அமெரிக்காவில் இன்னும் இனத் துவேஷமா?

0

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஅமெரிக்க வரலாற்றில் – ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கக் கண்டத்தில் குடியேறி அங்கு ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களை முழுமையாக ஒழித்து, மிஞ்சியிருந்த ஒரு சிலரை அவர்களுக்கென்று தனியிடங்கள் அமைத்து, அவர்களை ஒதுக்கி வைத்தது, ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து அப்பாவி மக்களை அடிமைகளாகக் கொண்டுவந்து இவர்களுடைய வயல்களில் கடுமையாக உழைக்க வைத்தது, சுமார் முந்நூறு வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு விடுதலை கொடுத்தது, அப்படிக் கொடுத்த பின்பும் அவர்களைப் பல வகையாகத் துன்புறுத்தியது, விடுதலை கொடுத்து நூறு வருடங்கள் ஆன பிறகும் வெள்ளையர்களுக்குச் சமமாக அவர்களுக்குக் குடிமையுரிமை வழங்காமல் இருந்தது, பல போராட்டங்கள் நடத்தி அவர்கள் குடிமையுரிமை பெற்றும் இன்று வரை அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவது ஆகிய கொடுமைகள் நடந்த வரலாற்றில் – உள்நாட்டுப் போர் ஒரு பெரிய களங்கம்.

இப்போது நாடுகளில் ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும் மனித உரிமைகளைக் காப்பதற்கும் பாடுபடுவதாக மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, அந்தக் களங்கத்தைத் துடைக்க என்ன செய்திருக்கிறது என்று பார்க்கும்போது, அந்த உள்நாட்டுப் போரின் பின்னணியையே மறந்து, சில தென்மாநிலங்கள் அதைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பதை நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து அப்பாவி மக்களைத் திருட்டுத்தனமாகப் பிடித்து, கப்பல்களில் பொதிமூட்டைகள் போல் அடைத்துக் கொண்டுவந்து, அமெரிக்காவில் விலைகூறி விற்று, தங்கள் வீடுகளிலும் வயல்களிலும் தோட்டங்களிலும் இடுப்பொடிய வேலை வாங்கி, அவர்களுடைய உழைப்பிற்கு மிகக் குறைந்த சன்மானமே வழங்கிய வெள்ளையர்கள், அவர்களைத் தங்கள் சொத்துகளில் ஒரு பகுதியாக நினைத்தனர். காலம் செல்லச் செல்ல, ஒரு சில வெள்ளையர்களாவது இது மிகப் பெரிய பாவச் செயல் என்று உணர்ந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நினைத்தனர்; அதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்தனர்.  இப்படிப்பட்டவர்களில் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஆபிரகாம் லிங்கனும் ஒருவர்.  பிறரைப் போலவே – முதலில் – கருப்பர்கள் வெள்ளை இனத்தவர்களை விட தாழ்ந்தவர்கள் என்று நினைத்தாலும் வெள்ளையர்கள் அவர்களை நடத்தும் விதத்தை வெறுத்து, எதிர்த்து கருப்பர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர் இல்லினாய் மாநில அரசியலில் இருந்தபோதே கருப்பர்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். பின் அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றபோது அவர் பதவியேற்றதும், கருப்பர்களுக்கு விடுதலை கொடுத்துவிடுவார் என்று பயந்து, அப்படி நேரும் பட்சத்தில் கருப்பர்களின் உழைப்பு தங்களுக்கு இலவசமாகக் கிடைக்கப் போவதில்லை என்று உணர்ந்த தென்மாநிலங்கள், அமெரிக்க யூனியனிலிருந்து பிரியத் திட்டமிட்டு ஒவ்வொன்றாகப் பிரிந்தன. டிசம்பர் 20, 1860இல் தென்கரோலினா என்ற தென்மாநிலம் முதல் முதலாக யூனியனிலிருந்து பிரிந்ததாக அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து மற்ற பத்து தென்மாநிலங்களும் பிரிந்து அந்த பதினோரு மாநிலங்களும் தங்களை கான்பிடரேட் மாநிலங்கள் என்று  அறிவித்துக்கொண்டன. அதன்பிறகு யூனியன் மாநிலங்களுக்கும்  கான்பிடரேட் மாநிலங்களுக்கும் இடையே போர் மூண்டது. இதுதான் அமெரிக்க உள்நாட்டுப் போர். இப்போது உள்நாட்டுப் போர் ஆரம்பித்து 150 ஆண்டுகள் ஆகியிருப்பதால் அதை நினைவுகூர்ந்து பெருமையாகக் கொண்டாடச் சில தென்மாநிலங்கள் திட்டம் போட்டு வருகின்றன.

Flag_of_the_United_Statesஆப்பிரிக்க மக்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்ட துறைமுக நகரமான சார்ல்ஸ்டன் (Charleston)  என்னும் ஊரில் ஆணும் பெண்ணும் ஜோடி சேர்ந்து ஆடும் ஒரு பெரிய நடன வைபவம் (Ball) நடத்தப் போகிறார்கள். அந்த வைபவத்தில் ஆட்டம், பாட்டு, குடி உட்பட சிறந்த உணவு வகைகள் இருக்கும். தென்மாநில மற்ற பல ஊர்களிலும் சிறிய அளவில் இம்மாதிரி வைபவங்கள் நடக்கும். மாண்ட்கோமாரி என்னும் ஊரில் அப்போது கான்பிடரேட் மாநிலங்கள் ஜெயித்திருந்தால் அந்த மாநிலங்களுக்கு ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கக் கூடிய டேவிஸ் ஜெபர்ஸன் என்பருக்கு இப்போது பதவிப் பிரமாணம் செய்யப்படுவதாக நடித்துக் காட்டப் போகிறார்களாம்! ஒரு பெரிய ஊர்வலமும் நடக்கப் போகிறது. கான்பிடரேட் படையில் கலந்துகொண்டவர்களின் வழித்தோன்றல்கள் தொலைக்காட்சியில் தங்கள் மூதாதையர் நடத்திய போராட்டம் பற்றி விளம்பரம் கொடுக்கப் போகிறார்களாம்.

அடிமை ஒழிப்பை எதிர்த்த இவர்கள் கருப்பர்களை அடிமைகளாகத் தொடர்ந்து வைத்துக்கொள்ளத்தான் வடமாநிலங்களோடு போருக்குத் தயாரானோம் என்று இப்போது சொன்னால் அது எடுபடாது என்பதை உணர்ந்து “மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்துத்தான் தென்மாநிலங்கள் யூனியனிலிருந்து பிரியத் திட்டம் போட்டன” என்று பொய்வாதம் செய்கிறார்கள். உள்நாட்டுப் போரில் கலந்துகொண்ட படைவீரர்களின் வழித்தோன்றல்களில் ஒருவர் தங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும் வடமாநிலங்களின் படையெடுப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும்தான் தங்கள் மூதாதையர்கள் இந்தப் போரில் கலந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார்.   அமெரிக்க சரித்திரத்தின் களங்கங்களில் ஒன்றாக விளங்கும் இந்த வரலாற்றுச் சம்பவத்தை மாநிலங்களின் உரிமைகள் என்ற பெயரில் மேன்மைப்படுத்த விரும்புகிறார்கள். “மனிதர்களை வாங்கி விற்கும் உரிமை ஒன்றுதான் இவர்கள் கேட்ட உரிமை” என்று கருப்பர்களின் மேன்மைக்காகப் பாடுபடும் கழகத்தின் தலைவர் கூறுகிறார். “வடமாநிலங்கள் அடிமைமுறையை ஒழிப்பதற்காகப் போரில் கலந்துகொள்ளவில்லை.  நாடு இரண்டாகப் பிரியப் போகும் வாய்ப்பைத் தடுக்கத்தான் போரில் கலந்துகொண்டன. ஆனால் தென்மாநிலங்கள் அடிமைமுறை ஒழிப்பைத் தடுத்து நிறுத்தத்தான் தனி நாடாகப் பிரியத் திட்டம் போட்டன” என்று சமூகவியல் அறிஞர் ஒருவர் கூறுகிறார்.

கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் நர்ஸ் ஒரு முறை என்னிடம் “நாங்கள் இப்போதும் இரண்டாம் தரக் குடிமக்கள்தான்” என்றார். அது உண்மைதான் போலும். வேலையற்றோர்களின் எண்ணிக்கையில் கருப்பர்கள்தான் முதலிடம் வகிக்கிறார்கள். பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள் பட்டியலில் இவர்கள்தான் முதன்மை வகிக்கிறார்கள். வறுமைப் பிடியில் இருக்கும் அமெரிக்கர்களிலும் இவர்களுக்குத்தான் முதலிடம்.
1861இல் அமெரிக்கக் கருப்பர்களுக்கு அடிமைத் தளையிலிருந்து விடுதலை அளிக்கப்பட்டாலும் வெள்ளையர்களுக்குச் சமமாகக் குடிமையுரிமைகள் (civil rights) பெற இவர்கள் நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகுதான் இவர்களுக்கென்று தனியாக இருந்த பள்ளிகள், தேவாலயங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை மறைந்து வெள்ளயர்களோடு சேர்ந்து செல்லும் இடங்களாக இவை மாறின. வேலை தேடிப் பெரிய நகரங்களுக்குக் கருப்பர்கள் குடிபெயரவும், வெள்ளையர்கள் இவர்களோடு இருக்கப் பிடிக்கவில்லையாதலால் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தனர். சிகாகோ போன்ற பெரிய நகரங்களில் கருப்பர்களும் வெள்ளையர்களும் தனித் தனியாக வாழ்கிறார்கள்.

இப்போது குற்றம் புரிபவர்கள் கருப்பர்களாக இருந்தால் காவலர்கள் எளிதாக, வேகமாகக் கைது செய்துவிடுகிறார்கள். தண்டனையும் இவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. சிறையில் இருப்பவர்களில் இரண்டில் மூன்று பங்கு கருப்பர்கள்தான். நிறைய கொலை வழக்குகளில் கருப்பர்கள் பலர் தவறு செய்யாமலே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் கொலையுண்டவர் வெள்ளையராகவும் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டவர் கருப்பராகவும் இருந்தால் கருப்பர்களுக்கு நிச்சயமாகத் தண்டனை உண்டு. இப்போது கலிஃபோர்னியாவில் கெவின் கூப்பர் என்ற கருப்பர் மீது ஒரு வெள்ளையர் குடும்பத்தைக் கொலை செய்ததாக நடந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டு, மரண ஊசியின் மூலம் கொல்லப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அந்தக் கருப்பர் குற்றம் செய்யவில்லை என்றும் அவர் மீதுள்ள வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும் சில நீதிபதிகளே அபிப்பிராயப்படுகிறார்கள். “இவரை மரண ஊசி மூலம் கொன்றால் அமெரிக்க நீதித் துறைக்கே இழுக்கு” என்று அங்கலாய்த்து, பத்திரிகையில் பத்தி எழுதும் ஒருவர் அவரை விடுவிக்க வேண்டுமென்று கலிஃபோர்னியா மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவே, உன் மக்களில் ஓர் இனத்தவரை நீ எப்போது மற்றவர்களோடு முழு அளவில் சமமாக நடத்தக் கற்றுக்கொள்ளப் போகிறாய்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *