அருமை பெருமை
தமிழ்த்தேனீ
“என்னாங்க கொஞ்சம் கூட முன் யோசனை இல்லாம இப்பிடி இருக்கீங்க, அவங்க சொல்வாங்க வரேன்னு, அதுக்காக நீங்க யோசிக்காம ஒரே நாளிலே எப்பிடி எல்லாரையும் வரச் சொல்லலாம்?. உங்களுக்கு என்னா சொல்லிடுவீங்க, நான் தானே பாடு படணும், அவங்க வரும்போது வீடு சுத்தமா இருக்கணும், அவங்க எத்தினி பேரு வருவாங்களோ அவங்க உக்கார்ரதுக்கு நாற்காலி போடணும், நீங்களும் உதவி செய்ய மாட்டீங்க, உங்க பொண்ணு அதுக்கும் மேலே, ஒரு நாள் ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டுட்டு வந்து எனக்கு உதவறாளா? எப்போ பாத்தாலும் வீட்டுக்கு வந்தும் ஆபீஸ் வேலைதான், எப்போ பாத்தாலும் செல்போன்லே பேசிக்கிட்டே இருக்கா, நான் ஒருத்தி கிடந்து அல்லாடிக்கிட்டு இருக்கேன்”
புலம்பியபடியே இருந்த காமாக்ஷியை சமாதானப் படுத்தி, “இதோ பாரு வாய் ஓயாம புலம்பாத, இப்பிடி உக்காரு. ஆமாம் ஏன் இப்பிடி டென்ஷன் ஆவற, என்னாமோ உன் பொண்ண பொண் பாக்க வரா மாதிரியும், நான் என்னமோ வெவஸ்தை கெட்ட தனமா எல்லாரையும் ஒரே நாளுலே வரவெச்சா மாதிரியும் புலம்பறே. தோட்டம் துரவுன்னு இருக்கு, நாலு செடி போடலாம், காத்தோட்டமா இருக்கும், கிராமத்தோட இயற்கையான காத்தை அனுபவிக்கலாம், இந்த நகரத்தோட சந்தடி இல்லாமே சத்தம் இல்லாம, சுத்தமா, அமைதியா இருக்கலாம். சுத்தமான காத்து வரும், பக்கத்திலேயே பச்சை அம்மன் கோயில் இருக்கு, கொடியிடைநாயகி கோயில் இருக்கு, வைஷ்ணவி கோயில் இருக்கு, இப்பிடியெல்லாம் சொல்லி சொல்லி என் மனசை மாத்தினதே நீதானே”
“உன்னாலேதானே நானே இந்த முடிவெடுத்தேன். நாம ரெண்டு பேரும் சேந்துதானே நகரத்திலே மைய்யமா இருக்கற இந்த பிளாட்டை வாடகைக்கு விட்டுட்டு திருமுல்லைவாயில்லே இருக்கற தனி வீட்டுக்குப் போயிடலாம்னு. வீட்டை வாடகைக்கு விடணும்னா நாலு பேரு பாக்க வரத்தான் வருவாங்க, அதென்னமோ தெரியலை திடீர்ன்னு எல்லாரும் இன்னைக்கே வரதா சொல்றாங்க ,வேண்டாம்னு சொல்ல முடியுமா? என்னமோ நம்ம பொண்ணை, பொண்ணு பாக்க எல்லாரையும் ஒரே நாளிலே வரச் சொல்லிட்டா மாதிரி டென்ஷனாகிறே. சீக்கிறமா யாரையாவது ஒரு நல்ல குடும்பத்தை இங்கே வாடகைக்கு விட்டாதானே நாம நம்ம வீட்டுக்கு குடிபோக முடியும்” என்றார் வைத்திய நாதன்.
அன்றைக்கே பல பேர் வந்து வீட்டைப் பார்த்தனர், தரகர் ஒவ்வொருவரிடமும் வீட்டின் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டே இருந்தார். அவர்க்கு கமிஷன் வர வேண்டுமே என்னும் கவலை அவருக்கு.
தரகர் வீட்டின் அருமை பெருமைகளை சொல்லச் சொல்ல வைத்தியநாதனுக்கும், அவர் மனைவி காமாக்ஷிக்கும் உண்மையிலேயே அவர்களின் வீட்டின் அருமை பெருமைகள் புரிய ஆரம்பித்தது. அடேடே இவ்வளவு நல்ல வீட்டிலேயா நாம இவ்வளவு நாட்கள் இருந்தோம் என்று என்று புரிய ஆரம்பித்தது.
ஆமாம் நமக்கு நம்மிடம் இருக்கும் எதுவாயினும் அடுத்தவர் வந்து சொல்லும் வரை அருமை பெருமைகள் புரிவதே இல்லை என்னும் உண்மையை அவர்களும் உணரத் தொடங்கினர், ஒவ்வொரு அனுபவமும் பாடம்தானே!
படத்திற்கு நன்றி: http://www.kamat.com/kalranga/architecture/common/13219.htm
அனுபவமும் ஒரு கலை.