நம்மைக் காக்கும் கவசம்

1

விசாலம்

Vishalamகவசம் என்றால் நம்மைக் காப்பாற்றக் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக் காத்துக்கொள்ளக் கவசம் அணிந்துகொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம், நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். பெரிய முருக பக்தர். ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். முருகனுடன் ஒன்றிப் போனார். அவர் மிகவும் எளிய முறையில் நமக்குக் கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத, அதுவும் பல தடவைகள் ஓத, முருகனே காட்சி தந்துவிடுவான்.

கவசத்தின் ஆரம்பமே ‘சஷ்டியை நோக்க’ என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள் வருவது. ஜாதகத்தில் ஆறாம் இடம், ரோகம், கடன், விரோதம், சத்துரு போன்றவற்றைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லாத் தோஷங்களையும் போக்கும் பெருமான், திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள், சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு.   முருகனுக்கோ ஆறு முகங்கள். ச ர வ ண ப வ என்று ஆறு அட்சர. ஆறு படை வீடுகள். ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்துரு, பயம் இல்லை என்றால் அமைதிதானே.

இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

கந்தன் வரும் அழகே அழகு:

பாதம் இரண்டில் பன்மணிச் சலங்கை,
கீதம் பாட கிண்கிணியாட…

மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டுத் திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்துவிட்டான். இப்போது என்னைக் காக்க வேண்டும்.
பன்னிரண்டு விழிகளும் பன்னிரண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது, ‘பரமேஸ்வரி பெற்ற மகனே, முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீற்று அழகும் நீண்ட புருவமும் பவளச் செவ்வாயும் அசைந்தாடும் காதில் குண்டலமும் அழகிய  மார்பில் தங்க நகைகளும் பதக்கங்களும் நவரத்தின மாலை அசைய, உன் வயிறும் அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளிவிட்டு வீச, மயில் மேலேறி வந்து, கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா …………… என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

swamimalai-temple-valli-deivanai-murugan

அவர் கூப்பிடும் வேல்கள்தான் எத்தனை? உடம்பில்தான் எத்தனை பாகங்கள்…… இவற்றையெல்லாம் காக்க என்று வேலினை அழைக்கிறார்.

வதனத்திற்கு அழகு வேல். நெற்றிக்குப் புனிதவேல். கண்ணிற்குக் கதிர்வேல். நாசிகளுக்கு நல்வேல். செவிகளுக்கு வேலவர் வேல். பற்களுக்கு முனைவேல். செப்பிய நாவிற்குச் செவ்வேல். கன்னத்திற்குக் கதிர்வேல். கழுத்திற்கு இனிய வேல். மார்பிற்கு இரத்தின வடிவேல். இளமுலை மார்புக்குத் திருவேல். தோள்களுக்கு வடிவேல். பிடரிகளுக்குப் பெருவேல். அழகு முதுகிற்கு அருள்வேல். வயிற்றுக்கு  வெற்றிவேல். சின்ன இடைக்குச் செவ்வேல். நாண்கயிற்றை நால்வேல். பிட்டம் இரண்டும் பெருவேல். கணைக்காலுக்குக் கதிர் வேல். ஐவிரல்களுக்கு அருள்வேல். கைகளுக்குக் கருணை வேல். நாபிக் கமலம் நல்வேல். முப்பால் நாடியை முனை வேல். எப்போதும் என்னை எதிர் வேல். பகலில் வஜ்ர வேல். இரவில் அனைய வேல்………… காக்க காக்க கனக வேல் காக்க.

அப்பப்பா, எத்தனை விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எத்தனை விதமான பயத்திலிருந்து காக்க வேண்டும்? பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய் பிசாசு, குறளைப் பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி  காட்டேரி…… இவை அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள், பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால மந்திரம்……. இவை எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம். புலியும் நரியும் எலியும் கரடியும் தேளும் பாம்பும் செய்யான் பூரான் – இவற்றால் ஏற்படும் விஷம், சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒற்றைத் தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள், இதைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும். நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்துருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.

கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள்.

இடும்பாயுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
உயர்கிரி கனக் சபைக்கு ஓர் அரசே
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

=================================

படத்திற்கு நன்றி – saminathan s’s Photos

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நம்மைக் காக்கும் கவசம்

  1. ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
    ஆறு இரு திண்புயத்து அழகிய மார்பில்
    பல்பூஷனமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    முருகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.