வணிகர் வீரம் உரைக்கும் கல்வெட்டுகள்

0

சேசாத்திரி ஸ்ரீதரன்

பண்டைய காலத்தில் எல்லாப் பொருளும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை என்பதால் செல்வர்களும் அரசர்களும் பொருள் கிடைக்கும் இடத்திற்கு ஆளை அனுப்பி பொருளை தருவித்துக் கொண்டனர். பொருள் கொண்டு வந்து கொடுக்கும் ஆளை  “அர்ஈதன்” இதாவது, பொருள் கொண்டு போய் கொடுப்பவன் (delivery man) என்றனர். இந்த அர்ஈதன்கள் (அர் – பொருள்; ஈதன் – கொடுப்பவன்) கால ஓட்டத்தில் தாமே பொருள்களை கிடைக்கும் இடத்தில் வாங்கி தேவைப்படுவோருக்கு இன்னொரு பொருளுக்கு மாற்றாக விற்று வந்தனர். இவ்வாறான வினையில் ஈடுபட்டோர் இதனால் வணிகர் எனப்பட்டனர். தமிழ் பிராமி கல்வெட்டுகள் “அரிதன்” என்று குறிப்பது பொருள் கொண்டு போய் கொடுப்பவர்களையே ஆகும். இந்த வணிகரால் செல்வர், அரசர் மட்டும் இன்றி இனி எளிய மக்களும் தொலைவில் கிடைக்கும் பொருள்களை எளிதில் வாங்கி நுகர முடிந்தது. இப்படி ஒரு இடை மனிதராக (middle man) உருவானவரே வணிகர். அர்ஈதனாக இருந்த போது கொண்டு கொடுப்பதற்கு கூலி மட்டுமே பெற முடிந்தது ஆனால் வணிகர் ஆன போது செல்வச் செழிப்பில் மிதந்தனர். வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. ஆனால் அவர் தொழிலுக்கு கேடாக ஆறலைக் (ஆறு – வழி, அலை – திரியும்) கள்வர் என்னும் வடிவில் நாட்டுக் கிழார்கள் (knight), வேள் (duke) என்னும் அரசர்கள் வணிகரைக் கொன்று அவர் பொருளைக் கவர்ந்து கொண்டனர். இதனால் தம் உயிரையும் பொருளையும் காக்க வணிகர் குழுவாக செயற்பட்டு தமக்கென ஒரு தனி படையையே (private army) கட்டிப் பேணினர். இதற்கு ஆகும் செலவை வணிகர் குழுக்கள் பகிர்ந்து கொண்டன. இதற்கு சான்றாக வணிகர் பலர் போர் வீரராக உயிர் நீத்த வரலாறு கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. இத்தகைய வணிகர் படையை வேந்தர்களும் அவ்வப்போது கூலிப்படையாக துணை கொண்டுள்ளனர். இப்படி வணிக வீரர் ஈட்டித் தந்த வெற்றிக்கு கைமாறாக எட்டி, காவிதி ஆகிய பட்டங்களை வேந்தர் வணிகருக்கு வழங்கினர். எட்டி என்ற உயர்ந்தோன் என்ற சொல் பின்பு சகர முன்மிகை பெற்று “செட்டி” ஆனது. இனி வணிகர் குறித்த கல்வெட்டுகளுக்கு விளக்கம்.

திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டம் ஏழுமலை என்னும் ஏலகிரி குண்ட்ரெட்டியூர் மலைச்சரிவில் உள்ள தென்னந்தோப்பில் காணப்படும் 6 வரி & 16 வரி நடுகல் கல்வெட்டுகள்

 1. சகரை யாண்டு தொள்ளாயிர தொ
 2. ன்றாவதில் மிலாட்டு பாகனூருடைய ப 
 3. கழன் சாத்த பிரானாகி காவூர் செட்டி 
 4. எருமைத் தொறுக்  கொள பூ 
 5.  _ _ _  கைக்க
 6. ளன் பட்டார் 

சாத்த பிரான் – வணிகர் தலைவன்; தொறு – மந்தை;

விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. மிலாடு நாட்டின் பாகனூருடைய புகழன் வணிகர் தலைவனாகிட (சாத்த பிரான்) அவனது ஆள் காவூரில் வாழும் செட்டி எருமை மந்தையை கொள்ளையிட அப்போது நடந்த பூசலில் கைக்களன் வீர சாவடைந்தான்.  அவனுக்கு இந்நடுகல் நடப்பட்டது. தொடக்கத்தில் தமக்கென படை பேணிய செட்டிகள் பின்பு இடையில் அரசர் நிதி உதவியின்மையால் பிறர் செல்வங்களைக் கவர ஆறலை கள்வர்கள் போல செயற்பட்டது இதில்  தெரிகிறது.    

ஸ்ரீ சகர யா / ண்டு தொள் / ளாயிர / த்து ஒன்றா / வது எயிலு / டைய மாணிக் / க சட்டன் துக்/ கையனாகி   பி / ருதி ராமசெட் / டி தம்பி  குண / ராமனாகிய  எரி / யும் வீரசெட்டி ஐ / யம் புழுகூர் நாட் / டு எருமை தொறுக் / கொள்ள _ __ / ம் மெதிச்சுமாந்  

விளக்கம்: 10 ஆம் நூற்றாண்டு 979 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. மேலை கங்கர் – சோழரிடையே போரின் காரணமாக இப்பகுதி அவ்வப்போது ஆட்சி மாறி இருக்க வேண்டும் போல தோன்றுகிறது. இதனால் வேந்தர் பெயர் குறிக்காமல் சக ஆண்டு 901 என்று குறிக்கப்பட்டது. எயில் நாட்டு மாணிக்கச் சட்டன் துக்கையனாகிய போது பிருதி ராம செட்டியின் தம்பி குணராமனாகிய சினம் கொண்ட (எரியும்) வீர செட்டி ஐம்புழுகூர் நாட்டின் (வாணியன்பாடி) எருமை மந்தையைக்  கொள்ளையிட மெதிச்சுமான் என்பவன் வீர சாவடைந்துள்ளான். 

பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும், தொகுதி I  பக்கம் 286 & 287. ஆசிரியர்: ச. கிருஷ்ணமூர்த்தி. வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்ன சமுத்திரம் மலையடிவாரத்தில் உள்ள மலையதிம்மன் கோயில் 9 வரிக் கல்வெட்டு

 1. சுவஸ்திஸிரி மனை_ _ _ த்த _ _ _ [கை]  
 2. சுரப்பாலமரசர் மகந் துக்கமரசர்கள் 
 3. உலோக்கமாணிக்க செட்டி கூ _ _ _ 
 4. முக்கித் தட்ட மினயர்த் தம்பி உலோ 
 5. க்கமாணிக்க செட்டி தன் அள பூசல் 
 6. போகி அளவை காத்து அமை
 7. கிலந் திரிகிலந்  முனைகிலந்
 8. அணிகிலந் இ[வீர]ங் கவா 
 9. லை 

கூ(டு கு)முக்கி – மூங்கில் கூட்டை உடைத்து; தட்ட – கவர; அள – உப்பு; அமைகில் – அமராமல்; திரிகில் – நடமாடாமல்; முனைகில் – முயலாமல்; அணிகில் – மாற்று உடை பூணாமல்; கவா – இரண்டு குன்றுகள் கூடும் கவடு; ஆலை – கோவில் 

விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. அரசர் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. கைசுரப்பாலமரசர் மகன், துக்கமரசர்கள் ஆகியோர் உலோக மாணிக்க செட்டியின் உப்பு சேமித்த மூங்கில் கூடையை உடைத்து உப்பைக் கவர்ந்து கொண்டு போக  மீனவர்த் தம்பி  உலோகமாணிக்க செட்டி தன் உப்பை மீட்க சண்டையில் போய் உப்பை மீட்டுக் காத்து தனக்கு மருத்துவம் கூட மேற்கொள்ளாமல் உட்காராமல், எங்கும் நகராமல், முனைப்பு ஏதும் காட்டாமல், மாற்று உடை அணியாமல் அப்படியே இருந்தபடி இருந்து இறந்து போனான். இந்த வீரனுக்கு மலை கூடும் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது.

“மீனவர் தம்பி” என்பது  மினயைர்த் தம்பி என்று பிழையாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. அச்சாகும் முன் இன்னொருவரை கொண்டு பிழை சரிபார்த்த பின் அச்சுக்கு அனுப்ப வேண்டும். உப்பு வணிகம் மீனவரே மேற்கொள்வது என்பதை வைத்து பிழையை ஊகிக்க முடிந்தது. உலோக மாணிக்கம் மீனவச் செட்டியார் ஆவான். உப்பு வணிகர் கடற்கரையில் இருந்து நெடுந்தொலைவு சென்று கிருஷ்ணகிரியில் உப்பு விற்றதற்கு இக்கல்வெட்டு சான்றாகிறது.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், பக்கம்  48

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் 7 வரி நடுகல் கல்வெட்டு

 1. ஸ்ரீ சிவமார பருமற்கு யாண்டு நாற்பத்தே 
 2. ழாவது கந்த வாணதி அரைசரு புறமலை நாடா
 3. ள அவர் மகனார் தெளிய நி[ஒ]ஆர் சேவகர் வாணிக
 4. ச்  சடைனார் வெட்டக்கியார் கூடல் [வந்துவிட] அவர் 
 5. மே ஆனயா
 6. டி நின்று செ
 7. ன்று பட்டார்   

சேவகர் – படைத் தலைவர்;  ஆடி – போரிட்டு; நின்று – நிறுத்திவிட்டு

விளக்கம்: மேலை கங்க வேந்தன் முதலாம் சிவமாரனின் 47 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 726 இல் அவருக்கு அடங்கி புறமலை நாட்டை கந்த வாண அரசர் ஆண்டு கொண்டிருந்த போது அவரது மகன் தெளிய நி[ஒ]ஆரின் படைத் தலைவர் வாணிகச் சடையனார் அரசன் வெட்டக்கியார் கூடல் ஊர் மீது படையெடுத்து வந்துவிட அவர் மேல் யானை மீது போர் புரிந்து நிறுத்திவிட்டு இளைப்பாறி பின் மீண்டும் போருக்கு சென்று வீரச்சாவடைந்தான் வாணிகச் சடையன். படைத் தலைவரான வணிகர்  சடையனார் வாணர் சார்பில் யானை மீது ஏறி போரிட்டுள்ளார் என்பது அவர் யானை ஏற்றப் போரில் நல்ல பயிற்சி பெற்றவர் என்பதை உணர்த்துகிறது.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 7. எண் 1973 /  47

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் எல்காம் வலசு என்னும் ஊரில் கிட்டிய 13 வரிக் கல்வெட்டு இப்போது கோவை அகழ்வைப்பகத்தில் உள்ளது.

 1. ஸ்வஸ்திஸ்ரீ  தெந் க
 2. ரை நாட்டு நீலம்
 3.  பேரூர் னானாதேசி 
 4. திசை மடி எறி
 5.  யூர் எறிவீரபட்ட
 6. ணக் கல். அஞ்சு 
 7. கரை நாடும் 
 8. அடிக்கீழ் தளமு
 9. ம்  பதினெண்  வி
 10. ஷயமும் எம்மி
 11. லிசைந்தபடி மீதளத்தில்  நாலுவாசலி 
 12. ல் பட்டயார் வசம் நாலு காலும் சிங்காத
 13. னமும் உடையாராக 

எறிவீர பட்டணம் – காவல் வீரருக்கு சிறப்பு உரிமை தந்து தங்குவதற்கான மனை கொண்ட வணிகர் ஊர்; மீதளம் – மேல் தளம், கண்காணிக்கும் கோபுரம்; நான்கு கால் – நான்கு சாவடி; பட்டாயர் – படை நோட்டகர்;  

விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு என கருதப்படுகிறது. அரசர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லாத வணிகர் உடன்படிக்கைக் கல்வெட்டு. தென்கரை நாட்டு (தாராபுரம்) நீலம் பேரூரில் உள்ள நானா தேசிக வணிகரும் திசை ஆயிரத்து  ஐந்நூற்றுவரும் மடிஎறியூரில் நிறுத்திய காவல் வீரருக்கான தங்கும் மனையின் உடன்படிக்கைக்  கல்வெட்டு. ஐந்துக்கரை நாட்டு வணிகரும் அடிக்கீழ்த்தள வணிகரும் பதினெண் விஷயக் குழு வணிகரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின்படி கண்காணிப்பு கோபுரத்தில் நான்கு வாசலில் நிற்கும் படை நோட்டகர் வசம் நான்கு சாவடியும் சிம்மாசனத்தையும் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைப்பதாக உடன்பட்டனர். பல வணிகர் குழுக்கள் நிதி பங்களிப்பதால் இந்த உடன்பாடு தேவைப்பட்டது போலும்.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, திருப்பூர் மாவட்ட கல்வெட்டுகள், பக்: 142 – 143

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கடத்தூர் ஊரில் அமைந்த மருதீசர் கோவில் கோபுர வாசல் இடது நிலைக் காலில் உள்ள 11 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்தி ஸ்ரீ  வீர 
 2. ராஜேந்திர தேவற்கு 
 3. யாண்டு பத்தாவ
 4. து கடற்றூர் வெ
 5. ள்ளாந் கள்ளந் ப
 6. றையந் நரவீரகே
 7. ரழச் சிலை செட்டி 
 8. இட்ட திருநிலை வாய் 
 9. முகவணை உ
 10. த்தரமும் திருக்க
 11. தவும் இட்டேந்   

திருநிலை – கதவு நிலை; முகவணை – முகப்பு; உத்தரம் – விட்டம்  

விளக்கம்: கொங்குச் சோழன் வீரராசேந்திரனின் 10 ஆம் ஆட்சி  ஆண்டு கி.பி. 1217 இல் கடத்தூர் மருதீசர் கோவில் நுழைவாயிலுக்கு கதவுத்  திருநிலைகள், வாயில் முகப்பு, விட்டம், கதவு ஆகியனவற்றை வெள்ளாளன், கள்ளன், பறையன், நர வீரகேரள சிலை செட்டி ஆகிய நால்வரும் செய்வதற்கு வேண்டிய பெரும் பொருள் உதவியும் பண உதவியும் நல்கினர். நான் அவற்றை செதுக்கிப் பொருத்தினேன் என்கிறார் சிற்பி. வெள்ளாளன், பறையன், கள்ளன், செட்டி ஆகிய நால்வரும் வணிகருடைய தனிப் படையில் (private army) இருந்ததால் நால்வரும் சேர்ந்து இந்த திருவாசலை கட்டியுள்ளனர். கட்டி முடிந்த பின் கோவில் உள்ளே சென்று சாமி கும்பிட்டுள்ளனர். இதனால் பறையர் தீண்டாமை அப்போது இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர முடிகிறது. மனுஸ்மிரிதிப்படி போர்த் தொழில் சத்திரியருக்கு மட்டுமே உரியது. ஆனால் அதை மீறி வணிகர் போரில் ஈடுபட்டதோடு அல்லாமல் அவர்ணரான பறையரையும் போரில் ஈடுபடுத்தி மனுஸ்மிருதியை அவமதித்துள்ளனர். அதே போல தமக்கு தராத உரிமையை மீறிப் போர்த்  தொழிலில் ஈடுபட்டு பறையரும் மனுஸ்மிருதியை அவமதிதுள்ளனர். அட என்ன இது இங்கே மனுஸ்மிருதியையே  வர்ணாசிரமத்தையே காணோமே? எங்கே ஓயாமல் மனுஸ்மிருதியை வசைபாடும் இந்த தலித்தியர், திராவிடர், கம்யூனிஸ்டுகள் இந்த விதிமீறலுக்கு விடைசொல்ல வருவாரா?

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்புத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -I, பக்கம் 190

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சுல்தானிப்பாடி (நரிப்பள்ளி) ஊரில் தனியார் கொள்ளையில் உள்ள 13 வரி நடுகல்

 _ _ _ / னார் மீய் / கொன்றை நாட்டு / மைற்றம்பள்ளி / மாம்கோடு பெரு / மக்கள் பறைகட் / டியாரு  பாப்பம் / பாடி எறிந் / து தொறு கொண்ட ஞான்று  / வாண இரவஞ்சி / பட்டான் / கொற்றன் காடன் / (நடுவித்த) கல்  

விளக்கம்:  பல்லவன் சிம்மவிஷ்ணுவின் மூன்றாம் ஆட்சி ஆண்டு கி.பி. 557 இல் (தருமபுரி கல்வெட்டுகள் தொகுதி  I எண் 1974/63 பக். 19 இதே செய்தியை கூறுவதில் இருந்து அறிந்தது). மேல் கொன்றை நாட்டின் மைற்றம்பள்ளி மாங்கோடு ஊரில் உள்ள பறை கட்டியார் பாப்பம்பாடியை அழித்து கால்நடை மந்தையை கவர்ந்து சென்ற போது அப்போரில் வாண இரவஞ்சி என்பவன் வீர சாவடைந்தான். அவனுக்கு கொற்றன் காடன் நடுகல் நட்டுவித்தான். கட்டி என்பது கங்கருடைய பட்டப்பெயர். அதை ஊர் தலைவனான பறையன் ஒருவன் இங்கே தாங்கி உள்ளான். மேற்கண்ட கல்வெட்டிற்கு சான்றாக பறையர் தொறு பூசலில், போரில் பங்கு கொண்டது.

பார்வை நூல்: பண்டைய தமிழ்ச் செவ்விலக்கியங்களும் நடுகற்களும், ர. பூங்குன்றன், பக்கம் 180 செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வெளியீடு.  

தருமபுரி மாவட்டம் பால்வாடி ஊரின் கிழக்கேயுள்ள வேடியப்பன் கோயில் 2 வரிக் கல்வெட்டு

ஸ்ரீ தகடூர் படையு ளெறிந்து /  பட்டார் பரைகளியனார் கல்  

விளக்கம்:  இது வேந்தன் பெயர் குறிப்பில்லாத 8 ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு. இது கால்நடைகளை கொள்ளையிட்ட சண்டை அல்ல, மாறாக தகடூர் படையுள் சீறிப்பாய்ந்து பகைவரை வெட்டி வீரசாவடைந்த பறையன் களியனின் நினைவில் நட்டுவித்த கல். பறையர் போரில் பங்குகொண்ட பதிவுடைய அரியதான கல்வெட்டுகளில் இதுவும் ஒன்று. 

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தருமபுரி  மாவட்ட கல்வெட்டுகள், எண் 1973/127

மன்னராட்சி என்றாலே பாகுபாடு (discrimination) தான். ஒரே படைத் துறையில் பணியாற்றிய பறையருக்கு பள்ளரைக் காட்டிலும் கூடுதல் சலுகைகள், சமூக உரிமைகள். இதனால் சில நூற்றாண்டுகள் கழித்து பறையருக்கும் பள்ளருக்கும் இடையே பிணக்கு, சச்சரவு மேலெழுந்தது. அதை காஞ்சிபுரத்திற்கு போய் கல்வெட்டு பார்த்து தெளிவுபடுத்திக் கொண்டனர். அதே போல பட்டடை (படைக்) குடிகளான கைக்கோளர், வாணியர் இடையே இந்த சலுகைகள், சமூக உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. வாணியர் உடைத்த சலுகைக் கல்வெட்டை கைக்கோளர் மீண்டும் கல்வெட்டாக வெட்டிக் கொண்டனர். இது ஏனென்றால் அவரவர் இயலுமைக்கு தக்கபடி வாழலாம் என்று மன்னர்கள் உரிமை தரவில்லை என்பதால் தான். மன்னர்கள் இப்படி ஏற்படுத்திய படைத்துறைப் பாகுபாடு மன்னராட்சி ஒழிந்த பின்னும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை நிலைப்படுத்தி விட்டது. நிலவுடைமை சாதிகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே நிலவும் இன்றைய சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு மன்னராட்சியில் இருந்த பாகுபடுத்திய சலுகைகளே, சமூக உரிமைகளே காரணமாக உள்ளன. ஆனால் மன்னர்கள் ஏற்படுத்திய இந்த ஏற்றத் தாழ்வை இந்து மதம் தான் ஏற்படுத்தியது, சனாதன தர்மம் தான் ஏற்படுத்தியது, வர்ணாசிரம  மனுஸ்மிருதி தான் ஏற்படுத்தியது, பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்று அரசியலார் பொய் புகட்டி வெறுப்பை வளர்த்துவிட்டுள்ளனர் குறிப்பாக திராவிடர், தலித்தியர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றோர். இவர்கள் ஏன் ஆண்ட பரம்பரை என்போரை இதற்கு பொறுப்பாக்கவில்லை? கொங்குநாட்டில் இந்த தனி சலுகைகள், உரிமைகள் குறித்த கல்வெட்டுகள் ஆங்காங்கே அறியப்பட்டுள்ளன. கீழே அத்தகையதோர் கல்வெட்டு.
https://www.vallamai.com/?p=90405

https://www.vallamai.com/?p=109402

கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் அவிநாசியில் கருணாம்பிகை  கோயில் அர்த்த மண்டப வடக்கு சுவரில் உள்ள  19 வரிக் கல்வெட்டு 

 1. ஸ்வஸ்திஸ்ரீ  திரிபுவந சக்கரவர்த்தி கோநேரிந்மை  கொண்
 2. டாந்  வட பரிசார நாட்டிற் பாப்பார் சாந்றாற்கு நம்மோலை குடு
 3. த்தபடியாவது இவர்கள்  நம் சரக்குக்குப் பொருள் வைத்தமை
 4. யில் இவர்களுக்கு நாம் குடுத்த வரிசையாவது மேலே
 5. ற்றமுந் துலாகமுங் கிழேற்றங் குதிரையிந் தழையுஞ் 
 6. சீனக்குடையுஞ் சேகண்டியும் பெற்று வருவார்களாக 
 7. வும்  மைச்சுக்கு சாந்திடப் பெறுவார்களாகவும் இரட்டை
 8. த்தலைக் கடைக்குக் கோற்  கட்டிக் கொள்ளப் பெறுவார்
 9. களாகவும்  படைக் கணிக்கு ஆரம் பூணப் பெறுவார்களாகவு
 10. ம் பச்சைப்பிடாம் போர்க்கப் பெறுவார்களாகவும் தங்
 11. கள்  மக்களுக்குப் பொந்நிந்  காறைக் கட்டப் பெறுவார்களா
 12. கவும் கல்லியாணத்துக்கு கட்டணங் கட்டி ஏறி ஊர்  
 13. சூழப்  பெறுவார்களாகவும். இவ்வரிசைகள்  இவர்கள் மக்கள் 
 14. மக்களுக்கு சந்திராதித்தவரை  செல்வதாகவும் இப்படி 
 15. செம்பிலுஞ் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் பெறுவார்களா
 16. கவும் நம்மோலை குடுத்தோம். இவை எல்லாம் வல்ல சோ
 17. ழ  மூவேந்த வேளாந் எழுத்து. யாண்டு பதிநஞ்சாவது  
 18. நாள் முந்நூற்றிருபத்திரண்டில். இப்படிக்கு வாண
 19. ராய தேவந் எழுத்து.          

சான்றார் – அறவோர்; சரக்கு – கருவூலம்; வரிசை – சலுகை, உரிமை; மேலேற்றம் – மேலே சாயும்;  துலாகம் – ஏற்ற ஏணி, picotah; கிழ்ஏற்ற குதிரை – சேணத்தில் ஏறாத குதிரை; தழை – மயில்தோகை விசிறி; மைச்சு – சுவர்; கடைக்கோல் – இணைக்கும் கோல்; படைக்கணி – படுக்கும் கட்டிலின் கால், தலை தடுப்பு பலகைக்கு அழகிய பித்தளை,மரச் செதுக்கலை அணிவிக்கலாம்; பச்சைப்பிடாம் – போர்வை ; பொன் காறை – பொன் கழுத்தணி; கட்டணம் – சுமந்திடும் தோளி (doolie)

விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராசேந்திரனின் 15 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1222 இல் 322 ஆம் நாளில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. வடபரிசார நாட்டுப் (அவிநாசி) பார்ப்பனரான சான்றோர்க்கு சலுகைகள், உரிமைகள் அளிப்பதை இது சுட்டுகிறது. “இந்த பார்ப்பனர் என் கருவூலத்திற்கு பொருளாக வரி கட்டியதால் இவர்கள் பாசனத்திற்கு மேலாக சாயும் ஏற்ற ஏணியையும் (picotah), சேணத்தில் உட்காராத ஆனால் வண்டி இழுக்கும் குதிரையையும், பீலிவிசிறியும் சீனப்பட்டுக் குடையும், நன்மை தீமைகளுக்கு சேகண்டி இசையும் பயன்படுத்தலாம். சுவற்றுக்கு சுண்ணம் பூசிக்  கொள்ளலாம். இரட்டைக் கதவு வைத்து அதற்கு அடைக்கும் கோல் இடலாம். படுக்கும் கட்டிலில் தலைப்புறம் கால் புறம் உள்ள தடுப்பில் ஒப்பணையான பித்தளை, மர வடிப்புகளை பொருத்திக் கொள்ளலாம். பச்சைப்  போர்வை போர்த்திக் கொள்ளலாம். தம் பிள்ளைகளுக்கு பொன் கழுத்தணி அணிவிக்கலாம். திருமணத்தின் போது தோளி (doolie) கட்டி ஏறி ஊர்வலம் வரலாம். இந்த சலுகைகள், உரிமைகள் யாவும் இவர்தம் பிள்ளை, பேரப் பிள்ளை என்று தலைமுறை தலைமுறையாக சந்திர சூரியன் நிலைக்கும் காலம் வரை அனுபவிக்கலாம் என்பதை கல்வெட்டிலும் செப்பேட்டிலும் ஆவணமாக எழுதிக் கொள்ளலாம்” என்று ஆணை ஓலை கொடுத்தேன். இவை அனைத்தும் வல்ல சோழ மூவேந்த வேளாண் ஒப்புதல் எழுத்து. இப்படிக்கு வாணதேவ ராயன் ஒப்புதல் எழுத்து.

இதன் மூலம் இந்த உரிமைகள் இதற்கு முன் பிராமணர்களுக்கு  வழங்கப்பட்டிருக்கவில்லை என்று அறிய முடிகிறது. இந்த உரிமைகள் படைத்தலைவர்கள், அரசர்கள் குடும்பத்தாருக்கு மட்டுமே இருந்து மெல்ல மெல்ல பிற சாதிகளுக்கு வழங்கப்பட்டு பொது மக்களுக்கு பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது.  இப்படி வரி கட்டுவோருக்கு மட்டுமே சலுகை, உரிமை அப்படி காட்டாதவருக்கு ஏதும் இல்லை என்பது ஒரே சாதியில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும் அல்லவா? வரி கட்டாதவரால் இந்த ஏற்பாட்டில் இயன்ற சிறு சலுகையை கூட அனுபவிக்க முடியாது. இதனால் Military rank order இல் உள்ள ஏற்ற தாழ்வை அப்படியே சமூகத்திலும் பரவவிட்டு விட்டது இந்த சலுகை என்ற முடிவிற்கே வரமுடிகிறது. கொங்கு நாட்டில் தான் இந்த நிலை என்று இல்லை சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் இதே சமூக ஏற்ற தாழ்வு தான் நிலவி இருந்திருக்க வேண்டும். கொங்கு நாட்டை பல்லவர், மேலை கங்கர் ஆகியோர் கொங்கு சோழருக்கு முன் ஆண்டுள்ளனர். அவர் நாட்டில் இந்த உரிமைகள் முன்னமே இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் இந்த உரிமையை அவர் ஆட்சியிலேயே வழங்கி இருப்பர். எனவே தொண்டை நாட்டிலும் கன்னட நாட்டிலும் கூட இந்த சலுகைகள் உரிமைகள் மக்களுக்கு இருந்திருக்கவில்லை.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-I, பக்: 5 – 6.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் வாகீசுவரர் கோவில் தென் சுவர் 6 வரிக் கல்வெட்டு

 1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகல லோகச்சக்ரவத்தி இராசநாராயணன் வேப்பூர் உடையார்  வாகீஸ்வரம்  உடைய நாயனார் கோவில்த் தானத்தார்க்கு இன்னாயநார்க்கு ஆறாவது  
 2. ஆடி மாதம் முதல் திருமடை விளாகமாக சக்கிலி வாய்க்காலுக்கு வடக்கு மேற்பாற்கெல்லை  இவ்வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை  ஐய்யனுக்கு வாய்த்த விழுப்பரையன் வீடும் இத்தெரு
 3. வும் விட்ட கீழ்பாற்கு எல்லை பிடாரி கோயிலுக்கு மேற்கு இந்த நான்கு எல்லைக்கு  வுட்பட்ட நிலத்தில் ஏறும் பல காசாயக்குடி ஆன செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள் செக்குக்குடி மக்கள் [மக்]கள்  மற்றும் ஏறும் பல 
 4. குடிகளுக்கும் செட்டிகள், கைக்கோளர்,  வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் இவர்கள் பேரால் பேர்க்கடமை, செக்குக்கடமை, தறிக்கடமை, நூலாயம், பட்டடை ஆயம், கற்றவட ஆயம் திருவிளக்கு மன்றாடிகள் பேர்க்கடமை,  பள்ளிகள் பேரால் விலைப்பண
 5. ம்  மற்றும் இப்பற்றில் கொள்ளும் ஆயமும் பல வரிகளும் சூல வரியும் பல உபாதியும் உட்பட ஸர்வ மாந்ய இறைஇலி ஆக சந்த்ராதித்தவரையும்  செல்ல பூசைக்கும் திருப்பணிக்கும் குடிஏற்றிக்  கொண்டு இன்னான்கு எல்லைக்கும் திரிச்சூல ஸ்தாபநம் பண்ணி கல்லிலும் செம்பிலும் 
 6. வெட்டிக் கொள்ளச் சொன்னோம். இன்னாள் முதல் இப்படி செய்து  ஸ்ரீ மாஹேஸ்வர ரக்ஷை  

விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு வண வேந்தர் இராசநாராயண சம்புவராயர் ஆட்சியில் வேப்பூர் வாகீசுவரர் கோவில் பொறுப்பாளர்களுக்கு நேரடியாக வேந்தனால் வழங்கப்பட இறையிலி அறிவிக்கை. வேப்பூர் வாகீசுவரருக்கு ஆடி மதம் ஆறாம் நாள் முதல் கோவிலை சூழ்ந்து குடியிருப்பு இடமாக ஆக்கிட சக்கிலி வாய்க்காலுக்கு வடமேற்கு பக்க எல்லையில் இந்த வாய்க்காலுக்கு கிழக்கும் வட பக்க எல்லையில் இறைவனுக்கு வாய்த்த விழுப்பரையனுக்கு வீட்டையும் அந்த தெருவைக்க கடந்து கிழக்கு பக்க எல்லையில் உள்ள பிடாரி கோவிலுக்கு மேற்கு வரையான இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் குடியேறும் பல்வகை காசாக வரி செலுத்தும் குடிகளான செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள் குடியேறும் பல பிற மக்களில் செட்டிகள், கைக்கோளர், வாணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடி, செக்குக்குடி மக்கள்  தரும் குடும்ப வரி, செக்கு வரி, தறிவரி, நூல் வரி, படை வரி, தென்னங்கயிறு வரி, கோயிலுக்கு நெய் தரும் இடையர் குடும்ப வரி, உழவர் குடும்ப விலைப்பணம், மேலும் இந்த ஊரில் வரும் பல வரிகள், சூலவரி, உபாதியும் சேர்த்து முழு மானிய இறையிலி ஆக சந்திர சூரியன் நிலைக்கும் வரை தொடர கோவில் பூசைக்கும்  விழாக்களுக்குக்கும் வேண்டி குடியேற்றிக்கொண்டு இந்த நான்கு  எல்லைக்கும் திரிசூலக்கல் நாட்டி இந்த ஆணையை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளலாம். இந்த நாள் முதல் இதை செய்து காப்பது மாகேசுவரர் கடமை ஆகும். இக்கல்வெட்டால் வேப்பூரில் செட்டியார்களின் குடியேற்ற ஊர் அமைந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.

பார்வை நூல்: த நா தொ து வெளியீடு, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXI வேலூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி III பக். 54 – 55

நாமக்கல்  மாவட்டம் ராசிபுரம் பெருமாள் கோவில் முன்னுள்ள 22 வரிக் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ சகலகு / லம் வை / த்த கோ / இராஜ இரா / ச தேவற் / கு 14 வது / ஐப்பசி மாதம் 13 திய / தி  பல மண்டலத்து வீ / ர பெரு நிரவியாரோம் / இராசிபுரத்து ஊர் மன் / றத்து இவ்வூர் நகரத்தா / கு சமஸ்த சகல / சந்திராத்தித்தியம் உரித்தா / வதாக  வீரப்பட்டின / க்கல்ந் நாட்டிக்கு / டுத்தோம் பல / மண்டலத்து வீ / ர பெருநிரவியோ / ரோம் இது பல ம / ண்டலத்து நிர / வியார் /ரக்ஷை  

விளக்கம்: எல்லாக் குலமும் வாழ வைத்த மூன்றாம் இராசராச சோழனின் 14 ஆவது ஆட்சி ஆண்டு 1230 இல் வெட்டிய கல்வெட்டு இது. ஐப்பசி  13 ஆம் தியதி பல மண்டலத்து வீர வணிகர் பெருங் குழுவினர் (நிரவி – merchant guild) இராசிபுரத்தில் ஒன்று கூடி இந்த ஊர் நகரத்தார்க்கு எல்லாமும் யாதும் ஆன முத்துக்குடை (சந்திராதித்யம்) உரித்தாகட்டும் என்று வேண்டி வீரப்பட்டினத்திற்கு கல் நாட்டிக் கொடுத்தோம் பல மண்டலத்தைச் சேர்ந்த வீர பெரும் வணிகர் குழுவினரோம். இதை பல மண்டலத்து வணிகர் குழுவின் பாதுகாப்பில் விடுகிறோம்.

இராசிபுரத்தில் புதிதாக வணிக வீரருக்கான தங்கும் மனைகள்  கொண்ட ஊரை (வீரப்பட்டினம்) நிறுவி கல் நாட்டுவித்த செய்தியை குறிக்கிறது. முத்துக்குடை (சந்திராதித்யம்) என்பது சமணரின் முக்குடைகளில் ஒன்று என்பது இந்த வணிகக் குழுவில் சமணர் பலர் இருந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றது.

பார்வை நூல்: கல் சொல்லும் கதைகள், பக். 41- 42, ஆசிரியர்: சந்தியூர் கோவிந்தன்.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம்  வேம்பத்தி வேட்டுவன் தோட்டத்துள் இருந்த இப்போது ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் 47 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஶ்ரீ கோவி ராசகேசரிபன் /மராகிய ஶ்ரீ ராஜேந்திர சோழ தேவர் க்குத் திரு / வெழுத்திட்டுச் செல்லா நின்ற யாண்டு நா / லாவது சையமுரி நாடாழ்வார் நாட்டு வ / டகரை விக்ரம பல்லவபுரத்து நகரத்து / வளஞ்சிகர்க்கு வீரபட்டணம் செய்து குடு / த்தோம் நாடாழ்வாரை வெட்டின மதிரை/ இருக்கும் பிராந்தக தேவனான கொங்கு ம / ண்டலம் உய்யக்கொண்டானும் முசிறியான  / மும்முடிச்சோழபுரத்தில் சுந்தர சோழ முத்தர / யனை வெட்டின எறியும் விடங்க செட் / டியும் பாண்டிய நாட்டில் கல்லக நாட்டில்/ காக்கையான துளகோதை சோலையான் படை / நாயனை வெட்டின வீரகள் மதலையும் / பருதிப்பள்ளி நிரந்த ராஜேந்திர சோழப்பெருநிரவி / வீரமாணிக்கச் செட்டியும் சேந்தன் அதிருக்குரவாழ் நானாதேசியக் கவரை 6 வுவிடங்க  / ஞ்சாத்தன் பாலையான  திசையாயி / ரத்தைஞ்ஞூற்றுவப்பிள்ளை கண்டழியும் அரையம் மாயிலட்/ டியான வீரகள் மதலையும் சிங்க / முரனான அஞ்ஞூற்றுவ வேளானு / ம் அஞ்சுகரை  நாட்டுக் கவரை விடங் / கனும்  கவரைகள்மார் வத்துமாலையு / ம் வீரபுத்திரனும் முனிவர் சிங்கமு / ம் வலங்கைமார் வத்துமாலையு / ங் கவரைகள் உய்யக்கொண்டானும் / பிள்ளை சித்திரவாளியும் பிள்ளைப் / பத்திரவானும்  எறியும் விடங்கர் செட் / டியும் இவ்வூர் பகுதியும் இவ்வூர் மாதேவ/ ர்க்குக் குடுத்த தர்மமும் இவ்வூர் வீர / சாசனம் செய்தோம் இவ்வனைவோ / மும் உள்ளிட்ட வீரப் பெரு நிரவியாரோ / ம். இத்தன்ம மிறக்கினான் கெங் / கையிடை குமரியிடை எழுநூற்றுக்   /  காவத்துள்ளார் செயித பாவ / ம் கொள்வார் நோக் கொண்டாநேல்_ _வீர / புரமாவதாகவும். இப்பரிசே வீர / பட்டணம் செய்தோம் இவ்வனைவோமுள்ளி / ட்ட வீரப் பெருனிரவியோம். அறம் மறவற்க அறமல்லது துணையில்லை.

மதலை – வலுவான இளையோர் படை; வத்த மாலை – வெட்பாலை அல்லது மல்லி மாலை

விளக்கம்: முதற் குலோத்துங்கனின் நாலாவது ஆட்சி ஆண்டு 1074 இல் வெட்டப்பட்ட வணிகர் கல்வெட்டு என்கிறார் செ. இராசு. சையமுரி நாடாழ் வாரை வெட்டிய மதுரை பிராந்தக தேவன்,  கொங்கு மண்டல உய்யக்கொண்டான், முசிறி  சோழபுரத்தில்  சுந்தர சோழ முத்தரையனை  வெட்டிய எறி படை விடங்கச்செட்டி, பாண்டிய நாட்டின் கல்லக நாட்டு காக்கையான் துளகோதை சோலையான் படைக்குத் தலைவனை வெட்டிய வீரகளின் வலுவான இளையோர் அணி, பருத்திபள்ளி நிரந்த ராஜேந்திர சோழர் பெரு  வணிகர் குழுவின்  வீர மாணிக்க செட்டி, சேந்தன் அதிருககுரவாழ் நானாதேசியத்தின் கவரை விடங்கன் சாத்தன், பாலையான திசை ஆயிரத்து ஐநூற்றுவ பிள்ளை, கண்டழியும் அரையத்தின் மாயிலெட்டியான வீரகளின் வலுவான இளையோர் அணி, சிங்கமுரனான ஐந்நூற்றுவ வேளாண், அஞ்சுகரை நாட்டு கவரை விடங்கன் ஆகியோர் சையமுரி நாடாழ்வான் நாட்டு வடகரை விக்கிரம பல்லவ புரத்து நகரத்து வளஞ்சிய வணிகருக்கு வீரர் ஓய்வெடுக்கத் தங்கு மனைகள் உள்ள ஊரை, வீர பட்டணத்தை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்கின்றனர். கவரைமார் வத்துமாலை, வீரபுத்திரன் சிலை, முனிவர் சிங்காசனமும் கொடுத்தனர். அதே போல வலங்கைமார் வத்துமாலையும் கவரைகள் உய்யக்கொண்டான் பிள்ளை, பிள்ளை சித்திரவாளி, பிள்ளை பத்திரவான், எறிபடை விடங்கர் செட்டி ஆகியோர் இவ்வூருக்கு கொடுத்த நிலத்தையும் இவ்வூர் ஈசனுக்கு கொடுத்த கொடையையும் இவ்வூருக்கே ஆவணம் செய்து கொடுத்தோம் இந்த அனைவரையும் உள்ளடக்கிய வீரபெரு வணிகக் குழுவினரோம். இந்த கொடையை அழிப்பவர் 700 காவதம் வரையான கங்கை இடை குமரி இடை வாழ்வோர் செய்கின்ற பாவத்தை அடைவர். துன்புறுத்தி கவர்ந்தால் சாவதாக. இந்த திட்டப்படி வீர பட்டணம் அமைத்தோம் இந்த அனைத்து வீரபெரு வணிகக் குழுவினரும். செய்த அறத்தை மறக்க லாகாது அறத்தை விட வேறு துணை இல்லை.

இவ்வாறாக பல வணிகக் குழுக்கள் ஒத்துழைப்பில் தான் வணிக வீரர் படைகள் இயங்கின. வணிகர் படை பேணுவதில் அதிக கவனம் செலுததினர் என்பதை வீர பட்டணக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. இது தான் மன்னராட்சியின் அவலம்.

பார்வை நூல்: கலைமகள் கலைக்கூடம் , பக். 79 – 80, ஆசிரியர்: செ. இராசு.  

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.