ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

0

மீனாட்சி பாலகணேஷ்

அம்பிகை மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணலாமா?

4. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்

இந்த நூலைப் பார்க்கப் புகுமுன், கௌரிநாயகியம்மை குடிகொண்டுள்ள மிகப்பழமையான தலமாகிய திருக்கேதீச்சரத்தைப் பற்றிய தகவல்களைக் கட்டாயம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். திரு. ஆர் கந்தையா என்பவர் 1938ம் ஆண்டில் இத்தலத்தைப் பற்றி ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அதனின்றும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

சமயக்குரவர்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் 274 ஆகும். இவற்றுள் இரண்டு இலங்கையின்கண் உள்ளவையாம். இலங்கையின் பழமையானதும் திசைக்கொன்றாக இருப்பதுமான நான்கு சிவன் கோவில்கள் திருக்கேதீச்சரமும், திருக்கோணேச்சரமும் முன்னேஸ்வரமும், நகுலேஸ்வரமுமாகும். திருக்கேதீச்சரம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது (மகாவம்சம், பிரிட்டானிகா). திருக்கேதீச்சரத்தை சமயக் குரவர்களான சுந்தரமூர்த்தி நாயனாரும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் பாடிப்பரவியுள்ளனர். இந்த இடம் மன்னாரை அடுத்த மாதோட்டத்தில் (மாந்தோட்டம் எனவும் கூறப்படும்) அமைந்துள்ளது. மகாதுவட்டா வெனும் மன்னன் பூசித்த இடமாதலால் மாதோட்டம் எனப் பெயர்பெற்றது என்பர். மாந்தை எனவும் கூறப்படும். பழங்காலத்தில் இவ்விடம் பெரும் துறைமுகமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட காலத்திலும், இலங்கையை விசயன் எனும் மன்னன் ஆண்ட போதும் இருநாடுகளுக்குமிடையே மாதோட்டத் துறைமுகத்தின் வாயிலாகவே பெரும் வாணிகம் நடைபெற்றது  என்பர். ஈழ மன்னன் விசயனுடைய இரண்டாம் மனைவியாகிய பாண்டிய இளவரசி திருமணஞ் செய்துகொண்டு வந்திறங்கிய துறைமுகம் மாதோட்டம் என்று ஈழத்தின் வரலாற்று நூலான, ‘மகாவம்சம்,’ எனும் நூல் மாதோட்டத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

ரோம, கிரேக்க நாணயங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது அக்காலத்தில் இந்நாடுகளுடன் நடந்த  வாணிகத்தை உணர்த்துகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ள, ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ எனும் தேவாரத்தினாலும் இம்மாதோட்டம் பெரிய துறைமுகமாக விளங்கிற்று என அறியலாம். சம்பந்தப்பெருமானும் தமது தேவாரத்தில் மாதோட்டம் எனும் பெயரைக் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.

மேலும் இங்கிருந்த பாலாவி எனும் நதியினைப் பற்றி சம்பந்தர் தமது திருக்கேதீச்சரப் பதிகத்தில்  ‘மாதோட்டத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பாலாவியின் கரைமேல்’ எனும் தொடரை சுந்தரர் எடுத்தாண்டுள்ளர்.

புராண வரலாற்றை நோக்கினால், வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் ஒருகாலத்தில் வாக்குவாதம் தொடங்கிப் பெரிய போராகவே மாறியது என்றும்,  ஆதிசேடன் ஒருகட்டத்தில் மேருமலைக்குள் சென்றொளிந்து கொள்ள, வாயுபகவான் அம்மலையைத்தாக்கி, அதன் மூன்று சிகரங்களையும் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றும் காணலாம். அவற்றுள் ஒரு சிகரத்தைத் திருக்கேதீச்சரத்தில் வைத்துச் சென்றான் எனப்படுகிறது.

இது கேது பூசித்த தலமாதலின் கேதீச்சரம் என்றானது. இதற்குமொரு புராணக்கதை உள்ளது. சாவா மருந்தான அமுதத்தை மோகினி வேடம்பூண்ட திருமால் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது,  ஒரு அசுரன் மாறுவேடம் பூண்டு, சூரிய சந்திரர்களுக்கிடையே மறைந்து நின்று தானும் ஒரு பங்கைப்பெற்று உண்டான். இதையறிந்த திருமாலின் சாபத்திற்காளான அவனது உடல் இராகு, கேது என இரு கூறுகளாயிற்று. அவ்வரக்கன் பெருந்துன்பமடைந்து இத்தலத்தில் சிவபிரானை வணங்கி அவர் அருளைப் பெற்றனன்.

திருக்கேதீச்சரம் பழம்பெரும் தலமாகும். துவட்டா என்பவன் திருக்கேதீச்சரத்திற்கு வந்து பாலாவியிலே தீர்த்தமாடி, புத்திரப் பேற்றிற்காகச் சிவபெருமானை வழிபட்டான் என்றும், கேதீச்சரப்பெருமான் அவன்முன் தோன்றி, அத்தலம் மகாதுவட்டாபுரம் என வழங்கப்படும் எனவும், அவனுக்கு விசுவகர்மா எனும் மகன் பிறப்பான் எனவும் அருளினார். இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டார்.

இது அழிந்து போனதற்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

இத்தலத்தின் ஈசன் புகழை சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்களும் தத்தம் பதிகங்களில் பாடிவைத்துள்ளனர்.

இத்தலத்துப்பெருமானை வழிபட்டால் தீராத வினைகளும் நோயும் தீரும் என்பர். திருஞானசம்பந்தர்

‘மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி, அனல் எரியை அம்பாகக் கொண்டு போரிட்டு முப்புரங்களை எரித்த சிவபிரான் விரும்பி உறையுமிடமாக அடியவர் கருதும் ஊர், கடலால் சூழப்பட்ட, வாசமிகு பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் விரும்பிப் பூசனை செய்திடும் திருக்கேதீச்சரமாகும். அப்பதியைக் கையால் தொழுதால் நம் கடுவினைகள் விலகியோடும்,’ என்கிறார்.

விருதுகுன்ற மாமேருவில் நாணர
வாஅனல் எரியம்பா
……….. …………… ……………..
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே.

                                   (திருக்கேதீச்சரப் பதிகம்- 2ம் திருமுறை)

சுந்தரமூர்த்தி நாயனார், ‘தனது அடியார்களின் உடற்பிணிகளை  முற்றும் ஒழித்தருள்பவனாகிய சிவபிரான், மரக்கலங்கள் (வங்கம்) மிகுதியாகவுள்ள கடலருகேயுள்ள மாதோட்டம் எனும் நல்ல நகரத்தில், தனது திருமேனியைப் பங்கிட்டுக்கொண்ட மடமங்கையுடன், பாலாவியாற்றின் கரைமீது தென்னம்சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்,’ எனப் போற்றிப் பாடியுள்ளார்.

அங்கத்துறு நோய்கள்ளடி
யார்மேல் ஒழித்தருளி
வங்கம்மலி கின்றகடல்
மாதோட்டநன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்ததிரு
கேதீச்சரத் தானே. (சுந்தரர்- ஏழாம் திருமுறை)

மேலும், மாதோட்டத்தின் சிறப்பினை, ‘மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் புறமருவிய மாதோட்டம்,’ என சம்பந்தப் பெருமானும், ‘மாவின் கனிதூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்’ என சுந்தரரும் தேவாரத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருநாவுக்கரசரும் இத்தலத்துப்பெருமானை, அவர் பற்பல இடங்களிலும், திருக்கேதீச்சரத்திலும் உறைபவனாய்க்கண்டு ஏற்றுகிறார்.

‘பூதியணி பொன்னிறத்தர் பூண்நூலர்
பொங்கரவர் சங்கரர் வெண்குழையோர் காதர்
கேதீச்சர மேவினார் கேதாரத்தார்
கெடில வடவதிகை வீரட்டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை வுய்யக்கொண்டார்
மழபாடிய மேவிய மழுவாளனார்
வேதிகுடியுளார் மீயச்சூரார்

வீழி மிழலையே மேவினாரே’ என்று திருத்தாண்டகத்தில் எம்மிறைவர் உறையும் தலங்கள் அனைத்தையும் போற்றிக் குறிப்பிடுகிறார். இவற்றுள் கேதீச்சரமும் ஒன்றெனக் காணலாம்!

மாணிக்கவாசகப்பெருமான் குயிற்பத்து, திருவார்த்தை இவற்றில் ‘இலங்கையில் மண்டோதரிக்கு அருள்செய்த தலம்’ எனக் கூறியுள்ளார். குயிற்பத்தின் பாடலில், ‘தென்னிலங்கைக்கு அரசியான வண்டோதரிக்கு, பேரருளாகிய இன்பத்தையளித்தவனும் பெருந்துறையில் உறைபவனுமாகிய பிரானை, உனது பெருமை பொருந்திய வாயால், அத்தென்பாண்டி நாட்டானை, என்னிடம் வரும்படிக் கூவுவாயாக, குயிலே’ என்கிறார்.

இலங்கை அரசனான இராவணனின் மனையாளாகிய மண்டோதரி (இங்கு வண்டோதரி எனக் குறிப்பிடப்படுகிறாள்) வழிபட்ட இடமே கேதீச்சரமாகும்.

ஏர்தருமேழ் உலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாம்
ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
பேரருளின் பமளித்த பெருந்துறை மேயபிரானைச்
சீரியவா யாற்குயிலே தென்பாண்டி நாடனைக்கூவாய்.

                                                           (குயிற்பத்து, எட்டாந் திருமுறை)

                                                           0000000

இவ்வாறெல்லாம் பெருமையும் பீடும் வாய்ந்த இத்தலத்தின்மீது ஒரு ஊஞ்சல் பிரபந்தம், திருக்கேதீச்சுரர் வண்டுவிடு தூது, திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது, திருக்கேதீச்சுர புராணம் ஆகிய நூல்கள் உள்ளன. தமிழ்ச்சுவை நனிசொட்டச் சொட்ட பாடப்பெற்றவை இவை. திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது எனும் நூலினை எழுதிய திரு. சி. இ. சதாசிவம் பிள்ளை என்பவரே 1976ம் ஆண்டுவாக்கில் இத்தலத்தில் வதியும் கௌரியன்னை மீது ஒருபிள்ளைத்தமிழ் நூலினையும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்திற்கேற்ற எளிய நடையில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

இதனின்றும் சில செய்யுட்களைக் கண்டு மகிழலாமா?

வழக்கமான பத்துப் பருவங்களில் பத்துப்பாடல்கள் வீதம் இயற்றப்பெற்ற இப்பிள்ளைத்தமிழ் நூலின் செங்கீரைப் பருவப்பாடலொன்று; குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்றின் கருத்தை அடியொற்றி இருப்பினும், வேறு நயங்களிலமைந்து சிறப்பாக உள்ளது.

‘காற்று, நெருப்பு, நீர்,நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களையும் கொண்டு தாமரை மலரில் உறையும் கஞ்சனான பிரமன் உலகைப் படைக்க, கருமேக வண்ணனான திருமால் அதைக் காக்க, கயிலைவாசியான சிவபிரான் அழித்திடவும், அவர்களையும் அழித்தும் ஆக்கியும் விளையாடி, அழகான உருக்கொண்டும், குதலைமொழி பேசியும், எம்மிடம் அருள்கொண்டும், கேதீச்சரத்தில் குடிகொண்டும் நற்குணங்களையும் கொண்டு தெய்வமாக உள்ள அம்மையே, செங்கீரையாடுக! செங்கண்மாலின் தங்கையான கௌரி அம்மையே செங்கீரையாடியருளுக!’ என் வேண்டும் பாடல்.

காலங்கி நீர்நிலங் காயமெனு மைம்பூத
காரணத் தாயவுலகு
கஞ்சன் படைக்கவுங் கருமேக வண்ணனவை
காக்கவுங் கயிலையாளி
மேலங் கழித்திட ………………………………
…………………………….
மீண்டும் அவர்தமை யாக்கிமுத் தொழிலதாம்
விளையாட்டயர்ந்து வேண்டும்
…………………………………………………..
செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
செங்கீரை யாடியருளே.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய எட்டுச் சுவர்க்கால் நிறுத்தி’ எனும் செங்கீரைப்பருவப் பாடலிலும் அம்மை உலகங்களை ஆக்குவதனையும், பித்தனான சிவபிரான் நடனமாடி அதனை அழிப்பதனையும், இவ்வாறு மாறிமாறி இன்னிகழ்வு நடைபெறுவதனையும் குமரகுருபர சுவாமிகள் பாடியிருப்பார். இதுவும் கருத்தில் அதனை யொத்துள்ளது.

சப்பாணிப்பருவப் பாடலொன்று, வெள்ளிக் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சித்த இலங்கேசனான இராவணனும் அவனது மனையாள் மண்டோதரியும் அன்னையை இத்தலத்தே தொழுது போற்றியதைப் பதிவு செய்கின்றது.

வெள்ளிக் கயிலை மலையெடுத்த
வீறார் மெய்ம்பன் இலங்கேசன்
வேற்கண் மனைமண் டோதரியும்
விண்ணார் அணங்கி னருமேத்தப்
…………. …………….. …………..
கயிலைக் கிறைவர் பங்கிலமர்
கௌரீ தாலோ தாலேலோ.

சொல்நயம் செறிந்தவொரு அம்மானைப்பருவப் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.

கௌரியன்னை பாலாவியாற்றின் கரையினில் அம்மானையாடுகிறாள். அவள் பெரும்புகழை வருணிக்கிறார்.

தாமரை மலரில் இருக்கும் பெரியோனான பிரமன் வேதங்களை யோதும் ஒலி ஒருபுறம்; கழுமலம் எனப்படும் சீர்காழியிலுதித்த முத்தமிழிற் சிறந்த சம்பந்தப்பெருமான் முதலியோர் திருமுறைகள் ஓதும் ஒலி இன்னொரு புறம்; தேனோடு பாலைக் கலந்தாற்போன்று அன்பர்கள் செவி இவற்றைக் கேட்பதனால் இனிமைபெறுகின்றது. திருவீதியில் நீண்ட மதில்களும், வானளாவு கோபுரங்களும் ஓங்கி நிற்கின்றதும், வானிலுள்ள தேவர்கள் காணவியலாதவனும் வேதங்களின் முதல்வன் எனப்படும் சிவபெருமான் அமர்ந்து வரமருளுவதுமான திருக்கேதீச்சுரத்தில், அவனுடைய இடதுபாகத்தைப் பகிர்ந்துகொண்டு அன்பர்களுக்கு அருள்செய்கின்ற மலைவல்லி, சியாமளை, வராகியான அம்மையே நீ, அளவற்ற அருளினோடு பாலாவியின் கரையில் அம்மானை யாடுக. அரியும் பிரமனும் அறியவொண்ணாத அமலரான பெருமானிடம் அமரும் கௌரி, அம்மனை யாடி அருளுக! என வேண்டுவதாக அமைந்த பாடல்.

கானாறு கஞ்சப் பொகுட்டுறு பிதாமகன்
கழறுமறை யோதை யுடனே
கழுமல முதித்தமுத் தமிழ்விரக ராதியோர்
கண்டதிரு முறையோ தையும்
…………………………………………………
வாமபா கம்பகிர்ந் தன்பருக் கருளுமலை
வல்லியா மளைவ ராகீ
ஆனாத அருளினொடு பாலாவி மறுகதனில்
அம்மானை யாடி யருளே
அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
யம்மானை யாடி யருளே.

இதுபோன்று கவிநயமும் பத்திநயமும் சேர்ந்தமைந்த பலப்பல பாடல்கள். எளிய தமிழிலமைந்தவை. படித்துப்பொருளுணர்ந்து மகிழலாம்.

(இன்னும் வளரும்)

பார்வை நூல்கள்:

  1. திருக்கேதீச்சரம் – ஆர். கந்தையா
  2. மகாவம்சம் – இலங்கைத் தீவின் புராதன வரலாறு
  3. சம்பந்தர் தேவாரம்
  4. சுந்தரர் தேவாரம்
  5. அப்பர் தேவாரம்
  6. மாணிக்கவாசகர் திருவாசகம்
  7. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் – சி. இ. சதாசிவம் பிள்ளை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *