குறளின் கதிர்களாய்…(448)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(448)
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின்.
-திருக்குறள் -497 (இடனறிதல்)
புதுக் கவிதையில்…
செய்யும் செயலின்
வழிமுறைகளைப்
பலவகையாலும் ஆராய்ந்தறிந்தே
தெளிவுடன்
இடைவிடாமல் எண்ணி
இடமறிந்து செய்தால்,
அரசர்க்கு
அஞ்சாமை தவிர
அடுத்தொரு துணையே
அவசியமில்லை…!
குறும்பாவில்…
செயலின் வழிவகைகளை நன்கறிந்தே
தெளிவுடன் எண்ணியிருந்து இடமறிந்து செய்தால்,
அஞ்சாமை தவிர துணைவேண்டாம்…!
மரபுக் கவிதையில்…
செய்யும் செயலைப் பல்வகையில்
செம்மை யாக ஆராய்ந்தே
தொய்வே யின்றி மனத்திலெண்ணி
தொடரத் தக்க இடமறிந்தே
உய்யும் வகையில் செயல்பட்டால்,
உலகை யாளும் வேந்தனுக்கு
மெய்யாம் மனத்தின் உறுதிக்குமேல்
மேலும் துணையே வேண்டாமே…!
லிமரைக்கூ…
செயலைச் செய்வதன் முன்னே
செயல்முறை தெரிந்தே இடமறிந்து செய்தால்,
அஞ்சாமையே அருந்துணை பின்னே…!
கிராமிய பாணியில்…
செய்யணும் செய்யணும்
எதயும் செய்யணும்,
எடமறிஞ்சிதான்
எதயும் செய்யணும்..
செய்யிற செயலோட
வெபரமெல்லாம் நல்லாத் தெரிஞ்சி
மனசில வச்சிக்கிட்டு
செய்யிறதுக்கு ஏத்த எடமறிஞ்சி
செய்யிற ராசாவுக்கு
எதுக்கும் பயமில்லாத
தைரியம் தவிர வேற
தொண வேண்டாமே..
தெரிஞ்சிக்கோ,
செய்யணும் செய்யணும்
எதயும் செய்யணும்,
எடமறிஞ்சிதான்
எதயும் செய்யணும்…!