குறளின் கதிர்களாய்…(430)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(430)
இன்பத்து ளின்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுத லிலன்.
-திருக்குறள் -629 (இடுக்கண் அழியாமை)
புதுக் கவிதையில்…
இன்பம் வாழ்வில் வருகையில்
அதை
ஈடுபாட்டுடன் மனத்தால் விரும்பி
ஏற்காதவன்,
துன்பம் வரும்போது
அந்தத்
துன்பத்தால்
துவண்டு போவதில்லை…!
குறும்பாவில்…
இன்பம் வருகையில் விரும்பிதை
ஏற்காதவன், வந்திடும் துன்பம் கண்டு
மனமது தளர்ந்தே துன்புறான்…!
மரபுக் கவிதையில்…
வந்திடு மின்பம் வாழ்வினிலே
வகையினில் பலவாய் வருவதுண்டு,
சிந்தையி லதனைக் கொண்டேதான்
சிறப்பென விரும்பி ஏற்காதோன்,
மந்தையாய்த் துன்பம் வந்திடினும்
மனதினி லதனைக் கொள்ளாமல்
தந்திடு மிடரில் தளராதே
தாங்கியே கொள்வான் சமநிலையே…!
லிமரைக்கூ…
வந்தால் வாழ்வில் இன்பம்,
விரும்பியதனை ஏற்காதோன், வருந்தி நிற்பதில்லை
வந்தாலும் வரைபோல் துன்பம்…!
கிராமிய பாணியில்…
இருக்கணும் இருக்கணும்
தளராம இருக்கணும்,
துன்பத்தக் கண்டு
தளராம இருக்கணும்..
ஒலக வாழ்க்கயில
இன்பம் வரும்போது
அத ரெம்ப
விரும்பி ஏத்துக்காம
அதப் பெருசா
எடுத்துக்காதவங் கிட்ட
எவுளவு துன்பம் வந்தாலும்
அவன் தளந்து
வருத்தப்பட்டு நிக்கமாட்டான்..
அதால
இருக்கணும் இருக்கணும்
தளராம இருக்கணும்,
துன்பத்தக் கண்டு
தளராம இருக்கணும்…!