கோவாவில் கோவில் கொண்ட மங்கீசன்

0

விசாலம்

mangesh

சுற்றிலும் இயற்கைக் காட்சிகள், மலைக் குன்றுகள், பச்சைப் பசேலென்று தாவர வகைகள், காடுகள்… ஆகியவை நிறைந்த இடம்… கோவாவில் மங்கேஷி என்ற பெயரால் புகழ் பெற்ற ஒரு ஸ்தலம். இசைக்குயில் திருமதி லதா மங்கேஷ்கர் என்றால் இந்த இடம் ஞாபகம் வருகிறது.

1960இல் போர்ச்சுக்கீசியர் கோவாவை ஆக்கிரமித்துக்கொண்டதில் “குஷஸ்தலை” என்ற இடத்தில் இருந்த புகழ் பெற்ற ஒரு கோயில் நாசமானது. ஆனால், அங்கு இருந்த மக்கள் ஜாக்கிரதையாக அந்தக் கோவிலில் இருந்த சிவ லிங்கத்தை எடுத்து வேறு ஒரு இடத்தில் பத்திரப்படுத்தினார்கள். அங்கு இருந்த ஹிந்து அரசரும் இதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார். அந்த இடம்தான் தற்போது மங்கேஷி எனப் பெயர் பெற்றிருக்கிறது

இந்தக் கோயிலுக்காகவே, இந்தக் கோவிலின் சிவன் மங்கீசன் சேவைக்காகவே தன் உடல் பொருள் எல்லாம் அர்ப்பித்து வாழ்ந்தவர், ஸ்ரீ சுக்தாங்கர் . முதலில் இருந்த குஷஸ்தலையில் ஆலயம் இருந்த இடத்தில் ஒரு தேவாலயம் இருந்தது.

அந்தப் பரமேஸ்வரன் முதலில் ஒரு தென்னங்கீற்றுக் கொட்டகையில்தான் இருந்தாராம். அதை ஒரு கோயிலாகக் கட்ட போர்த்துக்கீசியர்கள் அனுமதி தரவில்லையாம். விடாது போராடி, இதனால் பல தடவை கிளர்ச்சிகள் வந்து, பின் ஹிந்துக்களின் ஒற்றுமையால் அவர்கள் எதிர்ப்பைக் கை விட்டிருக்கிறார்கள்.

1888இல் ஸ்ரீ மங்கீஷ் ஆலயம் கட்டத் தொடங்கி, இரண்டு வருடங்கள் பிறகு, கம்பீரமான தோற்றத்துடன் நின்றது. இதை முழுதாக எழுப்பக் காரணமானவர் திரு.நாயக ஸ்வாமி.

இவர் ஒரு தடவை காசிக்குப் போகப் புறப்பட்டு, நடுவில் மங்கேஷியில் தங்கிக் களைப்பாறினார். அன்றிரவில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் வந்த பரமேச்வரன், “அப்பா நாயக், நீ இப்போது தங்கி இருப்பதே காசி நகரம்தான். நான் விசுவநாதனாக இங்கு இருக்கிறேன்” என்றாராம். கனவு கலைந்தது. நாயக் ஸ்வாமி தான் காசிக்குப் போகும் யாத்திரையை நிறுத்திவிட்டு, மங்கேஷி இடத்தையே காசி என்று நினைத்து, அங்கேயே தங்கித் தொண்டு புரிந்து, தன்னையே அர்ப்பணித்துக்கொண்டார். மராத்தி மொழியில் பல ஆன்மீகப் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “சிவ கீதா” மிகவும் பிரபலமானது.

இனி ஆலயத்திற்குள் செல்வோம்.

ஆலயத்துள் நுழைந்தவுடன் நாம் பார்ப்பது, திருஷ்டி பொம்மை போல் ஒரு உருவம். இதை எல்லோரும் வணங்குகிறார்கள். இதனால் கண் திருஷ்டி,  மனக் கஷ்டங்கள் நீங்கிவிடும் என மக்கள் நம்புகிறார்கள். பின் நாம் காண்பது, ஒரு பெரிய தீபஸ்தம்பம். இதன் ஒளி மிகவும் பிரகாசமாக உள்ளது. இங்கு விழாக்கள் எல்லாம் இரவிலேயே நடப்பதால் இந்தத் தீபஸ்தம்பம் விழாக்களில் ஒளி வீசி, விழாக்களைச் சிறப்படையச் செய்கிறது.

பின் நாம் உள்ளிருக்கும் மண்டபத்தில் நுழைகிறோம். அங்கு நாம் ஒரு பெரிய முரசைக் காண்கிறோம். அதைப் பார்க்க, “நகாடா பஜா” என்ற ஹிந்தி சினிமா பாடல் ஞாபகம். இந்த முரசம் கொட்ட, அந்த ஒலி முழு கிராமத்திலும் கேட்குமாம். இந்த மண்டபத்தில் பல தொங்கு விளக்குகள்  {சாண்டிலியர்} இரவில் எரிய, அந்த மண்டபம் மிகவும் அழகாக நம்மைக் கவர்கிறது. அந்த மண்டபத்தில் கடவுளர் படங்கள் பலவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் உள்ளே நுழைந்து கர்ப்பகிரஹம் வருகிறோம். அங்கு மங்கீசன், சிவலிங்க வடிவில் அருள் புரிகிறார். இந்த லிங்கத்திற்கு அருகேயே ருக்மிணி விட்டலர் இருவரின் சிலைகளும் இருக்கின்றன. அதன் அருகில் மஹாவிஷ்ணு, லட்சுமி உருவங்களையும் பார்க்கிறோம். இதனால் இங்கு மக்கள் சைவம், வைஷ்ணவம் இரண்டும் சம பாவனையோடு பூஜித்து வந்தார்கள் எனத் தெரிய வருகிறது.

சிவலிங்கத்தின் முன் நந்திகேச்வரரும் இருக்கிறார். அவரது அருகில் ஒரு மானிட உருவமும் இருக்கிறது. அங்கேயும் எல்லோரும் வணக்கம் செலுத்துகின்றனர். அதைப் பற்றிக் கேட்டதில் அவர் பெயர் ஸ்ரீதேவ சர்மாவாம். அவர் இந்தக் கோயிலில் வந்து, பல சிறப்பான காரியங்களைச் செய்தாராம். தவிர அவரிடமே பல சித்த சக்திகள் இருந்து, இதனால் மக்கள் மிகவும் வியந்து, அவரையும் தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்து விட்டார்களாம். சிவபெருமான் இவருக்குக் காட்சி கொடுத்திருக்கிறார்.

இவற்றைத் தவிர கணபதி, காலபைரவர், பகவதி அம்மன் சந்நிதிகளும் உண்டு. ஆலயம் முன் அழகான திருக்குளமும் இருக்கிறது. தமிழ் நாட்டைப் போல் இங்கும் தெப்போத்ஸவம் நடைபெறுகிறது. பனாஜி பூண்டா சாலையில் இந்தக் கிராமம் அமைந்திருக்கிறது.

கோவாவிற்குப் போகும் மக்களில் அங்கிருக்கும் கடலின் அழகையும் நீச்சலுடையில் சுற்றும் இள நங்கைகளையும் கையில் பீர் கோப்பைகளையும் கண்டு ரசித்து ஆனந்தப்படுவது, ஒரு ரகம். ஆன்மீகத் தேடலுடன் ஸ்ரீ மங்கீஷ் ஆலயத்திற்கு வந்து, தன்னை மறந்து “ஒ போலோநாத்” என்றும் ” ஓம் நம்சிவாய” என்றும் கோஷமிடுவது, இன்னொரு ரகம்.

கோவாவிற்கு ஓய்வெடுக்க வரும் குடும்பஸ்தர்கள், இந்தக் கோவிலுக்கும் தவறாமல் போய்ப் பார்த்து, அருள் பெறுங்கள்.

==================================

படத்திற்கு நன்றி – http://www.shrimangesh.org

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.