புகாரியின் ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’
இசைக்கவி ரமணன்
(திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ நூலுக்கு அந்தப் பதிப்பத்தின் முதன்மை ஆசிரியர் இசைக்கவி ரமணன் வழங்கிய பதிப்புரை)
காதல்!
இந்த ஒற்றைச் சொல், எத்தனை எத்தனை இதயங்களை என்னென்ன பாடு படுத்துகிறது! காதல்வயப்படாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. விதிவிலக்குகள் கூட, உறக்கத்தில் பாலருந்திவிட்டு, விழித்தவுடன் இல்லையென்று அடம்பிடிக்கும் சில குழந்தைகள் போலத்தான்! காதலற்ற உலகில் வாழ்வதைக் காட்டிலும், நரகத்தின் எண்ணெய்க் கொப்பரைகள் மேல். கலைகள், கவிதைகள், காவியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், ஏன், போர்களும் சாம்ராஜ்ஜியங்களும் கூட, காதலால் விளைந்தவை. அன்பு, பக்தி, நேயம் என்றெல்லாம் காதலுக்குப் பொருள் சொன்னாலும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தோன்றும் பிரத்தியேகமான உணர்வே காதல்.
இதோ, உங்கள் முன்பு விரிகின்ற இந்தப் புத்தகம் முழுவதும் காதல் கவிதைகள் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. சில, கண்சிமிட்டி… சில, கண்ணீர் சிந்தி… சில, தன் துயரத்தைத் தத்துவமாக்கி… சில, ஏமாற்றத்தைப் பொறுக்க முடியாமல் சீறி, பாவனைகள் பலவிதமாக மாறினாலும், அவை பாடும் ராகம் ஒன்றே.
சரி, ஒருவன் காதலுற்றான் என்பதை அவனே எவ்விதம் அறிந்துகொள்வது?
வேகமாய் ஓடிக் கிடந்தவன்
நிதானமாய் நடக்கிறான்
மூர்க்கமாய் முறுக்கித் திரிந்தவன்
கனிந்து குழைகிறான்
ஈர நெஞ்சனாய்க் குமிழுடைகிறான்
கருணை விரிக்கிறான்
இவன்
காதலிக்கத் தொடங்கிவிட்டான்!
இதைவிட, போதையைத் தெளிவாகச் சொல்ல முடியுமோ! முற்றும் தன்னை, தன் நிறைகள் குறைகளோடு தன்னை இன்னொருவருக்கு இழப்பதுதான் காதல். வேறெந்த உணர்வுக்கும் இடம் கொடுக்க முடியாத மனநிலைதான் காதல். முற்றும் இழப்பதென்றால்?
ஆகாயத்தில்
சில நட்சத்திரங்கள்
தொலைந்து போகலாம்.
ஆகாயமே
தொலைந்துபோகும்
நிகழ்வுதான்
காதல்
என்று விளக்கம் தருகிறார் கவிஞர். எந்தக் காதலனின் அந்தரங்கத்தில் வேண்டுமானாலும் காது வைத்துக் கேட்டுப் பாருங்கள். அது காதல் கொடியது, காதலி கொடியவள் என்றே சொல்லும். இந்தக் கவிஞரும்,
உயிர்ப் பந்தை
உருட்டி விளையாடுகிறது
காதல்
உதைத்து விளையாடுகிறாள்
காதலி
என்றல்லவா ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார்!
காதலனும் காதலியும் என்ன பேசிக்கொள்வார்கள்? அவர்கள் பேசிக்கொள்ளக்கூடிய ஏராளமான வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இருக்காமல் போகலாம். அவற்றின் இடையே நேரும் இடைவெளிகளில் ஏக்கங்கள் பெருமூச்சு விடலாம். ஆனால், ஒருவர்க்கொருவர் இழந்த உயிரை, மறுபடி மறுபடி இழக்கும் சுகத்திற்காக, மீண்டும் நிறுவிக்கொள்ள அவர்களுக்குத் தேவைப்படும் பேச்சு.
பல்லாயிரம் சிலிர்ப்புகளை
வார்த்தைகளாய் இறைத்து
அவற்றின் மீது நடந்து நடந்து
கரைந்து போகிறோம்
நாம் பேசிக்கொண்டிருக்கவில்லை
என்று மிக வசீகரமான இந்த ஆழத்தை, கவிஞர் எத்தனை எளிமையாகச் சொல்கிறார்!
அதென்னமோ ஏக்கம், கண்ணீர், ஏமாற்றம், ஆற்றாமை இவையில்லாமல் காதல் இருப்பதில்லை. இயல்புகளைப் பரிசீலித்து என்ன செய்ய? அவற்றை மாற்றிவிட முடியுமா என்ன!
வாழும்போது மரணித்தால்
சாகும்போதா வாழப் போகிறோம்?
என்று கவிஞர் போகிறபோக்கில் சொல்லிச் செல்லும்போது, நாம் பிரமித்து நிற்கிறோம். காதலால் தோன்றும் இனம்புரியாத சோகத்தை இரண்டே வரிகளில் இவர் சித்தரிக்கும்போது சிலிர்க்கிறது:
என் உள்வெளிகள் ஈரமானவை
எந்த வெயில் பட்டும் காய்வதில்லை
எப்படித்தான் அவள் மனதில் காதல் அரும்பும்? எடுத்த அத்தனை முயற்சிகளும் வீண். எவள் உயிரை அதன் ஆழத்திலிருந்து அடிவேரைப் பிடுங்கிப் பெயர்த்தெடுக்கிறாளோ, அவளிடம்தானே உயிரை மீட்கவும் வழிகேட்க முடியும்? இதோ, கேட்கிறார்!
கவிதை கேட்டுப் போனேன்
வசை வந்து சேர்ந்தது
வரம் கேட்டுப் போனேன்
சாபம் வந்து சேர்ந்தது
எனைக் கேட்டுப் போனேன்
மரணம் வந்து சேர்ந்தது
எதைக்கேட்டுப் போனால்
நீ வந்து சேர்வாய்?
காதலில்லாத பச்சைக் காமத்தில் இவருக்குச் சம்மதமில்லை. அது எத்தனை கோரமானது என்பதை,
காமம்
உறக்கத்துக்குமுன் நிகழும்
ஒரு சம்பவம் ஆகும்போது
செத்துக் கிடக்கிறது
படுக்கைக்குக் கீழ்
காதல்
என்று நயம்படவும் நையப் புடைத்தபடியும் சொல்கிறார்.
இந்தக் கவிதைகள் கடல்தாண்டி வந்திருக்கின்றன. இவை, கனடா நாட்டில் வாழும் ஒரு தமிழ் மகனின் தாபங்கள்; ஒரு கவிக் குயிலின் கீதங்கள்; இனிய இசைபோல, நெருடாமல் இழையோடும் சோகங்கள்; இவற்றை வடித்தவர் கவிஞர் புகாரி அவர்கள். தமிழ் மணக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த இந்த இனியவர், கணினித் துறையில் வல்லுநர்; அரபு நாடுகளில் பணியாற்றிவிட்டுப் பல வருடங்களாக கனடா என்னும் அழகிய நாட்டில் வாழ்ந்து வருகிறார். வட துருவத்தை நோக்கிப் பறக்கும் எந்தப் பறவையும், இவரது வீட்டில் ஒலிக்கும் தஞ்சைத் தமிழினிமை கேட்டு, இறங்கிவந்து இளைப்பாறிவிட்டுத்தான் செல்லும். ஆம், இவரும் இவரது மிகவினிய இதயம் படைத்த துணைவியாரும் மகளும் மகனும் பேசும் தமிழைக் கேட்டால் நீங்கள் இருப்பது கனடாவா அல்லது தஞ்சைத் தமிழ் மன்றமா என்ற ஐயமெழும். அந்த அளவிற்கு, இவரும் இவர் குடும்பத்தாரும் தமிழில் ஊறித் திளைப்பவர்கள்.
மிகவும் பிரபலமான ‘அன்புடன்’ என்னும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட இணைய தளத்தை நடத்திவரும் கவிஞர் புகாரியின் கவிதைகள் பல்வேறு இணைய தளங்களில் காணப்படுகின்றன. இள வயதிலிருந்தே எழுதிவரும் இவருடைய கவிதைகளை நா.பா.வின் ‘தீபம்’ ஏற்றது. மாலனின் ‘திசைகள்’ வழிகாட்டின. ‘அரபு மண்ணில் இதோ ஓர் அழகு ஊற்று’ என்று வலம்புரி ஜான் இவரைத் தனது ‘தாய்’ இதழில் சிறப்பித்தார்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் அணிந்துரை தாங்கிய, துரைசாமி நாடார் & இராஜம்மாள் விருதுக்கான போட்டியில் சிறப்பு விருது பெற்ற ‘வெளிச்ச அழைப்புகள்’; கனடாவின் கவிராயர் கந்தவனத்தின் அணிந்துரை ஏந்திய, உலகிலேயே முதன்முதலாக இணையத்தில் வெளியான நூலான ‘அன்புடன் இதயம்’; பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலனின் அணிந்துரை பெற்ற, காவ்யா பதிப்பக வெளியீடான காதல் கவிதை நூல் ‘சரணமென்றேன்’, இதைத் தொடர்ந்து அ. முத்துலிங்கத்தின் அணிந்துரை கொண்ட ‘பச்சை மிளகாய் இளவரசி’ ஆகிய இவருடைய அனைத்து நூல்களும் கனடாவிலும் தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ளன.
நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து
அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து வாழுகின்றேன்
என்று கூறும் புகாரியின் கவிதைகள் அழகியல் மிகுந்தவை. எழில்கொஞ்சுபவை; மரபும் புதுமையும் கூடிக் குலவுபவை. கனடாவில் தஞ்சைத் தமிழ்மணக்க வைக்கும் காதற்குயில் கவிஞர் புகாரியின் இந்தத் தொகுப்பை வெளியிடுவதில் மிகவும் மகிழ்கிறோம்.
=========================
வெளியீடு:
திரிசக்தி பப்ளிகேசன்ஸ்
கிரிகுஜா என்க்ளேவ்
56/21 முதல் சந்து, சாஸ்திரி நகர்
அடையாறு, சென்னை 600 020
நிலைபேசி: 044 4297 0800
செல்பேசி: 95000 19189
trisakthipablications@trisakthi.com