மரபூர் சந்திரசேகரன்.

வேலியே பயிரை மேய்ந்தது போல்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவில் கதைகள் தொடர்கின்றன. மன்னிக்கவும். மேலும் பல சிதிலமடைந்த கோவில்கள்களைப் பார்க்கவும், பார்த்து வருத்தப்படவும், இருக்கும் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயே போச், its gone, போயிந்தி.. என்பதுதான் தற்போதைய நிலை. அதனால் தாமதம்.படிக்கும் ஒரு சில அன்பர்களிடம் தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்.

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக, சமீபத்தில் திருவையாறு சென்று பஞ்சநதீஸ்வரர் கோவிலைக் கண்டு வந்தேன். போன கட்டுரையில் நான் குறிப்பிட்டபடி, இந்த கோவிலைப் பற்றி புனரமைப்பை சிலாகித்து ஹிந்து பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் பார்த்து பதறிப் போய் எங்கள் தலைவர் தொல்லியல் துறைத் தலைவர் தியாக. சத்தியமூர்த்தியும், ட்ரஸ்டியும் வரலாற்று ஆர்வலருமான சுந்தர் பரத்வாஜும், அடியேனும் ஓடினோம் திருவையாற்றுக்கு! அப்படி என்ன எழுதி விட்டார்கள்?

ஆதீனம் அவர்கள், “கோவில் புனரமைப்பைச் செய்ய sand blasting செய்து, பழமையைக் காப்பாற்றுவோம்!” என்று அருள்மொழி உரைத்ததைக் கட்டுரையாளர் அதில் எழுதியிருந்தார். காண்க கட்டுரை:

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article1328429.ece

அதில் குறிப்பிட்ட சில வரிகளைப் பாருங்கள்…
The sudhai figures depicting episodes from the lives of Appar and Sundarar will be restored to their original glory. The 14th century epigraphs will be salvaged through sand blast technique,” explains the Thambiran, who has a deep interest in art and aesthetics. It is a mammoth work and individuals and trusts are pitching in too. For instance Mahalakshmi Charitable Trust (044-28152533, 9840053289) will meet the expenses of the Aatkondar shrine and one Rajagopuram. Renovation is expected to be completed in 2012.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஹிந்து நாளிதழுக்கு உடனடி கடிதம் எழுதியும், அது பிரசுரிக்கப்படவில்லை.
இச்செயல்தான் எங்களை அவரிடம் ஓட வைத்தது. இப்போது அவர் செய்துள்ள புனரமைப்புப் பணிகளைக் கண்டால், எல்லாருமே கோவிலின் எதிர் திசையில் ஓடும்படி செய்துவிட்டார்கள்!

Sand blasting செய்வதில் என்ன பிரச்சனை என்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது
http://www.tamilhindu.com/2011/02/sand-blasting-in-temples/

மடாதிபதியைச் சந்தித்து இரு கோரிக்கை வைத்தோம். எங்கள் ஸ்தபதி குழு கொண்டு செய்துவிட்ட நிரந்தர குளறுபடிகள், இனி செய்யும் பணியின் செலவுகள் குறித்த விஷயங்கள் ஆகியவற்றோடு குறிப்பாக Sand blasting செய்தலைத் தடுக்கவும், உள்ளே சுற்று மண்டபத்தில் உள்ள புராதன ஓவியங்களை அப்படியே காத்திடவும், ஆதீனம் அவர்களிடம் வேண்டுதல் விடுத்தோம். புன்னகையுடன், “எனக்கும் பழமையைக் காப்பதில் பங்குண்டு. கவலைப்படாதீர்கள்!” என்று கூறி அன்று நடந்த விழாவில் எங்களைப் பங்கேற்கச் செய்தார். சரி, மேற்கூறிய செய்தி வரிகளில் மஞ்சள் பூச்சு நடக்கப்பட்ட இன்னும் சில வரிகள் உள்ளனவே? ‘Mahalakshmi Charitable Trust’ என்று?அவர்களைப் போல் சில நன்கொடையாளர்களே கோவில் புனரமைப்பதில் பலவிதமான குறுக்கீடுகளைச் செய்து, பணத்திற்கேற்றார்போல், செப்பனிடச் சொல்லி, பாரம்பரியமும், பழமையும் மிக்க கோவிலை புதியதாகக் கட்டப்படும் ஒரு தெரு ஓர மாரியம்மன் கோவிலுக்குப் போட்டியாக மாற்றிவிடுகிறார்கள் என்று சொலவதில் எனக்கு எந்த தயக்கமும் ஐயப்பாடும் இல்லை.

ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே நமது ரீச் பவுண்டேஷனின் தொல்லியல் முதுநிலை பெற்ற நண்பர் பரந்தாமன் பதறும்தாமனாகப் போன் செய்தார். ‘சார், sand blasting செய்றாங்க சார்” சாமிகிட்ட (தம்பிரான் அவர்களிடம்) பேசிப்பார்த்தேன். அவரோ, “நன்கொடையாளர்கள் ஏற்பாடு செய்யும் பணியில் நாமென்ன குறுக்கீடு செய்ய முடியும்?” என்று சொல்லியதாகக் கூறி குறைபட்டுக் கொண்டார்.

உடனே நான் ஆதீனம் அவர்கள், திரு. தம்பிரானிடமே கைபேசியில் அழைத்து, “சாமீ, என்ன இது, செய்ய மாட்டோம் என்று சொல்லி இப்படி நன்கொடையாளர்கள் பேரைச் சொல்லி கோவிலை இஷ்டத்துக்கு குரங்கு கையில் கொடுக்கும் பூமாலை போல் செய்கிறீகளே?” என்றேன். அவர் உடனே ஒரு கைபேசி எண்ணைக் கொடுத்து, “அவர்தான் கோவில் பொறியியல் வல்லுநர்; அவரிடம் உங்கள் கோரிக்கையை வையுங்கள்,” என்று கூறி, லைனை துண்டித்துவிட்டார். அவர் குறிப்பிட்ட அந்த எண், அவரது உதவியாளருடையது என்பது பின்னர் தெரிந்து கொண்டேன்! இஞ்சினீயரும் இல்லை சுக்கு நீரும் இல்லை! அவர் ஒரு படி மேலே போய், “ரீச் பவுண்டேஷன் குறை சொல்லிக்கிட்டே இருங்க! பணம் தராதீங்க!” என்றார். நானும் விடவில்லை. “ஐயா, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். முன்பு தம்பிரான் அவர்களிடம் கூறியதுபோல், செலவைக் குறைத்து, பழமையையும் மாற்றாமல், புனரமைப்பு செய்து தருகிறோம்,” என்றேன்.

மறுநாள் எனக்கு நன்கொடையாளரிடமிருந்தும், ‘நன்கொடையாக வண்டி வண்டியாக பூஜை’ நடந்தது. கேட்டதற்கு தம்பிரான் சொன்னதன் பேரில் எனக்கு அறிவுரை செய்வதாக வேறு சொன்னார்கள். மனசாட்சியும், அந்த ஆண்டவனை மட்டுமே சாட்சியாகக் கொண்டு, கடைசியாக ஒரு முயற்சி செய்தேன். மீண்டும் ஆதீனமாம், தம்பிரானுக்கு அழைப்பு. “ஐயா, நீங்கள் நினைத்தால், தவறான இடித்தலும், வெள்ளை அடித்தலும், sand blastingம், நிற்கச் செய்யலாம். ஒரு நாள் அவகாசம் தாருங்கள். ஓடி வந்து, மீதி இருப்பதையேனும் காப்பாற்றுகிறோம். செலவுக்குக் கூட பிச்சை எடுத்தேனும் தந்துவிடுகிறேன். ரீச் rich foundation என்று நன்கொடையாளர் நையாண்டி செய்கிறார். அந்த பஞ்சநதீஸ்வரர் நினைத்தால், எங்கள் பஞ்ச நிலையும் போய்விடும். நாங்கள் யாரிடமும் நன்கொடை தாருங்கள் என்று கேட்காமலேயே பல கோவில் பணிகளை ஆண்டவன் எங்களிடம் செய்வித்தான். அதேபோல், திருவையாற்றுக்கும் செய்ய அனுமதி தாருங்கள், “ என்று இறைஞ்சினேன். மறுபக்கம், ‘டொக்’ என்று லைனை ‘கட்’ செய்யும் சப்தம்! உலகே என் தலையைச் சுற்றி தட்டாமாலை ஆடுவதுபோல் உணர்ந்தேன்! கடவுளே, இதுதான் நீ விரும்பும் புனரமைப்பு என்றால் ஏற்றுக்கொள், “ என்று அவனிடம் விட்டுவிட்டேன்.

இருந்தாலும் வறுமையின் கொடுமையால், தன் மகவை தத்து கொடுத்துவிட்ட பித்துத் தாயைப் போல், மனதைக் கல்லாக்கிக் கொண்டு சில நாட்களுக்கு முன் பஞ்சநதீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றேன். நோய் முற்றி சாவின் விளிம்பில் இருப்பவர்கள் mercy killing செய்யலாம் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர். நல்ல கலையை ரசிக்கும் தன்மையும், புராதனச் சின்னங்கள்பால் அன்பும் உள்ள அத்தகைய கேஸுகளுக்கு, இந்தக் கோவிலைக் காண்பித்தால் போதும். கட்டாயம் கைலாயப் பதவி உடனடியாகக் கிட்டும். இது ஆனால் merciless killing! உடனடி நிவாரணம்’!

அப்படியாக கண்டபடி இடித்து, கட்டி, வெள்ளையடித்து, sand blasting செய்து, முத்தாய்ப்பாக, உள்ளே பிரகாரச் சுவர்களில் உள்ள பண்டைய ஓவியங்கள் மேல், நாளிதழ்களை ஒட்டிக் காப்பாற்றும் கண்ராவியையும் கண்டேன். பதறிப் போய் அருகில் சென்று பார்த்தால், நிதானமாக ஒருவர் வர்ணங்களைக் குழைத்து, பழைய ஓவியங்களின் மேலேயே புதியதாய் அப்பிக் கொண்டிருந்தார். “இது என்ன பெய்ண்ட்?” என்று கேட்டேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை. அத்தனை பலஹீனமாகிவிட்டது! “வாட்டர் கலர்” என்றார்.

“போஸ்டர் கலர் என்பார்களே அதுவா?”

“இல்லை, இது நாங்களாய் இயற்கை ரசாயனங்களைக் கொண்டு செய்வது!”

“என்னென்ன சேர்த்து இது செய்கிறீர்கள்? தெரிந்து கொள்ளலாமா?”

உன் நம்பரைக் கொடு. சாயங்காலம் சாவதானமாய் சொல்லிக் கொடுக்கிறேன்,” என்றார். நம்பர் கொடுத்தேன். போன் தான் வரவில்லை. அந்த வர்ணக் கொடுமை எந்த புனரமைப்பாளர் சொல்லிக் கொ(கெ)டுத்ததோ? பழைய ஓவியங்களின் புதிய நிறங்களை அடித்தால், அவற்றின் கனம் தாங்காமல், பழைய ஓவியங்களும் பெயர்ந்து விழுந்துவிடும், என்று செவிடன் காதில் யார் சங்குரைப்பார்?

கோவில் புனரமைப்புகளில் நடக்கும் தகிடு தத்தங்களை மக்கள் அறிந்து கொண்டு, எது நல்லது,எது கெட்டது என்று அறிந்து அவற்றை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு மக்கள் சக்தி இயக்கமாக ஒரு பெரும் ஒலி எழுந்தால்தான் இம்மாதிரியான ‘நன்கொடையாளர்களும், புனரமைப்பாளர்களும் விழிப்படைவர்.

இதனால் நான் இந்து அறநிலையத்துறைக்கோ அல்லது ஆதீனகர்த்தர்களுக்கோ எதிரி அல்லன். வேலியே பயிரை மேய்வதுபோல், இந்து அறநிலைய தலைமைக்குழுவில் அறநிலையத்துறை அதிகாரிகளும், எல்லா கோவில் மடாதிபதிகள் அல்லது ஆதீனங்களும் இருப்பதாக சட்டம் சொல்கிறது. (Mutt chiefs by default).

கோவிலை நிர்வகிக்கும் பணிதான் இவர்களுடையது. ஆனால் புனரமைப்பு என்று வரும்போது, புராதனச் சின்னங்களாம் கோவில்களை சரிவர புனரமைப்பு செய்யவில்லை என்றால், பழங்காலச் சின்னங்களைச் சிதைத்தால் என்ன தண்டனையோ, அதை இந்த புனரமைப்பாளர்களுக்கும் ஏன் தரக் கூடாது?

காண்க திருவையாறு கோவில் படங்களை…
http://www.flickr.com/photos/18581563@N03/sets/72157628805052375/show/

என் கூற்று தவறு என்றால், குரு நிந்தனை செய்த பாவத்துக்கு நான் ஆளாவேன். உண்மை என்றால், ஆண்டவனாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. தன்னெஞ்சே தன்னைச் சுடும்!

இனி எழுதுவது சிக்கலாகி விட்டது. மனம் கனத்துள்ளது. அடுத்ததாக நான் கூறிய காமரசவல்லிக் கோவில் புனரமைப்பு விட்ட கதையும், கெட்ட கதையையும் படிக்க, அடுத்த கட்டுரை வரும் வரை காத்திருங்கள்.

’என்னடாயிது கெட்ட கதையே சொல்கிறான். நல்லதே இவன் எழுதமாட்டானா’ என்று நினைக்கிறீகளா? மர நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் என்பார்கள். இதையெல்லாம் படித்த பின்னர் சில நல்ல உள்ளங்கள் செய்த அளப்பரிய செயல்களையும் எழுதத்தான் போகிறேன், இனி வரும் கோவில் கதைகளில்!

பயணிப்போம்….

 

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “கோவில் கதைகள் – 2

 1. Anna Kannan, திறமையான நல்ல வக்கீல் தெரிந்தால் வழக்கு தாராளமாகப் போடலாம்! பல விஷயங்களுக்கு அது திறவுகோலாக இருக்கும்!
  என்ன, நானோ, ரீ பவுண்டேஷனோ, பெருந்தொகை தரமுடியாது. நிஜமாகவே நமது மரபின் மேல் காதல் கொண்ட அந்த நல்லுள்ளம் கொண்ட வக்கீல் எங்கே என்று இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 2. பொதுநல வழக்குகளில் வழக்கு தொடுப்பவரே நீதிமன்றத்தில் வாதாடலாம் தானே? கொஞ்சம் சட்டப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருக்கும்.

 3. உண்மையை உரைத்தாலே போதும், சட்ட நுணுக்கங்கள் தெரியத் தேவையில்லை. ஆயிரமாயிரம் படங்கள், ஆயிரமாயிரம் சிதைவுகள். கோர்ட் கண்ணை மூடிக் கொண்டு, சும்ம அடித்து நொறுக்கு என்றா சொல்லும்?

 4. Dear Valami avl,
  Vanakam, it is very usefull and a teacher for life which i canot get from my oldfamily members like lession and advice.thanks
  By CSRaj,Andaman.

 5. I read your letter to writer Jeyamohan. I am pained at the irresponsible attitude of the Mutt heads and donators who are destroying beautiful heritage. We have a whole generation without any awareness of arts or culture or heritage.

  If you can hire a lawyer to stop this attrocity, I will be happy to support it by providing financial support of upto Rs 1 Lakh. I am in USA and will not be able to donate my time / efforts. You can contact me via email given above.

  Sincerely,
     Shiva Chinnasamy
     Seattle, USA.

 6. ஐயா, கட்டுரையில் கண்டுள்ளபடி அருள்மிகு ஐயாறப்பர் ஆலய புனருத்தாரண வேலையில் ஆலய சிற்பங்கள் கெடும்படி எதுவும் நடைபெறவில்லை. அங்குள்ள அர்த்த மண்டபம் மற்றும் திருவோலக்க மண்டபம் ஆகிய பகுதிகளில் மட்டும் சாண்ட் பிளாஸ்ட் நடைபெற்றது. எண்ணெய் பசை மூடிய தூண்கள் இப்போது பளிச்சென்று காணப்படுகின்றன. அந்தத் தூண்களில் நுண்ணிய சிற்பங்கள் கிடையாது. ஒன்றுமில்லாத விஷயம் பெரிது படுத்தப்படுவதாக அந்த கோயிலுக்கு ஆண்டுகள் பலவாக சென்றுவரும் என்போண்றோர் எண்ணுகின்றனர். அங்கு நடைபெறும் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் நான். அங்கு வந்திருந்த சில பெரியோர்கள், தொழிலதிபர்கள் திருவோலக்க மண்டபத்தில் இருந்த தூண்களைப் பார்த்து எத்தனை எண்ணெய் பசை இருந்தது இப்போது நன்றாக இருக்கிறது என்றனர். எந்த நல்ல விஷயம் நடைபெறும்போதும் சில குற்றச்சாட்டுகள் எழச்செய்யத்தான் செய்யும். உண்மையை நன்கு ஆய்ந்து, உணர்ந்து அதில் சரியான முடிவெடுப்பதே நன்று.
  தங்கள், தஞ்சை வெ.கோபாலன், தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழு, திருவையாறு. இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.U

 7. வி கோபாலன் அவர்களுக்கு,
  Sand blasting தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை தாங்கள் அறியாதது என்றால், கொலை செய்வது தவறு என்பது நான் அறியவில்லை என்பது போல். தூண்கள் வலு இழந்து விடும். பாடல் பெற்ற ஸ்தலமான திருப்பயத்தங்குடியில் அர்த்த மண்டபமும், கருவறையும் sand blasting செய்யப்படாமலேயே மிருதுவான கெமிக்கல்கள் வைத்து சுத்தம் செய்யப்பட்டு, அதுவும் பலரால் பாராட்டப்பட்டது. நீங்கள் குறிப்பிடும் பெரியோர்கள் தொழிலதிபர்கள் sand blasting தான் செய்யவேண்டும் என்று சொன்னார்களா என்ன? மொத்த கோயிலும் sand blasting நடை பெற்றுக் கொண்டிருப்பதற்கான சான்றுகள் என்னிடம் உள்ளன? எங்கே சந்திக்கலாம்? சபையில்? அதேபோல், பழங்கால ஓவியங்களை மீண்டும் வர்ணங்கள் கொண்டு வரைகிறார்களே அவர்களுக்கும் நீங்களே சப்பை கட்டு கட்டுவீர்களா?
  நடனாஞ்சலி குழு தலைவரே இம்மாதிரி கலையைக் கலைக்கும் செயல்களுக்கு ஒத்து வாசிப்பது மனதுக்கு வலியைத் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *