செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(474)

உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்.

       –திருக்குறள் – 1079 (கயமை)

புதுக் கவிதையில்…

நல்லாடை பிறர் உடுத்துவதையும்
நல்லுணவு உண்பதையும்
காணும் கீழ்மகன்,
அவர் மீது பொறாமை கொண்டு
வேண்டுமென்றே குற்றங்காணும்
ஆற்றல் கொண்டவனாகிறான்…!

குறும்பாவில்…

பிறர் உண்டும் உடுத்தும்
நன்றாயிருப்பதைக் காணும் கீழ்மகன் அவர்மீது
பொறாமையில் குற்றங்காண வல்லவனாகிறான்…!

மரபுக் கவிதையில்…

நல்ல உடைகள் பிறரணிந்து
     நல்ல உணவை உண்பதையே
பொல்லாக் கீழோன் பார்த்ததுமே
     பொறாமை மிகவே கொண்டேதான்
எல்லா நலனும் மறந்தேதான்
     எதற்கும் குற்றம் கண்டிடவே
வல்லோன் ஆகும் குணத்தாலே
     வாழ்வில் கயவன் ஆவானே…!

லிமரைக்கூ…

உண்டும் உடுத்தும் நன்றாய்
இருப்பாரைக் காணும் கீழ்மகன் அவர்மீது
குற்றமே காண்பான் ஒன்றாய்…!

கிராமிய பாணியில்…

வேண்டாம் வேண்டாம்
அந்த கொணம் வேண்டாம்,
அடுத்தவன் மேல பொறாமகொள்ளுற
கயமத்தனம் வேண்டவே வேண்டாம்..

அடுத்தவன்
நல்ல ஒட உடுத்து
நல்ல சாப்பாடு சாப்புடறதப்
பாத்த ஒடனே
கேடுகெட்டவன் கிட்ட
பொறாம எண்ணத்தோட
அடுத்தவங் கிட்ட
குத்தங் காணுற
கயமக்கொணம் வந்திடுதே..

அதால
வேண்டாம் வேண்டாம்
அந்த கொணம் வேண்டாம்,
அடுத்தவன் மேல பொறாமகொள்ளுற
கயமத்தனம் வேண்டவே வேண்டாம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.