செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(403)

தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

-திருக்குறள் -19 (வான் சிறப்பு)

புதுக் கவிதையில்…

இல்லறத்தார் செய்யும்
இனிய தானதர்மமும்,
இவ்வுலகப் பற்றறுத்துத்
தவசீலர்கள் மேற்கொள்ளும்
தூய துறவறமும்
இல்லாமல் போகும் இவ்வுலகில்,
வான்மேகம் வழங்கும் மழை
வராமல் போனாலே…!

குறும்பாவில்…

பிறர்க்குக் கொடுத்துவாழும் இல்லறமும்
துறவியரின் தவவாழ்வும் தரணியில் இல்லாமல்போகும்
இறங்கி மேகந்தரும் மழை இல்லையென்றால்…!

மரபுக் கவிதையில்…

வருவோர்க் கெல்லாம் வாரிவழங்கும்
வாழ்வாம் இல்லறம் சார்ந்தோரின்
பெருமை மிக்க தானதர்மம்,
பிணைக்கும் உறவை விட்டுடலை
வருத்தி வாழும் துறவியரின்
வலிமை மிக்கத் தவவாழ்வும்,
இருப்பில் இராதே வான்மழையின்
ஈர வளமே யிலையெனிலே…!

லிமரைக்கூ…

இனிய இல்லறத்தில் காணும்
தானதர்மமும் துறவறத்தின் தவவாழ்வும் நிலைக்க,
வான்மழை வந்திட வேணும்…!

கிராமிய பாணியில்…

மழவேணும் மழவேணும்
மனுசவாழ்வு நெலச்சிருக்க
மழவேணும் நல்ல மழவேணும்..

இல்லற வாழ்வுல இருந்துக்கிட்டு
இல்லாதவங்களுக்குச் செய்யிற
தான தருமமும்,
ஓலக ஆசகள உட்டுப்புட்டு
தவசிகள் நடத்துற
தவ வாழ்க்கயும்
எல்லாமே இல்லாமப்போவும்,
வானத்தில மேகம்வந்து பூமிக்கு
மழயத் தராமப் போனாலே..

அதால
மழவேணும் மழவேணும்
மனுசவாழ்வு நெலச்சிருக்க
மழவேணும் நல்ல மழவேணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *