ரங்கன் என்கிற ரங்கப்பா

பாஸ்கர்
ரங்கனோடு சினிமா பார்க்க முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி வரும்போது அவன் என் தொடையைக் கிள்ளி, “பார்ரா” என்பான்.
அவன் என்னோடு கோலி, கில்லி ஆடினவன். சிறு வயது முதல் சிநேகம். எனக்குத் தெரிந்து டெர்லின் சட்டை போட்ட முதல் நண்பன். மூணு மாசம் பெரியவன். கோலி அடிக்கும்போது அவன் விரலை அழுத்திச் செலுத்தும் வேகம் ஆர்யபட்டா தான். எதிர்கோலி எகிறி விழும். அது கலர் கலராய் சுழன்று ஓடுவதைப் பார்ப்பது ஆனந்தம்.
மஹா ரசிகன்.. எனக்கு சினிமா ரசனயை ஊட்டிய பலருள் இவனும் ஒருவன். கபாலி காமதேனுவில் இவனுக்கு எல்லாம் அத்துப்படி. கும்பலில் புகுந்து இவன் டிக்கெட் வாங்கி வரும் போது, எனக்கு இவன் சிவாஜியை விடப் பெரிதாய்த் தெரிந்தான்.
கருட மூக்கு. படிப்பில் கெட்டி. என்னவோ என் மேல் அவனுக்கு ஒரு அன்பு. கூடவே வைத்துக்கொள்வான் ஒரு தளபதி போல். ஒரு நாள் எனக்கு ஜுரம் வந்த போது பக்கத்திலேயே இருந்தான். எனக்கு நட்பு தாண்டி ஒரு மரியாதை வந்துவிட்டது.
பத்தாம் வகுப்பில் இடம் மாறும்போது அவன் நகர்ந்து போனான். மைதானத்தில், தெருவில் என எங்குப் பார்த்தாலும் சுவாரஸ்யம் இல்லாமல் பேசினான். ஒரு நாள் அவன் குடும்பம் காலி செய்த போது கழிப்பறைக்குள் சென்று அழுதேன். வெளியே வந்த போது அவன் வீட்டில் யாரும் இல்லை.
ஞாயிறு அன்று அபிச்வரியில் அதே கருட மூக்கைப் பார்த்தபோது கொஞ்சம் வயிற்றைக் கலக்கியது. இது மூன்றாம் வருடமாம். ஒருவேளை நான் பக்கத்தில் இருந்து, டேய், புனர்ஜன்மம் கணேசனைப் பத்மினி அடிக்கற காட்சி எனச் சொல்லி, தொடையைக் கிள்ளியிருந்தால் அவன் எழுந்துகொண்டிருப்பான்.