சுலோச்சனா

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வியும் மனப் பழக்கம் என்பது தமிழ் பாடல்

வைத்ததொரு கல்வி மட்டும் மனப் பழக்கம் அன்று – மதமும் – அதன் பிரிவுகளான ஜாதிகளும் கூட மனிதனை வதைக்கும் மனதிற்கும் ஊட்டப்பட்ட பழக்கமே ஆகும்.

பரம்பரை பரம்பரையாக வரும் இந்தப் பழக்கமே – வழக்கமாகி பின்பற்றவேண்டிய கட்டாயமாகிவிடுகின்றது. இந்த பழக்கங்களும் – வழக்கங்களும் குழந்தை பருவத்திலேயே விதைக்கப்பட்டு, குழந்தை வளர – வளர அந்த வித்தும் வளர்ந்து விடுகிறது.

அந்த வளrச்சி என்பது அளவோடும் அமைகின்றது. அளவின்றியும் வளர்ந்து மனம் முழுவதும் படர்ந்தும் விடுகின்றது. அகங்கார மன உணர்வுகளுக்கும் இடமளித்துவிடுகிறது. சுத்த துரிய அறிவு அருள் நலமில்லாத முழுமை பெற்ற அன்பு இத்தகையை உயரிய உணர்வுகளின் உறைவிடமாக உள்ள மனமே ஜாதி மத பேத உணர்வுகளைத் தாண்டி சிந்திக்க இயலும். சிந்தனையின் எல்லையிலே சீர்திருத்த கருத்துகளை சமுதாயத்திற்கு வழங்க முடியம்.

இத்தகையை பண்புகள் நம் இந்தியாவில் பெருகிவரும் வற்றாத ஜீவநதிகளுக்கும் உண்டு. அவைகள் தோன்றிய இடம் முதல் கடலில் சங்கமமாகும் வரையிலும் நாடு, மொழி, இனபேதமின்றி அனைத்து உயரினங்களுக்கும் உணவுப் பொருளை உண்டாக்கிக் கொடுப்பதாகவும் அன்றி தானே உணவுப் பொருளாகவும் உதவுகின்றது. (குறள்-துப்பார்க்குத்) என் கடன் பணி செய்துகிடப்பதே” என தன் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றது.

மனிதன் உட்பட பல உயிரினங்கள் வாழுமாறு அனைத்தையும் தோற்றுவித்த கர்த்தனாகிய பரம்பொருள் – மனிதன் பிறந்த பொழுது இருந்தவாறே வாழாமல் -வாழ்வாங்கு வாழ – தன்னுள் உறையும் தெய்வீகத்தைத் தானே கண்டுகொள்ள அருளாளர்கள் பலரை அவதரிக்கச் செய்தார். மக்களுக்கு உதவிக்கரம், நீட்ட. அவ்வாறு அவதரித்தவர்களில் சிறப்பான இடம்பெற்றவர்களே பகவான் ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்ஸர், அருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்பெரும் ராமலிங்க அடிகளாரும் ஆவார்கள். கடையனையும் கடைத்தேற்றும் கருணை ஊற்று பரமஹம்ஸர் -“வாடிய பயிரைக்” கண்டபோது கூட வாடிய வள்ளல் அருட்பிரகாச வள்ளலார்.

‘உடற்தூய்மை நீரால் அமையும்
மனத்தூய்மை வாய்மையாற் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர்.

‘வாய்மை” எனப்படும் உண்மைதான் ‘சத்தியம்” அதுவே நிரந்தரமானது. அது ஒன்றுதான் என்றுமே நிரந்தரமானது. அதற்குப் புறம்பான ‘பொய்மை” என்ற பொருளுடைய ‘மாயை” எனப்படும் அஞ்ஞானத்தை வென்று ‘மெய் ஞானத்தில்” தேர்ந்து தெளிந்தவரே மெய் ஞானிகள் எனப்படும் ‘ஆன்ம ஞானிகள் – ஆவார்கள். தங்களுள் பரப்பிரம்மத்தை உணர்ந்தவர்கள்

அவர்களின் ‘சுடர்மிகும் அறிவே” மனிதன் இருளை அகற்றி ‘அருள்” ஒளியை ஏற்றும் சக்தி உடையது.

‘மெய்ஞானம்” அடையாமல் மதமாச்சர்ய -குரோத குறை குணம் கொண்டவர்களே தன் நாடு, தன் இனம், தன்மொழி என குறுகிய எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொண்டு, தன்னை குருவாக என்னும் கூட்டத்திற்கும் அத்தகையை உணர்வுகளையே புகட்டிவிடுகின்றனர். அறிவார்ந்த சிந்தனைக்கு ஆட்படாத மனித மனமும் தான் சார்ந்துள்ள மதமே உண்மை என்று எண்ணிவிடுகின்றது.

மற்றைய நெறிகள் அனைத்தும் அவ்விதம் இறையருளை தெய்வத்தன்மையை அடைய உதவாது என்று திடமாக நம்புகின்றது.

அது மட்டும் அன்றி மனித நேயமும் சகோதரத்துவமும் எவ்வுயிருக்கும் பொதுவான ஒரு இரக்கமோ, அன்போ எதுவுமே அடையாளம் காட்டப்படுவதில்லை, அதற்குப் பதிலாக கொடூர குணங்கள் பல பயிராகின்றன. அதன் விளைவாக உயிர்கள் பலி வரை எத்தனையோ அசம்பாவிதங்கள் இத்தகையச் சூழலில்தான் உருவாகின்றன. உண்மையான ஒரு சகோதர பாவத்தை மனிதர்களிடையே மலர்ந்து மனம் பரப்பக்கூடிய ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கினார் பரமஹம்ஸர்.

பள்ளி சென்று பயிலாதவர்கள் பரமஹம்ஸரும் , வள்ளலாரும் ஆயினும் ஆன்ம அனுபூதியை அப்படியே பெற்றவர்கள்

ஸ்ரீராம கிருஷ்ணர் எந்த ஒரு அவதாரபுருஷரும் செய்தறியாத ஒரு புரட்சிகரமான செயலை எந்த சுயநலமான எதிர்பார்ப்பும் இன்றி செய்தார் மதங்களின் பிரிவுகள் அனைத்தையும் உள்ளது உள்ளபடி பின்பற்றுபவர்கள் போலவே முழுமையாக பின்பற்றி அதன் தத்துவ உட்பொருளை உள்வாங்கினார். இதை ஒரு நாள் அல்ல. இருநாள் அல்ல சிலவருடங்கள் வாழ்ந்து அனுபூதியை அறியப் பெற்றார். தான் தெளிந்து தேறியதை தான் கண்ட ‘சத்திய” தரிசனத்தை உலகமெங்கும் உரக்கக்கூவினார்.

‘பரம்பொருள் ஒன்றே – கூறினார் அதை எப்பெயரிட்டும் அழைப்பது நம் மனோபாவத்தைப் பொறுத்தது. அல்லா என்பவருக்கு அல்லா- ஏசுவே என அழைப்பவருக்கு ஏசுபிரான்

கிருஷ்ணா என்றாலும், ராமா என்றாலும் இந்த அத்தனை அழைப்புகளும் சென்று சேர்வது பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளிடமே”.

செல்லும் நெறிகள் பலவாக இருந்தாலும் ஒரு ‘இறையே சென்றடையும் இடம்”. தாகத்தைத் தீர்த்துக் கொள்ள எந்த படித்துறையின் வழியாக இறங்கினாலும் அனைவரின் தாகத்தையும் தணிப்பது ஒரு குளத்தின் நீரே.

ஒருவன் நீர் என்றும் இன்னொருவன் ‘பானி” என்றும், மற்றவன் ‘ஜலம்” என்றும் கூறுகிறான் எந்த மொழியில் அழைத்தாலும் ‘அதன் தன்மை” ஒன்றே அதன் மூலம் அனைவருக்கும் கிடைக்கும் பயனும் ஒன்றே. ஒரே தந்தையின் மக்கள் சகோதரர்கள் அன்றோ சகோதரர்கள் நம்முள் பங்கிட்டு வாழலாம். பங்கப்பட்டு வாழலாமா? வாதிட்டு வாழலாம் போரிட்டு வாழலாமா? பரமஹம்ஸர் எடுத்துக்கூறிய இந்த தத்துவம் சமய சமரஸ நெறி குணநலன்கள் கொண்டவரிடம் எளிதில் நுழைந்து, குணக்குற்றங்கள் கொண்டவரிடம் போராடி உள்ளே நுழைய முயன்று கொண்டிருக்கிறது. மனித நேயமும் சகோதரத்துவமும் ஜகமெங்கும் தழைக்க வாழ்நாளெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணரும் அவரின் சீடரான சுவாமி விவேகானந்தரும் சகோதர சீடர்களும் இதை உலகமெங்கும் அதன் நன்மைக்காக பரப்பினார். இன்றும் உயிரிலுள்ள இத்தத்துவம் உலகமெங்கும் இவ்வுண்மையை உறைத்துக்கொண்டேதான் இருக்கிறது. சுத்த சன்மார்க்க நெறியாளரான வள்ளலார் இத்தத்துவத்தையே நம்முடைய ஒரு பாடலில் சுருக்கமாகத் தெளிவாகப் பாடுகின்றார்.

பொங்கு பல சமய நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய் பொங்கி
ஓங்கும் கங்கு கரை, காணாத கடலே
ஓடும், பொன்னும், ஒக்கவே நோக்கும்

பற்றில்லாத் துறவியரின் சிந்தனைகள் எப்படி ஒன்றுபோல் ஒத்திருக்கின்றன. சமூக நலனிற்காகவே எண்ணுகின்றனர். எண்ணங்கள் நின்ற மனத்தினர். இவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பாக சித்தர்களில் ஒருவரான திருமூலா; தம்முடைய திரு மந்திரத்தில்

‘படமாடும் பரமார்க்க ஒன்று ஈயில் அது
நடமாடும் நம்பார்க்கு ஆங்கு ஆக
நடமாடும் நம்பார்க்கு ஒன்று ஈயில் அது படமாடும் பரமக்காமே என்கிறார்.

கடவுள் பொருட்டு நாம் செய்யும் பூஜை புனஸ்காரங்களின் பலன்கள் மனிதனுக்கு வராது. கடவுள் படைப்பான மனித ஜீவன்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களின் பலன்கள் இறைவனை சென்றடையும் என்கின்றார்.

மக்கள் சேவையே மகேசன் பூஜை என்று இன்று ஒருவரியில் சொல்லப்படுகின்றது. ‘அனைவருமே ஆண்டவனின் ஸ்வரூபம் என்றும் அரிதான தத்துவத்திற்கு இதைவிட என்ன விளக்கம் வேண்டும்.

ஸ்ரீராம கிருஷ்ணரிடம் மத, இன, பாகுபாடு மட்டும் இல்லாமல், படித்தவர், பாமரர், செல்வர், ஏழை, இவை மட்டும் அன்றி நல்லவர் தீயவர் பாகுபாடு கூட இல்லை.

ஆண் பெண் யாராக இருப்பினும் – அவர்களிடம் ஒழுக்கங்களின் ஓட்டுறவே இல்லாமல் இருப்பினும் அவாகளையும் தம் மக்களாக்குவதில் தான் அவரின் அவதார முக்கியத்துவமே இருக்கின்றதாக சமூக நலம் விரும்பிகள் கருதுகின்றனர்.

ஏசுபிரான் இறைவனிடம் பாவிகளுக்காக தந்தையே இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கின்றனர். இவர்களை மன்னியுங்கள் என மன்னிப்பையே வேண்டினார் ஏசுபிரான் பாவிகளை இரட்சிக்க வந்தார். பரமஹம்ஸரோ பாவிகளை பவித்ரமானவர்கள் ஆக்கும் பொருட்டு பாருக்கு வந்தவர்.

‘அவதார வாஷ்டாயர் என இவர் அழைக்கப்படுகிறார். இதனாலேயே அவதாரங்களில் சிறந்தவர் எனும் பொருள் பொதித்த பொன்னான வரிகள் தண்ணீர் இன்றி ‘வாடிய பயிரைக் கண்டபொழுது தானும் வாடியவர் வள்ளலார். தொல்லா நோன்பையே முக்கிய கொள்கையாகக் கொண்டவர்.

 

‘சமய சமரஸ சன்மார்கத்தையும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் இருகண்களாகப் பாவித்தவர்.

இந்த மெய்ஞானி, உருவ வழிபாடுகளைவிடவும் ஜோதி வழிபாட்டையே வற்புறுத்தினார்.. அறியாமை இருளைப் போக்கி அறிவொளியை வழங்கும் ஒளிமயமான இறைவனை ஏற்றி வைத்த ஜோதியை தரிசிக்கச் சொன்னார். ஜாதி வேறுபாட்டை அடியோடு வெறுத்தது மட்டுமல்லாமல் . சமூகங்களில் பரவிக்கிடந்த பலவித மூடப்பழக்க வழக்கங்களை முழுவதாக எதிர்த்தார். சித்தரான இவர் சிறந்த சீர்த்திருத்த வாதியாகத் திகழ்ந்தார்.

ஏழை, எளியவர்களின் பசிப்பிணியைப் போக்கும் மருத்துவர்களாக செல்வந்தர்கள் சேவை செய்யவேண்டும் என விரும்பினார்.

“வீடு தோறிரந்தும் பசியறாத வெற்றரைக்கண்டு உளம் பதைத்தேன்” என்று வருந்தி வருந்தி பாடுகின்றார்.

சிதம்பரத்தை அடுத்த ‘வடலூரில்” ‘தா;மசாலை” ஒன்றைத் தொடங்கி எந்நேரமும் பசியோடு இருப்பவருக்கு ‘இல்லை” எனாமல் ‘கஞ்சி” வார்க்கும் அறச்சாலை ஒன்றைத் தொடங்கினார்.. இன்றும் அது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‘புரட்டாசியில் தோன்றிய புரட்சி ஜோதியின் ஜெயந்திக்கும் அவர் தன்னை மறைத்துக்கொண்ட அவரால் தொடங்கப்பட்ட சத்யஞானசபை எனும் ஞானதிருக்கோயில் தினசரி ஜோதி வழிபாடும் தைப்பூச விழாவிலும் சிறப்பு ‘ஜோதி தரிசன வழிபாடு நடைபெற்று வருகின்றது.

ஊரெங்கும் அன்னதானம் நடக்கின்றது இருள் போக்கும் அவருடைய அருள்பாடல்கள் பாடப்பெறும் .

அவரால் இயற்றப்பட்ட அகவல் எனும் பாரயண நூல் மெய்ஞான நூலாக ஆன்மீக வழிகாட்டியாக இருந்துகொண்டே இருக்கிறது. மக்களின் பொருட்டு இம்மண்ணிற்கு வந்த மகான்களின் வழி நடந்தால் தனிப்பட்ட வாழ்வும் சமுதாய தன்மையும் ஒருங்கே கிடைக்கும்

எந்தரோ மகானுமபானுலு
அந்தரிகி வந்தனமு

 படங்களுக்கு நன்றி :

http://www.vedantany.org/photo-gallery/photos-of-sri-ramakrishna/ 

http://vadalur.blogspot.com/2007/11/vallalar-image-poster.html

http://tamil.oneindia.in/search.html?topic=%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *