நான், அவள், வானத்து நிலவு

14

திவாகர்

full moon

நான் அவளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் பேசுகின்ற நுனிநாக்கு ஆங்கிலத்தின் ஸ்டைல், அந்த மொழியில் அவளுக்கிருந்த ஆளுமை, அநாயாசம் மிகவும் ஈர்த்தது. மேடையில் ஒரு கையில் தனக்குப் போடப்பட்ட பொன்னாடை அலட்சியமாக தொங்கிக் கொண்டிருக்க, அடுத்த கை தான் எழுதிவைத்த குறிப்புகளை அடக்கிவைத்துக்கொள்ள, சிரித்த முகத்தை ஒரு போதும் மாற்றாமல் தொடர்ந்து அப்படியே வைத்துக்கொள்ள எப்படி இவளால் முடிகிறது..! அவள் என்ன பேசுகிறாள் என்பதையும் மறந்து என் நினைவு சில கணங்கள் சற்று கடந்த காலத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பியதுதான்.

இதே விஜயவாடாவில் நானும் இவளும் சேர்ந்தே மேடையில் பேசிய நாட்கள் உண்டு. தமிழில் சொல்லாடலில் அந்தச் சமயத்தில் வேண்டுமென்றே சற்று தூக்கலாகப் பேசிவிட்டு அவள் மேடையில் பேசும் கொச்சைத் தமிழை அப்போதெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்த புண்ணியம் (அல்லது பாவம்) எனக்குண்டு. அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து நக்கலும் செய்வதால் என் மீது கோபமும் ஒரு மாதிரியான பொறாமை கூட இவளுக்கு உண்டு என்று எண்ணிக்கொள்வேன்.

ஆனால் இன்று அவள் இருக்கும் நிலையும் அவளுக்குள்ள செல்வாக்கும் அவளை எங்கேயோ கொண்டுபோய் நிறுத்திவிட்டன என்பது உண்மைதான். அவள் என்ன பேசுகிறாள் என்பதை என் நோட்டுப் புத்தகத்தில் என் கை பாட்டுக்கு ஏதோ அப்படியே கிறுக்கிக்கொண்டாலும் நிச்சயமாக அவள் பேச்சை என்னால் ஆழ்ந்து கவனிக்க முடியவில்லை. அவள் முகம் இன்னமும் அந்த வானத்து நிலவைப் போலவே மாறாமல் அழகை அப்படியே தக்கவைத்துக்கொண்டிருக்கிறேன் பார் என்று என்னை ஏளனம் செய்வது போல இருந்தது. அழகான பெண், அத்துடன் அறிவையும் சற்றுக் கூடுதலாகப் பெற்றவள் என்ற பெயர் அந்தக் காலத்திலேயே உண்டு. காலம் மிக வேகமாகச் செல்லக்கூடியதுதான் என்றாலும் அப்படிப் போகும்போது பல பாடங்களையும் சொல்லித் தந்துகொண்டே போகுமே.. அந்தப் பாடங்களின் முதிர்ச்சி அவள் பேச்சினில் இருந்தது. அவ்வப்போது சபையில் ஏற்படும் கைதட்டல்கள் அவளைச் சந்தோஷப்படுத்தியதுதான் என்றாலும் சலனப்படுத்தவில்லை என்பது அவள் பேச்சின் அழகான தொடர்ச்சியில் தெரிந்தது. ஆங்கிலம் என்னமாய்ப் பேசுகிறாள்..!

விஜயவாடாவின் வெய்யில் எத்தனைக்கு எத்தனை சூடோ அத்தனைக்கு அத்தனை சூடாக இருந்துகொண்டு என்னை ஒருநாள் அழைத்தாள், அவள். கண்களில் கோபமா அல்லது எரிச்சலா என்ற உணர்ச்சி புரியாமல் அந்தக் கடிதத்தைக் காண்பித்தவுடன் கொஞ்சம் உள்ளுக்குள் பயம் என்றாலும் உண்மையில் வெளியில் காட்டாமல் சற்று திமிராகவே பார்த்தவன் நான். ஏனெனில் அந்தச் சமயத்தில் உண்மைக் குற்றவாளி என் நண்பன். நான் சற்று உதவி செய்தவன். அவ்வளவே.. உண்மைக் குற்றவாளியே உண்மையை ஒப்புக்கொண்டபின் எனக்கு இதற்கு இவளிடம் அச்சம் என்ற வீம்பு, அந்தக் கால இளமையில் நம்மோடு உடலோடு ஒட்டியதுதான்.

“இதை நீதானே எழுதினே?”

“ஓஹோ.. அந்த லூசு சொல்லிட்டானா.. சரி.. என்ன இப்போ?”

“அவன் லூசுதான்.. ஆனா எழுதினவன் நீ.. உனக்குக் கொஞ்சம் கூட நாகரீகம் தெரியலே.. ஸ்டேஜ்ல பேசறச்சே மாத்திரம் பாரதி.. பெண்கள்.. சுதந்திரம்னு பேச வேண்டியது.. நான் பேசறச்சே மட்டும் ஹோஹோன்னு கிண்டல் பண்ணவேண்டியது”

“சரி.. இதுக்கு ஏன் இப்போ சண்டை போடறே.. பிடிக்கலேன்னா, பிடிக்கலேன்னு சொல்லிட்டுப் போயேன்.. கம் ஆன்.. இதுக்கெல்லாம் சண்டை பிடிப்பாங்களா..”

இது நான்.

ஆனால் அவள் விடவில்லை. கிடுக்கிப் பிடியாக என்னைக் கேள்விகள் கேட்டது இன்னமும் நினைவில் உள்ளது.

விஷயம் ரொம்ப சின்னதுதான்(?). குமார் அவள் மேல் ஆசைப்பட்டதும், இவள் இவனை அடிக்கடி பார்த்த பார்வையும் இவனுக்கு உகந்ததாகத் தெரியவே, ஒரு காதல் கடிதம் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்ற, அவசரம் அவசரமாக என்னிடம் வந்து ஒரு கடிதம் எழுதித் தரக் கேட்டான். நான் இவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி விஷயத்தில் கோர்ட் குமாஸ்தாவாகத் தெரிய ஆரம்பித்தேனோ என்னவோ, அவன் கேட்கவும்.. வேறு வழியில்லாமல் இரண்டு மணிநேரம் மூளையைக் கசக்கி ஆங்கிலத்தில் ஒரு பியூடிஃபுல் லவ் லெட்டெர்’ (அப்படித்தான் குமார் அதைப் படித்துவிட்டு திருப்தியோடு அப்போது வர்ணித்தான்) ஒன்று எழுதிக் கொடுத்தேன். இவனும் ரொம்பவும் பயந்துகொண்டேதான் கொடுத்திருக்கிறான். அதை சாவகாசமாக வாங்கிப் படித்தவள், ஏதோ புரிந்தது போல இதை எழுதியவனைக் கூப்பிடு, என்று கோபமாக சொன்னாளாம். இவனுக்குக் கொஞ்சம் ஓவர் ஷாக்.. என்னிடம் வந்து ‘டேய்.. ரொம்ப புத்திசாலிப் பொண்ணுடா.. இதைப் படிச்சவுடனேயே நான் எழுதலேன்னு’ கண்டுபிடிச்சுட்டாடா’ என்று அசடு வழிந்தபோது அவனை திட்டிக்கொண்டே கேட்டேன்.. ‘அத வுடுடா.. ரிசல்ட் என்னாச்சு? அதைச் சொல்லுடா’ என்ற போது உதட்டைப் பிதுக்கி சோகத்தைக் காண்பித்தான்.

நண்பனின் காதல் தோல்வியில் முடிந்தது எனும்போது அந்தப் பெண்ணின் மீது கொஞ்சம் கோபம்தான். அந்தக் கோபத்தை வேண்டுமென்றே முகத்தில் காண்பித்துக்கொண்டுதான் அவளைப் பார்க்கப் போனேன்..

“இதோ பார். அன்னிக்கு மேடைல நான் தமிழ்ல பேசறப்ப கிண்டல் பண்ணி சிரிச்சீங்க இல்லே.. இப்போ உன்னோட இங்கிலீஷ் இவ்வளவு மோசமா இருக்கே.. இதை யார்கிட்ட காமிச்சுக் கிண்டல் பண்றது..”

ஓ.. இவள் கிண்டலுக்குக் கோபத்துக்கும் காரணம் தெரிந்தது.

“என்னோட இங்கிலீஷ்ல குறையா.. என்னா பெரிய குறை.. எங்க கண்டுபிடிச்சே”

“அதை நீயே படிச்சுப் பார்”

“நான் ஏன் படிக்கணும்.. நக்கீரர் நீதான்.. நீயே சொல்லு..”

‘யூ ஆர் ஸோ டிலைட்ஃபுல் டு மை ஐய்ஸ் லைக் எ மூன் இன் தி ஸ்கை’ன்னு எழுதியிருக்கே’ இது என்ன அர்த்தம். மனசுல பெர்ரிய ஷேக்ஸ்பியர், ஷெல்லி னு நினைப்போ.. கவிதை ன்னு நினைச்சுண்டு இப்படி தப்பு தப்பா இங்கிலீஷ் எழுதினா எப்படி?

எனக்கு முதலில் புரியவில்லை. இதில் என்ன தப்பு.. இரவில் காணும் சந்திரனைப் போல என் கண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறாய், என்று தமிழில் யோசித்து எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதிய வரிகள்.

“இதுலே என்ன மோசத்தைப் பார்த்துட்டே..”

“முதல்லே இப்படி எழுதவே கூடாதுன்னு உனக்குப் புரியலியா.. இட் இஸ் ராங்க் காம்பினேஷன்.. முதல்லே விஷயத்தைப் புரிஞ்சுண்டு நல்லா இங்கிலீஷைப் படிச்சுட்டு அப்புறம் லவ் லெட்டெர் எழுது”

“ஒரு தப்பும் இல்லே.. இங்கிலீஷ் உனக்குப் புரியலேன்னு சொல்லிட்டுப் போயேன்..” வழக்கப்படி என் நக்கலைச் சற்று தாராளமாகக் காண்பித்தேன்.

“ஹூம்!” என்று கண்களால் எரிக்கப் பார்த்தவள், ஏதும் பதில் சொல்லாமல் கோபத்தை அப்படியே முகத்தில் தேக்கிக்கொண்டே போய்விட்டாள். எனக்கு அவள் சொன்ன விதம் புரியவில்லை. ஏன் இப்படி ஒரு சின்ன விஷயத்துக்கு கோபப்பட வேண்டும் என்றும் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இது சரியான உவமைப் பொருத்தம்தான். நன்றாக யோசித்து யோசித்து எழுதின விஷயம் ஆயிற்றே.. இவள் முகத்துக்கு என்ன குறைச்சல்.. ஆனால் ஏன் இப்படியெல்லாம் அவள் இதில் தப்பு காண வேண்டும். காதல் கடிதம் எழுதுவது தவறுதான்.. ஆனால் ஒரு ஆசிரியை போல எழுத்தில் குற்றம் குறை எல்லாம் காண்பார்களோ..!

ஆனால் நாளாவட்டத்தில் அவள் என்னிடம் அடியோடு பேசுவதை நிறுத்திவிட்டாள். எனக்கும் இது சகஜமாகிவிட்டது. அவளும் எங்கு என்னைப் பார்த்தாலும் எதுவுமே பேசமாட்டாள். நிலவு முகம் பற்றியோ, அந்தக் கடிதம் விஷயம் பற்றியோ, நான் எழுதினது நிச்சயம் பிடிக்கவில்லை இவளுக்கு.. பிடிக்காவிட்டால் போகட்டுமே..எனக்கு இந்த விஷயத்தில் எந்தவித வருத்தமுமில்லை.. ஆனால் இந்த காம்பினேஷன் ஏன் சரியில்லை, எப்படி ராங்க், தவறு என்று ஒரு விவாதத்துக்காவது வெளியே சொல்லி இருக்கலாம்தான். அடுத்த ஒரு வருடத்தில் ஒரு நல்ல வங்கியில் சென்னையில் வேலை கிடைக்கவே விஜயவாடாவை விட்டுச் சென்றுவிட்டாள். பிறகு கல்யாணமும் செய்துகொண்ட வரைக்கும் எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் காதல் கடித நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்கள் எந்த மேடையும் ஏறவில்லை. அப்படி சந்தர்ப்பமும் கூட வாய்க்கவில்லை.

ஆனால் இப்படி இருபத்தைந்து வருடங்கள் கழித்து இவளை மறுபடி பார்ப்பேன் என்று நான் நினைக்கவில்லைதான். அவள் வங்கி ஏதோ சில கிராமங்களைத் தத்து எடுத்திருப்பதால் அந்த நிகழ்வினை ஒரு மிகப் பெரிய விழாவாக விஜயவாடாவில் நடத்த, அந்த நிகழ்ச்சியில் வங்கியின் தலைமை அதிகாரி என்ற நிலையில் மகாலட்சுமியான இவள் வந்திருக்கிறாள். வங்கியிடமிருந்து தினம் ஒரு விளம்பரம் என்று எங்களுக்கு வரும்போது வங்கி நடத்தும் எந்த விழாவையும் கவர் செய்யவேண்டும் என்பது எங்கள் பத்திரிகையின் எழுதப்படாத ஒரு விதியென்பதாலும், சாதாரணமாகப் பத்திரிகையாளருக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை மிகப் பெரிதாக இருப்பதாலும் ஏன் அதை விடுவானேன் என்றுதான் ஒரு பத்திரிகையாளனாக அந்த விழாவில் ஆஜரானேன்.

முதலில் சென்றபோதே அவளுக்கு என்னை வங்கி அதிகாரிகளே அறிமுகப்படுத்தினார்கள். அவளுக்கும் எனக்கும் பரம சந்தோஷம்.. தெரிந்தவர்கள், அதுவும் விஜயவாடாவில் இளமைக் காலத்தில் சிநேக (?) மனப்பான்மையோடு இருந்தவர்கள், அதே ஊரில் இத்தனை வருடங்கள் கழித்து மறுபடியும் சந்திக்கிறோம் என்ற முறையில் அந்த மகிழ்ச்சியை நான் பரவலாகவே முகத்தில் காண்பித்துப் பேசினேன். ‘யூ ஷுட் கவர் மை ஸ்பீச் ப்ராபெர்லி’ என்று சிரித்துக்கொண்டே எல்லோர் முன்னிலையிலும் உரிமையுடன் பேசிவிட்டு மேடையேறி அமர்ந்துகொண்டாள்.

அவள் பேசிவிட்டு அமர்ந்ததும், பிறகு வேறு ஏதேதோ நிகழ்ச்சிகள் நடப்பதும் என்னுடைய போடோகிராபர் வேலையாதலால், நான் எழுந்து வெளியே வந்தேன். அங்கே அவன் வந்தான், என் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

“சார்.. நான் ஸ்ரீனிவாஸ்.. மகால்ட்சுமி மேடமோட பி.ஏ.. நீங்க ஏதோ மேடம் கிட்ட இண்டர்வியூ கேட்டிருந்தீங்களாம்.. மேடம் சொன்னாங்க.. அவங்க இன்னிக்கு டின்னர் சாப்பிடும்போது பேசலாமான்னு கேட்கச் சொன்னாங்க.. போட்டோகிராபர் வேணாம்னு சொல்லச் சொன்னாங்க.. என்ன சார்.. ஓகேயா? நான் அர்ரேஞ்ச் பண்ணிடறேன்.. ஒரு ஏழு, ஏழரை மணிக்கு ஆரம்பிச்சீங்கன்னா ஒன்பது மணிக்கு முடிச்சுடலாம்.. அவங்க எப்பவுமே ‘எர்லியா படுக்கப் போயிடுவாங்க’”

எல்லாம் தெரிந்த ஸ்ரீனிவாஸ், இப்படிக் கேட்டதுமே எனக்கு ஆச்சரியம். நான் அவளிடம் இண்டர்வியூ கேட்கவே இல்லை.. ஆனாலும் பழைய தோழி ஒருத்தி கூப்பிடுவது போல நினைத்துக்கொண்டேன். அப்படியே சரி என்றேன்.

அவள் நெருக்கத்தில் எதிர் இருக்கையில் அமர்ந்தபோதுதான் கவனித்தேன். காலையில் பார்த்த சிரிப்பு முகம் மறைந்துபோய் இருந்ததை. உடனடியாக விஷயத்துக்கு வந்தாள். “எப்படி இருக்கீங்க.. உங்களையெல்லாம் பார்க்க முடியாதுன்னுதான் எப்பவாவது நினைச்சுப்பேன்..” என்றவள், நண்பர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் விசாரித்தாள். குமாரை ஏனோ விசாரிக்கவில்லை. நானும் கவலைப்படவில்லை. ஆனால் பழையபடியே பேசவேண்டுமென்றும் நமக்குள் எதற்கு மரியாதை என்று நான் சொன்னதும் அவளுக்குள் கொஞ்சம் சுறுசுறுப்பு வந்திருக்க வேண்டும்.

“ரொம்ப தொல்லையான வேலைலே மாட்டிண்டு முழிக்கறவங்க நாங்கப்பா.. ஆமாம்.. ஏதோ இண்டர்வியூ கேட்டாயாமே.. என்னோட இண்டர்வியூ எல்லாம் எதுக்கப்பா..”

நான் மறுபடியும் ஆச்சரியப்பட்டேன். இவள் புத்திசாலிப் பெண்தான்.. ஆனால் இப்படியெல்லாம் வேஷம் போட வேண்டுமா.. நான் நேரடியாகவே கேட்டேன்.

“எனக்கு அப்படிச் சொன்னதே உன்னோட பி.ஏ ஸ்ரீனிவாஸ்தான்..”

“ஓ.. அவனா அப்படி சொன்னான்? நான் சாதாரணமா கேட்டேன்.. இண்டர்வியூ வேணும்னா கொடுத்துடலாம்னு.. ஓகே.. ஓகே.. சரி சொல்லு நீ எப்படி இருக்கே..”

“என்னைப் பத்தி இருக்கட்டும். உன்னைப் பத்திச் சொல்லு.. உன்னை நான் எதிர்பார்க்கலைதான்.. மகாலக்ஷ்மி, சீஃப் ஜெனரல் மானேஜர்னா யாரோ ரொம்ப பெரிய வயசான அம்மாவா நெனச்சுட்டேன்.. ம்ஹூம்.. நீ அப்படியேதான் இருக்கே..!.”

“ரொம்ப தேங்க்ஸ்பா.. உண்மையைச் சொல்லட்டுமா.. இன்னிக்கு உன்னை இங்கப் பாத்ததுமே எனக்கு அந்தப் பழைய ஞாபகங்கள்லாம் வந்துடுத்து..”

“எந்தப் பழைய ஞாபகம்..”

வேண்டுமென்றே சீண்டினேன். ஒருவேளை அந்தப் பழைய காதல் கடிதத்தைப் பற்றிப் பேசுகிறாளோ.. அவளே சொல்லட்டுமே.. ஆனால் அவள் கை இயல்பாக செய்வது போல முடியைக் கோதிக்கொண்டே இருக்க, அவள் பொய்க் கோபம் கொள்வது போல பார்த்தாள்.

“என்ன நீ ஒண்ணுமே தெரியாதது போல பேசறே.. நிஜமாகவே மறந்துட்டியா.. இல்லை சும்மா நடிக்கிறாயா.. ஹேய்.. உங்க விளையாட்டையெல்லாம் நான் அந்த காலத்துல அனுபவிச்சவ..”

நான் முதலில் அவள் உரிமையை ஆனந்தமாக நினைத்து மதித்தேன். “அதெல்லாம் அந்தக் காலம்தான். இந்தக் காலத்துல என்னோட ஜாப் எல்லாரையும் மதிக்கச் சொல்றது..”

“அது சரி.. காலைலதான் பார்த்தேனே.. என்ன இருந்தாலும் இந்த காலத்துல ஜர்னலிஸ்ட்டுகளுக்கே கொஞ்சம் ஊர்ல எல்லாரையும் விட மதிப்பு கூடத்தான்..”

‘அட.. இங்கே கூட இவளுக்கு இதில் பொறாமையா..’ என் மனம் உள்ளுக்குள் நினைத்தாலும் அவளிடம் வெளிக்காட்டாமல்தான் பேசினேன்.

“அப்படின்னு உனக்குப் படறது.. வெளிப்படையா சொல்லணும்னா, ஏதாச்சும் ஏடாகூடமா எழுதிடக் கூடாதே’ன்னு ஒரு எச்சரிக்கைத்தனம்தான்.. வேற ஒண்ணும் இல்லே.. அத்தோட நான் சாதாரணமாகவே எல்லார்கிட்டேயும் எளிதாகப் பழகறவன்.. அவ்வளவுதான்..”

“நீ ரொம்ப மாறிட்டேப்பா..”

“அப்படியா.. நீ கூடத் தான் ரொம்ப மாறிட்டே..”

“நான் என்ன மாறிட்டேன்.. அப்படியே இருக்கேன்னுதான் என் பழைய தோழிகள் சொல்லறாங்க”

டின்னருக்கான ஆர்டர், அவளே கொடுத்தாள். அந்தச் சமயத்தில் அந்த எளிய ஒளியில் அவளைப் பார்த்தேன். நல்ல அழகுதான். உடல் சற்று பருமனாக மாறினாலும் இவள் முகத்தின் அழகு மாறவே இல்லைதான்.. அதே வட்ட வடிவும், பிதுங்கிய கன்னங்களும், அகல விழிகளும்.. அந்தக் காலக்கட்டத்தில் இரவின் நிலாவுக்கு ஒப்பிட்டு வர்ணனை செய்தது நினைவுக்கு வந்தது.. அதை இவள் ஒப்புக்கொள்ளாமல் அதை நாகரீகமற்றது என்று வீம்பு பிடித்தாள்.. காம்பினேஷன் சரியில்லை என்று சொன்னவள், ஏன் சரியில்லை என்ற விளக்கம் சொல்லாமல் போனவள்… எனக்குள் சிரிப்பு வந்தது. ரசனையே இல்லாதவள்.

“என்னப்பா.. என்னையே பார்த்துண்டுருக்கே.. என்னென்ன சேஞ்ச் இவள்ட்ட வந்திருக்குன்னு யோசிக்கிறியா.. நோ சேஞ்ச்.. அதே பழைய மகாலஷ்மிதான்.. ஐ மீன் லக்ஷ்மிதான்.. விஜயவாடா ரொம்ப மாறிப் போச்சு இல்லே.. ஆனா எனக்கு என்னவோ அதே பழைய மாதிரி ஆயிட முடியாதான்னு ஒரு ஏக்கம் அப்பப்ப வரும்..”

எதுக்கு, மறுபடியும் குமார் மாதிரி ஒரு நண்பன் காதலிக்க, அவனுக்காக என்னை மாதிரி ஏமாளி எவனாவது வர்ணித்து, காதல் கடிதம் கொடுக்க, அந்தக் கடிதத்தில் ஏதாவது எழுத்துப் பிழை இருக்கான்னு பார்க்கவா..’ என்று கேட்கலாம் என நினைத்தவன், பேச்சை மாற்றிவிட்டேன்..

“எல்லோருக்கும் அவங்க வாழ்க்கைல ஒரு வசந்த காலம் இருக்கும்.. அத விடு.. இன்னிக்கு மார்னிங் நிஜமாகவே உன் ஸ்பீச் ரொம்ப நல்லா இருந்தது. நான் ரொம்ப நல்லா ரசிச்சேன்.. ரொம்ப நேசுரல் டாலெண்ட்.. வாழ்த்துகள்.. நிஜம்மா ‘ஆ’ன்னு உன்னையே பார்த்துண்டு இருந்தேன் தெரியுமா.. எக்ஸெலெண்ட் ப்ரசெண்டேஷன்”

அவள்தான் என்னை இப்போது ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

“மேடைல உன் கூட பேசறச்சே அந்தக் காலத்துல எப்படிப் பேசுவேன்னு எப்படியெல்லாம் கிண்டல் பண்ணியிருக்கே.. ஐய்யோ.. நினைச்சுப் பாத்தா கூட பயப்படுவேன்பா.. இப்போ இத்தனை வருஷம் கழிச்சு நீ சொல்லறச்சே நிஜமாவே ஒரு ஆத்ம திருப்தி ஏற்படுது.. ஆங்.. இப்போ புரிஞ்சுடுச்சு..”

“என்ன புரிஞ்சுடிச்சு?”

“காலைல உன்னைப் பாக்கறச்சே ஒரு குழப்பம் என் மனசுல இருந்துது.. நான் மேடைல பேசறதை எல்லாம் நீ கேட்கிறே.. ஆனா அப்போ உன் மன நிலை எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன்.. கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு.. அதே லக்ஷ்மிதானே.. அப்போ மாதிரிதான் பேசறா’ன்னு நினைச்சுக்குவியோ’ன்னு உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயந்தேன் தெரியுமா.. ஓ! மை காட்! இப்போ நீ என்னைப் பாராட்டறே பார்த்தியா.. இப்போதான் என் கன்ஃபூஷன் க்ளியர் ஆச்சு.. நீ சீரியஸ்ஸாதான் சொல்லறியா.. நான் நல்லாப் பேசினேனா?.”

“ஹேய்.. கூல்.. நிஜம்மாவே என் மனசுலே இருந்துதான் சொல்லறேன்..”

விநோதமாகப் பார்த்தேன் அவளை.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இதற்குப் போய் இவ்வளவு பதற்றப்பட வேண்டும்? இவளிடம் இயற்கையாகவே உள்ள கூடுதல் அறிவு, கால ஒட்டத்தில் பக்குவப்பட்டுள்ளது என்பதை இவள் அறிய மாட்டாளோ..? அத்தனை பேர் கையை தட்டிப் பாராட்டியது இவளது தலைக்கு ஏறவில்லைதான். ஆனால் நான் பாராட்டியது இவளுக்குப் பெரிதாகத் தோன்றியிருக்கிறது.. சரி, இந்த இனிய நேரத்தில் அந்த நிலவு காம்பினேஷன் பற்றிய இவள் விளக்கமும் கேட்டு விடலாமா.. ஏன் அன்று அதைத் தவறு என்று என்னிடம் கோபித்துக் கொண்டாள் என்று கேட்டுவிடுவது நல்லதுதானே.. இப்போது உள்ள சந்தோஷ வேளையில் இதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டாள்.. இவள் என்ன பதில் சொன்னாலும் வாழ்க்கையில் நெடுநாள் இருக்கின்ற ஒரு சந்தேகம் நமக்கு நிவர்த்தியாகுமே.. ஆனால் இப்போது வேண்டாம்.. சாப்பிடும்போது கேட்கலாம்..

ஆனால் சாப்பிடும்போது கேட்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. அவள் குடும்பம் பற்றிய சில நிகழ்வுகள், கணவன் மனைவி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வைக்காத அரசாங்க வேலைகள், இட மாற்றங்கள், ஒரே மகள் கடந்த நான்காண்டுகளாக அமெரிக்காவில் இன்னமும் படித்துக் கொண்டே தனியாக இருப்பது.. மெக்கானிகலாக செல்லும் அலுத்துப் போன அலுவலக வாழ்க்கை என கொஞ்சம் வாட்டமாகவே லக்ஷ்மி சொல்லும்போது அவள் தொண்டை அடைப்பதையும், அவள் தன் துக்கத்தைச் சாமர்த்தியமாக மறைத்துக்கொள்ள தண்ணீர் அருந்தி முகத்தைத் துடைத்துக்கொள்வதிலும் நன்றாகவே அவள் வாழ்க்கை புரிந்தது. இந்த நிலையில் பாழாய்ப்போன என் சந்தேகத்தை எப்படி கேட்பது.. கேட்கவில்லை.. நிலவு முகம் வாடியிருக்கும் நிலையில் வாட்டம் ஏன் என்று கேட்டு ஆறுதல் சொல்லத்தான் வேண்டுமே தவிர நிலவு முகத்துக்கு இலக்கியமும் வர்ணனையும் சந்தேகமாகக் கேட்டு வைத்தால் இந்தச் சமயத்தில் எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். இப்போது வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம்.. அப்படி இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமா..?

முடியும் தறுவாயில் சரியாக வந்தான் ஸ்ரீனிவாஸ். என் பக்கத்தில் அமர்ந்தான். இண்டர்வியூ நன்றாக அமைந்ததா என்று வேறு கேட்டு வைத்தான். இருவரும் சிரித்தோமே தவிர அதற்கான பதில் சொல்லவில்லை.

மூவரும் எழுந்துகொண்டு வெளியே வந்தோம்..

ஸ்ரீனிவாஸ் வெளியே விடை கொடுக்கும்போது என்னிடம் உரிமையோடு பேசுவது போல பேசினான்,

“சார்! அத்தோட இன்னிக்கு நடந்த விழாவைப் பத்தி உங்க தனி அபிப்பிராயத்தையும் எழுதணும் சார்.. எதுவா இருந்தாலும் தைரியமாகச் சொல்லலாம் சார்”

இப்படிக் கேட்டவுடன் திடீரென கலகலவென சிரித்தாள் மகாலக்ஷ்மி. “ஸ்ரீனிவாஸ்.. அவரோட தனி ஒபினியன்.. அதுவும் தைரியமாகவா.? ஓ காட்! இப்படியெல்லாம் அவர் செய்யமாட்டார்.. அவர் அபிப்பிராயத்தை மற்றவர் மேலே போட்டுட்டு வீம்புக்குத் தப்பிக்கப் பார்ப்பார்.. அவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அப்படிப்பட்டவரா, தைரியமா இருந்தா யார் யாரோ எப்படியெல்லாமோ மாறியிருப்பாங்க..”

சட்டெனப் புரியவில்லை ஒருகணம். ஸ்ரீனிவாஸ் போலவே நானும் ஆச்சரியத்தோடு அவளைப் பார்க்கும்போதே வானத்தின் மீதுள்ள நிலவைப் பார்த்துக்கொண்டே அவள் காரில் உள்ளே அமர்ந்துகொள்ள, ஸ்ரீனிவாஸ் ஓடிப்போய் முன்னே ஏறிக்கொண்டான்.

எனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியால் சற்று சட்டென வியர்த்துப் போனதையும் அந்தப் புத்திசாலிப் பெண் உணர்ந்திருப்பாளோ..?

==================

படத்திற்கு நன்றி – நாசா

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “நான், அவள், வானத்து நிலவு

 1. கடலாழம் காண முடிந்தாலும் பெண்கள் மனதாழம் காணமுடியாத பேதை இந்த ” நான் “

  ஆமாம் கடைசீ வரையில் தன் பெயரென்ன என்று சொல்லாமலே புத்திசாலித்தனமாக இருந்த கதாநாயகன்
  ” நான் “

  கோட்டை விட்டுட்டீங்களே ” நான் “ சார்

  உங்க மனதாழமும் புரிஞ்சுபோச்சு

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 2. Manam Kasindhu Uruginen.
  Pesaama sapittuttu ‘bye’ sollittu poyirukkanum.
  Car varaikkum poyittu ethukku ippadi ‘mannai; kavvanum?

 3. Beautifully narrated.
  Poor Hero and Clever Heroine.
  Life is just like that. Well written Dhivakar Sir.

 4. கடைசி வரைக்கும் அந்த ஆண் கதா பாத்திரம் யாருன்னு சொல்லவேயில்லையே…!!!

 5. யாருக்கு பரிதாபப்படறதுன்னு தெரியல 🙂 கதை சொல்லியிருக்கும் விதம் அழகு.

 6. அது என்னவோ தெரியவில்லை, பழைய தெரிந்த நபர்களை வெகு காலத்திற்குப் பிறகு பார்க்கும்போது ஒரு வகை பரவசம் தொற்றிக்கொள்கிறது.

  பெண்களின் மனசு, அறிவின் தூண்டுதலால் ஆண்மையை ஆளும்; உணர்ச்சிகளின் விளிம்பில் பெண்மையைக் காக்கும்.இரு பாலினத்தின் உணர்வுகளை யதார்த்தமாக வெளிக்கொணர்ந்துள்ளார், கதாசிரியர்.

 7. ஏனோ தெரியவில்லை, கதைகளில், தோல்வியுற்ற காதல் கதைகள் மிகவும் நன்றாகவே அமைந்துவிடுகின்றன. நல்ல வேலை ‘அழகி’யைப் போல் அழ வைக்கவில்லை உங்கள் கதை.

  நல்ல நடை, அழகான தமிழ், அசத்திவிட்டீர்கள் ஆசிரியரே….

  வெற்றி பெற்ற காதல் கதை ஒன்றை எழுதுங்களேன் பார்க்கலாம்.

 8. பெண்மைதான் பேசாது. இந்தக் கதாநாயகனுக்கு என்ன வந்தது. .
  மனசுக்குப் பிடித்தவளிடம் தைரியமாகச் சொல்லி இருக்கலாம்.:(
  அப்போ கதை முடிந்திருக்கும் . இவ்வளவு அழகாக யதார்த்தமாக இருந்திருக்காது.!!–
  அன்புடன்,
  ரேவதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *