குறளின் கதிர்களாய்…(419)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(419)
நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
-திருக்குறள் – 335 (நிலையாமை)
புதுக் கவிதையில்…
வாய்ப் பேச்சடங்கி
விக்கல் மேலெழ
உடலில் உயிர்பிரிதல்
எப்போதும் நடக்கலாம்,
அதற்குள் வாழ்வில்
நல்ல செயல்களை
விரைவாய்ச்
செய்து முடித்திடவேண்டும்…!
குறும்பாவில்…
நிலையிலா உலக வாழ்வில்
பேச்சடங்கி விக்கல் மேலெழுமுன் விரைவாக
நல்ல செயல்களைச் செய்திடவேண்டும்…!
மரபுக் கவிதையில்…
நிலையே யில்லா உலகினிலே
நிலையைப் பெறவே புவிவாழ்வில்
அலைக்கும் நாவும் அடங்கியேதான்
அசைக்கும் விக்கல் மேலெழுந்தே
தலைதான் வீழ்ந்தே உயிர்போமுன்
தரணி போற்றும் நற்செயல்கள்
நிலைக்கச் செய்ய வேண்டுமெனும்
நினைப்பில் செய்வாய் விரைவுடனே…!
லிமரைக்கூ…
நாவீழ விக்க லுடனே
உயிர்போமுன் நிலைத்து நிற்கும் நல்லன
செய்திடல் நமது கடனே…!
கிராமிய பாணியில்…
நெலயில்ல நெலயில்ல
ஒலகத்து வாழ்க்க
நெலயே யில்ல..
நெலயில்லாத ஒடம்புல
நாக்கு அடங்கி
விக்கலெடுத்து
உயிரு போறதுக்குமுன்னால
நல்ல செயலுகள
நாமளும்
ஒடனே செய்யணுமே..
தெரிஞ்சிக்கோ,
நெலயில்ல நெலயில்ல
ஒலகத்து வாழ்க்க
நெலயே யில்ல…!