வாழ்க்கைப் படகுக்குக் கரை இல்லை
பாஸ்கர்
வாழ்வே ஒரு பிச்சை. இதில் என் கருத்து, சிந்தனை, தெளிவு, புரிதல் என மார் தட்டிக்கொள்வதும், மண்டைக்குப் பின்னால் ஒளிவட்டம் தெரிந்து ஞானப்பிரகாசம் போல நடந்துகொள்வது அகந்தையின் உச்சம். ஒரு துரும்பைக் கூட என்னால் அசைக்க முடியாது. எந்த நிகழ்விற்கும் வெற்றிக்கும் பெருமைக்கும் நான் காரணம் இல்லை. வாழ்க்கை ஒரு வெற்றுத்தாள். அதில் எழுதினாலும் அழிந்து விடும் மந்திர பலகை மாதிரி எல்லாம் முடிவில் ஒன்றுமற்ற நிலைதான்.
உலகம், மனிதர்கள் எல்லாம் நகரும், இயங்கும். அவை தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். எந்த மரம், மழை வேண்டி யாகம் செய்தது? எந்தப் பூமி தனக்குத் தென்றல் வேண்டும் என மனு போட்டது. அடங்கிப் போவதே அழகு நல் வாழ்க்கை. உயிரும் உடலும் மனமும் இங்குப் போர்வை போர்த்தியது. விலக்கிப் பார்த்தாலும் விளக்கம் தெரியாது. இது ஆரம்பம். முடிவும் அதே தான்.
மண்ணும் மஞ்சள் தீயும் சொந்தம் கொண்டாட எப்போதும் நமக்கு உண்டு. மரணம் என்பது பயம். மனம் அதனைத் தள்ளிப் பார்க்க, அது வேரின்றி வளர்கிறது. புரிந்தவன் மரித்தால் நெருப்பு சுடாதா என்னா? அல்லது ஞானத் தகப்பனை விழுங்கிய மண் அரிக்காதா என்ன? கலங்கிப் போய்க்கிடப்பது தேடலின் தோணி. நாம் கரை சேர முயல வேண்டாம்.