படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 20

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

வசந்தராசன் பாடிய ‘கருவறைப் பதிகம்’

முன்னுரை

தம்பி வசந்தராசன் உணர்ச்சிக் கவிஞர். தன்னைப் பாதித்த பொருண்மைகளைக் கவிதையாக்கும் பேராற்றல் படைத்தவர். ‘நிறைத்ததும் நிறைந்ததும் நானேதானே! நிறைத்தவர் நிறைந்தவர் நீங்கள்தானே! என்னும் பண்பாட்டுக்கும் மனிதநேயத்திற்கும் நெருக்கமானவர். கவிதையை வணிகமாக்காமல் வாழ்க்கைத் தடமாக மாற்ற முயல்பவர். பெற்றெடுத்து வளர்த்த தாயைப் பேணிப் புரக்க முடியாத வேதனைச் சூழலை எண்ணி மருகும் இவர், “பூப்படையல் வாடிவிடும் பொன்படையல் மங்குமென்று” அந்தத் தாயைப் பாப்படையல் தலைவியாக்கிப் பாடிய நூல்தான் ‘தாயின் மடியில்’ என்பதாகும். தாயின் மடியில் என்னும் இச்சிறுநூல் பதினேழு எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களால் ஆனது. தேமா, புளிமாக்களைச் சீராகக் கருதாமல் தாயின் சிறப்புக்களையே சீராக்கி எழுதியிருக்கிறார். எழுதியவர் வைத்த பெயர் ‘தாயின் மடியில். பாடல்களை மனமுருகிப் படித்த நான் சூட்டிய பெயர் ‘கருவறைப் பதிகம்’. இளையராஜாவை இசைஞானியாக்கியவர் கலைஞர். பாடல்களைப் பதிகமாக்கியவன் நான். பெயரில் என்ன இருக்கிறது பெருமை? தாயின் பேதைமையில் அல்லவா இருந்தது நம் வாழ்வு?. இளகிய இதயத்திலிருந்து இறக்கிவைத்த சுமை. எல்லாருக்கும் பொதுவான உணர்வு கவிதையாகிறபோது என்னையும் பாதிக்கும் உங்களையும் பாதிக்கும்! கவிதையின் வெற்றி அதுதானே! வாருங்கள் கருவறைக்குள் செல்லலாம்!

தான் எழுதும் அனைத்துக் கவிதைகளும் பிறரால் சுவைக்கப்படல் வேண்டும் என்று ஒரு கவிஞன் கருதலாம். எதிர்பார்க்கலாம். அது அவனுடைய துடிப்பு கலந்த ஆர்வம். எதிர்பார்ப்பு. ஆனால் நடப்பியல் முற்றிலும் வேறானது. முற்றும் எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்து அப்படியும் சுவைக்கப்படலாம். ஏதாவது சில பகுதிகள் சுவையாக இருக்கலாம். அலலது  ஒரு சில பாடல்களோ ஒரு பாடலோ கூட அற்புதமாக அமைந்துவிடலாம். அது மட்டுமன்று. ஒரு நீண்ட கவிதையில் அனைத்தும் கவிதைப்பதமாகவே அமைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. பத்தாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட கம்பராமாயணத்தின் அனைத்துப்பாடல்களுமா கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி ஆக்கிவிடுகின்றன? ஆனால் ஒரு சில பாடல்களில் அவன் உலகக்கவிகளுக்கெல்லாம் கவிவேந்தன் ஆகிவிடுவதைக் காணலாம். ‘கனி வரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ?” ‘அழகெலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்ற வல்லார்,’ என்னும் கம்பனின் வினாக்கள் அவனை உலககவி வேந்தனாக்கும். காரணம் ‘கவிதைப்பதம்’ ஒரு நீண்ட கவிதையிலும் அமையலாம். சிறிய கவிதையிலும் அமையலாம் ஒரு அடியில் மட்டுமே அமைந்திருக்கலாம். ஒரு சீரில் அல்லது அசையில் கூட அமைந்திருக்கலாம்.  இந்த அளவை நான் என் கட்டுரைகள் பலவற்றில் வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் பதிவிட்டு வருகிறேன். ஒரு படைப்பை முழுமையாகப் படிப்பது வேறு. படைப்பாளன் ஒருவனின் அனைத்துப் படைப்புக்களையும் முழுமையாகப் படிப்பது என்பது வேறு. நம் உள்ளத்தை எது கவர்கிறது? எப்படிக் கவர்கிறது? அந்தக் கவர்ச்சிக்கு எது காரணம்? என்பதைப் பொருத்துத்தான் அந்தச் சுவையுணர் திறன்  அமையும்.

அம்மாவும் தாயும்

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவாக இருப்பினும ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு தனித்த காரணம் உண்டு. பலபொருள் ஒரு சொல் என்பதற்கும் இது பொருந்தும். சான்றாக ‘கொக்கு பறந்தது’ என்றால் பறந்தது என்ற வினையால் கொக்கு என்பது பறவையைக் குறிக்கும். ‘கொக்கு காய்த்தது’ என்றால் காய்த்தது என்ற வினையால் அது மாமரத்தைக் குறிக்கும். இரண்டிடத்தும் இருவேறு பொருளைத் தருகிற ‘கொக்கு’ என்பது ஒரு சொல் அல்ல. அந்தச் சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒற்றுமை சொல்லின் ஒற்றுமையாகக் கருதப்படும். உண்மையில் பலபொருள் ஒரு சொல் என்பதே கிடையாது. அதாவது ஒரு சொல் ஒரு பொழுதில் ஒரு பொருளைத்தான் குறிக்கும். ‘அம்மா’ ‘தாய்’ ‘அன்னை’ என்னும் சொற்களும் அத்தகையனவே. எல்லாச் சொற்களும்  தாய்மையோடு தொடர்புடையதுதான். ஆனால் அம்மா என்பது தாயினும் வேறுபட்டது. ‘அம்’ என்னும் வேரிலிருந்து கிளைத்த சொற்களில் அதுவும் ஒன்று. ‘அம்’ என்றால் அழகிய என்று பொருள். ‘அம்ம கேட்பிக்கும்’ என்பது தொல்காப்பியம் ‘அம்ம’ வாழி தோழி என்பது சங்க இலக்கியங்களில் பெருவழக்கு. தான் பெற்றெடுத்த குழந்தைக்காக எதனையும் யாரிடத்தும் கேட்பவள் ஆதலின் அவள் அம்மா எனவே பெற்றவள்தான் அம்மா. ஆனால் தாய் என்பவள் அம்மாவினும் வேறானவள். குழந்தை பெறுகின்ற எல்லாரும் தாய்தான். தாய் உறவுச் சொல் அன்று. அம்மாதான் உறவுச்சொல். அம்மா என்பது வியப்பிடைச் சொல்லாக வரும். தாய் என்பது அவ்வாறு வராது. ஒருவனுடைய தாய் மற்றவனுக்கும் தாய்தான். ஆனால் ஒருவனுடைய அம்மா மற்றவனுக்கு அம்மாவாக முடியாது.

‘அன்னை’ என்ற சொல் முழுக்க முழுக்கப் பண்பைக் குறிக்கும் சொல். தாய்மை உணர்வால் தன்னைச் சாராதனவற்றையும் தழுவிக்கொள்ளும் தூய நல் உள்ளங் கொணடவரையே அன்னை என்று அழைக்கிறோம். அன்னை தெரசா, அன்னை வேளாங்கண்ணி, அன்னை மரியாள், என்பன காண்க. இவற்றுக்கு மாற்றாக ‘அம்மா தெரசா’ என்றோ ‘தாய் தெரசா’ என்றோ நாம் அழைப்பதில்லை.

இந்த வேறுபாடு தெரியாவிட்டால் பெறுகின்ற மொழிப்பயன் என்பது ஏதுமில்லை. தமிழ் அழகான மொழிமட்டுமன்று. ஆழமான மொழியும் கூட.

ஒரு துளியின் பனிஉண்டு கால மெல்லாம்
உயிர் வாழும் சக்ரவாகப் பறவை போல
ஒருபருக்கைச் சோற்றினிலும் உயிர்த்திருப்பார்!
உணவுமலை குவிந்திருக்கு! எழுந்து வாம்மா!
ஒரு கண்ணால் உறங்குகின்ற ஆற்றல் பெற்றாய்!
மறுகண்ணால் எமைகாக்க விழித்தி ருந்தாய்
இருகண்ணும் உறங்கிவிட்டால் என்ன செய்யும்?
எமைகாக்க இயேசுவைப்போல் எழமாட் டாயா?”

முதலை விழித்துக் கொண்டே தூங்குமாம். அதாவது முதலையின் கண்களுக்கு இமைகள் கிடையாது. ஒரு தாயும் முதலையைப் போல்தான். இல்லறக் கடமைகளில் களைத்துப் போன தாய் ஒரு கண்ணால் கண்ணயர்கிறாள்.. மற்றொரு கண்ணால் தான் பெற்ற மக்களைக் காக்கிறாள். மீன தன் பார்வையாலேயே குஞ்சு பொரிப்பதாகச் சொல்கிறார்கள். சமைத்த உணவு மலையைப் பிள்ளைகளுக்குக் கொடுத்த அந்தத் தாய் ஒரு பருக்கைச் சோற்றிலேயே உயிர்வாழ்கிறாளாம். இன்று மறைந்து போனாள். அவள் இருகண்ணும் மறைந்தன! அவளும் தூங்கவில்லை. எங்களைக் காப்பதற்கும் ஆளில்லையே என்றெல்லாம் புலம்பித் தீர்க்கும் கவிஞர், இறுதியிலே சொல்கிறார்.

எமைகாக்க இயேசுவைப்போல் எழமாட் டாயா?”

இவ்வுலகில் உயிர்த்தெழுந்த அருளாளர் இயேசு ஒருவரே. அவரை உவமமாக்குகிறார். படையலிலே வைத்த பண்டம் படைப்பவர்க்கு ஆகுமேயன்றிப் படம் இறங்கி உண்பதில்லை என்பது அறிவியல் உண்மை. ஒரு நம்பிக்கைதான். ‘உணவு மலை குவிந்திருக்கும் எழுந்து வாம்மா’ என்னும் தொடர் காலம் கடந்த யதார்த்த சூழலைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இலக்கிய நெறிகள் இரண்டு

வாழ்க்கை நெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் தமிழிலக்கியப் பகுதிகள் இரண்டுவகையாக வெளிப்படுத்தி நிற்கின்றன.  மயிலிறகால் வருடுவதைப் போன்று அறநெறி கூறும் போக்கில் நேர்முகமாக உண்மையை மறைத்து இலைமறை  காய்மறையாக உணர்த்துவது ஒன்று. பொட்டென்று போட்டுடைத்து நடப்பியலை முன்னிறுத்தி ‘மருந்து கசக்கும் உண்மை சுடும்’ என்ற கோட்பாடுகளின் அடிபபடையில் நம்பிக்கை வைத்து உணர்த்துவது மற்றொன்று.

பரத்தையர் பிரிவை இலக்கியமாகவே பாடியிருக்கும் பழந்தமிழிலக்கியங்கள் பரத்தையினால் வரும் நோய்பற்றிப் பாடவில்லை. பரத்தையர் தொடர்பு ஒரு தனிமனிதனின் சமுதாய மதிப்பைப் பாழடிக்கும் பாங்கினைப் பாடவில்லை. மாறாகப் பரத்தையர்களை இரக்கத்திற்குரியவர்களாகவும் அவர்களின் அந்த நிலைக்கு ஆண்களே காரணம் என்பதுபோலவும் பாடினார்கள். பாடிவருகிறார்கள்.

உண்மையைப் போட்டுடைக்கும் நெறியை அருணகிரிநாதர், பட்டினத்தார், கண்ணதாசன் முதலிய கவிஞர்களிடத்தில் காணலாம். உருவகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் உருப்படியாகவே தாய் கருதப்பட்டிருக்கிறாள். சமுதாய வாழ்வில் தாய் பெற்ற இடத்தை இலக்கியத்தில் அவளால் பெற முடியவில்லை என்பது உண்மையா பொய்யா? ‘பெற்ற மனம்’ என்ற நாவலோடு முடித்துக் கொள்ளலாமா? இல்லை ‘அம்மா வந்தா(ள்)ல்’ போதுமா?

தாய்மைக்குத் தனி இலக்கியம் உண்டா?

தாய்க்குத் தனி இலக்கியம் தமிழில் இல்லை. தாய்மையைப் புகழ்ந்து பாடும் பெருங்காவியமும் இல்லை. சிறுகாவியமும் இல்லை. உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளில் தாயைப் பற்றிய குறிப்புக்கள் பிற உறவுகளைச் சார்ந்தே குறிப்பிடப்படுகிறது, ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ ‘சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்பன அவற்றுள் சில. மனைவிக்காக ‘வாழ்க்கைத் துணை நலம்’ பாடிய திருவள்ளுவர் தாய்க்காகத் தனிஅதிகாரத்தை எழுதவில்லையே! ‘ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்’ என்று பசிக்க மட்டுமே தாய் பயன்பட்டிருக்கிறாள். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் மாதா பிதா குரு தெய்வம் என்றும் அமைதியடைந்தோம். தாய்க்குப் பின் தாரம் என்ற திரைப்படத் தலைப்பில் மயங்கினோம். அவள் பட்ட துயரத்தைப் பாட ஒரு புலவன் இல்லாமல் போனது ஏன்?

கவிதைகளிலும் வழக்கிலும் தாய்நாடு, தாய்மொழி, தாய்மேல் ஆணை தாய்மேல் சத்தியம் ‘என்றெமது அன்னை கை விலங்குகள் போகும்? என்பன போன்ற சொற்களோடு தாய்மை இலக்கியம் தன்னிறைவு பெற்றதா?இலக்கியப் பெரும்பரப்பில் காணப்படும் இந்த வறட்சிநிலைதான் திரைப்படங்களில் இடம் பெறும் தாய்மை பற்றிய பாடல்களில் பெரும் ஈர்ப்புக்குக் காரணமானது என்பது ஒரு கசப்பான உண்மை. ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை” என்னும் ஷெரீப் பாடலிலும், தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்னும் உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடலிலும் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்னும் வாலியின் வரிகளிலும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் மனம் பறிகொடுப்பதற்கு அன்னை பற்றிய இலக்கிய வறட்சியே காரணம் என்பது என் துணிபு. .கர்நாடக இசைக்கச்சேரிகளில் இறுதியாகப் பாடும் தமிழ்த் துக்கடாக்களைப் போலவே தாய் பற்றிய சிந்தனைகள் தமிழிலக்கியக் கச்சேரியில் துக்கடாவாகிப் போனதற்கான காரணம் அறியக் கூடவில்லை!

எண்ணி மருகும் கவி நெஞ்சு!

‘இரக்கமுடையவர்கள் பேறுபெற்றவர்கள்’ என்பது விவிலியம். இரக்கமில்லாதவர்கள் கவிதை எழுத முடியாது என்பது தமிழியம். வசந்தராசன் இரக்கமுடையவர். இளகிய மனம் படைத்தவர். இது அவருடைய படைப்புக்களிலிருந்தே பெறப்படும் உண்மையாகும். தன் அன்னை பெற்ற வேதனையை ஒவ்வொன்றாக எண்ணி வருந்துகிறார். துடிக்கிறார்.

பள்ளி சென்ற பிள்ளை மழையில் நனைந்து கொண்டே வீடு திரும்பினால் நனைந்து வந்த காரணத்தால் பையனைத்தான் திட்டுவான் தந்தை. ‘மழை நின்ற பிறகு வரக்கூடாதா?’ என்று பிள்ளையைக் கண்டிக்கிற தாய் “நாசமாப் போன மழை எம் புள்ள வீடு வந்த சேர்ந்தபிறக பெய்யக்கூடாதா?” மழையை ஏசுவாள்.

அரைநேரப் பள்ளியில் நண்பகல் வீடு திரும்பினால் மகனின் சுடுகின்ற உச்சி தொட்டுக் கதிரவனை வைவாள்!

‘எம்புள்ள தப்பு செய்ய மாட்டானே’?  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவாள் தாய்.

பிறரெல்லாம் அளந்து சொல்வதை கன்னியம்மாள் கண்ணால் கண்டே சொல்வாராம். உண்மைதானே!

‘இந்தா இம்புட்டு’ என்பதுதானே அந்தக் கால டீ ஸ்பூன்! ‘கையறி மடமை’ என்பார் இளங்கோ அடிகள்.

அகத்தின் அழகு முகத்திலே என்பதற்குத் தமிழாசிரியர் உரை சொல்வதற்குள் முகம் கருத்துவிடும்.! தாயோ FACE IS THE INDEX OF THE MIND  என்பதை அடுத்த நொடியே வெளிப்படுத்திக் காட்டிவிடுவாள்! .

ஒரு வரி எழுதுகிறார் இராசன்! முகம் பார்த்தே விடைசொல்வாய்!’ அருமையிலும் அருமை!

தாய் தன் முந்தானையால் நனைந்த மகனை அல்லது குளித்து வந்த மகனைத் துவட்டுகிறாளாம். அந்த முந்தானை வழி அவளுடைய அனுபவமும் அறிவும் பாய்ச்சப்படுகிறதாம்.

மூளை படிப்பதற்கும் சிந்திப்பதற்குமான கருவி. முழங்கால் நடப்பதற்கும் நாலுபேரிடம் பழகுவதற்குமான கருவி. இரண்டும் இணைந்தால்தான் அறிவு. படிப்பறிவு பட்டறிவு என்பவை இவைதான்!.

மழையில் நான் நனைந்தாலும் வானை வைவாய்!
மண்டையிலே சூடென்றால் கதிரை வைவாய்!
பிழையே நான் செய்தாலும்எனது பிள்ளை
பிழைசெய்யான் எனச் சொல்லி வாதம் செய்வாய்!
முழம்போட்டுப் பார்க்காமல் அளவு சொல்வாய்!
முகம் பார்த்தே விடைசொல்வாய்! மூளை யோடு
முழங்காலும் முடித்து வைக்கும் அனுபவத்தை
முந்தானைத் துவட்டிலிலே புரிய வைப்பாய்!”

கவிதை உலகியல் சார்ந்து அமையவேண்டும். நடப்பியல் அதனுள் நர்த்தனம் புரிய வேண்டும். வெறுங்கற்பனை விழலுக்கு இறைத்த நீர்! வசந்தனின் இந்த அனுபவம் வாழ்கின்ற அத்தனைக் கோடிப் பேரின் அனுபவம். இவர் எழுதுவது என்பது எழுத்துப் பேறு!

பட்டினத்தாரும் பண்ணையாரும்

பொதுவாகத் தாயின் பெருமை அவள் மறைவுக்குப் பின்தான் உணரப்படுகிறது. இந்த நிலை மாறிப் பெற்றவள் பெருமையை அவள் இருக்கும் போதே உணரவைப்பதுதான் இத்தகைய இலக்கியங்களின தலையாய நோக்கமாக இருக்க முடியும். முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா நடத்தும காலம் நெருங்க வேண்டும். ஓர் உண்மையான இலக்கியத்தின் பயன் என்பது அதுதான். பணக்காரர் பட்டினத்தார் கூட நிலைமையாமை உணர்ந்த பிறகுதான் தாயின் பாசத்தை உணர்ந்தார். பாடினார். தமிழ்ப்புலவர்களும் பேராசிரியர்களும் அந்தப் பாடல்களைப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும். மேலைநாட்டுத் திறனாய்வாளர்கள் இலக்கியக் கூறு அல்லது கவிதைக் கூறு எனக் கதைக்கும் உணர்ச்சி பட்டினத்தடிகள் பாட்டில் அமைந்துள்ள பாங்கை அனைவரும் உணர்ந்து பார்க்க வேண்டும்.

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வரும் மாயை தன்னை மறலிவிட்ட
தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் .இத் துர்ப் புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன்?
என்பெற்ற தாயரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் என்னைப் போவென்று சொல்லி புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்

என்று பாடியவர் பட்டினத்தார் தாயை உறவுகளில் ஒன்றாகக் கருதிய அவர் பின்னாளில் உறவுகளுக்கெல்லாம் தாய் என்று தாய்மையைக் கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டம் அவர் அம்மாவின் அந்திமக் காலத்தில் நடைபெற்றது.

முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாளசுமந்து
அந்திப் பகலாய்ச் சிவனை ஆதரித்துதொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாய்

நொந்து சுமந்து பெற்று நோவாமல் தந்தமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாளாமேஅந்திபகல்
கையிலே கொண்டென்னை காப்பாற்றும் தாய்

‘சுமந்து பெற்ற தாய்’, ‘காப்பாற்றும் தாய்’ என்றெல்லாம் பட்டினத்தார் பலபடப் பேசுவதை வசந்தராசனும் பாடியிருக்கிறார். பட்டினத்தடிகள் பாடலில் காணப்படும் ‘சுமந்து’ என்ற சொல்லை வசந்தராசன்  சுமப்பதில் எத்தகைய சுகம் காண்கிறது பாருங்கள்!

களைபறித்தாய் அறுப்பறுத்தாய்! கல்சுமந்தாய்
கைத்தறியில பஞ்சாக நைந்தி    ருந்தாய்!
தளையணிந்தாய் வறுமைக்காய்! இறுக்கிப்போட்டு
தன்வயிற்றுப் பசியடைத்தாய்! பத்துத் திங்கள்
கருசுமந்து எனைமகனாய்ப் பெற்ற தன்றிக்
காரணந்தான் வேறுண்டோபத்துத் திங்கள்
உருசுமந்தாய்! உயிர்சுமந்தாய்! அம்மா! இன்று
உனைச்சுமக்க முடியாமல் தவிக்கின்றேனே!

மரபுக்கவிதை என்ற கதைத்துக் கொண்டு யாப்புப் பெட்டிக்குள்  கவிதைச் சவத்தை அடக்கம் செய்வார் இடையில் வசந்தராசன் எதுகையை எங்கேயோ தூக்கி எறிகிறார். தங்குதடையின்றி  நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் பிரவாகத்தில் எதுகை மோனை பார்ப்பவன் எதற்கும் ஆகாதவன். வசந்தராசன் எல்லாவற்றுக்குமானவர். தாய் தன்னைச் சுமந்ததைப் படடினத்தார் பாடி நிறுத்திக் கொள்கிறார். வசந்தன் அடுத்த நிலைக்குச் செல்கிறார். அவலத்தின் அகலத்தைப் பதிவு செய்கிறார். எப்படி?

உருசுமந்தாய்! உயிர சுமந்தாய்! அமமா! இன்று
உனைச்சுமக்க முடியாமல் தவிக்கின்றேனே!’

என்ற வரிகளின் நுண்ணியத்தைக் காண வேண்டும். தாய் உருவம் என்றால் கரு மற்றொரு உருவம். தாய் உயிர் என்றால் கருவின் உயிர் மற்றொரு உயிர். எனவே உடலுக்குள் உடல். உயிருக்குள் உயிர். எந்த உறவுக்கும் இந்த வாய்ப்பு கிட்டாது. கிடைக்காது. ‘தன்னைச் சுமந்த தாயைத் தான் சுமக்க இயலவில்லையே என ஏங்குகிறார். அந்த ஏக்கம் இறுதிவரை ஏக்கமாகத்தான் முடியும். எல்லாருக்கும். முடிந்தால் ‘முடியாத’ தாயைச் சுமக்கலாம். இறந்து போனால் தாயின் சவத்தைத் தூக்கலாம். ஆனால் எவனும் எந்த நாளும் தாயின் உயிரைச் சுமக்கவே முடியாது. உயிரிலிருந்து உயிர் என்பது தாய்க்கு மட்டுமே பொருந்தும். பிற உறவுகளுக்கு ஆகாது, பொருந்தாது.

கருவறைக் காட்சிப்படலம்

வாழ்க்கையின் மூடநம்பிக்கைத் திணைகளைத் துறைகளாகப் பகுத்துத் தன், பாடல்களால் முரித்துக் காட்டியவர் உடுமலையார். அவரைத் தொடர்ந்து கலைவாணர் மற்றும் பட்டுக்கோட்டையார் அந்தப் பணியைத் திறம்படச் செய்தார்கள். கண்ணதாசன் ஆறுதல் சொல்வாரேயன்றி முன்னவரைப் போலச் சமுதாயச் சிக்கல்களை அந்தந்தத் தளத்திலேயே சந்திக்க அஞ்சியவர். தனிமனித மனக்கோணல்களையும் அவலங்களையும் விரக்தியுடன் பாடியவர். கண்ணதாசனின் அனைத்துப் பாடல்களிலும் ஒரு வகையான சோகம் இழையோடுவதற்கு இதுதான் காரணம். பலராலும் பல சூழலிலும் ஏமாற்றத்துக்கு ஆளானவர். எனவே வாழ்க்கைச் சிக்கல்களைத் தற்காலக் கவிஞர்களைப் போல் அவரால பாட முடியாமல் போய்விட்டது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு திரையிசைப்பாடல். வாலி எழுதியது. அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப்பாடல். அதன் சரணத்தில் ஒரு வரி இப்படி அமைகிறது.

“அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே”

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் நீ என்னைச் சுமந்ததுபோல் நான் உன்னைச் சுமக்க வேண்டும் அம்மா’ என்னும் எக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்க வேண்டிய அந்தப் பாடல் மீண்டும் அதே தாய்க்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்ற அளவோடு நிறைவடைந்துவிடுவதைக் காணலாம். கற்பனையேயானாலும் நீ என்னைச் சுமந்ததுபோல் அடுத்தப் பிறவியில் நான் தாயாகி உன்னைச் சுமகக வேண்டும் அம்மா என்று எழுதுவதான் நெறி. சுமந்தவளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. பாட்டுக்கும் படைப்புக்கும் சிறப்பு. வாலியின் கற்பனை மகன் கடன் நிறைவேற்றுவதாய அமையாமல் தாயை அடுத்த பிறவியிலும் துன்புறுத்துவதாய் அமையவில்லையா இசையாலும் பாடகரின் குரலாலும் பெருவெற்றி யடைந்த அந்தப் பாடலில் இன்னொரு வரி இப்படி அமைகிறது.

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா

எனத் தாய்பட்ட வேதனையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது. வசந்தராசன் எழுதுகிறார். பெரும்பாடு அறிந்தும் அதே பாட்டை மீண்டும் அவளுக்கே தர வேண்டும் என்று எண்ணிப பாடுவது புதுமையானது அன்று.

உன்வயிற்றில் உயிர் பெற்றேன்! உருவம் பெற்றேன்!
உன்வயிற்றில் குடியிருந்தேன்! உணவும் பெற்றேன்!
உன்வயிற்றைக் காயாமல் பார்த்துக் கொண்டேன்!
உன்வயிற்றை குளிர்நிலவாய் நிரப்பி வைத்தேன்!
உன்வயிறே ஆனாலும் தனிதான் என்று
உணத்திடவோ வெறும்வயிறாய் காய்ந்தா யோ நீ!
என்வயிற்றில் உனைச்சுமக்க ;முடிய வில்லை!
எண்ணத்தில் சுமக்கின்றேன்! சுமக்கின் றேனே!”

‘என் வயிற்றில் உனைச் சுமக்க முடியவில்லை’ எனறு உண்மை பேசுகிறார். வாலி ‘அடுத்து’வரும்  பிறவியிலும் அந்தத் தாய்க்கு மகனாகவே பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார். வசந்தராசன் என்னைச் சுமந்ததுபோல் உனனைச் சுமக்க முடியவல்லையே என ஏங்கித் தவிக்கிறார். அடுத்த பிறவி என்பதும் அதில் தான் ஒரு பெண்ணாகப் பிறக்க இயலும் என்பதும் சென்ற பிறவிகளின் நினைவுகளோடு மறுபிறவியும் அமையும் என்பதும் யதார்த்தத்திற்கு முரணானது. உடலால் சுமக்க முடியாத தாயை இந்தப் பிறவியிலேயே எண்ணத்தில் சுமககிறாராம். எந்த எண்ணத்தில்? அங்கேதான் கவிதை சிறக்கிறது.

என்வயிற்றில் உனைச்சுமக்க ;முடிய வில்லை! (என்ற)
எண்ணத்தில் சுமக்கின்றேன்! சுமக்கின் றேனே!”

வயிற்றில் சுமப்பது இயலாது. எண்ணத்தில் சுமப்பது இயல்பானது. சுமக்க முடியவில்லையே என்ற வேதனையைத்தான் எண்ணத்தில் சுமக்கிறாராம். ‘மலடி’ என்பது நெருப்புச் சொல். மசக்கை என்பது  மயக்கச் சொல். வசந்தன் கன்னியம்மாள் கருவறையில் புரண்டபோது குளிர்நிலவாய் ஆக்கி வைத்திருந்தாராம்.அருமை!

கள்ளிப்பட்டி அழகம்மாளும் குருவாடிப்பட்டி கன்னியம்மாளும்

பேயத்தேவருக்குக் கள்ளிப்பட்டியில் வாழ்க்கைப்பட்டவள் அழகம்மா. குருவாடிப் பட்டியில் துரைவேலருக்கு வாழ்க்கைப்பட்டவர் கன்னியம்மாள். இந்தக் கன்னியம்மாள் தெய்வத்தைப் பற்றித்தான் அவர் மூத்தமகன் வசந்தராசன் தாயின் மடியில் என்று  தாயக்குப் பதிகம் பாடியிருக்கிறார். முன்னாலே சொன்ன அழகம்மாளும் தமிழகத்தின் தென்பகுதி சிற்றூர் ஒன்றில் தோன்றி வாழ்ந்திருக்கலாம். ஆனால் பேயத்தேவருக்கு வாழ்க்கைப்பட்டது கள்ளிக்காட்டு இதிகாசத்தில். கன்னியம்மாள பதிகத்தை நான் படிக்கிறபோது அழகம்மாளின் நினைவும் இணைந்து வந்ததற்கு வைரமுத்து காரணமா? வசந்தராசன்? காரணமா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை படைப்புக்களோடு ஒன்றியதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இணைந்து வந்தது உண்மை. ஊதாரி மகன் சின்னுவால் சிதலமடைந்து போனவள் அழகம்மா. மூத்த மகள் செல்லத்தாயினாலும் இளையமகள் மின்னலுவினாலும் ஆற்றொணாத் துயரத்தில் அழுந்திப்போன  குடும்பம் அது.

மின்னாமல் இடித்ததுபோல் அழகம்மா இறந்து விடுகிறாள். நாற்பத்தைந்து ஆண்டுக்காலத் தாம்பத்ய வாழ்க்கை கிளை முரிந்தது போல முரிந்து விடுகிறது. வாழ்க்கையில் முதன் முதலாகத் தனிமைப் படுகிறார் பேயத்தேவர். அவர் தனிமையில் கட்டிலில் படுக்கும் காட்சியை வைரமுத்து இப்படிச் சித்திரிக்கிறார்.

குடல் தொங்கிச் சரிந்து கிடந்த கயிற்றுக் கட்டிலில்  கிழிந்த சமுக்காளம் விரித்து அழகம்மா இறந்த நாள் முதலாய் அவரது தலைக்கு வைத்துப் படுக்கும் அவள் புடவையைத் தேடினார். அதுவச்சஇடத்தில் இல்லை.”

அவர் தலைமாட்டுக்குத தலையணயாக இருந்த அழகம்மாவின சேலை காணாதது கண்டு கலங்கித் துடிக்கிறார். விசாரிக்கிறார். அதன் வீச்சம் தாங்காமல் சலவைத்தொழிலாளி தங்கைய்யாவிடம் சலவைக்குக் கொடுத்துவிட்டதாக அறிகிறார். அலறுகிறார்.

வீச்சமெடுத்துருச்சா? ……..வீச்சமா அது?….? அழகம்மா ஆவியடியம்மா அதுஏங்கூட அது பேசும். …அது கூட நான் பேசுவேன்.. ராசாவுக்குக் கீரிடம் மாதிரியடியம்மா ஏந் தலைக்கு அவ சீல. அத அடிச்சித் தொவைச்சுருந்தா அதுல ஒட்டியிருந்த அவ வாசம் போயிருமே. இப்ப அது அழுக்குல கிடக்கோ? இல்ல கம்மாயிலே தொவைச்சிக் காயக் கிடக்கோ

என்று அழுது புலம்பி வெள்ளாவி வைப்பதற்குள் சென்றுவிட வேண்டுமே? வெள்ளாவி வைத்திருக்கக் கூடாதே என்றெல்லாம் மருகித் துடித்த பேயத் தேவர் அங்கே தன் அழகம்மாளின் புடவை அழுக்கோடு அழுக்காக வெந்து கொண்டிருந்ததைக் கண்டார்.

“ஆத்தே இந்த அழுக்குக்குள்ளேயா அடஞ்சுப் போச்சு என் அழகம்மா சீல….?

என்று புலம்பியவர் ஒருவழியாகத் தங்கையாவின துணையோடு வேகிற வெள்ளாவியைப் பிரித்து மூலைக்குறி சொல்லி தன் அழகம்மாளின் புடவைக் காண்கிறார். கண்ணீர் விடுகிறார். கலங்கி நிற்கிறர். அந்த நிலையை வைரமுத்து இப்படிச் சித்திரித்துக காட்டுகிறார்

வெள்ளாவிச் சீலையின் கீழே உவர்மண் வாசனைக்கீழே சின்னதாய்சன்னமாயஉரிமைக்காரன் மட்டும் உணர்வதாய்  — நாபத்தஞ்சு வரு லருசமாய்  நாசியில் படர்ந்திருக்கும் அனுபவமாய்புடவையின் வெந்து போகாத ஆன்மாவின் அடிமடிப்பில் இன்னும் ஒடடியிருந்தது அழகம்மாவின் அந்த வாசம்ஃ

அழகம்மாவின் புடவையைத் தனியாக எடுத்துப் பள்ளிக்;கூடத்துல ஆயிரம் பிள்ளைகள் படிச்சாலும்  பெத்தவளுக்குத் தெரியாதா பிள்ளையோட அடையாளம்?” என்று பேயத்தேவரின் அவரின் கையிலேயே சுருட்டிக் கொடுத்தான் அழகம்மா சேலையை.”

வசநதராசன் தாயுடன் கூடிய தன் பாச நினைவுகளைப பதிவு செய்கிறார்.

குளிருக்கும் பழம் புடவைப் போர்வை தந்தாய்!

“செய்யும தொழில் எல்லாம் சீர் தூக்கிப் பார்த்தாலும் நெய்யும் தொழிலுக்கு நேருண்டோ?’ என்று கவிதை பாடினாலும் வறுமைதானே அவர்களது நண்பன். அந்தத் தாயும் பழைய புடவையைத்தான் கட்டியிருந்தாள். அவள் என்ன இந்தக் கால இடைநிலை ஆசிரியையா? நித்தம் ஒரு புடவை கட்ட? குளிரினிலே நடுங்கிய மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன். மன்னனுக்கு மட்டுமா கொடைமடம்? மாதாவிற்கும் உண்டல்லவா?  அது கொடை. இது கடன். இந்தக் கடனை எப்படி அடைப்பது? தொடர்ந்து எழுதுகிறார்.

கொடுத்ததிலே உன் வாசம் பிடித்துத் தந்தாய்!

அழகம்மாளின் வாசத்தை அவள் புடவை காட்டியது. கன்னியம்மாளின் புடவை வாசம் வசந்தராசனின் தாயை அடையாளம் காட்டியது. குளிர்காலத்தில் தாயும் மகனுமாக அணைத்துக் கொண்டு கம்பளிக்குள் உறங்கிய காலத்து தாயிடமிருந்து மகனுக்குச் சென்ற அந்த மணத்தைத்தான் வசந்தராசன் தேடுகிறார். தேம்புகிறார். தேடியது கிட்டாதபோது தேம்புவதுதானே குழந்தையின் இயல்பு! கவிஞர் இன்னும் குழந்தையாகவே இருந்து தன் தாயை நினைக்கிறார்.

குளிர்காலக் கம்பளிக்குள் உனது வாசக்
குடியிருப்பைத் தேடுகிறேன்! தேம்பு கின்றேன்1

எதுகை மோனைக்காகப் பாட்டெழுதுவது வேறு. எழுதுகிற வரிகளில் அவை வந்து அமர்வது வேறு. வானத்து மேகங்கள் இணைந்தும் கலைந்தும் நாம் எண்ணாத உருவத்தைக் காட்டுவதில்லையா? அதுபோல! ‘குளிர்காலக் கம்பளி’ என்னும் தொடருக்கு குடியிருப்பைத் தேடுகிறேன் என்னுந் தொடர் மோளையழதைக் கொடுத்ததென்றால், ‘தேடுகிறேன்! தேம்புகிறேன்!’ என்ற தொடர்கள் இணையின்பததைத் தருவது உணர்தல் வேண்டும். முதற்சீரை மையப்படுத்தித் தொடைவிகற்பங்களைக் கணக்கிடுவது இலக்கணம். எந்த இடத்தில் எது கிடைத்தாலும் சுவைத்து மகிழ்வது கவிதை இலக்கியம்.

குளிருக்கும் பழம் புடவைப் போர்வை தந்தாய்!
கொடுத்ததிலே உன் வாசம் பிடித்துத் தந்தாய்!
குளிர்காலக் கம்பளிக்குள் உனது வாசக்
குடியிருப்பைத் தேடுகிறேன்! தேம்பு கின்றேன்1
மடியுறக்கச சுகமெல்ல்லாம்  இன்று பஞ்சு
மெத்தைக்குள் தேடுகிறேன்! இல்லை தாயே!”

உண்டுகொண்டே தூங்குவது மழலைப் பருவம். உண்ட பிறகு உலாவந்து பிறகு தூங்க முயல்வது நாகரிகம். முன்னது தாயின் மடியில்! பின்னது செயற்கையிழை படுக்கையில். முன்னது உண்மை! பின்னது போலி! முன்னது தனக்காக! பின்னது சமுதாயத்திற்காக! தாயின் கதகதப்பு பஞ்சு மெத்தையில் கிட்டுமா? கவிஞர் பஞ்சு மெத்தை என்பதைக் கவிதைக்காக எழுதியிருக்கிறார். ஆனால் உண்மையில் இன்றைய நாட்டு நடப்பு அவ்வாறு இருப்பதாக நம்ப முடியவில்லை.!

கண்ணீரில் குளித்த தேகம்

வாலி எழுதிய முதற்பாடல் எனக்கு 34 ஆண்டுகள் ஆசிரியப் பணிக்கு உதவி செய்த வரலாறு உண்டு. நான் படித்த காலத்திலிருந்து தற்குறிப்பேற்ற அணிக்கு அந்த மதுரை மதிலில் சாயம் போன பின்பும் இடவலமாகப் பற்நது கொண்டிருந்த கொடியைத்தான் எடுத்துக்காட்டாகக் கூறினார்கள். இன்றைக்கும் அந்த நிலை தொடர்கிறது. தமிழாசிரியர் வருகிறார்கள். இருக்கிறார்கள். போகிறார்கள். அந்தக் கொடி இன்னும் அங்குதான் பறந்து கொண்டிருக்கிறது. வாலி அப்படி என்ன எழுதினார்? இப்படி எழுதினார்!

தேன்மலராடும் மீன்விளையாடும்  அருவியின் அழகைக் காணீரோ?”

என்று காதலி வினவுகிறாள். காதலன் சொல்கிறான்

நான் வரவில்லை என்பதனால் உன் மீன் விழி சிந்திய கண்ணீரோ?”

அந்த இளம்பருவத்தில் என் உள்ளங்கவர்நத வரிகளையே என் பத்தாம் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மகிழச் செய்தேன். இன்றைக்கு இந்த முதுமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தற்குறிப்பேற்ற அணிக்கான எடுத்துக்காட்டுக்கள் என்னிடம் உண்டு. அவற்றில் ஒன்றுதான்  இந்தக் கருவறைப் பதிகத்தில் தம்பி வசந்தராசன்

ஒருமைலின் தூரத்தில் தூறெடுத்து
ஒருகுடம் நீர் சுமந்தாலே வலி தெறிக்கும்!
ஒருநூறு குடம்சுமந்தாய் தினந்தோ றும்நீ!
ஒருநாளும் அலுத்ததில்லை ஒவ்வோர் நாளும்
திருநாளாய் பொழுதுபோகும்! அதைமனத்தால்
தீண்டுகிற பொழுதெல்லாம்  அந்த நீரே
திரும்ப வரும் கண்ணீராய்! அதுதான் உந்தன்
தேகத்தைக் கழுவுதற்கும் வந்த நீரா?

தமிழகத்து வீடுகளில் நிகழும் இறுதிச் சடங்குகளில் நீரெடுத்தல் என்பதும் ஒன்று. இற்நதவர் உடம்பை முறைகாரர்கள் எடுத்துவரும் நீரால் உடம்பைக் குளிப்பாட்டி அடக்கம் செய்வார்கள். கலைந்து போன காட்சியைக் கண்ணுக்கு முன்னால் கொண்டு வருவது எப்படி என்னும் செப்படி வித்தை தெரிந்தவர் தம்பி வசந்தராசன். பாட்டைப் பலமுறை படித்துப்பார்த்தால் நமக்கும் கண்ணீர்வரும். வட ஆற்காடு மாவட்டத்தில் அன்றைய பொழுது அப்படித்தான் கழிந்திருக்கும். ஒரு குடம் தண்ணிக்கு ஒரு மைல். மிகவும் கவனமாகக் கிலோ மீட்டர் என்பதைத் தவிர்த்துவிடுகிறார். தாய் நடந்த தடத்தில் தமையனின் சிந்தனை நடந்ததால் மொழி, தடம் மாறாமல் நடக்கிறது. ஒரு குடும்பத்திற்குத் தேவையான  தண்ணீரை மொண்டு வருவதற்கு எவ்வளவு நேரமாகும்? குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்! நண்பகல் உணவு சமைக்க வேண்டும்! தாய் படும் துன்பத்தை அன்றைக்குக் காணத்தான் முடிந்தது. அந்தத் துன்பத்தை உணர முடியாத காரணத்தால் அது திருநாளாக முடிந்தது. இன்றைக்கு உணர முடிகிறது. அதனால் கண்ணீரைக் கொப்பளிக்கிறார் வசந்தராசன்.

அந்த நீரே
திரும்ப வரும் கண்ணீராய்! அதுதான் உந்தன்
தேகத்தைக் கழுவுதற்கும் வந்த நீரா?”

கன்னியம்மாள் தனக்குத்தானே நீரெடுத்துக் கொணடாராம்! என்ன கொடுமையான கற்பனை? தண்ணீர்க் குடம் குடமாகச் சுமக்கிறபொழுது வழியும் வேர்வையால் மேனி நனைகிறதல்லவா? அது அவர் உடம்பைக் குளிப்பாட்டுவதுபோல் இருந்ததாம். தன் உழைப்பால் வந்த வேர்வையினால் தன் தேகத்தைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டாராம்.? எந்தத் தாய் தனக்காக என்றைக்கு யாரை எதிர்பார்த்தருக்கிறாள்?

உடம்போடு உயிர்வளர்க்க உனது பாசம்!
உடைந்த நிலா கரைவதற்கோ எனது பாசம்?

குழந்தைகளின் தற்கால அறையாடை மலங்கழிக்கவும் சிறுநீர்கழிக்கவுமான வசதி என்பதை விட குழந்தைகள் அவற்றைக் கழிக்கையில் காணும், கண்டு தூய்மைப்படுத்தும் துணிச்சலும் தியாக உள்ளமும் அருகிப் போன்றவற்றைக் காட்டும் நிலைக்கண்ணாடி  விதண்டாவாதம் செய்கின்ற சிலர் இதனை மறுக்கக்கூடும். அவர் உரிமை அது. உண்மை அதுவன்று. ஒட்டுமொத்த சமுதாயத்தில் குறைந்து வருகின்ற சகிப்புத் தன்மையும் தன்னல மறுப்பும் தியாக உள்ளமும் தாய்மையிலும் வெளிப்பட்டு நிற்கிறது என்பதே உண்மை.

சமுதாய வளர்ச்சிநிலை என்பது வேறு முரண் என்பது வேறு. ‘எல்லாம் அன்றைக்கு இருந்தது., அன்றைக்கு இருந்தது இன்றைக்கு இல்லை’ என்பதை அப்படியே ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. சமுதாயத்தின் புறநிலையில் மாற்றங்கள் வந்திருக்கலாம். அது தேவையைப் பொருத்தது. ஆனால் அகம் மாறுவதற்குக் காரணமில்லை. அன்புக்கு மாற்றமுண்டா? இன்று மாறியிருக்கிறது. பாசத்திற்கு மாற்றமுண்டா? இன்று மாறியிருக்கிறது! நட்புக்கு மாசு உண்டா? இன்று உண்டாகியிருக்கிறது. எனவே இத்தகைய மாற்றங்களை வளர்ச்சி எனக் கொள்ளுதல் ஏற்புடையதன்று, ஒரு வகைத் தேய்மானம் என்றுதான் சொல்ல வேண்டும்ஃ இந்தப் புின்புலத்தில்தான் தாயைப் பாடிய வசந்தன் கவிதைகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

“அடம்பிடித்தேன் உண்பதற்கு! ஓயாமல்நான்
அழுதிருந்தேன் மலங்கழித்தேன் நீர் கழித்தேன்!
கடமைக்கா செய்தாய் நீ! இல்லை யம்மா!
கட்டுண்டு செய்தாய்!”

‘கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சம் அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்’ என்பார் கண்ணதாசன்!

“நீயும் கூட
அடம்பிடித்தாய் உண்பதற்கு என்னைப் போல!
அப்படியே எல்லாமும் குழந்தை போல!”

தன் மகன் அடம்பிடித்தால் தாயும் அடம்பிடித்து அன்பால் அவனைச் சீராட்டுவது நற்றாயின் கடமை. இயல்பு. தான் அடம்பிடித்த நிகழ்வுகளையும் மாற்றாகத் தன் தாய் அடம்பிடித்து அழுத நினைவுகளையும் ஒரு சேரப் பதிவு செய்திருக்கிறார்.

உடம்போடு உயிர்வளர்க்க உனது பாசம்!
உடைந்த நிலா கரைவதற்கோ எனது பாசம்?”

என்ற இந்த விருத்தத்தின் இறுதியடி அரையடி இயைபில் அமைந்து மனத்தைப் பிசைகிறது. தன் உடம்பை உருக்கித் தன் மகனின் உயிரையும் உடம்பையும் பேணிவளர்த்தவள் தாய். ஆனால் அந்தத் தாயின்மீது மகன் கொண்டிருந்த பாசம் சிதறிக் கரையும் நிலாவானது என்பது ஓர் அவலக் கற்பனை!. வேறுவாய்பாட்டில் பதிவு செய்தால் கன்னியம்மாளின் பாசம் ஆக்கத்திற்கானது! மகன் வசந்தராசனின் பாசம் அவலத்திற்கானது!

வைரமுத்தும் வசந்தராசனும்

கள்ளிப்பட்டி அழகம்மாள் அந்த இதிகாசத்தில் பாத்திரமாக உலவினாலும் அவள் வைரமுத்தின் அம்மா அங்கம்மாளே! அங்கம்மாள் வைரமுத்தின் அம்மா! அவளை அப்படியே உரித்து வைத்த பாத்திரம். பேயத்தேவருக்கு அவள் செய்த பணிவிடைகளையெல்லாம் கன்னியம்மாள் தனக்குச் செய்ததாகப் பாடி மருகுகிறார் வசந்தராசன். அங்கம்மாவை எண்ணி வைரமுத்து இபபடிக் கலங்குகிறார்.

பாசமுள்ள வேளையில
காசுபணம் சேரலையே!
காசுவந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே

பாசம், காசு, வேளை, சேரல் என்னும் நான்கே சொற்களைக் கொண்டு கவிபுனையும் ஆற்றல் வைரமுத்துக்கு உண்டு. பாமர வழக்கில் பாடுகிறார். நாட்டுப்புறப் பாடல் வடிவம் இயல்பாக அமைகிறது. உணர்ச்சியின் ஊர்வலத்தில் கவிதை முழுமை பெறுகிறது. இந்த வரிகள் எந்த பாவிலும் அவற்றின இனத்திலும் அடக்க முடியாது என்பதையும் அறிதல் வேண்டும். இந்த அவலத்தை வசந்தராசன் இப்படி எழுதுகிறார்.

தறிநெய்து தார் திரித்து நூலிழைத்துத்
தவமாகப் பேருழைப்பை தந்த தாயே!
உறிசோறு உனக்காகக் காத்தி ருக்க
ஊர்வலமாய் வீதியில் நீ போகலாமா?

நெய்தவர் தாய். திரித்தவர் தாய். இழைத்தவர் தாய். தந்தவர் தாய். இதில் எந்தச் செயலையும் திருப்பிச் செய்து கடன் தீர்க்க முடியாத நிலையைத்தான் கவிதையில் பாடுகிறார். “சோறூட்டி வளர்த்த நான் இருக்கிறேன். உனக்கு ஊட்ட வேண்டிய சோறு இங்கிருக்கிறது? நீ எங்கேயம்மா போனாய்?’ என்று அவலத்தின் கொடுமுடிக்குச் செல்கிறார். ‘உணவு இங்கே! ஊட்டியவள் எங்கே?’ என்று கண்ணதாசன் பாணியிலும் கேட்கலாம்.

கவிதையின் கூறுகள் பற்றித் தமிழிலக்கண நூல்கள் அவ்வளவாக ஆராய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் அவர்கள் கவிதையை வாழ்வியலோடு ஒன்றியே நோக்கினர். பாரதியைப்போல் ‘நமக்குத் தொழில் கவிதை’ அதனைத் தொழிலாக்கிக் கொள்ளவில்லை. பழந்தமிழ்ப் புலவர்களுக்குக் கவிதை தற்கிழமை. பிறிதின்கிழமையன்று. பயன் நோக்கி ஒழிந்தனர். ‘அறம் பொருள் இன்பம் வீடடைதல்’ நூற்பயன் என்பதே தமிழ்க்கவிதை ஆராய்ச்சி. கற்பனை உணர்ச்சி கருத்து, வடிவம் என்பது மேலைநாட்டு ஆராய்ச்சி. அந்த அடிப்படையில்தான் தற்கால இலக்கிய ஆய்வுகள் தொடர்கின்றன. இது சரியா? தவறா? என்பது தனி ஆய்வுக்குரியது. தம்பி வசந்தராசன் உணர்ச்சியின் உச்சிக்குச் செல்கிறார். விருத்தங்களை வேண்டிய அளவுக்கு இழுத்தணைத்துக் கொள்கிறார். கற்பனையின் எல்லை தொடுகிறார். இவற்றையெல்லாம் தன் தாய்க்குப்; படையலிட்டிருக்கிறார் பாட்டில்! அன்னையைத் தெய்வம் என்பதோடு அமைதியடைந்துவிட்ட தமிழ்க்கவிதை உலகில் தாயின் உழைப்பை மில்லி லிட்டரில் அளந்து கவிதையில் கொட்டியிருக்கிறார். கவிதை அவருடையதாக இருக்கலாம். ஆனால் இது ‘அம்மா’ அனைவருக்குமான கவிதை!

நிறைவுரை

செய்யும் தொழில் சிறந்த நெய்யும் தொழிலால் ஒரு குடும்பத்திற்கே நங்கூரமாய் நின்ற ஓரு தாயைப் பற்றி, அன்பின் வடிவமான அன்னையைப் பற்றித் தன்னைப் பெற்ற அம்மாவைப் பற்றி இப்படி எழுதி நான் படித்ததில்லை. எல்லாருக்கும் பொதுவான அனுபவந்தான். மனத்துக்குள்ளேயே முடங்கிப் போன அந்த அனுபவத்தை .வசந்தராசன் தன் எழுத்துக்களால் உலவ விட்டிருக்கிறார். “மண்ணின் பொறுமைதான் மலை! கரியின் பொறுமை வைரம்! தாயின் பொறுமைதான் நாம்!” ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊருண்டு. ஆனால் எல்லாருக்கும் பொதுவான ஊர். கருவூர். கருவூரில் தான் குடியிருந்த கருவறை பற்றி தம்பி வசந்தராசன் பாடிய இந்தப் பாடல் தொகுப்பினைக் ‘கருவறைப் பதிகம்’ என்றால் என்ன? ஒருவருக்கு ஒரு பெயர்தான் இருக்க வேண்டும் என்பது சட்டமா என்ன? இராமசாமிக்குப் ‘பெரியார்’ என்று பெயரில்லையா?  அரங்கநாதனுக்குக்  குன்றக்குடி  அடிகள் என்று பெயரில்லையா?

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.