செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(395)

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

-திருக்குறள் -426 (அறிவுடைமை)

புதுக் கவிதையில்

உலகில் சான்றோர்
ஒழுகும் வழியைக் கண்டறிந்தே
அவ்வாறே
உயர்ந்தோர் அவருடன்
பொருந்தி வாழ்தலே
மன்னர்க்கும் மற்றவர்க்கும்
உண்மை அறிவாமே…!

குறும்பாவில்

பெரியோர் வாழ்வைப் பின்பற்றி
புவியில் அவரோடு பொருந்தி வாழ்வதே
பெரிதாம் அறிவென்பதே…!

மரபுக் கவிதையில்

தரணி வாழ்வின் தரமுணர்ந்தே
தங்கள் வாழ்வை மேம்படுத்தத்
தெரிந்தே சான்றோர் பல்லோரும்
தரத்தில் உயர்ந்தே வாழ்வாரே,
கருத்தில் கொண்டே யவரோடு
கண்ணிய மாகச் சேர்ந்தேதான்
தரமாய் வாழ்வை நடத்துதலே
தக்க அறிவாய்ச் சொல்வாரே…!

லிமரைக்கூ..

உயர்ந்தோர் ஒழுக்கச் செறிவு
உணர்ந்ததுபோ லவருடன் ஒன்றி வாழ்தலே
உண்மையி லுயர்ந்த அறிவு…!

கிராமிய பாணியில்

அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
நல்ல அறிவிருக்கணும்,
நெறவோட வாழணுண்ணா
நல்ல அறிவிருக்கணும்..

கொணத்தில ஒசந்த பெரியவங்க
ஒலகத்தில வாழுற
மொறயப் பாத்து
அதுபோலவே
அவங்களோட சேந்து
ஒண்ணா வாழுறதே
உண்மயிலே
ஒயர்ந்த அறிவு..

தெரிஞ்சிக்கோ
அறிவிருக்கணும் அறிவிருக்கணும்
நல்ல அறிவிருக்கணும்,
நெறவோட வாழணுண்ணா
நல்ல அறிவிருக்கணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *