தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா. பெஞ்சமின் லெபோ
பகுதி 10-ஈ : அதுவா? இதுவா – ஐயா? அய்யா? ஔவை? அவ்வை?
சென்ற பகுதியில், ‘தொல்காப்பியர் கருத்துப்படி, ‘ஐ’ என்பது ‘அய்’ ஆகலாம் என்று’ எழுதி இருந்தேன். தொல்காப்பியர் ‘அய்’ என்ற வடிவத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் பழந்தமிழ் இலக்கியத்தில், ‘ஐ’வடிவே புழங்கி வந்திருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
அகநானூறு 143, ஆலம்பேறிச் சாத்தனார், பாலைத் திணை – தோழி கூற்றாக வரும் பாடலில்,
‘வெம்மலை அருஞ்சுரம் நீந்தி – ஐய!
சேறும்’ என்ற சிறுசொற்கு… இவட்கே,’ என வருவதைக் காண்க.
சிலப்பதிகாரத்தில் ‘ஐயை’ என்றே ஒரு பாத்திரம் வருவதை அனைவரும் அறிவர்.
‘என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர் ‘ குறள்-771.
இக்குறளைப் பிரித்து எழுதும்போது ‘ஐ’ வடிவே கையாளப்படுகிறது. இது தவிர குறள்கள் நான்கினுள் (25, 353, 354, 702 ) ‘ஐ’ பயின்று வந்துள்ளதைக் காணலாம்.
நாளும் தமிழ் வளர்த்த (திரு)ஞானசம்பந்தர் பாடிய முதல் திருமுறை-39. நாள் எண்ணி வருந்தல் -பாடல் 423 -இல்
‘ஐய இன்னும்நான் எத்தனை நாள்செலும் அல்லல்விட் டருள்மேவத்
துய்ய நன்னெறி மன்னிய அடியர்தம் துயர்தவிர்த் தருள்வோனே
வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல்கொளும் கரத்தோனே
செய்ய மேனிஎஞ் சிவபிரான் பெற்றநற் செல்வனே திறலோனே‘ என்கிறார்.
இதில் வரும் ‘துய்ய’, ‘வெய்ய’ , ‘செய்ய’ என வரும் எதுகைகளை நோக்கி, முதல் சீர் ‘அய்ய’ என எழுதப்படவில்லை என்பதைக் கவனிக்கவும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை உண்டு.’அவ்’எனும் வரி வடிவைத் தொல்காப்பியர் பரிந்துரைக்கவில்லை என்றாலும், பழந்தமிழ் இலக்கியத்தில் இவ்வடிவம் பல இடங்களில் வருகிறது. நற்றிணை கடவுள் வாழ்த்து இயற்றிய பாரதம் பாடிய பெருந்தேவனார்,
‘மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக’ என்று ‘பௌ’ வரி வடிவைப் பயன்படுத்தினாலும், ‘பௌ’, ‘கௌ’ வடிவை விட, ‘பவ் , ‘கவ்’ வடிவே மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது.
‘ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும் இந்நோய் ‘(குறள் 1147) – என எழுதும் வள்ளுவர்,
‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையை காட்டி விடும் – 167- என்கிறார் ;
முதலாம் திருமுறையில் திருஞானசம்பந்தர், திருப்பாற்றுறை பதிகத்தில்
‘வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே‘. எனப் பாடுகிறார்.
முன்பு குறிப்பிட்ட பாடலில்,’துய்ய’,’வெய்ய’,’செய்ய’ என வரும் எதுகைகளை நோக்கி, முதல் சீரில் ‘அய்ய’ என எழுதாத சம்பந்தர், இங்கு எதுகை நோக்கியே ‘பவ்வம்‘ என்ற சொல்லைப் பெய்கிறார்.
இப்போது இவ்விரண்டு எழுத்துகள் பற்றிப் பார்க்கும் முன்,’ஔ’ -வின் இக்கால வரிவடிவைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். ‘ளகரம்’ ஓர் எழுத்து; அதுவே (நெடில்)குறியீடாகவும் பயன்படுத்தப் பட்டது. உகரத்துக்கு உள்ள நெடில் வடிவைப் பாருங்கள்: ‘ஊ‘; உகரத்துக்கு மேலே உள்ளது ‘ளகர‘ எழுத்து அன்று. நெடிலைக் குறிப்பதற்காக உள்ள குறியீடே. ‘ளகர’ எழுத்துக்கும் குறியீட்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற்காகக் குறியீட்டைச் சிறிய எழுத்தில் எழுத வேண்டும்; எழுதினார்கள். இப்படித்தான் அக்காலத்தில் தமிழ் எழுத்து சொல்லிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் உகரமும் குறியீடு ‘ள’-வும் சம அளவில் எழுதப்பட்டு விட்டன.
அதைப் போலவே ‘ஔ’ என்பதான் சரியான வரி வடிவம், ஒ’எழுத்துக்குப் பின் வரும் ‘ஈருயிர்க்’ குறியீடான (diphthong) ‘ள‘ சிறியதாக எழுதப்பட வேண்டும்.(ஒள). ஆனால், அதுவும் இப்போது சம அளவிலேயே எழுதப்படுவதால், சிறுவர்கள், தமிழ் கற்போர்… அச் சொல்லை ‘ஒ ள வை’ எனத் தவறாகப் பலுக்கும் வாய்ப்பு உண்டு.
இனி ‘ஐ’, ‘ஔ’ பற்றிக் காண்போம்:தமிழ் நெடுங்கணக்கில் ஐந்து நெடில்கள் அவறுக்கு இணையான ஐந்து குறில்கள். இவற்றோடு கூட இரண்டு நெடில்கள்.- ‘ஐ’, ‘ஔ’.முதலில் குறிப்பிட்ட 10 -உம் முழுமையான உயிரெழுத்துகள்.
பின்னவை அ+இ> ‘ஐ’ ; அ+உ>’ஔ’. இவற்றுக்குக் குறில் இல்லை என்பர்.
“அதனால் இவற்றை நீக்கி விட்டுப் பகரமாக ‘அய்‘,’அவ்‘ பயன்படுத்தலாம்;
அப்படிச் செய்தால் 12 உயிர்களைப் பத்தாகக் குறைக்கலாம்” என்பது பெரியார் வாதம்.
பொதுவாக, உயிர் தனித்து வரும் அல்லது மெய்யோடு இணைந்து உலவும்; ஈருயிர்கள் இணைந்து வருவதில்லை.ஆனாலும் ஏறக்குறையப் பல மொழிகளில் இப்படி வருவது உண்டுதான்.இப்படி இணையாமல் தனியாக வரும் உயிர்களை ‘monothong’ என்றும், ஈருயிர்கள் இணைந்து வருவதை ‘diphthong’ எனவும் மூவுயிர்கள் இணைந்து வருவதை ‘tripthong’ எனவும் மொழியியலார் அழைப்பர்.(‘tripthong’ ஸ்வீடிஷ் கிளைமொழிகளில் உண்டாம் : http://www.proz.com/forum/linguistics/209686-french_diphthongs.html)
ஈருயிரொலிகள் ‘diphthong’, ஆங்கிலத்தில் எட்டு, பிரஞ்சில் பத்து, பின்னிஷ் மொழியில் இருபத்திரண்டு எனப் பலவேறு மொழிகளில் பல வேறு எண்ணிக்கையில் உள்ளன. தமிழில் ‘ஐ’, ‘ஔ’என இரண்டே. இவை தனியாக வரும்போது எல்லா உயிர் எழுத்துகளையும் போல் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
‘ஐ’மொழிக்கு (சொல்லுக்கு)முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரையும் இடை, கடையில் ஒரு மாத்திரையும் பெறும். இப்படித் தன் மாத்திரையில் (ஒலிப்பில்) குறுகி வருவதைக் (ஐகாரக்)குறுக்கம் என்பர். ஒரு மாத்திரை என்பது குறிலுக்கு உரிய அளவு.
கடை, இடையில் வரும் ‘ஐ’காரம் ஒரு மாத்திரை அளவு பெறுவதால், இங்கே ‘ஐ’ குறிலாகிறது. யாப்பிலக்கணத்தில் அலகிடும்போது ‘ஐ’ நெடிலாயினும், சீரின் நடுவிலும், ஈற்றிலும் குறில் போல் இருக்கும். (http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/776846a91bfcaedf?pli=1).
‘ஔ’காரமும் இதுபோலவே நெடில் என்பதால் இரண்டு மாத்திரை பெறும். இது மொழிக்கு முதலாக மட்டுமே வரும்.அதாவது இடையிலும் கடையிலும் வராது.
‘ஐ’, ஔ’ பற்றிப் பார்த்தோம். இனி மறுபடி தொல்காப்பியர் கருத்துக்கு வருவோம்:
அதாவது ‘ஐ’ என்பது ‘அய்’ ஆகலாம்’.. இதில் கூட, அவர்,
‘அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். எழுத்து, 56). என மிக விழிப்பாகத் ‘தோன்றும்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
இப்படிப் பயன்படுத்துவதை நன்னூலார் இலக்கணப் போலியுள் அடக்குவர். எனவே, ‘ஐ’என்பதற்குப் பகரமாக ‘அய்’ இட்டு எழுதுவது தவறில்லை என இலக்கணம் உரைக்கிறது. ஆகவே ‘ஐயா’ என்பதை ‘அய்யா’ என்று எழுதுவது இலக்கணப்படித் தவறில்லைதான்.
ஆனால், மரபு ஒன்று இருக்கிறதே! இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டபடிப் பழந்தமிழ் இலக்கியங்கள் ‘அய்யை’ ஆதரிக்கவில்லை’. இந்த மரபுப்படி நாமும் ‘அய்யாவை’ப் புறம் தள்ளி ‘ஐயா’வுக்கே ஆதரவு தரலாம்.
மேலே குறிப்பிட்ட பெரியார் வாதத்துக்கு வருவோம்: அதாவது ‘ஐ’ என்ற உயிரோலியையே தூக்கி எறிந்து விடுவது. (நல்ல வேளை தமிழறிஞர்கள் எதிர்ப்பால் ‘ஐ’ தப்பியது!).அப்படி ஏன் செய்யக் கூடாது என்பதற்கு நண்பர் நாக.இளங்கோவன் மிகச் சிறப்பான வாதங்களைத் தம் கட்டுரையில், 2008 – ஆம் ஆண்டே வைத்துள்ளார். அந்தக் கட்டுரையில் உள்ளவற்றை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். அதனால் அதனை இங்கு நான் எடுத்தாளவில்லை. இந்தச் சுட்டியைச் சொடுக்கி அக்கட்டுரையைப் படித்துப் பயன் பெறுக.
http://nayanam.blogspot.com/2008/05/blog-post.html
‘ஐ’ என்ற ஒரேழுத்து ஒரு மொழிக்கு,
- தலைவன்
- அழகு
- ஐந்து
- ஐயம்
- வியப்பு, (“ஐ வியப்பு ஆகும்” – தொல்காப்பியம் 2-8-88 ) ; “ஐதே காமம்” – நற்றிணை 143
- மெல்ல = பைய என ஆறு பொருள் உள்ளன (http://ta.wiktionary.org/wiki/%E0%AE%90).
ஆனால் ‘அய்’ என்ற சொல்லுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. இரண்டாம் வேற்றுமை உருபாக ‘ஐ’ பயன்படுகிறது. இங்கே அதற்குப் பதிலாக ‘அய்’ போட்டால் சரிப்பட்டு வருமா!
ஆகவே இவற்றின் அடிப்படையில் ‘ஐ’ எழுத்தை நாம் பாதுகாத்தே தீரவேண்டும். ஆகவே ‘அய்’யை நீக்கி, ‘ஐ‘-யைப் பயன்படுத்தி ‘ஐயா‘ என எழுதுவதே முறை.
அடுத்து, நம் முன்னோர் ‘ஔ’ வை விட ‘அவ்’ ஐப் பயன்படுத்தி இருக்கிறார்கள் :
“நிலம்புடை பெயரினும் நீர்தீப் பிறழினும்
இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை அஞ்சிக்
கேடுஎவன் உடைத்தோ, தோழி! …
ஓங்குமலை நாடனொடு அமைந்தநம் தொடர்பே!“ (குறுந்தொகை: 373-1-4, 8)
‘ஊரவர் கவ்வை யெருவிட்டன்னைசொல் நீர்மடுத்து,
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்,
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த,
காரமர் மேனிநங் கண்ணன் தோழீ! கடியனே‘.(3366 )
நாலாயிர திவ்ய பிரபந்தம்-(திருவாய்மொழி. 5.3.4)
மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது
‘சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்
தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல்,
ஊர் இடு கவ்வை ஒழித்து?’35
முத்தொள்ளாயிரம்
‘அல்லற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்
கைச்சிறகார் பார்ப்பொடுக்கும் கவ்வை யுடைத்தரோ
நச்சிலை வேற் கோக்கோதை நாடு‘
என வருவன காண்க.
எனவே ‘ஔவை’ என எழுதினும் ‘அவ்வை’ என எழுதினும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே! ஏறக்குறையத் தமிழறிஞர்கள் அனைவர் முடிவும் இதுவே!