ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 11

அண்ணாமலை சுகுமாரன் 

பிரக்ஞானம் பிரமம்‘ என்கிறது ரிக் வேதம்.  

“மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே 

அஞ்ஞானந்தனை அகல்விக்கும் நல்லறிவே” 

என்கிறார் சிவபுராணத்தில் மாணிக்கவாசகர். இத்தகைய ஆதியும் அந்தமும் இல்லாத, எல்லையற்ற அறிவுக்கு அறிவான, பேரறிவின்  பேருவமே இறைவனின் இயல்பு. 

எந்த வாக்கினாலும், எத்தகைய விரிவுரையாலும், பிற பொருள்களைப் போல் அத்துணை எளிதாக அறிய முடியாத அறிவின் மூலப்பொருளே இறையாகிய பரம்பொருள். அத்தகைய அறிவு, எவ்வாறு உணர்வாகப் பரிமளிக்கிறது  என ஓரளவு விரிவாகச் சென்ற பகுதிகளில் பார்த்தோம். 

பரிணாம வளர்ச்சியில் வேட்டையாடுவதற்கும், வேட்டையாடப் படுவதில் இருந்து காத்துக் கொள்வதற்காகவே அதற்கு உகந்ததாக உலகில் முதலில் தோன்றிய முதுகெலும்புள்ள மீனில் இருந்த, தற்போது உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை விலங்குகளும், பறவைகளும் சிறுகச் சிறுக  மாறி மாறி தற்போதைய நிலையை அடைந்து தங்களுக்குரிய வாழ்வை வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதகுலம்  மட்டும் தனது வேட்டையாடும் அடிப்படைக் குணத்தில், இருந்து இரையை மட்டும் நாடுவதை விடுத்து, மனம் என்னும் வஸ்த்து அதனிடம்  இருந்ததால், இந்த உடலினைக் கொண்டு மேலும் மேலும் அறிவதையே வாழ்தலின் பயனாகக் கொண்டு வளர்ந்து வருகிறது பரிணாமத்தின் அடுத்த நிலைக்கு உயர்ந்து வருகிறது. 

வாழ்தல் என்பது மேலும் மேலும் அறிவதிலேயேக்  கழிகிறது. சுவாமி சித்பவானந்தரின் பகுப்புப் படி  மனித  குலத்தின் வாழ்தல் முறை மூன்று வகைப் படுகிறது. 

வென்று வாழ்தல் 

வகுத்து வாழ்தல் 

வழங்கி வாழ்தல் 

அநேகமாக மனிதர்களிலும், விலங்குகளிலும் இதில் இருக்கும்  முதல் முறையான ‘வென்று வாழ்தல்’ என்பதே  மேலோங்கி இருக்கிறது. அதுவே competion எனப்படுவது, அதையே வாழ்தலின் சாமர்த்தியம் என மேல்நாட்டு மனோபாவ முறை வலியுறுத்துகிறது. இதில் தங்களுக்குத் தருகின்ற மதிப்பை அவர்கள் பிற உயிர்களுக்குத் தருவதில்லை. வெற்றிக்கு மட்டுமே இதில் மதிப்பு, மனிதர்களுக்கு மதிப்பு அல்ல.

பிறரை வென்று வாழ, மற்றவரின் உடமைகளை கவர்ந்து வாழ்தலே மேல் என்று நினைப்பு அவர்களை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் அதை கீழ்த் தரமானதாக நமது தத்துவ முறை வலியுறுத்துகிறது. உலகின் இறையின் மற்றையப் படைப்புகளை ஏதேனும் ஒரு வகையில் மடக்கி, அடக்கி தங்கள் நலனுக்காகவும், ஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் இத்தகையோரின்  குறிக்கோள் ஆகும் .

அவரவர் வலிமைக்கும், வாய்ப்புக்கும் தக்கபடி பிறர் மீது தங்களது ஆளுகையை செலுத்துவது அவர்தம் இயல்பு. இதனால் உலகே  போராட்டம் நிறைந்ததாக ஆகிறது, துன்பம் மிகுகிறது.  உலகம் நரகம் ஆகிறது. ஒவ்வெருவரும் அப்படியே தங்கள் இயல்பையே பிரதிபலிக்க முயலும் போது, ஒரு வனத்தின் வாழ்வு உலகின் வாழ்வின் முறையாக மாறிவிடுகிறது. 

இத்தகைய வாழ்கை முறையை தான் வாழும் வாழ்வில் எதிர் கொண்டாலும், அதைத் தவிர்த்து ‘வகுத்து வாழ்தல்’ என்னும் வாழ்க்கை முறையில் வாழ்வது அதைவிடப் பன் மடங்கு உயர்வானதாகும்.

இதுவே co-operation  எனும் சமுதாய வாழ்க்கை முறையாகிறது. தனி நன்மை கூடவே இதில்  பொது நன்மைக்கும்  இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முறையான கட்டுப்பாடு மூலம் தனது நலன் கூடவே  பொது நலனுக்கும  முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்பும் ஆதரவும் இத்தகைய வாழ்வில் இடம் பெறுகிறது. 

தன்னலனும் பொதுநலனும் சமமாகப் பேணப்படுகிறது. இறைவகுத்துள்ள விதிவழி வாழ்க்கை இதுவே ஆகும். இதில் மூளையை  விட உணர்வுக்கு மதிப்பதிகம். நாம் வாழும் வாழ்விலேயே சுவர்க்கத்தின் வாழ்க்கை இந்த முறையிலேயே அமைகிறது. வாழ்க்கை சுவர்க்கம் ஆகிறது. 

மூன்றாம் முறையான இனிய முறை அதனினும் மேம்பட்டது. அது வாழ்க்கையை வேள்வி ஆக்குகிறது. தன்னையே ஆகுதி ஆக்குகிறது. அதுவே’ வழங்கி வாழ்தல்’ இது self dedicated life எனப்படுவது. இதில் பெறுவதை விடக் கொடுப்பது அதிகம்.

தான் ஈட்டும் பொருள் தனக்காகவென்று அதிகம் இல்லாமல் மிகுதியும் மற்றவர்களுக்காகவே, பொது நலனுக்காகவே இத்தகைய முறையில் செலவிடப் பெறுகிறது. அவர்கள் புரியும் மக்கள் சேவையே ஆண்டவன் சேவையாகிறது. நரர்களைப் பேணுவதே நாராயண வழிபாடு ஆகிறது.

வாழையும் தென்னையும் போல் பெறுவதை விடத் தருவதே  அதிகம் ஆகிறது.  இத்தகையோர் சமுதாயத்திற்கு வழங்கி வாழ்கிறார்கள். அத்தகைய மகாத்மாக்கள் இவ்வுலகை மேம்படுத்தத், தங்கள் வாழ்க்கையே இறைக்கு வேள்வியாக அளிக்கிறார்கள். அத்தகையவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் இவ்வுலகில் உயரும்போது இந்த வாழ்க்கை மட்டுமல்ல வாழும் உலகமே சுவர்க்கமாகிறது. 

இத்தகைய வாழ்வின் மாற்றங்கள் வாழ்தலின் புரிதலைப் பொறுத்தே  மெதுவாக நடை பெறுகிறது. இதுவே மனித வாழ்வின் மேல்நோக்கிய பரிணாம வளர்ச்சி ஆகிறது. இந்த வளர்ச்சியை அடைவதற்கு அறிவின் மேன்பாடு பிறவிகள் தோறும் வாய்க்க வேண்டும்.

முதலில் பிரபஞ்சத்தையும் பிறகு பரம்பொருளையும் அறிவதே அறிவைப் பெறுவதன் பயனாகும். அத்தகைய ஈட்டும் அறிவு அத்தனையும்  பிறவிகள் தோறும் சேமிக்கப்பட்டு, அறிவில் தேடுதலுக்கு ஏற்பப் பிறவிகள் அடுத்து அடுத்து ஏற்படுகின்றன. அதிலேயே பல கொடுக்கல் வாங்கல் கணக்குகளும் தீர்க்கப்படுகின்றன. அதன் சமன்பாடு எத்தகையக் கணித நிபுணராலும்  தீர்க்க இயலாதது. அதற்குத் தேவை வேறுவகையான  கணக்கறிவு. 

இவ்வகை அறிவு தர்ஷனங்கள் எனும் அறுவகையில் வகுக்கப்படுகிறது. நியாயம், வைசேஷிகம், மீம்மாம்சம், சாங்கியம், யோகம், வேதாந்தம் எனப் பெயர் பெறுகின்றன. இத்தகைய தர்ஷனங்கள் தரும் அறிவு, அனுபவ வாயிலாகவும், மீண்டும் மீண்டும் அனுபவங்கள் அறிவாகவும், பெற்ற அறிவு மேலும் நல அனுபவங்களைப் பெறவும், மேலும் பாவிக்கப்படும் அனுபவங்கள் நல உணர்வுகளாகவும் மாற்றம் பெறுகிறது.  

அத்தகைய நல உணர்வினை அடைய இந்த உடம்பு இல்லாமல்  இயலாது என்கிறது உடம்பின் பயன் எனும் அதிகாரத்தில் உள்ள இந்தக்  குறள். 

குறள்  எண்   15 

உடம்பினாலன்றி உணர்வு தானில்லை 

உடம்பினாலுன்னியதே யாம்  

இனி அடுத்தக் குறளைக் காண்போமா ? 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *