புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் – செய்திகள்

1

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா சேவை மையத்தில் இன்று(11.01.2012) புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் நடைபெற்றது. சேவாலயா அறக்கட்டளை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.V.திருமஞ்சு அருள்தாஸ்( ஊராட்சி மன்றத் தலைவர், பாக்கம் ஊராட்சி), திருமதி.K.தாட்சாயணி(ஊராட்சி மன்றத் தலைவர், புலியூர் ஊராட்சி), வார்டு உறுப்பினர்கள், சிங்கப்பூரைச் சார்ந்த ஜிங், இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சார்லட், சீன நாட்டைச் சார்ந்த கெரோவின், பாக்கம் வியாபரிகள் சங்கத் தலைவர் கண்ணபிரான் மற்றும் ஏராளமான கிராம பொது மக்கள் கலந்து கொண்டு மாணவர்களின் எழுச்சி நடைபயணத்தை துவக்கி வைத்தனர். இப்பயணமானது பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி பாக்கம் கிராமம், புலியூர், கலியனூர் கண்டிகை வழியாகவும் மற்றொன்று மேலப்பேடு, ஆலத்தூர், ராமநாதபுரம் மற்றும் கசுவா வழியாக சேவாலயா சேவை மையத்தை வந்தடைந்தது.

இந்நடைபயணத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளையும் டயர் போன்ற ரப்பர் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் தீங்குகளையும் பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் வாசக அட்டைகளை காட்டியும் கோஷங்களை எழுப்பியும் துண்டு பிரசுரங்களைக் கொடுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் பொருட்களால் நம் பூமியின் இயற்கைச் சூழல் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது. மேலும் அதனை எரிப்பதால் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காதீர் என கிராம பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல் மெட்ரிக் மேநிலைப்பள்ளி, தாசர் மேநிலைப்பள்ளி, சிவன்வாயல் சுவாமி விவேகானந்தர் பள்ளி, வெள்ளியூர் அரசு மேநிலைப்பள்ளி, பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, மாகரல் அரசு நடுநிலைப்பள்ளி, மேலப்பேடு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சேவாலயா பள்ளியைச் சார்ந்த 1500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளிதரன் அவர்கள் வரவேற்க, சேவாலயா பள்ளித் தலைமையாசிரியை செல்வி. விஜயா அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புகையில்லா போகியை வலியுறுத்தி பள்ளி மாணவர்களின் எழுச்சி நடைபயணம் – செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *