நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்(பகுதி-1)
தி. சுபாஷிணி.
எம்.எஸ் சுப்புலட்சுமியின் இன்னிசை மிதந்து மிதந்து என் காதருகே வந்து அமர்ந்து மெதுவாய் அழைத்தது. சிலிர்த்தது என் உள்ளம்; விழித்தன விழிகள்; கலைந்தும் கலையா உறக்கம்; மெள்ள படுக்கையிலிருந்து நிதானமாய் எழுந்து, மயக்க நிலையிலேயே அறைக் கதவைத் திறக்கின்றேன். ஒரு நிமிடம்…மென்காற்று வருடி வரவேற்கிறது. அதன் இதத்தை அப்படியே அனுபவிக்கின்றேன். உள்ளம் குளிரக் குளிர, தானாக அறையை விட்டு வெளியே வருகின்றேன். மின் விளக்கின் மஞ்சள் வெளிச்சம். கண்கள் கூசாத மென் வெளிச்சம். ஆங்காங்கே கருப்பாய் நிற்கும் மரங்கள், அவ்வளாகத்தைக் காக்கும் வீரர்களாய் நிற்கின்றன. நான் அக்கட்டிடம் தாண்டி முன்னேறுகின்றேன். மாலையில் குளிர்ச்சி உச்சியில் சென்று ஜில்லென்று அமர்கின்றது. இளங்காற்றின் அணைப்பிலேயே அப்படியே ஒரு பர்லாங் தூரம் சென்று அங்குள்ள சிமெண்ட் இருக்கையில் அமர்கின்றேன். அதன் ஓரத்தில் ஒரு படுக்கை சுற்றியவாறு இருக்கின்றது. அப்போதுதான் அவர் எழுந்து சென்றிருக்க வேண்டும். கடற்காற்றின் ஈரப்பதம் மெல்லியப் போர்வையாய் என்னைப் போர்த்துகிறது. இன்னமும் எம்.எஸ். அவர்கள் சுப்ரபாதம் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சப்தங்கள் கொத்துக் கொத்தாய்க் காதில் விழுகின்றது. எதிரில், சற்று வலப்பக்கமாய்த்தான் அவைகள் விழுகின்றன. நிச்சயமாய் அதோ! அங்கே நிற்கும் மரமாகத்தான் இருக்க வேண்டும். காதுகளைக் கூர்மையாக்கி, அதன் முழுத் திறனையும் குவிக்கின்றேன்.
‘சிட் சிட்’….எனவொரு சப்தம்……..சப்தங்கள் ஆயின……. நிச்சயமாய் இவை விட்டு விடுதலையைப் பறை சாற்றும் சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளின் சப்தங்கள்தாம். குறுகிய கால அளவில் கேட்கும் இது இன்பத்தைத் தூண்டுவதாக இருக்கின்றது. அதன் பார்ப்புகளோடு கொஞ்சுமோ! இரை தேடி வரும் வரை பத்திரமாக இருங்கள். விரைவில் திரும்பி விடுவோம் என்று தன் பார்ப்புகளிடம் கூறும் நம்பிக்கை மொழியோ இவைகள்! ‘ட்டுவி’…’ட்டுவி’ என நீளமாய் ஒரு பேச்சு….நிச்சயம் அவை மைனாக்கள்தாம். ‘கீ கீ கீ’யெனத் தத்தை மொழிகள். அப்பப்பா! இடைவிடாது ஒலிக்கின்றதைப் பார்த்தால், அவைகள் அதிக எண்ணிக்கைகளாக இருக்கும். இன்னிசையின் இனிமைக்குத் தொடர்பில்லாமல், ‘கா கா கா’ என்று கரகரவென ஒரு மொழி. காக்கைகளின் கரைதல்தான். திடீரென்று எனக்குப் பின்னாலிருந்து அகல் மயில் அகவல்களும், தோகைகளை அடிக்கும் சப்தங்களும் கேட்கின்றன. ‘கூ கூ’ எனக் குயிலொன்று பாட, அதற்கு மறுமொழியாய் மற்றொரு குயில் கூவ, காலத்தை இனிமையாக்கின. ஒரு நிமிடம் கண் மூடுகின்றேன். அத்தனை சப்தங்களும் ஒரு சேரக் காதில் விழுகின்றன. ஒரு ஜுகல் பந்தியும், ஒரு ஃப்யூஷன் மியூஸிக் கச்சேரியும்“ நிகழ்ந்து கொண்டிருந்தன. இது இயற்கையின் இலவசக் கச்சேரி.
இலேசாகப் பொழுது புலரும் தருணம். அதை நான் உணர்கின்றேன். வெளிச்சத்தின் வருகையை மனமும் அறிவும் உணர்ந்து அறிகின்றன. கண் விழித்து நோக்குகின்றேன். அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே பலபல என புலர்ந்து விடிகின்றது. கருப்புக் கருப்பாய் நின்ற மரங்கள் எல்லாம் தன் பச்சை நிறங்களை எனக்குக் காட்டுகின்றன. மிகவும் ஆவலாய் மொழியிசைக் கச்சேரியை நிகழ்த்திய அந்த மரத்தை நோக்குகின்றேன். நிச்சயமாய் அது ஒரு பெரிய அடர்ந்த மரமாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் அத்துணை அளவு சப்தங்கள் அங்கிருந்து வந்தன. என் எதிரே அப்படிப்பட்ட மரத்தைத் தேடுகின்றேன். அடடா! என்ன ஆச்சரியம்! எப்படி இது நிகழ்ந்தது! அத்துணை மொழிகள் பேசிய, அம்மரத்தின் மொழியே அதுதானோ என நான் எண்ணிய மரம் மிகவும் மெல்லியதான ஒரு வேப்ப மரம். அதில் அத்துணை புள்ளினமும் பார்ப்புகளும் உரையாடிய அளவளாவிய சுவடே தெரியாது அது நின்று கொண்டிருக்கின்றது. பொழுது புலர்ந்ததும் அவைகள் கிளம்பியதா? புலரும் முன் ஒரு கணத்திற்கு முன் அவைகள் புறப்பட்டுப் போயினவா! இத்தனைப் பறவைகளோடு இரவு முழுவதும் அவைகளுக்கு தங்குவதற்குப் பயன்பட்ட மரம், அதற்கும் இதற்கும் தொடர்பில்லாதது போல் நின்று கொண்டிருக்கிறது.
இந்த மெல்லிய மரம் எப்படி அத்துணைப் பறவைகளும்…என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் நம்பத்தான் வேண்டும் நண்பர்களே! அவைகள் பறந்தாலும் விட்டுச் சென்ற தடங்களாய் அம்மரத்துக் கிளைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன.
அக்கிளைகளின் நடனமும், அக்காலையின் புலரும் மணமும் என்னை மேலும் மரத்தோடு இணைய வைத்தது. சின்னஞ்சிறு புட்களுக்கு உறைவிடமாய்த் திகழும் மரம் எத்தகையதாம் என்று அதிவீரராம பாண்டியன் தன் கவிதை மொழியில் பகர்ந்ததைப் பகிரலாம் என எண்ணுகின்றேன்.
“தெள்ளிய ஆலின் சிறுபழ ஒருவிதை
தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினம்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அடிதேர் புரவிஆட பெரும்படை யோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே”
ஒரு சிறிய மீனின் முட்டையின் நுண்ணிய அளவை விடச் சிறிய ஆலமரத்தின் விதை, மண்ணில் தழைத்து வளர்ந்து ஒரு பெரிய யானைப்படை, குதிரைப்படையெனப் பெரும்படையோடு கூடிய வேந்தனையும் அவர்தம் படைகளையும் தங்க வைக்கும் அளவிற்கு நிழல் தரக்கூடிய பெரிய மரமாக விளங்குகிறது. மரம் என்னும் போது நம் சங்க இலக்கியத்தின் முதல் நூலான நற்றிணையைத்தான் நாம் மறக்க இயலுமா?
தலைவி தோழிகளுடன், தன் சிறுவயதில் மணலில் புன்னைமர விதைகளைப் பொதித்து விளையாடியதில், ஒரு விதை மணலில் நன்றாக அழுந்தி, வேர் விட்டு, துளிர் விட்டுத் தாவரமாய் வெளி வந்தது. அது வந்தவுடன் அவளோ அகமகிழ்ந்து, நெய்யும், பாலும், நீரும் வார்த்து வளர்க்கிறாள். அவளது அன்னையும் “நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினாள் புன்னையது சிறப்பே” (நற்றிணை 172) அம்மரம் அவனது உடன் பிறப்பாகிய தங்கையாகும்“ என்று கூறுகிறாள். தன் தலைவன் அம்மரத்தின் முன் சந்திக்கும் பொழுது, இதைத் தலைவனுக்கு விளக்கி, “என் சகோதரிமுன் எங்ஙனம் காதல் மொழி பேச என்னால் இயலும்“ என்கின்றார்.
இந்த அதிகாலை வேளையில் இத்துணையும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. என் உடன்பிறப்புக்களுடன் நான் இருப்பது போல் உணர்கின்றேன். அதிவீரராம பாண்டியனும் நற்றிணையும் மிகவும் நெருக்கமான உறவு போல் ஒரு அனுபவம் ஏற்படுகின்றது. அந்தச் சிறிய ஆலவிதை போன்ற சாமானிய மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, பெரிய நிழலாகிய சுதந்திரத்தை அளித்த செயல் நினைவில் வருகின்றது. உடன்பிறப்பாகிய புன்னை மரங்கள் போல், ஏனைய தாவரங்களும் நம் வாழ்வியலோடு நம்முடனே, நமக்குத் துணையாக நம் வாழ்வில் நிழலாக நினைவுகளின் நினைவாலயங்களாக, நம் தேவைகளின் பொக்கிஷங்களாக…..என்று ஒவ்வொன்றாக தன் இதழ்களை விரித்தன. மனிதனும் மரமும் இணை பிரியாதவை என்ற எண்ணம் மேலோங்கி நின்றது.
“என்ன சுபாஷிணி? இங்கேயே உட்கார்ந்திட்டீங்க?” “சூரிய உதயம் பார்க்க வரலியா” என எழுத்தாளர் அம்பையும் கவிஞர் இளம்பிறையும் அழைத்த பின்தான் இவ்வுலகம் வந்தேன்.
(தொடரும்)
படத்திற்கு நன்றி: http://mblog.lib.umich.edu/csassummer08/archives/2008/05/photos_so_far.html#comments