பிரகாஷ் சுகுமாரன்

“என்ன சார் சாப்பிடறீங்க ? ” எனக் கேட்ட சர்வரிடம்,

“எண்ணெய்  அதிகமில்லாம ரெண்டு சப்பாத்தி,  அப்புறமா ஒரு   பிளாக் டீ” எதிரில் அமர்ந்து  சாப்பிட்டுக் கொண்டிருந்த வயதான தம்பதியினர் மீதிருந்து கண்களை எடுக்காமல் அவன் பதிலளித்தான்.

நெத்தி  நிறையப் பொட்டும்,  வாய் நிறையச் சிரிப்புமாக  இருந்த அந்தப் பெண்மணியும்,  நரைத்த கேசத்துடன், குர்தாவை மீறி வெளியே தெரிந்த வயிறுடன் இருந்த பெரியவரும்  சுற்றி நடப்பவற்றை பற்றிக் கண்டு கொள்ளாமல் தங்களுக்குள் மும்முரமாக பேசிக்  கொண்டிருந்தனர்.இந்த வயதிலும் அவர்கள் ஒருவருடன் ஒருவர் அப்படி  அன்னியோன்னியமாகப் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.திருமணமாகி முழுதாக ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில்  தானும் தன் மனைவியும் இப்படி ஒரு முறை  கூடப் பேசியதில்லையே என எண்ணியவன், பக்கத்தில் உட்கார்ந்து செல்போனில் பேசிக்  கொண்டிருந்த மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தான்.

“உனக்கு மட்டும் ஆர்டர் செய்தால் எப்படி?எனக்கு யார் ஆர்டர் செய்வதாம், பக்கத்து டேபிள்ல  உக்காந்திருப்பவனா ?

”செல்போனின் வாயைக் கையால் பொத்தியபடிக் கேட்டவளின் கண்களில் கோபமும் குரலில் எரிச்சலும் தெரிந்தது.

“பின்னே இப்படியே நீ செல்போனில்  பேசிட்டிருந்தா, எவ்ளோ நேரம் நான் வெயிட் பண்றது? அப்படி யாரிடம், என்னதான் பேசுவியோ தெரியலை. பக்கத்துல ஒருத்தன் உக்காந்திருக்கான்ற நினைப்பு இருக்கா உனக்கு ?”என ஆத்திரத்துடன் கேட்டவனிடம்,

“ஆமாம்.இப்போ நான் செல்போனில பேசினதுதான் குறையா?ஏதோ அப்படிப் பேசுறப் போவாது மனசுக்கு நிம்மதி வந்து கொஞ்சம் சிரிக்கிறேனே, அது பிடிக்கலையா உனக்கு? வாழ்நாள் பூரா ஒன்னோட அவதிப்படணும்னு என் தலையில எழுதி வெச்சிருக்கு போல” என்றவள் மீண்டும் செல்போனில்,

“சாரி வைப்பா. இன்னும் பேசினா எவன் கிட்ட பேசுற, என்ன கொஞ்சறேன்னு கேக்க ஆரம்பிச்சுடுவார். காலைல நேர்ல பேசுறேன். எனக்குன்னு வாச்சிருக்கே, எல்லாம் என் தலவிதி”   என்றபடி அதை அணைத்தாள்.

“ஏய், என்ன நினைச்சுக்கிட்டிருக்கே? எல்லாத்தையும் செய்யறது நீ,  ஆனா நான் ஏதோ உன்னை டார்ச்சர் செய்ற மாதிரி மத்தவங்க கிட்ட பில்டப் கொடுக்கறியா?   எல்லாம் என் நேரம். உன்னப் போயிக் கட்டிகிட்டேன் பாரு, என் புத்திய..“  எனத்  தலையிலடித்துக் கொண்டவன்,

“ நாலு எழுத்துப் படிச்ச திமிருல இப்படி நடந்துக்கறியா இல்ல சம்பாதிக்கற திமிரு?. வீட்டுக்கு வந்தா 24  மணி  நேரமும்  நெட்ல அரட்டை அடிக்க  வேண்டியது. வெளில வந்தா செல்போன்ல பேசுறதுன்னு.பக்கத்துல புருஷன் உக்காந்திருக்கானேன்னு ஒரு மரியாதை இல்லாம, வந்து ஒரு மணி நேரமா அப்படி யாரு கிட்ட செல்போன்ல பேசிட்டிருக்க?” ஆத்திரத்தைக் காட்டியதும்,

“அதானே, என்னடா இவ்ளோ நேரமா ஆரம்பிக்கலையேன்னு பாத்தேன். உம் புத்தி வேற எங்கே போகும்? அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கற மாதிரி, சந்தேகப் புத்தி உன்ன விட்டுப் போகவே போகாது. என்னோட பாஸ் கிட்டதான் பேசினேன், என்னங்கறே? எனக் கேட்டவளின்  குரல் எகிறியது.

“எப்பப் பாரு அவன் கிட்டப்  பேசுறதுக்குப்  போயி அவனயேக் கட்டிக்க வேண்டியத்தானே. எதுக்கு என்னக் கட்டிக்கிட்டே ?” என்றவனிடம்,

“உனக்குப் பொண்டாட்டியா  ஆனதால யார் கிட்டயும் பேசக் கூடாதுன்னு சட்டமிருக்கா  என்ன? ஒரு ப்ரோமோஷன் வாங்கித் தர முடியுமா உன்னால?  அவன் கிட்ட அதையிதைப் பேசி நானே என்னப் பாத்துக்கிட்டாத்தான்  உண்டு. சொந்தமா ஒரு  கார் வாங்க வக்கிருக்கா உனக்கு? தெனம்  டிவில மாடல் மாடலா இத்தனைக் கார் வருதேன்னு வாயப் பொளந்துப் பாத்துகிட்டு இருந்தா மட்டும்  போதுமா? அது சரி நீ எங்கே காரப் பாக்குற? விளம்பரத்துல வர்ற பொண்ணுங்களப் பாக்கவே உனக்கு நேரம் போதல. இப்ப என்ன கேள்விக் கேக்க வந்துட்ட?” என்றவளிடம்,

“நீ மட்டும் என்ன விளம்பரத்தையாப் பாக்குற?அதுல வர்ற ஆளுங்களத்தானேப் பாக்குற. அவனப் போல ஒருத்தன் கிடைக்க மாட்டானான்னு ஏக்கம்.ஒருத்தனோட நிக்குறியா? விளம்பரத்துல பாடி ஸ்பிரேயர் போடுறவன், சாக்கலேட் சாப்பிடுறவன்,  பல் விளக்குறவன்னு எவனப் பாத்தாலும் ஒரு வழிசல்.  அப்போ மட்டும் முகத்துல எங்கிருந்துதான் வருமோ தெரியல. அப்படி ஒரு சிரிப்பு. அவங்கதான் உன்ன  வந்துக் காப்பாத்தப் போறா மாதிரி. சரி, உனக்கும் எனக்கும் ஒரு பேச்சுமில்ல. இனி ஒரு தடவ உன்னக் கேள்வி கேட்டா என்ன செருப்பால அடி ” பதிலுக்கு  எரிந்து  விழுந்தவனிடம்,

“இவரு  ரொம்ப  ஒழுங்கு. லிப்ஸ்டிக் விளம்பரத்துல வர்றவ, பவுடர், ப்ரா, நைட்டி, அண்டாங்குண்டான்னு விளம்பரத்துல வர்ற ஒருத்தியையும் விடறதில்ல.அப்படியே முறைச்சுப் பாத்துகிட்டிருக்கிறது. போன மாசம் வாங்கினியே பைக், எதுக்காக வாங்கினேன்னு எனக்குத் தெரியாதா? அந்தப் பைக்ல போனா அப்படியே ரோட்டுலப் போற, வர்ற பொண்ணுங்கள்ளாம் வந்து லிப்ட் கேப்பாளுங்கன்ற நினைப்பு. இப்போச் சொல்றேன். உனக்கும்   எனக்கும் சரிப்பட்டு வராது. சீக்கிரமா உங்க வீட்ல  சொல்லிட்டு என்னை  டைவர்ஸ் பண்ணிடு. அப்போதான் நான் நிம்மதியா வாழ  முடியும்” என்றாள்.

“ஏன்? நீ செய்ய வேண்டியத்தானே. மெயிண்டனன்ஸ்ன்ற பேர்ல இருக்க சொத்தையெல்லாம்  பிடுங்கலாம்னு நினைப்பா? எப்படியாவது என்னைக் கழட்டி விட்டுட்டு, பாய்பிரண்டோடச் சேந்துக் கூத்தடிக்க என் பணத்தை நான் கொடுக்கணும்னு நினைக்கிறே போலருக்கு. பொம்பளையா நீ? வேணா உன் வீட்ல சொல்லி நாளைக்கே எல்லாரையும் வரச் சொல்லு, நீ கேட்ட டைவர்ஸ உடனே கொடுக்கறேன். ஆனா உன்னப் பத்தி எல்லா விஷயத்தையும்,  உன் சொந்தக்காரங்க எல்லாருக்கும் சொல்லிட்டுத்தான் செய்வேன்.எதுக்கும் இன்னைக்கே என் லாயர் கிட்டேப் பேசிடுறேன். இனி உன்னை நம்ப முடியாது, உன் வசதிக்காக என்ன வேணா செய்வே.விட்டா டெளரி கேஸ்ல கூட கம்ப்ளைண்ட் கொடுப்பே நீ”என்றபடி எழுந்தவன் பில்லுக்காக காத்திருந்தபோது,

“இன்னும் நீங்க மாறவேயில்ல.வயசுக்கு வந்த பசங்கள வீட்டுல வெச்சுக்கிட்டு,இன்னும் பைத்தியம் மாதிரி, அதே பழைய சிவாஜின்னு நினைப்பு. கையில அப்பளத்த வச்சிக்கிட்டு, உங்க கண்ணு எங்கே போதுன்னு நான் கவனிக்கலையா என்ன? நானா இருக்கவே இன்னும் சகிச்சிக் கிட்டு ஒங்களோட இருக்கேன்.  வேற எவளா  இருந்தாலும்  இந்நேரம் உங்கள விட்டுட்டு வேற ஆளத் தேடி போயிருப்பா ”

“அங்கே மட்டும் என்ன வாழுதாம்? பெரிய சரோஜாதேவின்னு  நினைப்பு. பாரு உன் கழுத்து ஒரு பக்கமாச் சாஞ்சிப் போனதுக்குக் காரணமே அதானே? ஆனா நம்ம காலமே தேவலாம் போலருக்கு.கொஞ்சம் வளந்து சினிமா, டிராமான்னு சுத்த ஆரம்பிச்சப்புறம் அதையெல்லாம் உண்மைன்னு நம்பி ஏமாந்தோம்.ஆனா இப்போருக்க இளசுங்க டிவில வர்ற சீரியல்களையும், 10  வினாடில வந்துட்டுப் போற விளம்பரங்களும் தான் வாழ்க்கைன்னு நினைச்சிட்டு எதிர்காலத்தக் கெடுத்துக்குதுங்க”  என்ற  பெரியவரின்  பதில் சன்னமாக அவனுக்கும்  கேட்டது.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *