குறளின் கதிர்களாய்…(446)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(446)
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
– திருக்குறள் – 423 (அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
எப்பொருளை
யார்யாரிடம் கேட்டாலும்;,
அதை
அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்
அதன்
உண்மையான பொருளை
ஆராய்ந்து காண்பதே
அறிவாகும்…!
குறும்பாவில்…
எக்கருத்தை எவர் சொன்னாலும்
ஏற்றிடாமல் அதன் உண்மைப் பயனாராய்ந்து
காண்பதே உண்மையில் அறிவு…!
மரபுக் கவிதையில்…
எந்தப் பொருளைப் பற்றியுமே
எவரும் சொன்ன சொல்லதையே
அந்தப் படியே நம்பியேதான்
அதனை ஏற்றுக் கொள்ளாமல்,
சொந்த மாக ஆராய்ந்தே
சொல்லின் உண்மைப் பயனதனை
எந்த வழியி லானாலும்
எளிதாய்க் காண்ப தறிவாமே…!
லிமரைக்கூ…
எவரோ சொன்னதை ஏற்று
அப்பொருளைக் கொள்ளாததன் உண்மைப் பயனைக்
காண்பதே அறிவெனப் போற்று…!
கிராமிய பாணியில்…
அறிவு அறிவு
அதுதான் அறிவு,
எதயும் நல்லா
அராஞ்சிபாக்கிறது அறிவு..
எதப்பத்தியும் யார்யாரு
என்ன சொல்லுறாங்களோ
அதயே
அப்புடியே ஏத்துககாம,
அதனோட உண்மப் பயன
ஆராஞ்சி காணுறதுதான்
உண்மயில
அறிவுங்கிறது..
தெரிஞ்சிக்கோ,
அறிவு அறிவு
அதுதான் அறிவு,
எதயும் நல்லா
அராஞ்சிபாக்கிறது அறிவு…!