செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(477)

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

-திருக்குறள் – 36 (அறன் வலியுறுத்தல்)

புதுக் கவிதையில்…

பிறகு முதுமையில்
பார்த்துக்கொள்ளலாம்
என்று எண்ணாமல்
இன்றே இளமையில்
அறம் செய்ய வேண்டும்,
அதுவே நமது
உடல் அழியும் போதும்
அழியாமல் நமக்கு
உற்ற துணையாகும்…!

குறும்பாவில்…

முதுமையில் செய்யலாமென எண்ணாமல்
இளமையிலேயே அறம்செய்க, அதுவே உடலழிகையில்
அழியாமல் தகுந்த துணையாகும்…!

மரபுக் கவிதையில்…

தளரும் முதுமைக் காலத்தில்
தனியே செய்ய எண்ணாமல்
வளரும் இளமை வயதினிலே
வாழ்வில் அறத்தைச் செய்திடுவாய்,
தளர்ந்தே உடலும் அழிகின்ற
தள்ளா வயதுக் காலத்திலும்
உளதாய் அறமே அழியாமல்
உனக்கே உற்ற துணைவருமே…!

லிமரைக்கூ…

இலையேயதும் அறத்துக் கிணையே,
இதைச்செய் இளமையிலே, உடல்போலது அழியாமல்
உனக்காகும் உற்ற துணையே…!

கிராமிய பாணியில்…

பாக்காத பாக்காத
காலநேரம் பாக்காத,
வாழ்க்கயில அறஞ்செய்ய
காலநேரம் பாக்காத..

வயசான காலத்தில
பாத்துக்கலாமுண்ணு நெனச்சி
வாழ்க்கைக்கு நல்லதான
அறஞ்செய்ய மறக்காத,
அது நம்ம
ஒடம்பு அழியும்போதும் அழியாம
நமக்கு
நல்ல தொணயா இருக்குமே..

அதால
பாக்காத பாக்காத
காலநேரம் பாக்காத,
வாழ்க்கயில அறஞ்செய்ய
காலநேரம் பாக்காத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.