குறளின் கதிர்களாய்…(432)

செண்பக ஜெகதீசன்
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொற்றெரிதல் வல்லார் அகத்து.
-திருக்குறள் -717 (அவையறிதல்)
புதுக் கவிதையில்…
சொல்லும் செற்களைச்
சரியாய்ப் புரிந்தே
அவற்றை
ஆராய்ந்தறிந்திடும்
ஆற்றல் மிக்கோர் நிறைந்த
அவையில்
கல்வி கற்றவர்
ஆற்றும் உரையில்,
அவரது கல்விச்சிறப்பு
அனைவரும் அறிய
ஒளிர்ந்திடும்…!
குறும்பாவில்…
வழுவின்றிச் சொற்களைப் புரிந்தே
ஆராய்வோர் அவையில் கற்றறிந்தார் சொல்லிடும்
சொல்லிலவர் கல்வித்திறன் ஒளிரும்…!
மரபுக் கவிதையில்…
சொல்லிடும் சொற்களைப் புரிந்தவற்றைச்
சொந்தமாய்த் தெளிவுடன் ஆராயும்
வல்லமை மிக்கவர் நிறைந்திருக்கும்
வளமிகு மாந்தரின் அவையினிலே
சொல்லிடும் சொல்லிலே கற்றறிந்தார்
சொல்லதன் திறத்தினால் அன்னவரின்
கல்வியின் சிறப்பெலாம் கண்கூடாய்க்
கண்டிடும் வகையினில் ஒளிர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
சொல்லும் சொற்களைப் புரிந்தே
ஆராய்வோர் அவையில் உரைக்கும் கற்றவரின்
கல்வி ஒளிர்ந்திடும் தெரிந்தே…!
கிராமிய பாணியில்…
பேசணும் பேசணும்
தெரிஞ்சிப் பேசணும்,
பேசுற சபய நல்லாத்
தெரிஞ்சிப் பேசணும்..
சொல்லுற சொல்ல
நல்லாப் புரிஞ்சி ஆராயிற
தெறம உள்ளவுங்க இருக்கிற
சப பாத்துப் பேசுற
படிச்சவனோட
படிப்புத் தெறமயெல்லாம்
பளிச்சிண்ணு
வெளிய தெரியுமே..
அதால
பேசணும் பேசணும்
தெரிஞ்சிப் பேசணும்,
பேசுற சபய நல்லாத்
தெரிஞ்சிப் பேசணும்…!