர்,மதம் மாறிய பெண் ஆகியோரை பற்றிய துணுக்கு செய்திகளுக்கும் ஆன்மீகத்திற்கும் லவலேசமும் சம்பந்தம் கிடையாது. அவலை நினைச்சு உரலை இடிப்பார்களா?
  3. சொர்க்கத்திற்கு போகும் வழி நல்வழி. எம்மதமும் உதவும், சுத்தானந்தமாக இருந்தால். அசுத்தனர்த்தமாக இருந்தால், எம்மதமும் உதவாது.
  4. மதத்தை தேர்ந்தெடுக்கும் விவேகம் 99% மக்களுக்குக் கிடையாது. அதை பற்றி பேசி பயனில்லை.
  5. சொர்க்கம் மதத்தின் ஏகபோக சொத்து என்று எங்கும் சொல்லப்படவில்லை. சொல்லப்படாததுடன் நிழல் போர் ஏன்? எதற்கு? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *