விசாலம்

sangu

கார்த்திகை சோமவாரம் வந்தாலே எல்லாச் சங்குகளுக்கும் கொண்டாட்டம் தான். இத்தனை மாதங்கள் ஒரு பீரோவில் பத்திரமாக இருந்து இந்த நன்நாளில் ஒவ்வொன்றாக வெளியே வந்து தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு லிங்க ரூபத்தில் இருக்கும் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யத் தயாராகிவிடும். மிக மகிழ்ச்சியுடன் லிங்க ரூபத்தில் வரிசையாக அமர்ந்து சந்தனம், குங்குமம் தரித்து, பாலுடன் சிவனைக் குளிர்விக்கத் தயாராகி விடும். அவற்றுக்கு வாய் இருந்திருக்குமானால் ஒரு லிங்கோஷ்டகம் கூடப் பிறந்திருக்கும்.

சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் ஓரளவு சங்கின் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்தபோது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு “சங்கு சக்ரதாரி” ஆனார். சங்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. மஹாகவி பாரதியாரும் “சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே” என்று பாடி, வெற்றியைப் பறைச்சாற்றும்   பொருளாகச் சங்கைக் கொண்டிருக்கிறார்.

sanguசினிமா பாடலிலும் கண்ணதாசனின், “கண்ணன் வருவான்” என்ற பாடலில் “வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டவா” என்ற வரி வரும். இதில்  வலம்புரிச் சங்கு ஐஸ்வர்யத்திற்கு அறிகுறியாக வருகிறது. வலம்புரிச் சங்கு கிடைப்பது அரிது, கடல்வாழ் உயிரினங்களில் நத்தை வர்க்கத்தைச் சேர்ந்த பிராணியால் இந்தச் சங்கு உருவாகிறது. அதன் ஒருவிதச் சுழற்சியால் சங்கின் தோற்றம் அமைகிறது. நம் கண்களில் நிறையப் படுவது,  இடம்புரிச் சங்குகள். இதில் ஆண், பெண் என்ற இரு பிரிவுகள் உண்டு. அளவில் சிறிதாக இருக்கும் சங்கு, பெண்சங்கு. நீண்டு, அளவில் பெரிதாகப் பருத்து இருப்பது ஆண்சங்கு.

ஆலகாலம் உண்ட சிவனின் கண்டத்தைப் பிடித்து அந்த விஷம், மேலும் பரவாமல் இருக்கச் செய்தவள் பார்வதி. ஆனாலும் சிவன் மயக்க நிலையில் இருக்க, பார்வதி சங்கை அவரது நாபியில் வைத்து அவரது மயக்கத்தைத் தீர்த்தாள்.

பூஜைப் பொருட்களில் சில மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றன. அவற்றைத் திரும்பவும் உபயோகப்படுத்தலாம். சாதாரணமாக நாம் பூக்களால் அர்ச்சனை செய்து பின் அந்தப் பூக்களை அப்புறப்படுத்திவிடுகிறோம். ஆனால் துளசி, வில்வம் என்ற இலைகளை நாம் திரும்பவும் பூஜைக்கு உபயோகப்படுத்தலாம். இதே போல் சாலிகிராமம், சங்கு. இந்த இரண்டுக்கும் பிராணப் பிரதிஷ்டை இல்லை என்று சொல்லபடுகிறது. இது ஒரு சிறப்பு தான். எந்த இடத்திலும் எப்போதும் உபயோகிக்கலாம்.

வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீடசம் பெருகும். வியாதிகள் நீங்கும். காலையில் நாம் எழுந்தவுடனே நம் உள்ளங்கையைப் பார்க்கும்படி சொல்வார்கள். ஏனென்றால் உள்ளங்கையில் சரஸ்வதி, லட்சுமி, மஹாவிஷ்ணு, பிரும்மா என்று பலர் இருக்கின்றனர். இதே போல் சங்கிலும் நடுவில் குபேரன், குழிப் பகுதியில் வருணன், சுழிக்கும் இடத்தில் சூரிய சந்திரர்கள், குறுகிய இடத்தில் பிராஜபதி, விரிந்த நிலையில் கங்கை யமுனை சரஸ்வதி ஆகியோர் குடிகொண்டு இருக்கிறார்கள்.

sanguசங்கில் மிக உயர்ந்த வகை, கோமடி சங்கு. கோமடி என்றால் பசுவின் மடி. இந்தச் சங்கில் நாலு முனை வழியாக அபிஷேகம் செய்யும் போது, பால் வழியும். சில சமயம் ஒரு சங்கின் உள்ளேயே இன்னொரு குட்டிச் சங்கு அமர்ந்திருக்கும். இதுவும் அபூர்வம் தான். இதை இரட்டைச் சங்கு என்பார்கள். சின்னச் சின்ன சங்குகள் சேர்த்து, சங்கு மாலை தங்கத்தில் செய்து அணிவது வழக்கம். பல பெருமாள் கோயிலிலும் பெரிய சங்கு
மாலைகளைப் பெருமாளுக்குச் சாத்துவார்கள்.

பெண்கள் கழுத்தைச் சங்கு போல் கழுத்து என்று சொல்வது வழக்கம். அவர்களுக்கு நெக்லஸ் மிக அம்சமாக இருக்கும். எந்தப் பொருள் எரித்தாலும் கருப்பாக ஆக இந்தச் சங்கு எரிக்க, கருமையாக ஆகாமல், வெண்மையாகவே இருப்பது ஒரு சிறப்புதான்.

சங்கு, பிறப்பு, திருமணம், இறப்பு ஆகிய மூன்றிலும் பங்கு வகிக்கிறது. இறப்பில் ஏன் இதை உபயோகிக்கிறார்கள் என்று எனக்குத்தெரியவில்லை. இந்தச் சம்சார பந்தம் விட்டு, ஆன்மா விடுதலை அடைவதால் இந்தச் சங்கை ஊதுகிறார்களோ அல்லது அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு இறந்த சமாசாரம் தெரிவிக்கவோ என்று தோன்றுகிறது. கோயில் திருவிழாவின் போதும் சங்கு ஊதுவது உண்டு. பெங்காலிகளுக்குச் சங்கு தினமும் பூஜையில் உண்டு. தவிர, திருமணச் சின்னமாகவும் இருக்கிறது. அவர்கள் சங்கு வளையாக அணிகின்றனர்.

பஞ்சபண்டவர்களும் சங்குகள் வைத்துக்கொண்டிருந்தனர். தருமரிடம் இருந்தது அனந்த விஜயம். அர்ச்சுனனிடம் இருந்தது தேவதத்தம். பீமனது  பவுண்டிரம். நகுலனது சுகோஷம். சகாதேவனது மணிப்புஷபகம். ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்தது பாஞ்ச ஜன்யம் என்ற சங்கு.

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவையிலும் இது வருகிறது. மஹாபாரதப் போரின் போது, காலையில் போர் ஆரம்பிக்கும் போதும் மாலை சூரியாஸ்தமனம் ஆனவுடன் போரை முடிக்கும் போதும் சங்கு ஊதுவார்கள்.

இனி, சங்கைப் பற்றிய பழமொழிகளைப் பார்ப்போம்.

“சங்கிலே வார்த்தால் தீர்த்தம் சட்டியிலே வார்த்தால் தண்ணீரோ?”
“சங்கூதாமல் தாலி கட்டுவது உண்டா?”
“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.”

======================

படங்களுக்கு நன்றி – விக்கிப்பீடியா, தினமணி, http://aazhvarmozhi.blogspot.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *