குறளின் கதிர்களாய்…(405)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(405)
அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
-திருக்குறள் -74(அன்புடைமை)
புதுக் கவிதையில்…
அடுத்தவரிடம் காட்டும் அன்பு
அனைவரையும் விரும்ம்பும்
ஆர்வத்தை உருவாக்கும்..
அதுவே
அறிந்து நட்பாகிடும்
அருஞ்சிறப்பையும் தந்திடுமே…!
குறும்பாவில்…
அனைவரையும் விரும்பும்
ஆர்வத்தை உருவாக்கும் அன்பதுவே
நட்பெனும் சிறப்பையும் தருமே…!
மரபுக் கவிதையில்…
அடுத்தவர் தம்மிடம் வெறுப்பகற்றி
அவரிடம் விருப்பொடு பழகுமார்வம்
கொடுத்திடும் அன்பெனு மரும்பண்பே
கூடியே வாழவும் வைத்திடுமே,
தடுத்திடா உறவதால் தான்தருமே
தரணியில் நட்பெனும் நல்லறமே,
அடுத்ததால் வந்திடும் சிறப்பதுவே
அகிலமும் அன்பினா லிணைந்திடுமே…!
லிமரைக்கூ…
அடுத்தவருடன் பழகுமார்வம் தருமே,
அன்பதுவே நட்பெனும் நல்லறம் தருவதால்
சிறப்பெல்லாம் சேர்ந்தே வருமே…!
கிராமிய பாணியில்…
அன்புகாட்டணும் அன்புகாட்டணும்
அடுத்தவங்ககிட்ட அன்புகாட்டணும்,
பகமயில்லாம நட்புவளர
அன்புகாட்டணும் அன்புகாட்டணும்..
அன்பானது
அடுத்தவங்ககிட்ட பழகிற
ஆர்வத்தக் குடுக்குமே,
அதுனால
அவுங்களோட நட்பாகிற
செறப்பும் சேருமே..
அதுனால
அன்புகாட்டணும் அன்புகாட்டணும்
அடுத்தவங்ககிட்ட அன்புகாட்டணும்,
பகமயில்லாம நட்புவளர
அன்புகாட்டணும் அன்புகாட்டணும்…!