நிலவொளியில் ஒரு குளியல் – 7
ஸ்ரீஜா வெங்கடேஷ்
டிசம்பர் மாதத் தொடக்கத்தோடு சென்னையில் சங்கீத சீசன் ஆரம்பித்துவிட்டது. எல்லாச் சபாக்களிலும் கச்சேரிகள் நிரம்பி வழிகின்றன. வழக்கமான பண்பாட்டைக் கொலை செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிருந்து ஒரு மாறுபட்ட நல்ல மாறுதல். அதை எல்லாத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்வது, மனத்துக்கு இதம் தரும் விஷயம். 2010 டிசம்பர் ஆறாம் தேதியன்று சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப் பாட்டு நிகழ்ச்சி, பாரதிய வித்யா பவனில் நடந்தது. மீனாட்சி கல்யாணம் என்ற தலைப்பின் கீழ் கதை சொன்னார். மிக அருமையாக நடந்தது அந்நிழ்ச்சி. சபையில் கூட்டமும் பரவாயில்லை. நெல்லை மாவட்டத்திற்கே உரித்தான அந்த வில்லிசை, என்னை என் கிராமத்திற்கு, காலப் பெட்டகத்தில் உட்கார வைத்து அழைத்துச் சென்றது.
மார்கழி! விடியற்காலையிலேயே எழுந்து பெரிய பெரிய கோலங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கும். (இப்போது நகரங்களில் கோலம் போட, பெரிய வாசல்களே இல்லையே) கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை முதலிய பக்திப் பாடல்கள் பாடுவார்கள். அந்த மார்கழிப் பனிக்குக் கோயிலில் கிடைக்கும் சூடான பொங்கல் பிரசாதம் அமுதமாய் இருக்கும். அதற்காகவே கோவிலுக்குப் போவதுண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும் விட எங்களைப் போன்ற சிறுவர்கள் மிகவும் விரும்பும் நிகழ்ச்சி ஒன்று, எங்கள் ஊரில் வருடா வருடம் மார்கழி மாதம் நடக்கும். அது தான் “சாஸ்தா பிரீதி” எனப்படும் தர்ம சாஸ்தா வழிபாடு.
மலையை ஒட்டி அமைந்துள்ள ஊர்கள் என்பதால் பண்டைய காலங்களில் கரடி, வேங்கை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் சமயத்தில் வந்து விடுமாம். அவற்றைத் தடுக்கவும் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை உற்பாதங்களிலிருந்து எங்கள் சுற்று வட்டார கிராமங்களைக் காப்பாற்றவும் கடையம் இராம நதி அணைக்குப் பின்னால் உள்ள மலையில் தர்ம சாஸ்தா பிரதிஷ்டை செய்யப்பாட்டாராம். அது முதல் வன விலங்குகள் ஊருக்குள் வருவதில்லையாம். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக வருடத்தில் ஒரு நாள், குறிப்பாக மார்கழி மாதத்தில், அவருக்குப் படையல் போட்டு பூசை நடக்கும். பல கிராமங்களுக்கான பொதுக் கோயில் என்பதால் ஒவ்வொரு ஊரும் தனித் தனியாக இதைக் கொண்டாடுவார்கள்.
எங்கள் கிராமத்தில் சாஸ்தா பிரீதிக்கான நாள் குறிக்கப்பட்டவுடனே எங்களுக்கெல்லாம் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஊர்க் கூட்டத்தில் ஒரு வீட்டுக்கு உண்டான வரி நிர்ணயிக்கப்படும். அது தவிர தொழில் நிமித்தம் வெளியூர்களில் வாழும் எங்கள் ஊர்க்காரர்களுக்குக் கடிதம் போட்டு, கமிட்டிக்காரர்கள் பணம் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு தினங்கள் முன்பாகவே படையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கி விடுவார்கள். சமையல் பாத்திரங்கள், விறகுக் கட்டைகள், பூஜைப் பொருட்கள் முதலியவற்றைக் கொண்டு செல்ல ஒரு வேனும், நாங்கள் எல்லோரும் செல்வதற்காகப் பேருந்தும் ஏற்பாடு செய்வார்கள். படையல் நாள் வார நாட்களில் வந்துவிட்டால் எங்கள் உற்சாகம் இன்னும் பல மடங்கு பெருகும். ஏனென்றால் கண்டிப்பாகப் பள்ளிக்கு மட்டம் போட்டு விடுவோம்.
குறிப்பிட்ட நாளில் அம்மாமார்கள் கையில் இட்லிப் பொட்டலங்களை எடுத்துக்கொள்ள, அதிகாலையிலேயே கிளம்பி விடுவோம். இராம நதி அணை வரையில் தான் வாகனங்கள் செல்லும். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு கி.மீ நடந்துதான் செல்ல வேண்டும். போகும் வழி முழுவதும் காடும் ஓடையுமாக இருக்கும். மழைக் காலம் அப்போதுதான் முடிந்திருக்கும் என்பதால் மரங்கள் எல்லாம் பச்சைப் பசேலென்று செழிப்பாக இருக்கும். ஓடைகளிலும் தண்ணீர் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கும். இயற்கை அன்னையின் அழகின் நிழலில் நடப்பதால் தூரம் கூடத் தெரியாது. வருடம் ஒரு முறை தான் வருவோம் என்பதால் சாஸ்தா கோயிலைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கும். கோயிலைக் கண்டுபிடித்து பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க உதவிய பின் எங்களை அவிழ்த்து விட்டுவிடுவார்கள். கோயிலுக்குச் சற்று தொலைவில் ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கும். மலையிலிருந்து வருவதால் தண்ணீர் மாசு மருவில்லாமல் பளிங்கு மாதிரி இருக்கும். இளநீர் போல இனிக்கும்.
நாங்கள் சாஸ்தா வழிபாட்டிற்கு வருவதன் முக்கிய நோக்கமே அந்த நதியில் குளிக்கத்தான். இரண்டொரு பெரியவர்கள் இருப்பார்கள், எங்களை மேற்பார்வை செய்ய. அவர்களில் கிருஷ்ணமூர்த்தி மாமா இருந்து விட்டால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான். அவர் மற்றவர்களைப் போல இல்லாமல் எங்களோடு கூட விளையாடுவார். கொண்டு வந்திருக்கும் இட்லிகளை தண்ணீரில் நின்றபடியே கபளீகரம் செய்வோம். உன் வீட்டு இட்லி, என் வீட்டு இட்லி என்பதெல்லாம் கிடையாது. எல்லார் வீட்டு இட்லிகளும் நன்கு சுத்தமான ஒரு பாறை மேல் மொத்தமாக குவித்து வைக்கப் பட்டிருக்கும். அவரவர் விருப்பம் போல கைக்குக் கிடைத்த இட்லிகளைச் சாப்பிடுவோம். பின்பு நதியில் குளிப்போம். குளிப்போம் என்பது ரொம்ப சின்ன வார்த்தை, நாங்கள் செய்ததைச் சொல்ல. எப்படியும் இரண்டு மணி நேரமாவது தண்ணீரில் கிடப்போம். சமயத்தில் மாமா எங்களை மலைக்கு மேலே அழைத்துச் செல்வதுமுண்டு.
“விளக்கெண்ணெய் கசம்” (கசம் என்றால் எங்கள் பாஷையில் ஆழமான தண்ணீர் இருக்கும் இடம் என்பது பொருள்) என்ற கண்றாவிப் பெயரால் அழைக்கப்பட்ட அந்த அழகிய இடம், எங்களின் சாகச செயல்களுக்கு ஏற்றது. ஒரு பெரிய பாறையின் கீழ், ஆழமான ஒரு பள்ளத்தில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். அதை வெறுமே பார்ப்பவர்களும் உண்டு. பாறையிலிருந்து பள்ளத்தில் குதித்து நீந்தும் தைரியசாலிகளும் உண்டு. அந்த மலைப் பிராந்தியத்தில் அப்போதெல்லாம் சந்தன மரங்கள் நிறைய இருக்கும். அதன் மரப் பட்டைகளே வாசனையாக இருக்கும். அதை எடுத்துக்கொண்டு வருவோம். ஒருவழியாக குளித்து முடித்து நாங்கள் கோயில் பக்கம் வரும்போதே மணி பன்னிரண்டாகி விடும். எங்கள் ஊர்த் தாய்மார்கள் சமையல் முடித்து, சாமிக்குப் பொங்கல் வைத்துக்கொண்டிருப்பார்கள். ஆண்கள் (ஆம்! ஆண்கள் தான்) பந்தி பரிமாறும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருப்பார்கள்.
சாமிக்குப் பொங்கல் வைத்து, அபிஷேக, ஆராதனைகள் முடிந்த பிறகு சமைத்த பொருட்களை எல்லாம் படைப்பார்கள். இந்தச் சமயத்தில் பூசாரி மீது சாமி வந்து, அருள் வாக்கு சொல்லும். படையல் திருப்தி என்று எங்கள் வழிபாட்டிற்கு அங்கீகாரம் அளிக்கும். இதெல்லாம் முடிவதற்குள் எங்களுக்குப் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்து விடும். எப்போதடா இலை போடுவார்கள் என்று காத்திருப்போம். நான் எத்தனையோ ஊர்களுக்கு வட இந்தியாவிலும் சரி, தென்னிந்தியாவிலும் சரி போயிருக்கிறேன். பல வகையான உணவுகளைச் சுவைத்திருக்கிறேன். ஆனால் அந்தச் சாப்பாட்டைப் போல ஒரு சுவையான சாப்பாடு இது வரை நான் சாப்பிட்டதில்லை. அதன் சுவைக்குக் காரணம், ஆற்றுத் தண்ணீரா, எங்கள் ஊர்க்காரர்களின் கைப்பக்குவமா, மரங்கள் அடர்ந்த மூலிகை வாசம் நிறைந்த அந்தச் சூழ்நிலையா, எங்கள் பசியா இல்லை எல்லாம் சேர்ந்ததா எதுவென்று தெரியவில்லை.
சுமார் இரண்டு வருங்கள் முன்னால் எங்கள் ஊர் சாஸ்தா பிரீதிக்கு என் கணவரோடும் மகளோடும் சென்றிருந்தேன். மலை ஏற ஆரம்பித்த உடன் என் உற்சாகமும் சந்தோஷமும் போன இடம் தெரியவில்லை. காரணம், இயற்கை அன்னையின் பரிபூரண அரவணைப்பில் இருந்த அந்த இடம் இப்போது மரங்களே இல்லாமல் கட்டாந்தரையாகக் கட்சியளித்தது. போகும் வழியில் குறுக்கிடும் ஓடைகளைக் காணவேயில்லை. கோயிலைச் சுற்றி மட்டும் ஏதோ பெயருக்கு இரண்டொரு மரங்கள் இருந்தன. ஆற்றிலும் தண்ணீர் கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது. என் வருத்தத்திற்கு எல்லையே இல்லை. அதன் பிறகு மீண்டும் அந்த இடத்திற்குப் போக, எனக்கு மனம் வரவில்லை.
இப்படி மலைகளையெல்லாம் மொட்டையடித்துக்கொண்டே போனால், காற்று மாசு படுவதை எப்படித் தடுக்க முடியும்? இல்லை உலகம் வெப்ப மயமாவதைப் பற்றி மாய்ந்து மாய்ந்து பேசி என்ன பயன்? மரம் வெட்டுவதைத் தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றாலும் பொது மக்களாகிய நமக்கு இதில் பங்கில்லையா? ஒரிஸ்ஸா காடுகளில் வாழும் ஆதிவாசிகளிடம் இருக்கும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நமக்கு என்று வரும்?
மீண்டும் மரங்களும் புள்ளினங்களும் நிறைந்த அந்த மலைப் பகுதி காணக் கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு நிலவொளியில் ஒரு குளியல்.
(மேலும் நனைவோம்…
======================================
படத்திற்கு நன்றி – http://bungalowsandhomestays.com
படிக்க ரொம்ப அருமையான சம்பவம். இயற்கையை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை. வருங்கால தலை முறைக்கு நாம் செய்யும் நன்மை.
காடுகளை காப்போம். மாசு மரு இல்லா சுற்றத்தில் வாழ்வோம்.
நன்றாக எழுதியதற்கு பாராட்டுகள்.
தமிழ்நாட்டில் இப்படியே மரங்களை வெட்டிக்கொண்டு போனால் தமிழ்நாடும் ஒரு நாள் சகாரா பாலைவனம் போல ஆகிவிடும். அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
அழகான மலையும் காடும் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியவை. மழையும் சுவாசிக்கக் காற்றும் (Oxygen) இவற்றால் வருவதே. இதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் ஒரு சில சுயநலவாதிகளால் இவை நாசப்படுத்தப்படுகின்றன. இதைத் தடுக்க வேண்டும்.
எழுத்தாளர் சொல்வது நூறு சதவிதம் உண்மை. குற்றாலம் மலை முன்பு இருந்த பசுமையும், அடர்ந்த மரங்களும் இப்பொழுது இல்லை.
படிப்பதற்கு நன்றாகவும் சிந்தனையைத் தூண்டுவதாவும் இருந்தது. வாழ்த்துகள். சிந்திப்போம். செயல்படுவோம்.
Made me think good work madam.
Very interesting article. Thanks to the writer Srija Venkatesh for a good article.
பசுமையான நினைவுகளுக்கு மீண்டும் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி.
ஊர்கள் பெருகப் பெருக (Urbanisation) கிராமங்கள், காடு, மலைகள் எல்லாம் குறைந்துகொண்டு இருக்கின்றன. மீண்டும் பசுமைப் புரட்சி செய்ய வேண்டிய அவசியம்.
ஒரு புறம் காடு மரங்களை மொட்டை அடிக்கிறார்கள். மறுபுறம் மணல் திருட்டு. பின் எங்கு இருந்து நதிகளை பாதுகாக்க?
நதிகள் ஓடி கொண்டு இருந்து பாதையில் இப்பொழுது வெறும் சிறு சிறு செடிகள் முளைத்துள்ளது. விவசாயிகள் நதிகளை நம்பாமல் மோட்டார் மற்றும் பம்பு செட்டையும் நம்பியுள்ளனர்.
பொது மக்கள் இப்பொழுதாவது முழித்து கொள்வார்களா? மணல் திருட்டை வேருடன் அழிக்க வேண்டும்.
i lik the story of “sorgathil oru mul”..its fantastic n marvellous..plz write more stories…
Thank You. Mr. Prakash. With such an enthusiastic response I will try to write more and more. Thank you once again.