இசைக்கவியின் காலங்களில் அவன் வசந்தம்
பாஸ்கர்
இன்று இசைக்கவி ரமணன் அவர்களின் காலங்களில் அவன் வசந்தம் கவியரசர் கண்ணதாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இடம் பாரதிய வித்யா பவன், மயிலை.
ரமணன் பேச்சில் வல்லவர். அதுவும் அவர் கவிஞரை கொண்டாடும் விதம் மிக அலாதி. ஒவ்வொருவருக்குள் இருக்கும் கவிஞரை அவர் வெளிக்கொண்டு வரும் விதம் மிக அற்புதம். அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் பாடல்களின் தேர்வும் அதனை பற்றிய ஆராய்ச்சி செய்து அவர் செய்யும் உரை மிக நேர்த்தி.
சில வேலைப்பளு காரணமாக நான் கூட்டத்திற்கு கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் மூத்தவர். கொஞ்சம் உடல் நலம் சரியில்லை போலும். அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். எனக்கு இந்த கொரானா காலத்தில் இப்படி இருமியது கொஞ்சம் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. இந்த மூப்பிலும் உடல் நலம் பாதித்த நிலையிலும் அவர் சிரமம் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தது எனக்கு பெரிய ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி. அவர் இல்லத்திற்கு எப்படி செல்வார் என யோசித்து கொண்டே ரமணனின் பேச்சை ரசித்து கொண்டு இருந்தேன்.
ரமணன் எடுத்து கொண்ட சவாலே சமாளி படப்பாடலை அவர் பாடும்போது என் அருகே அமர்ந்தவர் எந்த அறிமுகமும் அற்றவர், என்னையும் தெரியாதவர் சொன்னார் “இந்த படத்தை எழுபத்தி ஒன்றில் ஒரு கீத்து கோட்டையில் பார்த்தேன். தரை டிக்கெட், முப்பது பைசா என்றார். அன்று படம் பார்த்த உணர்வு அவரிடம் இருந்தது. அவ்வளவு சந்தோஷம்.
அவரும் என்னை போல கவிஞர், கணேசன், விசுவின் ரசிகர் என புரிந்து கொண்டேன். இப்படி எங்கோ சிதறி கிடக்கும் கலை உணர்வையும், ரசனையையும் இணைக்கும் ரமணனின் நிகழ்ச்சி ஒரு பெரும் சந்தோஷம். உடன் அவருடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்திய இளங்கோ குமணன் மேலான ரசனை கொண்டவர். அவரின் ஈடான பேச்சில் கூட்டம் மேன்மை அடைந்தது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் அதற்கு பிறகு இருமியது எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் அளிக்கவில்லை.
ரமணன் அவர்களை இந்த அளவுக்கு வாழ்க்கையில் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒருவரையா குறிப்பிட முடியும்? மிகவும் கொடுத்து வைத்தவர் ரமணன். அவரை விட நாமெல்லாம்.
வாழ்க இசைக்கவி. வளர்க அவரின் தமிழ். என் கண்களுக்கும் செவிகளுக்கும் வெகு நாள் கழித்து நன்றி சொல்ல வைத்த ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
வணக்கம் சார். அடுத்த கூட்டத்தில் சந்திப்போம்.