குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடவும்..

தி.ந.இளங்கோவன்

இணையத்தில் வருவதெல்லாம் உண்மையெனும் எண்ணம் இளைய தலைமுறையினரிடம் பரவலாக இருக்கிறது. அறிவைப் பெருக்க உதவும் இணையம், அதே நேரத்தில் பல பொய்யான தகவல்களையும் பரப்பும் தளமாகவும் அமைந்து விடுகிறது.

Facebook-ல் எனக்கு வந்த ஒரு தகவல், ஒரு புகைப்படத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தப் புகைப்படம் உலகத்தின் மிக உயர்ந்த “புர்ஜ் துபாய்” கட்டடத்தின் மேலிருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்தப் புகைப்படத்தின் ஒரு மூலையில் பார்த்தால் உலகம் சுழல்வதைப் பார்க்கலாம் என்றும் சிறு குறிப்பும் அதில் இருந்தது.

இந்தத் தகவலுக்கு 50 பேர் “Like” என்று தெரிவித்திருந்தார்கள். இன்னுமொரு 15 பேர் “wow” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இவர்கள் எல்லோருமே குறைந்த பட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. புவியீர்ப்பு விசைக்குள் இருந்து கொண்டு பூமி சுழல்வதை எப்படிப் பார்க்க இயலும் என்பதை அவர்களுள் ஒருவருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. அது மட்டுமல்லாது, அந்தத் தகவலை தங்களுக்குத் தெரிந்த மற்ற நண்பர்களுக்குப் பரிமாறுவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு தவறான தகவல், தொழில் நுட்ப உதவியுடன் உலகம் பூராவும் கண நேரத்தில் பரவுகிறது.

இதைப் போல பல மின்னஞ்சல்களையும் தகவல்களையும் கண்டு மனம் நொந்து போய்த் தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

எனக்கு ஒரு தகவல் வருகிறது. அது பொய்யோ, உண்மையோ, அதை நானும் பலருக்குப் பரப்புவேன் என்பது, பொறுப்பற்ற தன்மையில்லையா? இளைய தலைமுறையினர் இதை உணர வேண்டாமா?

படித்த உடனேயே ஏதாவது comment  அல்லது கருத்துச் சொல்லியே தீர வேண்டிய கட்டாயத்தில் இளைய தலைமுறையினர் இருக்கின்றனர். அந்த அவசரம் தான் ஆராயாமல் கருத்துச் சொல்வதும், forward செய்வதுக்குமான காரணம்.

ஒரு புதிய மின்னஞ்சலோ, இணயத்தகவலோ உங்களுக்கு வந்தால், நம்முடைய common sense-ஐ உபயோகித்து அது உண்மையாக இருக்குமா என்ற ஆராய்ந்து உறுதி செய்யாமல் அதைப் பிறருக்கு forward  செய்வது தவறல்லவா? ஒரு பொய்யைப் பரப்புவதில், நாமும் சங்கிலியின் ஒரு வளையமாகி விடுகிறோமல்லவா?

மின்னஞ்சல் வசதி என்பது, வர வர,  நாற்றமெடுக்கும் குப்பைக்கூடையைப் போல் ஆகி விட்டது.  ஏற்கனவே, வணிக ரீதியில் வந்து சேரும் குப்பைகளுடன், இதே போன்று பொறுப்பற்று “Forward”  செய்யப்பட்டு வரும் மின்னஞ்சல்களும் சேர்ந்து நம்மை வதைக்கின்றன..

நிஜ வாழ்க்கையில் குப்பைகள் குப்பைத்தொட்டிக்குத் தான் போக வேண்டும், அது யாரிடமிருந்து வந்தாலும் சரி.. அதே போலத்தான், குப்பை மின்னஞ்சல்களை குப்பைத் தொட்டிக்கு (trash)  அனுப்புங்கள், உங்கள் உற்ற நண்பர் அனுப்பியிருந்தாலும் !

சுய சிந்தனைகளைப் பகிர்தல் மிகவும் குறைவாகவே உள்ள நிலையில், குப்பைகளைப் பகிர்தலையாவது குறைப்போமா? சிந்திப்போம்..

 

படத்திற்கு நன்றி: http://burjdubaiphotos.blogspot.com/2010/04/burj-khalifa-pictures-aka-burj-dubai.html

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க