குறளின் கதிர்களாய்…(455)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(455)
இடுக்கண் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
-திருக்குறள் – 654 (வினைத் தூய்மை)
புதுக் கவிதையில்…
கலங்குதல் இல்லாத
தெளிந்த அறிவுடையோர்
தாம் துன்பத்தில் சிக்கித்
தவிக்க நேரிடினும்,
துன்பமது
தீர்வதற்காகக் கூட
தாழ்ந்த செயல்களைத்
தவறியும் செய்யார்…!
குறும்பாவில்…
நடுக்கமிலாத் தெளிந்த அறிவுடையோர்,
துன்பத்தில் தாம் தவிக்க நேரிடினுமதைத்
தவிர்த்திட இழிசெயல் செய்யார்…!
மரபுக் கவிதையில்…
நடுக்க மென்ப தில்லாதே
நன்கு தெளிந்த அறிவுடையோர்
கெடுக்கும் துன்பம் வந்தபோதும்
கேடாய் நினைத்தே அதனைத்தான்
தடுத்து நிறுத்தும் முயற்சியாகத்
தக்க செயல்கள் செய்கையிலே
எடுத்துச் செய்ய மாட்டாரே
எதிலும் இழிந்த செயல்களையே…!
லிமரைக்கூ…
உடையோர் தெளிந்த அறிவு
ஒருபோதும் செய்யார் வெறுக்கும் இழிசெயலை,
துன்பத்தால் வரினும்மன முறிவு…!
கிராமிய பாணியில்…
செய்யாத செய்யாத
கெட்ட செயலச் செய்யாத,
கேடாத் துன்பம் வந்தாலும்
கெட்ட செயலச் செய்யாத..
கலக்கமில்லாம நல்ல
தெளிஞ்ச அறிவு உள்ளவுங்க
வாழ்க்கயில
துன்பம் வந்தாலும்
அதத் தடுக்க
கெட்ட செயலு எதயும்
செய்யமாட்டார்களே..
அதால
செய்யாத செய்யாத
கெட்ட செயலச் செய்யாத,
கேடாத் துன்பம் வந்தாலும்
கெட்ட செயலச் செய்யாத…!