திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு

0

மகாதேவஐயர் ஜெயராமசர்
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் … ஆஸ்திரேலியா

இசையின் முக்கியத்துவம்  

இசையென்றால் இசைவிப்பது. இசையை விரும்பாதவர்கள் உலகில் இருக்கவே முடியாது. வாழ்க்கையில் விரும்பாத பல விடயங்கள் இருந்தாலும் இசையினை விரும்பாதாவர் இருக்கவே முடியாது எனலாம். இசையானது உலகையே கட்டிப்போட்டுவிட வல்லதேயாகும். “இசையால் வசமாகா இதயமெது” இசைகேட்டால் இறைவனே இறங்கிவருவான் “இசைகேட்டால் புவி அசைந்தாடும்” என்றெல்லாம் இசையின் மகத்துவம் குறித்து சொல்லப்படும் வார்த்தைகள் – வார்த்தைகள் மட்டுமல்ல. உண்மையும் கூட என்றுதான் கொள்ள வேண்டும். இசையால் கோபம் தணிகிறது. சாந்தம் பிறக்கிறது. ஆத்திரம் ஓடி விடுகிறது. அவசரம் அயர்ந்து விடுகிறது. பதட்டம் பறந்துவிடுகிறது. பக்குவம் குடிகொள்ளுகிறது. வேதனை மறைகிறது. வெளிச்சம் தெரிகிறது. உணர்ச்சிகள் உயிர்ப்புப் பெறுகின்றன. உள்ளம் அமைதியாகிறது. பக்தி பெருகிறது. அன்பு விரிகிறது. ஆறுதல் கிடைக்கிறது.

விஞ்ஞான ஆராய்ச்சிகள்  இசையினால் இசைவிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று தெளிவுறுத்தி நிற்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளரும் புலன் கேட்டலாகும். இந்தப் புலனானது மனிதவாழ்வின் இறுதிக்காலம் வரை இருக்கிறதாம். இறுதியாக செயலிழப்பது கேட்டல் புலன் என்று கருதப்படுகிறது. ஆதிகாலத்தில் மனிதர் பார்க்கும் புலனைவிடக் கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று அறியமுடிகிறது.

தாலாட்டு என்னும் இசையுடன் ஆரம்பிக்கும் வாழ்வானது ஒப்பாரியென்னும் இசையுடன் நிறைவு பெறுகிறது. பிறப்பும் இசையுடன். இறப்பும் இசையுடனே. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலங்களும் இசையுடன்தான் இணைந்து செல்கிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பவற்றின் அத்தி வாரமே இசைதானே! வாழ்வினை வசந்த மாக்க எத்தனையே பண்டிகைகள். எத்தனையே மங்கலநிகழ்வுகள். அத்தனைக்கும் ஆணிவேராக இசைதானே இருக்கிறது. இசையென்பது மனித வாழ்வினை இறுக்கப் பிடித்தே நிற்கிறது எனலாம். நோயைத் தீர்க்கிறது. நோய்க்கு மருந்தாகவே அமைகிறது. களைப்பினைப் போக்கும் அற்புத மருந்தும் இசைதானே. கஷ்டங்கள் அகற்றிடும் காயகல்ப்பமும் இசைதானே. இசையென்பது வாழ்வின் ஜீவநாடியாகும். கலக்கம் போக்கி கஷ்டம் அகற்றி நிம்மதி தரும் வல்லமை இசைக்கே இருக்கிறது. ஆறுதலையும் தேறுதலையும் அகமகிழ்வைவும் அளிக்கும் ஆற்றல் இசைக்கே இருக்கிறது என்பதை யாவரும் நம்புகிறார்கள்.இதனால் இசை என்பது வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகவே விளங்கிறது எனலாம்.

தமிழ் இசை

பண்பட்ட மொழிகளில் எல்லாம் இசை வாழ்கிறது. ஆனால் தமிழ்மொழி இசைக்குக் கொடுத்த முக்கியத்துவம் போல் ஏனைய மொழிகள் கொடுக்கவில்லை எனலாம். இசைக்கென்று ஒரு நிலையை ஏற்படுத்தி “இசைத்தமிழ்” என்று தனியிடம் வைத்த சிறப்பினை தமிழ்மொழியில் மட்டுமே கண்டுகொள்ளுகிறோம்.

தமிழ் இசை என்றால் என்னஇது ஒரு தனியிசையாமுன்னர் இப்படி இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணும் எண்ணம் எம்மில் பலருக்கு மனத்துள் வினாவாகி இருக்கிறது. அப்படி எண்ணவே வேண்டாம். தமிழிசை ஒன்றும் புதியது அல்ல. தமிழ் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே இந்த இசையும் தோன்றியது என்பதுதான் உண்மை. தொல்காப்பியம் எங்களின் பழந்தமிழ் சொத்தாகும். கிறீஸ்துவுக்கு முன் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியத்திலே மூன்றாவது பாடமான செய்யுள் அதிகாரத்தில் அன்றிருந்த இசை பற்றி ஆசிரியர் நன்கு அறிந்திருந்தார் என்பது தெரிய வருகிறது. கர்நாடக சங்கீதம் என்று அழைத்து நிற்பது தமிழ் இசைதான் என்பது மனமிருத்த வேண்டிய முக்கிய கருத்தாகும்.

தென்னிந்தியாவில் பிற பிரதேச அரசர்களின் ஆட்சியின்போது ஏற்பட்ட தவறான பார்வையினால் வந்ததுதான் கர்நாடக சங்கீதம் என்பதாகும். தமிழ் இசை என்பது எவ்வாறு கர்நாடக இசை என்னும் பெயரைப் பெற்றது என்பதற்கு பல கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் இசை வரலாற்றை நோக்கும் பொழுது அவருக்கு அடித்தளம் இட்டதே தமிழ் இசைதான் என்று சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மிகவும் அருமையான பல தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிய முத்துத்தாண்டவர் பிறந்து இருநூறு ஆண்டின் பின்னர்தான் தியாகராஜ சுவாமிகளே பிறக்கின்றார். தியாகராஜ சுவாமிகள் சிறுபிள்ளையாக இருந்த வேளை அவரைத் தூங்கவைப்பதற்கு அவரின் தாயார் சீத்தாம்மா அவர்கள் தியாகராஜ சுவாமிகளுக்கு முன்னர் வாழ்ந்த அருணாசலக் கவிராயரின் ராமநாடக பாடல்களையே பாடித் தூங்க வைத்தார் என்று என்று அறிய முடிகிறது. தியாகராஜ சுவாமிகளின் இசைக்கு அத்திவாரமே தமிழ் இசை என்பதை யாவரும் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய அம்சமெனலாம். தனக்கென்று தனிப்பண்பு தமிழ் இசைக்கு இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. தமிழிசை வரலாற்றில் தமிழிசை மூவராகப் போற்றப்படும் அருணாசலக் கவிராயர்முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை இவர்களை தமிழ் உள்ளளவும் போற்றி நிற்பது தமிழரது தலையாய பணியேயாகும். தமிழிலே பாட்டெழுதி தமிழ் இசையினை வளர்த்த பெருமை இம்மும் மூர்த்திகளுக்கே உருத்தான தாகும், இவர்களுடன் பாபநாசம் சிவனையும் வைத்துப்  பார்க்கும் நோக்கும் இருக்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

ஏழிசையாய் இசைப்பயனாய்” என்று இறைவனையும் இசையினையும் பிரிக்க முடியாது என சுந்தரமூர்த்தி நாயனார் பாடினார். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என சம்பந்தரையும் பாராட்டிப் பாடியுள்ளார் சுந்தரர் பெருமான். தமிழ் இசை என்றாலே அது காலத்தால் முந்தியதுதான். இறைவனோடு தொடர்புடையது. வேறு எந்தச் சமயத்தையும் வேறு எந்த மொழி வரலாற்றையும் எடுத்துக்கொண்டால் “இறைவன் அர்ச்சனை பாட்டேயாகும்  ஆதாலால் இம்மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக” என்று பணித்ததாக வரலாறே காணக்கிடையாது. இது தமிழுக்கும் தமிழ் இசைக்குமே உரியதாகும் என்பது மனமிருத்த வேண்டிய முக்கிய கருத்தெனலாம்.

தமிழ் இசை தமிழரின் இசையாகும். தமிழ் இசையின் வரலாறு பரந்தது மட்டுமல்ல மிகவும் விரிந்ததுமாகும். பண்சுமந்த பாடல்களைத் தந்து நிற்பது தமிழ் இசையாகும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ் இசையினை கொண்டே பக்தியை வளர்த்தார்காள். நல்ல நெறியினைக் காட்டி நின்றார்கள். தமிழ் இசையால் தமிழர்தம் பண்பாடு கலாசாரம் அன்றும் இன்றும் என்றும் முனெடுத்துச் செல்லப்படும் என்பதில் எள்ளளவு. ஐயம் இல்லை என்றே கருதலாம்.

திரையிசையில் தமிழிசை 

பேசாமால் மெளனத்தில் திரையில் வந்த காலத்தில் படங்கள் காட்சிகளாக மட்டுமே களிப்பூட்டின. அதே திரையில் பேசும் நிலைக்கு படங்கள் வளர்ந்ததும் இசை அங்கே சிம்மாசனம் இட்டு நின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஆரம்ப காலப் படங்கள் திரையில் வந்த பொழுது அவைகள் நாடகத்தின் திருந்திய ஒரு வடிவமாகவே வந்தாலும் அதில் நாடகப் பாணியே நிறைந்து காணப்பட்டது. நாடகத்தில் எந்த வகையில் இசை கையாளப்பட்டதோ அதனையே சற்று மெருகூட்டி திரையில் கொண்டுவரும் நிலை தோன்றியது எனலாம். இங்கு தமிழ் இசை தனது இருப்பினை திரையிசையில் பதித்துவிடும் நிலை ஏற்பட்டது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

நாடகத்தில் பாடி நடிப்பவர்களுக்கு முன்னுரிமை மிகுந்து காணப்பட்டது. நல்ல தமிழ் உச்சரிப்பு. நல்ல குரல்வளம். இசைஞானம் யாவும் நாடக நடிகரின் பெருந்தகைமையாகக் கருதப்பட்டது. பேசும்படம் வந்ததும் அதே நாடகமும் அதில் நடித்த நடிகர்களும் உள் வாங்கப் பட்டார்கள். நாடகத்தில் எப்படி தமிழிசையினைப் பாடினார்களோ அதே பாணியிலே பாடும் வாய்ப்பும் அங்கும் காணப்பட்டது. ஆரம்பத்தில் காணப்பட்ட பாங்கு சற்று காலம் செல்ல செல்ல இறுக்கம் குறைந்து புதுப்பாணியில் பரிணமிக்கத் தொடங்கியது எனலாம். ஆனால் தமிழும் இசையும் திரையிசையினை விட்டுவிடவில்லை என்பது கருத்தில் இருத்த வேண்டியதே.

தமிழ்த் திரையிசையானது தமிழின் சங்கப் பாடலில் மரபில் இருந்தே ஆரம்பிக்கிறது எனலாம். தமிழ் இசையும் தொன்மையானது என்பதும் கருத்திருத்த வேண்டியதே. அந்த தொன்மையான தமிழ் இசை திரையிசையின் வளர்ச்சிக்கு பலவகைகளில் உதவியிருக்கிறது என்பதை திரைப்படத்துறையினர் மறுத்துவிட மாட்டார்கள். திரையிசையினை தன்வசம் வைத்திருப்பதே தமிழ் பாடல்கள்தானே. தமிழ்ப் பாடல்களின் சந்தமும் ஓசை நயமும் திரைக்கு ஏற்றபடி இசைவடிவாகும் பொழுது ஜனரஞ்சகம் ஆகியே விடுகிறது.

பக்தி இலக்கிய காலத்திலிருந்தே சந்தங்களை வைத்து எழுதும் முறை தமிழில் தொடங்கி விட்டது எனலாம். சம்பந்தப் பெருமான் சந்தங்களை வைத்து தமிழ் பாடல்கள் பல வற்றை தந்திருக்கிறார். அவரை அடுத்து சந்தக் கவியாக திருப்புகழ் தந்த அருணகிரியார் வருகிறார். கிறீஸ்த்துவுக்கு பின் பதினைந்தாம் நூற்றாண்டில் சந்தம் நிறைந்த திருப்புகள் தமிழுக்குப் பெரும் சொத்தாக வருகிறது எனலாம். இசை ஒழுங்கு தெரியாமல் சந்தங்களை கையாண்டிட முடியாது. இதனால் சந்தங்களுக்கு இசையமைதி முக்கியமானதேயாகும். சந்தத்தை விளங்கி இசையினை உள்வாங்கி நாட்டுப்புற வடிவங்களை மனதிருத்தி கீர்த்தனைகளை உள்வாங்கி தமிழ் இசையில் முக்கியமான ஒரு இடத்தினை சங்கரதாஸ் சுவாமிகள் வகிக்கிறார்கள். நான்காயிரம் பாடல்களுக்கு மேல் அவரால் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் கிடைத்திருக்கிறது. அவரின் ஆளுமையினால் தமிழிசை திரையிசைக்கு உந்துசக்தியை வழங்கி இருக்கிறது என்று இசை அறிஞர்கள் இயம்புகின்றார்கள். அவரைத்தான் இன்று நாம் கேட்கும் திரையிசைப் பாடல் வடிவினது மூலகர்த்தா என்று சொல்லலாம்.

திரைப்படத்துறைக்கு இசை பெரும் ஆதரமாகவே இருந்துவருகிறது. பாட்டுக்கள் நல்லபடி அமைந்தால் மக்கள் விருப்புடன் பார்ப்பார்கள். பாட்டுக்களுக் கென்றே திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றிருப் பதையும் காணமுடிகிறது. திரை இசையின் காலகட்டத்தை மூன்று கட்டங்களாக வகுக்கலாம். ஜி.ராமநாதன் தொடக்கம் பாபநாச சிவன் தியாகராஜ பாகவதர் காலம். மெல்லிசைமன்னர் விஸ்நாதன்- கண்ணதாசன் ரி. எம். செளந்தரராஜன் – பி. சுசிலா காலம், இளைராஜா காலம்.

1937 இல் தியாகராஜ பாகவதர் என்கின்ற இசை அருவி தமிழுக்கு வருகிறது. பின்னர் பாபநாச சிவன் என்னும் ஞான ஒளியும் இணைகிறது. அவர்களுடன் ஜி. ராமநாதன் என்னும் இசைப் பிரவாகவும் சேர்ந்துவிடுகிறது. இந்த இணைப்பை தமிழ்த் திரைப்பட் இசையின் பொற்காலம் என்றே கொள்ளலாம். இங்கு தமிழும் இசையும் திரையிசையினை உயரத்துக்கே எடுத்துச் சென்றது எனலாம். எஸ்.ஜி கிட்டப்பா, கே.பி சுந்தராம் பாள், பி.யு. சின்னப்பா. டி.ஆர். மகாலிங்கம் டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலக்சுமி, தண்டபாணி தேசிகர்திருச்சி லோகநாதன், நடிப்பிசைப்புலவர் ராமசாமிசி.எஸ். ஜெயராமன், இவர்களெல்லாம்  தங்களின் குரல்வளத்தாலும் தமிழ் வளத்தாலும் தமிழ் இசையினை திரையிசையினுக்கு பக்கபலம் ஆக்கினார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. இவர்களின் குரல் வளத்தை சரிவரப் பயன்படுத்தி ஆளுமை மிக்க இசைய மைப்பாளர்கள் திரையிசைக்கு தமிழிசையினால் வலுவூட்டினார்கள் என்பதை திரை யிசை வரலாற்றால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. திரையிசையினை தங்கக் கட்டிலில் ஏற்றியவர் லி. ராமநாதன் என்றால் அது மிகையாகாது. அவரின் இசையமைப்பில் வந்த அருமையான தமிழ் திரையிசைப் பாடல்களையும் இன்றும் யாவரும் விரும்பிக் கேட்டு ரசித்த வண்ணம் இருக்கிறார்கள். அப்படியொரு இசைய மைந்த பாடல் வரமாட்டாதா என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதையும் பார்க்க முடிகிறது. இவரது இசைக்கு தமிழும் அதன் இசையும் அடிப்படை என்பதும் மனங்கொள்ளத்தக்கதே.

பொன்முடி படத்தில்வரும் “இனி ஏது செய்வேன் என் இன்னமுதே”  “நீலவானும் நிலவும் போல…” சாரங்கதாராவில் வரும் “வசந்தமுல்லை போல வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே” கப்பலோட்டிய தமிழனில் “வெள்ளிப்பனிமலையின் மீதுலவு வோம்”, “காற்று வெளியிடை கண்ணம்மா” வீரபாண்டிய கட்டபொம்மனில் “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே” “நான் பெற்ற செல்வத்தில்” பூவா மணமும் பூத்ததே பொன்னும் மணியும் விளைந்ததே”- இப்பாடல்கள் மட்டுமல்ல இன்னும் எவ்வளவோ பாடல்கள் திரையிசையால் ராமநாதன் அளித்த தமிழ் இசையின் உச்சந்தொட்ட பாடல்கள் எனலாம்.

ஜி. ராமநாதன் காலத்திலே சுப்பராயன், சுப்பையாநாயுடு, சுதர்சனன், லிங்கப்பா, பார்த்தசாரதி, வேதா, பொன்ற நல்ல இசையமைப்பளர்களும் இருந்து நல்ல தமிழிசைப் பாடல்களை உள்ளங்களில் பதியும் வண்ணம் செய்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடப் படவேண்டியதேயாகும்.

ஜி. ராமநாதனின் பின் – முத்திரை பதிக்கிறார் கே.வி. மகாதேவன். அவரின் கைவண்ணத்தில் தமிழிசை திரையிசையில் பல வர்ண ஜாலங்களைச் செய்ததை யாருமே மறந்துவிட முடியாது. அவர்தந்த பல இசைக்கோலங்கள் தமிழ் இசைக்கும் திரையிசைக்கும் பெருமையினை அளித்தே நிற்கிறது எனலாம்.

கே. வி யின் பின்னர் மெல்லிசையின் மன்னர்கள் வருகிறார்கள். இரட்டையராக இருந்த பொழுதும் பின்னர் விஸ்வநாதன் பிரிந்த பின்னரும் திரையிசை பெற்ற பயன் மிகவும் காத்திரமானவை என்பதை மறுத்துவிட முடியாது. கண்ணதாசன் என்னும் கவியூற்றும் வாலி என்னும் கற்பனைக் களஞ்சியமும் விஸ்வநாதன் என்னும் இசைமன்னனுடன் இணைந்து திரையிசைக்கு அளித்த இசைப்பொக்கிஷங்கள் தமிழ் இசைக்கு அசைக்க முடியாத சொத்தென்றே சொல்லலாம். இந்தக் கூட்டணியில் பங்கு கொண்ட ரி. எம். செளந்தரராஜன், பி. சுசுலா  சீர்காழி கோவிந்தராஜன், வி.பி ஸ்ரீநிவாஸ் இவர்களை தமிழுலகம் அதாவது தமிழ் இசைஉலகம் என்றுமே மறந்துவிட மாட்டாது. நினைக்க நினைக்க இனிக்கும் வசந்தகாலம் இக்காலம் எனலாம். இக்கால திரையிசை தமிழாய் தமிழ் அமுதமாய் தமிழ் இசையாய் நிரம்பி வழிந்தது எனலாம்.

எம்.எஸ் வியின் காலத்திலேயே நாட்டுப்புற இசையரசன் என்று அழைக்கும் ஒருவர் வந்துவிடுகிறார். அவர்தான் திரையிசைக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமான இளையராஜா.  இசையரசனான  இவரின் வருகையின் பின்னர் திரையிசை வேறு ஒரு பரிமாணத்துள் பயணிக்கத் தொடங்கியது எனலாம். நமது மண்ணின் பாரம்பரியத்தைமண்ணின் வாசத்தைவாழ்வினைக் கூறும் எங்கள் இசையினை முழு நம்பிக்கையுடன் கையாண்டு வெற்றிக் கொடி நாட்டியிருப்பதை யாவருமே ஏற்றுக் கொள்ளுவார்கள். தமிழ் இசையினை நன்கு அறிந்த காரணத்தால் அதனை தக்க முறையில் கையாண்டு திரையிசையில் முத்திரை பதித்திருக்கிறார் இளையராஜா என்னும் பொழுது தமிழ் இசையானது திரையில் தனது இருப்பிடத்தை நிலைநிறுத்தி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா. அன்னக்கிளியில் ஆரம்பித்த இளையராஜா என்னும் இசையரசனின் தமிழிசை சாம்ராஜ்ஜியம் இன்னும் தனது இருப்பிடத்தை உறுதியாக்கிக் கொண்டே இருக்கிறது என்பது கருத்திருத்த வேண்டிய முக்கிய அம்சம் அல்லவா !

இளையராஜா இசையமைப்பாளராக மட்டுமே இருந்திடாமல் கருத்துச் செறிந்த பல தமிழ் இசைப்பாடல்களையும் படைத்திருக்கிறார். படைத்த பாடல்களை திரையிசை வாயிலாக கொடுத்து அனைவரது நெஞ்சங்களிலும் இடம்பெறும் வண்ணமும் செய்திருக்கிறார். இவரின் இசைக்கு ஏற்ப பக்கபலமாக கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழும் கைகொடுத்திருக்கிறது என்பதும் முக்கிய கருத் தெனலாம். வைரமுத்துவுடன் – புலமைப்பித்தன், நா. காமராஜன், பொன்னடியான், மு. மேத்தா, கங்கை அமரன், பா.விஜய், நா. முத்துக்குமாரன், என்று நல்லதோர் தமிழ்ப் புலமைமிக்க கவிஞர்களும் வந்து இணைகிறார்கள் என்பதும் கருத்திருத்த வேண்டியதே.

நிறைவு

மக்கள் மயமாக்கப்படும் யாவுமே பேசப்படும் நிலைக்கு ஆளாக்கப் படுவதுதான் யதார்த்தமானதாகும். திரையும் அதுசார்ந்த திரை இசையும் சமூகத்தில்  இன்றியமையாத ஒன்றாகியே விட்டது என்பதை மறுத்துவிட முடியாது. படித்தவரும் பாமரரும் இசையினை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களும் இசை அறிவே இல்லாதவர்களும் திரையி சையில் கட்டுண்டு இருப்பது என்பது தவிர்க்க முடியாத நிலையாகி விட்டது எனலாம். யாவருக்கும் இன்பம் தரும் நல்ல ஒரு இசையினை திரையிசை தந்து நிற்பதால் அந்த இசையானது மக்களின் இசை என்னும் இடத்தைப் பெற்று விட்டது என்பது கருத்திருத்த வேண்டியதே. விளங்கும் பாடல், விரும்பும் இசை, மனத்தை வசமாக்கும் மாயம் இவையாவும் திரையிசை தருவதனால் மக்களின் மனங்கவர் இசையாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம். பின்னணியில் மேல்நாட்டு இசைக்கருவிகள் இருந்தாலும் திரையிசையின் அடிநாதமாக திரையிசைக்கு பக்கபலமாக அன்றும் தமிழிசை இருந்தது. இன்றும் தமிழிசை இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. எனவே தமிழிசையின் பங்களிப்பு திரையிசைக்கு என்றுமே இருக்கும் தமிழிசையினை விட்டு திரையிசையும் விலகிச் சென்றுவிட முடியாது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.