செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(487)

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

       –திருக்குறள் – 185 (புறங்கூறாமை)

புதுக் கவிதையில்…

அறத்தை நல்லதென
அறிந்து போற்றும் நெஞ்சமிலா
ஒருவனை
அவன் புறம்பேசும்
இழிசெயலைக் கொண்டே
கண்டுகொள்ளலாம்…!

குறும்பாவில்…

அறம் நல்லதெனப் போற்றும்
நெஞ்சமிலாத் தன்மை, ஒருவன் பிறர்பற்றிப்
புறங்கூறும் இழிசெயலால் வெளிப்பட்டிடும்…!

மரபுக் கவிதையில்…

நல்ல அறத்தை நல்லதென
     நன்றாய் அறிந்தே போற்றவல்ல
நல்ல நெஞ்சம் இல்லாமல்
     நாட்டில் வாழும் ஒருவனது
பொல்லாக் குணத்தை அறிந்திடவே
     போதும் அவனின் இழிசெயலாம்
தொல்லை யான புறங்கூற்றால்
  தொடரும் இடர்தான் மற்றவர்க்கே…!

லிமரைக்கூ…

நல்லறம் கண்டு போற்றும்
நெஞ்சிலா ஒருவனைப் புறங்கூறும் இழிசெயலால்
இனம்கண்டு உலகம் தூற்றும்…!

கிராமிய பாணியில்…

சொல்லாத சொல்லாத
பெறரக்கெடுத்துப் பொறஞ்சொல்லாத,
பொல்லாத வேலயான
பொறஞ்சொல்லாத..

நல்ல கொணமான
நல்லறத்தப் பாராட்டுற
நல்ல நெஞ்சம் இல்லாத
ஒருத்தனோட பொல்லாக் கொணத்த
கண்டறிய அவன்
பெறரக் கெடுத்துச் சொல்லுற
கீழ்த்தரமான பொறஞ்சொல்லு
ஒண்ணே போதுமே..

அதால
சொல்லாத சொல்லாத
பெறரக்கெடுத்துப் பொறஞ்சொல்லாத,
பொல்லாத வேலயான
பொறஞ்சொல்லாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *