படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 22

0

முனைவர் ச. சுப்பிரமணியன்

‘நீர்க்குமிழி’ கவிதை : துரை வசந்தராசன்
மொழிபெயர்ப்பு: பொன்னுசாமி திருநாவுக்கரசு

முன்னுரை

‘பிறநாட்டுச் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்பதை முன்னிறுத்தித் ‘திறமான புலமையினில் வெளிநாட்டார் அதை வணக்கம செய்தல் வேண்டும்’ என்பதைத் தொடர்ந்து சொல்வான் பாரதி. நாம் இரண்டினையும் தவறியும் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து பன்றிக்குட்டிகளாய் கவிதைக் குட்டிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கக் குருளையைப் போல கவிதைகள் சில முகநூலில் வருவதைக் காணமுடிகிறது. தம்பி வசந்தராசன் ஒரு சிங்கம். அன்னாருடைய ‘நீர்க்குமிழி’ என்னும் கவிதையைக் கண்ணுற்றபோது அறிஞர் பொன்னுசாமி திருநாவுக்கரசு அவர்களின ஆங்கில மொழி பெயர்ப்பையும் கவனிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.  இருகோப்பை கனிரசத்தை ஒரு கோப்பையில் அருந்தும் பேறு பெற்றேன்.

அசலும் நகலும்

முதனூல் வழிநூல் சார்பு நூல் என்று நூலகள் மூவகைப்படும். முதனூலின் மொழிபெயர்ப்பு வழிநூல் ஆகாது. மூலத்தின் சாரத்தை உள் வாங்கிக்கொண்டு தன்னை வெளிப்படுத்தும் தனித்தன்மையோடு செய்யப்படுவதே வழிநூலாகும். கம்பராமாயணம் இதற்குப் பொருத்தமான சான்றாகலாம். மொழிபெயர்ப்பு என்பது வழிநூல் ஆசிரியனுக்கு இடம் கொடுக்காது.  காரணம் அவ்வாறு இடம் கொடுத்தால் முதநூலில் சிறந்தது சிதைவு பெறும். சிதைந்தது சிறப்புறும். மேலும் இது முதனூல் ஆசிரியன் உரிமையில் தேவைற்ற தலையீடாகும்.  எனவே இருப்பதை அப்படியே மொழிமாற்றம் செய்வதுதான் மொழிபெயர்ப்பு எனப்படும்.

மூலக்கலவை மொழிபெயர்ப்பு

இருப்பதை அப்படியே பெயர்த்தெழுவதுதான் மொழிபெயர்ப்பு என்று முந்தைய பத்தியில் சொல்லப்பட்டது. அப்படிச் செய்தால் செய்திகள் பரிமாறப்படுமேயன்றிக் கவிதை மணமோ, கற்பனை வளமோ வெளிப்பட வாய்ப்பில்லை. மூலத்தின் சாரத்தை முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்டு, பெயர்த்தெழுதும் மொழிமரபுக்குப் பெருமை உண்டாகும் வகையில் செய்யப்படுவதுதான் மொழி பெயர்ப்பு. ராபர்ட் பிராஸ்டு என்னும் கவிஞன் எழுதிய கவிதை வரிகள் இப்படி அமைந்திருக்கின்றன.

The woods are lovely dark and deep
But I have promises to keep
And miles to go before I sleep
And miles to go before I sleep

இந்த நான்கு வரிகளை அறிஞர் ஒருவர் எப்படி மொழி பெயர்த்திருக்கிறார் தெரியுமா?

வளமிகு காடுகள் வாவென அழைக்கும்!
ஆயினும் எனக்கோ ஆயிரம் கடமைகள்!
துயில்கொளுமுன்பு முடித்திடல் வேண்டும்!
தொலைவோ பல கல் நடந்திடல் வேண்டும்!

என்று மொழி பெயர்த்திருக்கிறார் மூலத்தில் . காடுகளின் வளப்பம் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி அவை கவிஞனை அழைப்பதாக இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பில் தத்துவச் சாரத்தை உள்ளடக்கித் தன் இறுதிக் காலத்தை எண்ணிய கவிஞன் பாடுவது போல் காடுகள் அழைப்பதாக மொழிபெயர்த்திருக்கிறார். ‘Promises’ என்ற பன்மையைத் தமிழ் வழக்கியல் மரபுக்கேற்ப ‘ஆயிரம் கடமைகள்’ என மொழி பெயர்த்திருக்கிறார். ஒன்பது வாசல் உடலுக்கு ஆயிரம் வாசல் இதயம் என்று கண்ண்தாசன் பாடவில்லையா? ஒரு ஜென்மமே சமாளிக்க முடியாத போது ஆயிரம் ஜென்மங்கள் என்று படம் வரவில்லையா? ஒரே நிலவை ஆயிரம் நிலவே வா என்று புலமைப்பித்தன் ;அழைக்கவில்லையா? இந்த மரபு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவருக்குத் தெரிந்திருக்கிறது. And miles to go before I sleep என்னும் தொடரை மூலத்தின் கருத்து கூடுதலை வலிமை பெறுமாறு இருவகையாக மொழிபெயர்த்து எழுதிய திறனை எத்தனைப் பாராட்டினாலும் தகும். ‘நாளது சின்மையும் இளமையது அருமையும்’ என்பதுபோல முரண்பாடுகளை மொழிபெயர்க்கும் பேராற்றல் இது. இளமைக் காலம் மிகக்குறைவு. ஆனால் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகள் பல கோடி! அதுபோல முடிக்க வேண்டிய கடமைகளும் அதற்கான வாழ்நாளும் முரணாக உள்ளன என்பதை அந்த ஒரே தொடர் உணர்த்துவதாகக் கருதி மொழிபெயர்த்திருக்கும் அருமை!

மொழிபெயர்ப்புச் சிக்கல்

எவ்வளவு தான் மூலத்திற்கு ஏற்ற சொற்களைப் பிறமொழிகளில் கண்டாலும் சொற்றொடர்களையும் மரபுத் தொடர்களையும் கையாள்வது பெருஞ்சிக்கலாகும். சான்றாகக் ‘கற்பு’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது. ‘பாவாடை தாவணியில் பாரத்த உருவமா? என்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? ‘தொழுது’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் சொல் இல்லை. தொழுது என்பதை மண்டியிடுதல் என்ற அளவிலேயே மொழி பெயர்க்க இயலும். உண்மையில் தொழுது என்பது மனத்தால் தொழுவது. அறிஞர்களோ WORKSHIP’ ‘BEND’ ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

No god adoring low she bends her lord
I hen rising serves the rain falls instant at her word

மொழி பெயர்ப்பாளர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகித்தான் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் தெய்வத்தைத் தொழ வேண்டியதில்லை என்பதற்கு ‘No god adoring’ என்று தெளிவாகக் கூறுகிறார். சிறப்பாகக். கணவனை ‘lord’ என்கிறார். உடனடியாக மழைபெய்யும் என்பதையும் சரியாகவே மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு எங்கே சிக்கல் வருகிறது என்றால் தொழுதெழுவாள் என்பதில்தான்! திருவள்ளுவரின் மரபு சார்ந்த சொல்லாட்சி அது. ‘Bend’ என்னும் ஆங்கிலச் சொல் முதுகோடு தொடர்புடையது. இடுப்போடு இயைபுடையது. சைக்கிள் சக்கரத்திற்குக் கோட்டம் பார்க்கலாம். வளைவுகளை (bend) எடுக்கலாம். மனத்திற்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. கோணல் மனம் என்று மொழி பெயர்க்க முடியாது. எனவேதான் உச்சபட்சமாக ‘bend her lord’  என்று மொழி பெயர்த்திருக்கிறார்.  உண்மையில் கொழுநன் தொழுதெழுவாள் என்பதற்கு bend her lord என்பது பொருளாகாது. ஆனால் ஆங்கிலத்தில் அவ்வளவுதான் முடியும். இது ஆங்கிலத்திற்கும் பொருந்தும். ஒரு சான்று ‘A BIRD IN THE HAND IS WORTH TWO IN THE BUSH’ என்பது ஆங்கிலப் பழமொழி. இதனைப் பொந்துக்குள் இருக்கும் இருபறவையைவிடக் கையிலிருக்கும் ஒரு பறவையே மேல் என்பது சரியான மொழிபெயர்ப்பே!  ஆனால் பண்பாட்டுக்குகந்த மொழிபெயர்ப்பாகாது. எனவே நாம் என்ன செய்கிறோம்? ‘மரத்தில் இருக்கும் பலாக்காயைவிடக் கையிலிருக்கும் களாக்காயே மேல்’ .என்று வழமை பாராட்டுகிறோம்.

மொழிபெயர்ப்பினால் உண்டாகின்ற பயன்

உண்மையில் மொழி பெயர்ப்பை உலக இலக்கிய அறிமுக முயற்சி எனலாம். பைபிளும் குரானும் தமிழில் வந்திருக்கவில்லையென்றால் இறைத்தூதர்களின் அறிவுரைகளை நாம் கற்றிருக்க முடியாது. இதனால் சமயத்தால் ஒன்றுபட்டு மொழியால் வேறுபட்டிருப்பவர்கள் அடைந்த, அடைகின்ற, அடையப்போகும் பயன் எண்ணிறந்தன. விவிலியத்தைக் கற்பதற்கு ஒவ்வொருவனும் இலத்தீனையோ அராமைக்கையோ கற்க வேண்டியிருந்திருக்கும். அரபி மொழி தெரிந்தாலேயொழிய குரான் என்னும் மறையை நாம் உணர்நதிருக்க இயலுமா? இவ்வளவு பெரிய பணியைச் செய்வது மொழி பெயர்ப்பே!. வேதங்கள் இலக்கியங்கள் அல்ல. இலக்கியத்தில் சிக்கல்கள் வேறுமாதிரி அமைந்து விடும். உள்ளதை உள்ளவாறே சொல்லுவது சமய இலக்கியங்கள். உள்ளதை உணர்ந்தவாறு சொல்லுவது மொழி இலக்கியங்கள்.! படைப்பாளன் உணர்ந்தவற்றை மொழிபெயர்ப்பாளன் உணரவேண்டுமானால் படைப்பாளனாக மாறினாலே ஒழிய நடவாது. படைப்பாளன் எந்தத் தளத்தில் சஞ்சாரம் செய்தானோ அந்தத் தளத்தில் சஞ்சாரம் செய்தாலேயொழிய மொழிபெயர்ப்பு வெறும் எழுத்துக்களின் வேற்று வடிவங்களாகவே முடியும். பல மொழிபெயர்ப்புக்கள் அப்படித்தான் முடிந்து போயிருக்கின்றன. விதிவிலக்காகச சிலர், தன்னலம் கருதாது, தாயமொழிக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இந்தப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படிக் கொண்டவர்களில் புகழ் விரும்பாப்  பொன்னுசாமி திருநாவுக்கரசும் ஒருவர். வசந்தராசன் கவிதைகளைத் தாய்மொழியில் சுவைத்து வந்த நான் முதன் முறையாக ஆங்கில மொழிபெயர்ப்போடு படிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்! அந்த மொழிபெயர்ப்பின் அருமை பற்றிய சில செய்திகளை இந்தக் கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.

வாழ்க்கை போல நீர்க்குமிழி

‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும்’ என்பது தொல்காப்பியம். உவமத்தால் பொருள் விளக்கம் செய்வது இயல்பு. மாறாகப் பொருளால் உவம விளக்கம் செய்தால் என்ன ஆகும்? பொருள் உவமப்பணியைச் செய்யும். உவமம் பொருளாகி நிற்கும். ‘நீர்க்குமிழி’ என்பது புகழ் பெற்ற திரைப்படம். அந்தப் படத்தில் சுரதா எழுதிய பாடல்கள் உண்டு. அதில் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்கும்.

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

நிலையற்ற வாழ்க்கையை நான்கே வரிகளில் சுரதா தமக்கே உரிய மொழியாளுமையுடன் எழுதியவை இவை. இதன் தாக்கத்தைப் பின்னாலே வந்த அத்தனைக் கவிஞர்களிடத்தும் காணமுடியும். ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்பார் கண்ணதாசன். ‘ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே! என்பார் பட்டுக்கோட்டையார்.

சேவை செய்யும் தியாகி சிருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
நம் வாழ்வில் காணாச் சமரசம் உலாவும் இடம்

என்பது மருதகாசியின் வரிகள் .பாடுபொருள் நீர்க்குமிழி ஆனதால் வசந்தராசன் வாழ்க்கையை உவமமாக்கிவிடுகிறார். இது ஒரு நுண்ணியம். இந்தப் பாடலைக் கண்ணுறும் பலரும் பாட்டின் தலைப்பு ‘வாழ்க்கை’ என்றே  கருதுவர்!. அல்ல!. பாட்;டின் தலைப்பு ‘நீர்க்குமிழி’. இயற்கையைப் பாடுகிறார் கவிஞர்;. உயர்திணைப் பண்புகளை அதன் மீது ஏற்றி ஒப்பற்ற பாடலைப் படைக்கிறார் வசந்தன்.

கருவில்லா நீர்முட்டை!கானல் கோடு!
கட்டிவைத்த காற்றுப்பை! ஓடம் போகி!
துருப்பிடிக்கா ஆசைகளின் தூரச் சொந்தம்!
தொட்டாலே தனைமாய்க்கும் ரோசக் காரி!
விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
விளையாட்டுக் காட்டிவைத்துவானத் தோகை
உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப் போகும்
ஊர்வலமே நீர்க்குமிழி!வாழ்க்கை போல.!”

முட்டை என்றால் கருவிருக்கும். கரு இருந்தால்தான் அது முட்டை. நீர்க்குமிழி முட்டைதான். ஆனால் அதில் கருவில்லை. கானலைக் கண்ணால் காணலாம். தொட முடியாது. பானிபூரியைப் போல் நீரின் மீது தவழ்ந்து வரும் நீர்க்குமிழி ஒரு காற்றுப்பை என்கிறார். ஓடத்தைப் போல் பயணம் செய்வதால் ஓடம் போகி என்கிறார். ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஒடம் போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ என்ற கண்ணதாசன் வரிகளைச் செரித்துக் கொண்டவர்களுக்கு வசந்தராசன் நீர்க்குமிழியை வாழ்க்கையாக உவமித்த நுண்ணியம் புரிவது எளிது. இந்த விருத்தத்தில் கவிதை மணம் அனைத்து வரிகளிலும் கமழ்ந்தாலும்

துருப்பிடிக்கா ஆசைகளின் தூரச் சொந்தம்!
தொட்டாலே தனைமாய்க்கும் ரோசக் காரி!

என்னும் இரண்டு வரிகள் குறிப்பிடத்தக்கன. நீர்க்குமிழியை உயர்திணைப் பத்தினியாக்கிக் காற்றின் வாசம் பட்டாலே உடைந்துவிடும் ரோசக்காரி எனப்பாடியிருப்பது இலக்கணத்தில் அருமையான உருவக அணி. இலக்கியத்தில் அற்புதமான தொடர்! இந்தக் கவிதையை இப்படி மொழி பெயர்த்திருக்கிறார் திருநாவுக்கரசு.

A water egg without an embryo ! A line mirage !
A bonded bag of Air ! A ferrying aftermath !
A distant kinship of un-corroded desire !
A miffed lady who perishes by the touch itself !
A show-off of Sky’s feather by play
When seen at longing times !
Only a Parade of enclosed takeaway
In the rolling eyes,… akin to Life !

பாட்டின் முதல் இரண்டு வரிகளின் மொழிபெயர்ப்பு இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். மூன்றாவது மற்றும் நான்காவது வரிகளை மிகக் கவனமாகக் கையாள்கிறார் திருநாவுக்கரசு. அவர் வேதியல் படித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும். A distant kinship of un-corroded desire ! ‘சொந்தம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் பல சொற்கள் இருந்தாலும் ‘kinship’ என்பதையும் ‘துருப்பிடிக்காத’ என்பதற்கு மிகப் பொருத்தமாக ‘un-corroded’ என்ற சொல்லையும் கவனமாகக் கையாண்டு மூலத்தின் சாரம் சொரிகிறார்.

விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
விளையாட்டுக் காட்டிவைத்துவானத் தோகை

என்னும் இரண்டு வரிகளை முன்பின்னாக ஆக்கி, பாட்டின் பொருளுக்கான தெளிவைக்  கூடுதலாக்குகிறார் திருநாவுக்கரசு.

A show-off of Sky’s feather by play
When seen at longing times !

வசந்தராசன் எதுகைக்காக அமைத்த கட்டுமானத்தை செறிவாக்கியிருக்கிறார் திருநாவுக்கரசு. இந்த மொழிபெயர்ப்பை மீண்டும் தமிழாக்கினால்,

விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப் போகும்

என்று அமைந்துவிடும். விடவே ‘காணுகிற நேரந்தன்னில்,உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப்போகும்’ எனத் தொடர் நின்று  காணுகிற நேரத்திற்கும் எடுத்துப்போகும் நேரத்திற்குமான இடைவெளியைக் குறைப்பது உணர்க. மொழிபெயர்ப்பு,  மூலத்தைப் பின்னுக்குத் தள்ளும் இடங்களில் இதுவும் ஒன்று.

மழை நடத்தும் மாநாடு

இடி இடிப்பதை மழைக்கு வானம் கைதட்டி மகிழ்வதாகக் கற்பனை செய்வார் வைரமுத்து. தம்பி வசந்தராசன் வேறுவகையாகக் கற்பனை செய்கிறார். மழைநீர்ச் சொட்டு மண்ணில் ;விழுகிறது. சிறு சிறு துளைகள் உருவாகின்றன. நம் கண்ணுக்கு இதுதான் தெரியும். கவிஞன் கண்ணுக்கு மண்துளைகள் தொண்டர் படைகளாகத் தோன்றும். மழை மாநாடு நடத்துகிறதாம். மணலிலே தொண்டர்படை காத்திருக்கிறதாம். அருமை!

மண்மீதில் மழைநடத்தும் மாநாட் டிற்கு
மணல்பூத்த தொண்டர்படை! நீர்ப்ப ரப்பில்
கண்பூத்த போல்காலாட் படைந டத்திக்
காட்டுகிற ராணுவம்போல் ஆடும் காற்று!

இந்தப் பகுதியை மொழிபெயர்ப்பாளர் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்!

A devoted army.., blossomed by the sand
For the symposium conducted,
By the rain on the soil’s watery surface !
A dancing wind, like an army’s infantry

இந்தப் பகுதியிலும் அடியை மாற்றி அமைத்துக் கொள்கிறார். மணல் பூத்த தொண்டர் படை என்பதை மழைநடத்தும் மாநாட்டிற்கு மணல் வாழ்த்துரைக்க வநதிருப்பதாகக் கற்பனை செய்கிறார். தமிழில் வசந்தராசன் கற்பனை அப்படி. ஆங்கிலத்தில் இப்படி! மொழி பெயர்ப்பு வெற்றி பெறுகிற இடங்களில் இதுவும் ஒன்று. தொண்டர் படை என்பதை ‘devoted army’ என்று பெயர்த்தெழுதுகிறார். ‘மாநாட்டை’ என மோனைக்காக வசந்தராசன் எழுத, ஆய்வரங்கம் என்னும் பொருள்படும் ‘symposium’ என்னும் சொல்லை திருநாவுக்கரசு பயன்படுத்துகிறார். கைதட்டலுக்காகக் கூடுவது மாநாடு. கருத்துக்களின் சங்கமம் ஆய்வரங்கம். கலைவதற்காகவே கூடுவது மாநாடு!. கூடிக் கலைவது ஆய்வரங்கம்! நீர்க்குமிழிகளின் மாநாடு வாழ்க்கைத் தத்துவத்தை ஆராய்கிறது என்பதை மூலவரும் உணர்ந்திருக்கிறார். உற்சவ மூர்த்தியும் உணர்ந்திருக்கிறார்.

காலாட்படை என்பதை ‘army’s infantry’  என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். காலாட்படை என்பது இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சொல். ‘Infantry battalion’ தற்போது வழக்கத்தில் உள்ள சொல். கண்பூத்தது போல் காலாட்படை வந்ததை That blurs the sight by its parade !  என்று அருமையாக மொழிபெயர்க்கிறார். ‘கண்பூத்தது’ என்பது மரபுத் தொடர;. அதற்கு இணையான ’blurs the sight’ தொடரை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்கிறார்.

பொன்பூத்த வயலெனினும் ஒருவாள் வந்து
பொட்டென்று வரப்புடைத்துப் போகும் நாளில்
விண்பூத்து விழும்காலில்! வாழ்க்கை யென்னும்
வயல்பூத்த நீர்க்குமிழி அதனைப் பேசும்!

என்னும் நான்கு வரிகளை

A Day when bunds are collapsed
Suddenly by a sword
In the fields that, even, yield the gold,
The sky’ll bloom and fall at the feet !
That time the water bubble,
That bloomed in field of Life,
Will speak !

என்று பெயர்த்தெழுகிறார். வசந்தராசன் ‘வரப்பு’ என்றதை நாவுக்கரசர் bunds என்கிறார். விண்புத்து காலில் விழும் மழைத்துளி’ என வசந்தராசன் எழுத, அதனை, ‘The sky’ll bloom and fall at the feet!’ என்று  பெயர்த்தெழுகிறார் அரசு. ஆங்கில மரபும் மொழிபெயர்ப்பு மந்திரமும் கைவந்தவர்க்கே ஒல்லும் அரிய திறன் இது. அடுத்த வரியை இன்னும் அழகாக மொழிபெயர்க்கிறார்.  ‘இத்தகைய அரிய காட்சி நிகழும் பொழுதில் வாழ்க்கையெனும் நீர்க்குமிழி பேசும்’ என்றெழுதுகிறார் ஒரு வரியில் மூலக்கவிதை சொன்னவர். மொழிபெயர்த்தவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

That time the water bubble,
That bloomed in field of Life,
Will speak !

‘வாழ்க்கைக் கழனியில் மலர்ந்த நிகழ்வுகளாகிய நீர்க்குமிழிகள் அதனைப் பேசும்’ என்று மொழிபெயர்க்கிறார். கையில் ஏந்திய கார்த்திகை தீபத்தைக் காற்றால் அணைந்துவிடாமல் பாதுகாப்பாக முற்றத்தில் இறக்கி வைக்கிற ஒரு அடியவளின் முயற்சியை நான் இந்த மொழிபெயர்ப்பில் காணுகிறேன்.

முத்தமிட்டு வாழ்ந்தால்தான் வரலாறாகும்

தாங்க முடியாத வலியின் காரணமாகவும் எதிர்மறை மன அழுத்தங்களின்  காரணமாகவும் நம்மிடத்திலிருந்து வெளிப்ப்டுவது முக்கல். முனகல். பெருமூச்சு!. இந்தப் பண்புகளை நீர்க்குமிழிக்கு ஏற்றி நெட்டிவரும் நெடுமூச்சின் எச்சில்’ என்கிறார் கவிஞர். பொருத்தமான  சொற்களைப் பொறுக்கி எடுத்து, ‘Spittle of lengthened groan sigh என்று எழுதுகிறார் அரசு! ‘காலம் நெய்து வரும் காற்றாடை நூல் முடிச்சு’ என்னும் நுண்ணிய வரியை The Time !  Threaded knot of weaving wind’s robe ! எனக் கவிதையிலக்கணம் மாறாமல் மொழி பெயர்க்கிறார்.

முட்டிவரும் நீர்காற்று இருக்கு மட்டும்
முத்தமிட்டுக் குமிழ்நீரின்பயணம் நீளும்!

என்னும் இரண்டு வரிகளை

“Lengthened will be the travel
Of the water bristle with the kisses
Till the butting moisture air survives ! “

என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘Moisture’ என்பது பனிக்காலத்தில் சன்னலின் கண்ணாடியில் படிந்திருக்குமே சிறிய நீர்த்துளிகள் அவை போன்றவை.  வாழ்க்கைச் சின்னஞ்சிறு கண்ணிகளால் தொடுக்கப்பட்ட மாலை. ஒவ்வொரு கண்ணியிலும் வாழ்வு ஊசலாடுகிறது. அந்த ஊசலாட்டத்தை நிறுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்தால் முழுமையான மாலையின் மணத்தை நுகர முடியும். குடிப்பவன் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால்தானே மகிழ்ச்சியடைகிறான்! இந்த சின்னஞ்சிறு நீர்த்துளிகள் இருக்கிறவரைதான் இந்தக் கோலமும் அழகும். இந்தத் துளிகள் மிகவும் மென்மையானவை. எந்த அளவுக்கு மென்மையானவை என்பதை அடுத்த வரிகளில் சொல்லுகிறார் வசந்தராசன்!

தொட்டுவிட்டால் பட்டென்று உடைந்து போகும்
தோற்றமுடி வெல்லாமே கரைந்து போகும்!”

தொட்டுச் சுருங்கினால் கூட விரித்துக் கொள்ளலாம். ஆனால் வாழ்க்கை தொட்டவுடன் உடைந்துபோகும் நீர்க்குமிழியையொத்தது. இந்தப் பாட்டில் வாழ்க்கையை உவமமாக்கிய நுண்ணியம் இதுதான். வாழ்க்கையின் எந்தக் கூறும் சிதிலத்திற்கு ஆளாகிவிடக் கூடாது, சிறு சலசலப்பும் வாழ்க்கைப் பாதையைப் புரட்டி விடும். ஒரு சிறு ஐயம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும்;. ஒரு சிறு சொல் வாழ்க்கையைச் சிதறடித்துவிடும்.  ஒரு சிறிய நம்பிக்கைத் துரோகம் காலத்திற்கும் கேடு விளைவித்துவிடும். அது போல ஒரு மெல்லிய காற்றின் துகள் பட்டாலே உடைந்து போகும் பனித்துளி என்கிறார் தருமொழிக் கவிஞர். அதனைப் பெறுமொழிக் கவிஞர் எப்படி. மொழிபெயர்க்கிறார் தெரியுமா?

“By the touch, suddenly breaks in sway !
The Origin and End, all melt away! “

தோற்றம் ;முடிவு என்பதற்கு ‘The Origin and End’ என்ற சொற்களை இணைத்துக் கொள்கிறார்.  கரைந்து போகும என்பதை melt away எனச் சொல்லிக் கவிதையின் அடர்த்தியைக் கூட்டுகிறார்.

மொட்டவிழும் நேரம்தான் சருகாய் மாற!
முத்தமிட்டு வாழ்ந்தால்தான் வரலா றாகும்!”

என்னும் இறுதிவரிகளும் பொருள் பொதிந்தவை. வாழ்க்கை உருவெடுக்க நாள் வேண்டும். திங்கள் வேண்டும். ஆண்டுகள் வேண்டும். ஆனால் அதனை முடித்துவைக்க நொடிகள் போதும். அந்த நொடியை மொட்டவிழும் நேரம் என அளவிடுகிறார் மூல ஆசிரியர்.

Time to get transformed as A Dry Leaf
Is nothing but the time
For the bud to spread its leaves !
History, it becomes
Only When Life is lead with kisses !

என்னும் மொழிபெயர்ப்பில் மரபை வெல்ல முடியாமல் மொழிபெயர்ப்பாளர் சிக்கிக் கொள்வதையும காண முடிகிறது. ‘சருகு’ என்பதற்கு ‘dry leaf’ என்னும் மொழிபெயர்ப்பு ஒருசார் பொருளை உணர்த்துகிறதே அன்றி தமிழ் மரபிலிருந்து வெகுதொலைவு சென்றுவிடுவதைக காணலாம். வாழைச்சருகு, வெற்றிலைச் சருகு என்ற அளவில் இந்த மொழி பெயர்ப்பு சரியே. இலையின் பருவங்களுக்கு அது அவ்வளவாகப பொருந்தாது. தமிழில் இலையின் பருவங்கள் அதன் வளர்ச்சி நிலைகளையும் வாழ்வு நிலைகளையும் உணரத்தும். ஆங்கிலத்தில் இயலாது. அது அந்த மொழியின் இயல்பு. அவ்வளவுதான்.  மொழிபெயர்ப்பாளரின் இயலாமை அன்று. இலைக்கு ஒரு பண்படை சேர்த்துச் சொல்ல வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாக இருக்கிறது. ஆனால் இலை வேறு. சருகு வேறு. மொழிபெயர்ப்பாளர் காய்ந்த இலை என்கிறார். காய்ந்த இலை சருகாகாது.  குருத்து. அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு, சருகு, வீ என்னும் இலைபற்றிய பருவ நிலைச் சொற்கள் தமிழில் ஏராளம். மொழி பெயர்ப்பின் தொடக்கம் முதல் (சில பிரகஸ்பதிகள் துவக்கம் என்று எழுதித் தம் புலமையை நிலைநாட்டுவார்கள்) இறுதிவரை மூல ஆசிரியனின் இதயத்தோடும் மொழியோடும் உறவாடியிருக்கிறார். ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று வசந்தராசன் சொல்லியிருப்பாரா?

நிறைவுரை

மொழிபெயர்ப்புக்கு வசப்படாது வசந்தராசன் கவிதை என்றுதான் இது வரை எண்ணிக் கொண்டிருந்தேன்.. காரணம் அவர் எழுதுவதெல்லாம் மரபுக்கவிதை. மரபை அவ்வளவு எளிதில் பெயர்த்தெழுத முடியாது என்பது முன்பே சொல்லப்பட்டது. ஆனால் தம்பி திருநாவுக்கரசு உண்மையான தமிழ்த் தொண்டர் ஆதலின் இதனைக் கைகூட வைத்திருக்கிறார். செறிவு குறையாமல், மையக்கருத்துக்கு மாசு வராமல், பா நயத்திற்குப் பங்கம் வராமல், துணிச்சலோடும் பொறுப்புணர்வோடும் எல்லாவற்றுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புப் பணிக்கு நான் இந்த வயதான காலத்தில் தலைவணங்குகிறேன். ஒரு தமிழன் சக தமிழனுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்குத் தம்பி திருநாவுக்கரசு அமெரிக்காவிலிருந்து செய்முறை விளக்கம் தந்திருக்கிறார். .அதனுடைய விளைவு பாட்டின் பெருமையில் செம்பாதி அவருக்குத் தாய்வீட்டுச் சீதனமாகப் போய்விடுகிறது. பண்பாட்டு வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், இலக்கியப் பெருக்கம், அறிவியல் மேம்பாடு, அரசியல் விழிப்புணர்ச்சி என்னும் மொழி பெயர்ப்பின் பயன்களில் சிலவற்றுக்குத் தம்மாலான பேருதவியைச் செயதிருக்கிறார் அரசு. அரசுக்கும் ஆக்கியோனுக்கும் அடியேன் வணக்கமும் வாழ்த்தும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *