உலகமயமாகும் தமிழிலக்கிய முயற்சிகள்

2

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

(தில்லித் தமிழ்ச் சங்கம், 2010 திசம்பர் 10-12 தேதிகளில் தில்லியில் நடத்திய ‘தமிழ் 2010’ கருத்தரங்கில் வாசித்த கட்டுரை)

பல்வகை, பல்சுவை
Maravanpulavu_Sachithananthan
ஒட்டு மாமரம். ஒரே மரத்தில் பல் வகை மாங்கனிகள். மாமரம் வளர்ப்போரின் கை வண்ணம். பல் வகை மா மரத் துளிர்களை வெட்டிக் கொணர்ந்து, ஒரே மரத்தின் பல்வேறு கிளைகளில் ஒட்டும் கை வண்ணம். வேரில் இருந்து வருவன நீரும், உரக் கரைசலும். அனைத்துக் கிளைகளுக்கும் அவை பரவும். இலை நுனி வரை பாயும். நீர், உரக் கரைசல், பச்சையம், கரியமில வாயு, சூரிய ஒளி யாவும் இணைய முதனிலை உற்பத்தி.

மாங்கனிகளின் விளைச்சல். பல் வகை மாங்கனிகள் ஒரே மரத்தில். பல் சுவை மாங்கனிகள் ஒரே மரத்தில். மரபணுக்களில் சுவையின் கூறு. வகை வகையான மரபணுக்களை ஒரே மரத்துள் பொருத்தும் பதியம், ஒட்டு. ஒரே நீர், ஒரே உரம், ஒரே கரியமிலவாயு, ஒரே சூரிய ஒளி, ஆனாலும் மரபணுக்கள் கிளைக்குக் கிளை மாறி இருப்பதால் சுவைகளில் வகை வகை. ஒட்டாவிடினோ, பதியம் வைக்காவிடினோ ஒரே சுவையுள்ள மாங்கனிகளை மட்டுமே அந்த மாமரம் தந்திருக்கும். சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம், பம்பனப்பள்ளி மாம்பழம், கறுத்தக் கொழும்பான், எனப் பெயர்கள் அந்த அந்த மாங்கனிகளுக்கு. பல் வேறு நிலப்பகுதிகளுக்குரியன, ஒட்டுவதால், பதியத்தால், ஒரே மரத்தில், ஒரே நிலத்தில்.

உள்ளங் கைக்குள்

கைப்பேசிக்குள்ளும் கணினித் திரைக்குள்ளும் கைச்சொடுக்கிக்குள்ளும் உலகம் மிக மிகச் சுருங்கிவிட்டது. உள்ளங் கைக்குள்ளே உலகம் உருள்கிறதா என்ற ஒரு மாயை!

பிறந்த மண்ணுக்கும் புகுந்த மண்ணுக்கும் இடையே வெகு தூரம் இல்லை. பக்கத்து ஊருக்குக் கிளம்புபவன் திரும்புவானோ மாட்டானோ என்ற ஏக்கங்கள் இன்றில்லை. அவன் எங்கிருக்கிறான் என மணித்துளிக்கு மணித்துளி அறிந்து கொள்ளும் தொழினுட்பம் கையடக்கமாக.

தாய் நிலங்கள், புலம்பெயர் நிலங்கள்

புதுச்சேரி, காரைக்கால், தெற்கு ஆந்திரம், தெற்குக் கன்னடம், கிழக்குக் கேரளம் உள்ளிட்ட தமிழ்நிலமும்  தமிழீழமும் தமிழருக்குத் தாய் நிலம். எனவே பிற நிலங்கள் புலம்பெயர் நிலங்கள்.

சமகாலத்தில் நான்கு நாடுகளின் குடியரசுத் தலைவர்களாக நான்கு தமிழர் இருக்குமாறு தமிழர்க்கு உலகம் சுருங்கிவிட்டது.

உலகெங்கும் 234 நிலப்பகுதிகள். ஐநா உறுப்புரிமை பெற்ற நாடுகள் 192 (2010). இதில் 41 நாடுகளில் கணிசமான தொகையினராய்த் தமிழர் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். அவையாவன (அடைப்புக் குறிக்குள் தோராயமான தமிழர் தொகை 2010இல்),

அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் (200,000)
அமீரகம் – ஐக்கிய அரபு (200,000)
அயர்லாந்து (3,000)
ஆஸ்திரியா (1,500)
ஆஸ்திரேலியா (100,000)
இத்தாலி (5,000)
இந்தியா (81,000,000)
இந்தோனீசியா (300,000)
இலங்கை (5,000,000)
ஓமான் (50,000)
கனடா (300,00)
கயானா (10,000)
காட்டார் (10,000)
கிரேக்கம் (10,000)
குவைத்து (10,000)
சவூதி அரேபியா (50,000)
சிங்கப்பூர் (600,000)
சீசெல்சு (9,000)
சீனா – ஹொங்கொங், மக்காவோ உள்ளிட்ட (5,000)
சுரினாம் (130,000)
சுவாசிலாந்து (5,000)
சுவிற்சர்லாந்து (60,000)
சுவீடன் (12,000)
தாய்லாந்து (10,000)
தென்னாபிரிக்கா (750,000)
தென்மார்க்கு (15,000)
நியுசிலாந்து (30,000)
நெதர்லாந்து (12,000)
நோர்வே (15,000)
பஃரெயின் (7,000)
பிரான்சு – இறியூனியன் உள்ளிட்ட (750,000)
பிரிட்டன் (300,000)
பிஜி (125,000)
பெல்ஜியம் (12,000)
மலேசியா (2,150,000)
மியான்மா (600,000)
மொறிசியசு (130,000)
யேர்மனி (40,000)
யோர்தான் (4,000)
ரினிடாட்-ரொபாகோ (100,000)
ஜமைக்கா (30,000).

மேலும் 20 நாடுகளில் 1,000 பேருக்குக் குறைவான தொகையில் தமிழர் வாழ்கின்றனர். ஆக மொத்தம் உலகெங்கும் தமிழர் தொகை 9.5 கோடி (2010). பல் வகை நிலங்களில் பல்வகை இனங்களுடன் பரந்து பகிர்ந்து பயன்பெற்று வாழ்கிறார்கள்.

வணிகத்துக்காகவும் ஆட்சிக்காகவும் நிலம் கடந்து, கடல் கடந்து  தாய் நிலம் மீண்ட நெடிய வரலாறு தமிழருடையது. கடந்த சில ஆயிரம் ஆண்டுகளாகப் பெரிய அளவில் புலம் பெயராத தமிழர், கடந்த 250 ஆண்டுகளாக உலகின் மூலை முடுக்கெங்கும் பரந்து கணிசமான தொகையினராய் ஒட்டிக் கொண்டனர், பதியம் பெற்றுளர். மாவின் வகைகளை வெட்டி ஒரே மரத்தில் பதிய வைத்த மரம் வளர்ப்போனின் கைவண்ணத்ததைப் போல், கால ஓட்டத்தில் இந்த இடம்பெயர்க் கலவையை, இயற்கை, தமிழருக்காக்கியது. அந்தந்த மண்ணின் மைந்தர்களாயினர். ஆனாலும் தமிழர்களாகவே தொடர்கின்றனர்.

தாய் நிலமான தென்னிந்தியாவும் தமிழீழமும் இவர்களைப் புலம்பெயர்ந்தவர்களாகவே பார்க்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் நீட்டமாகவே பார்க்கிறது. அவர்களோ தங்களை அந்த மண்ணுடன் இணைந்த தமிழராகப் பார்க்கின்றனர். அந்த மண்ணின் வாழ்வியலுடன் இறுகப் பிணைத்து வாழ்கின்றனர். தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளைக் கிஞ்சித்தும் கைவிடாது காக்கின்றனர்.

இவ்வாறாகத் தமிழர் அந்தந்த நாடுகளில் தமிழராகவே தொடர்வதற்கு அந்தந்த நாட்டு அரசுகள் நிதி ஒதுக்குகின்றன. உலகெங்கும் 29 அரசுகள் தமிழ் மொழி, பண்பாடு சார்ந்த தம் குடிமக்களின் பண்பாட்டுப் பேணல் முயற்சிகளுக்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்குகின்றன.  அவையாவன, அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா, இந்தோனீசியா, இலங்கை, கனடா, கிரேக்கம், சிங்கப்பூர், சீசெல்சு, சுரினாம், சுவாசிலாந்து, சுவிற்சர்லாந்து, சுவீடன், தென்னாபிரிக்கா, தென்மார்க்கு, நியுசிலாந்து, நெதர்லாந்து, நோர்வே, பிரான்சு, பிரிட்டன், பிஜி, பெல்ஜியம், மலேசியா, மியான்மா, மொறிசியசு, யேர்மனி, வத்திக்கான்.

தென்னிந்தியா, தமிழீழம் ஆகிய இரு நிலங்களையும் நடுவணாக்கி, ஏனைய நாடுகளில் வாழும் தமிழரைப் புலம்பெயர்ந்தோர் என்பதா? உள்ளங் கைக்குள் உருள முயலும் உலகை நடுவணாக்கி இவர்களை உலகத் தமிழர் என்பதா?

உலகத் தமிழர் நான்கு வகையினரா?

கடந்த ஆயிரம் ஆண்டுகளாகப் புலம்பெயர்ந்த தமிழர் முதல் வகை. மலேசியாவில், மலாக்காவில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுடன் குடியிருப்போர். இந்தோனீசியாவில் சுமாத்திராவின் வடமுனையில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுடன் வாழ்வோர். தாய்லாந்தில் அரச குடும்பத்துக்குக் குருக்களாகப் பாண்டி நாட்டிலிருந்து குடியேறி, தேவார, திருவாசகங்களை விழாக்களில் ஓதிக்கொண்டிருப்போர்.

கடந்த 100 – 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரஞ்சுக்காரரும் பின்னர் ஆங்கிலேயரும் அழைத்துச் சென்றதால் புலம்பெயர்ந்தோர் இரண்டாவது வகை. இறியூனியன் (பிரான்சு), சீசெல்சு, மொறிசியசு, தென்னாபிரிக்கா, பிஜி, கயானா, சுரினாம், ரினிடாட்-ரொபாகோ, ஜமைக்கா, மலேசியா, மியான்மா, சிங்கப்பூர், இந்தோனீசியா, இலங்கையின் மலையகம் ஆகிய 14 நாடுகளில் வாழ்வோர்.

கடந்த 50 ஆண்டுகளாக, அரபு நிலப்பகுதியின் எரிபொருள் வளப் பெருக்கத்தால் வந்த தொழில் வாய்ப்புகளை ஏற்றுச் சென்றோரும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தோரும் மூன்றாவது வகை. அமீரகம், ஓமான், காட்டார், குவைத்து, சவூதி அரேபியா, பஃரெயின், யோர்தான் ஆகிய 7 நாடுகளில் கணிசமான தொகையினராகவும் சார்ந்த நாடுகளில் சிறிய தொகையினராகவும் இந்திய மாநிலங்கள் பலவற்றில் கணிசமான தொகையினராயும் வாழ்வோர்.

சிங்களத் தேசியத்தின் எழுச்சியால் விளைந்த தமிழர் ஒழிப்புக் கொள்கை தொடர்பாக எழுந்த வன்முறைச் சூழலிலிருந்து தப்பிக் கடந்த 33 ஆண்டுகளூடாகப் பல நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர் நான்காவது வகை.

கற்பனைகள், கருத்துருவாக்கங்கள்

இந்த நான்கு வகையினரும் வெவ்வேறு பின்னணிகளில் புலம் பெயர்ந்தவர்கள். இவர்களது கற்பனைகளில், கருத்துருவாக்கத்தில் இப்பின்னணிகள் நிறைந்திருக்கும். அப்பின்னணி சார்ந்த தாய் நிலத் தேடல் மரபணுக்களில் புதைந்திருக்கும்.

ஒட்டிய பின்னும் பதிந்த பின்னும் சேர்ந்த மரத்தின் மரபணுக்களைக் கொள்ளாத மாங்கனிகள் போன்றவர்கள் இவர்கள்.  உள்வாங்கும் நீரும் உரமும் வாயுவும் சூரிய ஒளியின் தன்மையும் வேறாக இருப்பினும் தாம் கொண்டு வந்த சுவையைத் தர முயலும் மரபணுக்களின் இறுக்கம் போன்றனவே இவர்களின் வெளியீடுகளும்.

அரபு நாட்டுச் சூழல், ஏடன் நகரம், அதை ஒட்டித் தரவைக் கடல். தரவைக் கடலை ஊடறுக்கும் சாலைப் பாலம். இரு பக்கமும் ஆழமற்ற கடல். வற்றுக் கடலான நேரத்தில் சாலைப் பாலத்தைக் கடக்கிறேன். அக்கடலில் நாரைகள், அனைத்தும் செங்கால் நாரைகள். மெல்ல மெல்ல நடந்தும் மெதுவாகப் பறந்தும் மீன் தேடுகின்றன. என்னுடன் அரபு நாட்டவர், கற்பனை வளம் மிக்கவர்.

நாராய் நாராய் செங்கால் நாராய் என் மனத்துள்ளே வந்தன வரிகள். தொடர்ந்தன கற்பனைகள். மதுரை, கார் காலம், குளிர், ஏழையாளனின் கோலம் என வளர்ந்தன.

அரபு நாட்டவரும் அந்த நாரைகளைப் பார்த்தார். சிறகுகளின் வெண்மையை, அவை எடுத்தெறியும் வெம்மையை, நாரைத் தசைகளைச் சுட்டபின்  உண்பதால் சுவையை அவர் படித்த பாடலில் விளக்கிக் கொண்டே வந்தார்.

ஒட்டியும் பதித்தும் ஒருவருடன் ஒருவர் ஒட்டாத பின்னணிகள். அந்தக் காட்சிகள் என் கற்பனைக்கு வளமாகி, என் பின்னூட்டம் உதவ, கொழும்பு வீரகேசரி நாளிதழுக்கு வாரந்தோறும் வெளியிடுமாறு 15 கட்டுரைகளை அனுப்பினேன். பின் நூலாகவும் வெளியிட்டேன். உலகத் தமிழர் எங்கிருந்தாலும் இந்தப் பின்னணிப் பிடியிலிருந்து விடுபடாமல் எழுத முடியுமா?

மூன்றாவது வகையினரும் நான்காவது வகையினரும் புலம் பெயர்ந்த  தலைமுறையினராயின் தாய் நிலப் பாதிப்பு, கடுமையாகவே இருக்கும். படைப்பாளிகளாகவே தாய் நிலத்தில் வாழ்ந்து புலம்பெயர்ந்தோர், புதிய சூழ்நிலைகளிலும் அதே பாதிப்புகளுடன் கற்பனைகளை வளர்ப்பர்.

இந்த நான்கு வகையினரும் அந்தந்த நிலங்களிலேயே பெற்றெடுத்த குழந்தைகள், அக்குழந்தைகளின் குழந்தைகள், கலப்புத் திருமணங்கள், பண்பாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள், இவற்றை மீறியே இவர்களின் தமிழ்ப் படைப்பு முயற்சிகள் தொடர்கின்றன.

படைப்பு முயற்சிகள்

உலகத் தமிழருள் தொடர்ச்சியாகத் தமிழில் படைப்புகளை வெளிக்கொணர்பவர்கள் மலேசியத் தமிழர்களே. கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ்க் கல்வி மலேசியாவில் பரவலாக்கப்பட்டதால் (தொடக்க நிலைத் தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்படும் தொகை 2009இல் 60 கோடி மலேசிய வெள்ளி) தமிழ் அச்சு, மின் ஊடகங்கள் பரந்து வளர்ந்து பயனளிக்கின்றன.

45 தமிழ்ப் பள்ளிகள் இருந்தும் தமிழ்ப் படைப்பிலக்கியம் பிஜியில் வளர முடியவில்லை. கயானா, சுரினாம், ரினிடாட்-ரொபாகோ, ஜமைக்கா ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வி அரிதிலும் அரிதே. ஏனைய நாடுகள் அனைத்திலும் தமிழ் அச்சு மற்றும் மின் ஊடகங்களின் பங்களிப்பினால் தமிழ்ப் படைப்பாளருக்கு ஊக்குவிப்பு உண்டு. படைப்பாளிகளின் ஆக்கங்களை அச்சு வடிவிற்குக் கொண்டுவரும் வசதி, பெரும்பாலான நாடுகளில் உண்டு. அமெரிக்காவின் மாநிலங்கள் பலவற்றில் தமிழ் அச்சிதழ்கள் வெளிவருகின்றன. இலவயமாகவும் வழங்கப்படுகின்றன. கனடாவின் தமிழ்ச் சூழல் படைப்பாளிகளின் வாய்ப்புலகமாகும்.

ஐரோப்பாவில் தமிழ் வாழ்கிறது. தமிழ்ப் படைப்பாளிகளுக்குக் குறைவேயில்லை. அரபுலகம் தமிழ்ப் படைப்பாற்றலை வளர்க்கிறது. ஆஸ்திரேலியாவிலும் நியுசிலாந்திலும் உற்சாகமான சூழலில் தமிழ்ப் படைப்பாளிகள் உளர்.

வெளியிடுதல்

உலகத் தமிழரின் படைப்பாக்கங்கள், நான்கு நிலைகளைக் கண்டு வருகின்றன.

எல்லை கடந்த எணினி ஊடகத்தில் வலைப்பூவாக, மின் இதழாக வெளியீடாதல் முதல் வகை. வலைப்பூக்களும் மின்னிதழ்களும் எணினி சார்ந்த வெளியீடுகளும் உலகத் தமிழரின் படைப்புத் தாகத்தின் வெளியீட்டுத் தேவையை நிறைவு செய்கின்றன. நாட்டு எல்லைகளைக் கடந்து, எங்கும் விரிந்த வாசகர் வட்டத்தைப் பெறுகின்றன. உடனுக்குடன் பின்னூட்டங்களையும் கருத்துரைகளையும் பெறுவதால் படைப்பாளிக்கு ஊக்கமும் உற்சாகமும் பிறக்கின்றன.

அந்தந்த நிலப்பகுதிகளில் அச்சாகிப் பதிப்பாகி வெளியீடாதல் இரண்டாவது வகை. அச்சகமும் பதிப்பகமும் புத்தக விற்பனை நிலையங்களும் உலகத் தமிழர் வாழ்விடங்களில் பரவியுள்ளன. படைப்பாளிகளை இவை ஊக்குவிக்கின்றன. அச்சிட்ட நூல்களின் வெளியீட்டு விழாக்களை நடத்துவதால் படைப்பாளிகள் மகிழ்கின்றனர். ஏனைய சமூக நிகழ்வுகளைப் போலப் புத்தக வெளியீட்டு விழாக்களுக்குப் போவதைக் கடமையாகக் கொள்ளும் வழமை பெருகி வருகிறது. இவ்வாறு உலகெங்கும் அச்சிட்டுப் பதிப்பித்து விற்பனையாகும் நூல்கள், தாய் நிலத்தில் விற்பனையாவது மிக மிகக் குறைவு. தாய் நிலத்தில் சந்தையைத் தேட முடியாதவாறு உயர்ந்த விலை இருப்பதே முதற் காரணம்.

தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் அச்சாகிப் பதிப்பாகி வெளியீடாதல் மூன்றாவது வகை. தாய் நிலத்தில் தமக்கு உரிய இடம் உண்டா? என்ற வினா, உலகத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உண்டு. எனவே தமிழ்நாடு, புதுச்சேரி, தமிழீழம் தழுவிய நிலப் பரப்பில் வாழும் மக்களிடையேயும் நூலகங்களிலும் தம் ஆக்கங்களைக் கொண்டுசெல்ல விரும்பும் உலகத் தமிழர், தென்னிந்தியாவிலும் தமிழீழத்திலும் அச்சிட்டுப் பதிப்பிக்கும் வழிகளை நாடுவர். கடந்த சில ஆண்டுகளில் தோராயமாக 3,000 தலைப்புகளில் உலகத் தமிழர் நூல்கள், தாய் நிலத்தில் அச்சிட்டுப் பதிப்பித்து விற்பனையாகி வருகின்றன.

வெளியிடாமலே முடங்கிக் கிடக்கும் உலகத் தமிழர் படைப்புகள் நான்காவது வகை.

முடுக்கிய வேகத்தில்

கடந்த 50 ஆண்டுகளாக மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடைபெற்று வரும் இலக்கிய முயற்சிகளின் வேகம், அதற்கு முந்தைய 50 ஆண்டுகளில் இருக்கவில்லை. ஏனைய உலகத் தமிழரின் இலக்கிய முயற்சிகளின் வேகமும் முடுக்கிய நிலையிலேயே உள்ளது.

உலக மொழிகளுக்குச் செவ்விய தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதுடன் புதிய படைப்புகளையும் எடுத்துச் செல்லும் பணியில் உலகத் தமிழர் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னோடியாக அந்தந்த மொழிகளுக்கான அகராதிகள் வெளியாகி வருகின்றன. உலக மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தருகின்ற பணியும் இடையறாது நடைபெறுகிறது.

அந்த நாட்டு வேர்களில் ஊறும் நீரையும் உரத்தையும் ஏற்றனர். தத்தம் உழைப்பைப் பச்சையமாக்கினர். பண்பாட்டுக் கூறுகளை மரபணுக்களாக்கினர். வளர்ச்சியைக் கனிகளாக்கித் தந்தனர். தமிழ்ச் சுவை மாறாது வாழ்கின்றனர். உலகெங்கும் பரவிய தமிழரின் இலக்கிய முயற்சிகளில் தமிழ்மை பேணி வருவதால் உலக மொழியாகத் தமிழ் வாழ்ந்து வருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உலகமயமாகும் தமிழிலக்கிய முயற்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *