குறளின் கதிர்களாய்…(418)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(418)

செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.

– திருக்குறள் – 313 (இன்னா செய்யாமை)

புதுக் கவிதையில்…

தாம் தீமையேதும்
செய்யாத நிiiயில்,
தமக்குத் தீங்குசெய்வோர் மீது
சினந்து எதிர்த்துத்
தீங்கு செய்யும்
துறவறத்தார் தமக்கு,
தீங்கதுவே மீளமுடியாத்
துன்பத்தையே தந்திடும்…!

குறும்பாவில்…

தீமையேதும் செய்யாதபோதும் தீமைசெய்வோரை
எதிர்த்துத்துத் தீங்குசெய்யும் துறந்தார்க்குத் தீங்கதுவே
மீளவியலாத் துன்பத்தைத் தந்திடுமே…!

மரபுக் கவிதையில்…

சற்றும் தீமை செயாதபோதும்
சார்ந்தே இடரைத் தருந்தீயோர்
பெற்றே வருந்திக் கலங்கிடவே
பெரிதாய்த் தீங்கு செய்கின்ற
முற்றும் துறந்த பெரியோர்க்கே
முயன்றே செய்யும் தீங்கதுவே
சற்றும் மீள வழியிலாத
சதியாம் துன்பம் தந்திடுமே…!

லிமரைக்கூ…

தீமைசெயாமலே செய்வார் தீங்கு,
அவரொறுக்கத் தீமைசெயும் துறவோர் தமக்கே
அளவிலாக் கேடுவருமே ஆங்கு…!

கிராமிய பாணியில்…

செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
கெடுதல் செய்யாத..

ஒருத்தருக்கும் தீமசெய்யாதபோதும்
நமக்குக் கெடுதல் செய்றவங்களுக்கும்
கெடுதல் செய்யாம
இருக்கிறதே ஒசந்த கொணம்,
அப்புடியில்லாமக் கெடுதல் செய்யிறவன்
தொறவியாயிருந்தாலும்,
அவனுக்கு அந்தக் கெடுதலால
மீளமுடியாத துன்பந்தான் வருமே..

அதால
செய்யாத செய்யாத
கெடுதல் செய்யாத,
அடுத்தவங்களுக்கு ஒருநாளும்
கெடுதல் செய்யாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.