குறளின் கதிர்களாய்…(429)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(429)
ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
-திருக்குறள் -620 (ஆள்வினையுடைமை)
புதுக் கவிதையில்…
தலைவிதி என்று
தயங்கி நிற்காமல்
தளராமல் முழு முயற்சியுடன்
தொடர்ந்து செயலாற்றுவோர்,
விதியையும் புறம்கண்டு
வெற்றி காண்பர்…!
குறும்பாவில்…
விதியையும் புறமுதுகு காட்டச்செய்து
வெற்றியே பெறுவர், சோர்வேதும் கொள்ளாமல்
விடாது முயற்சி செய்பவரே…!
மரபுக் கவிதையில்…
பாரில் மாந்தர் செய்கின்ற
பணிகள் பலதி லதன்பயனை
நேரில் பெறவே விட்டிடாமல்
நிகழும் தடையை விதியென்பர்,
போரி லிதையும் புறங்கண்டே
போற்றும் வகையில் வென்றிடுவர்
பேரில் சோர்வாம் தடைநீக்கிப்
பெரிதும் முயன்றே செய்பவரே…!
லிமரைக்கூ…
செயலில் கொளாமல் தளர்ச்சி
தொடர்ந்தே முயல்வோர் விதியையும் வென்றே
பெறுவர் வாழ்வில் வளர்ச்சி…!
கிராமிய பாணியில்…
செய்யணும் செய்யணும்
மொயற்சி செய்யணும்,
சோம்பல்படாம தொடந்து
மொயற்சி செய்யணும்..
செய்யிற செயலுல
சோம்பல்பட்டு நிக்காம
தீவிரமா தொடந்து
மொயற்சி செய்யிறவன்
தலவிதியயும் தோக்கடிச்சி
வாழ்க்கயில
வெற்றியே பெறுவானே..
அதால
செய்யணும் செய்யணும்
மொயற்சி செய்யணும்,
சோம்பல்படாம தொடந்து
மொயற்சி செய்யணும்…!