கடவுளின் ஆடை
குமரி எஸ்.நீலகண்டன்
காற்றடைத்து
கடவுள் அளித்த
ஒரே ஆடையில்
கர்ஜிக்கும் முகங்கள்.
ஆடை
அவிழ்கிற போதும்
அசராமல் இருக்கும்
அகங்கார முகங்கள்.
திணித்த ஆசைகளால்
திணறும் மனத்துடன்
ஆடை
அவிழ்வதும் தெரியாமல்
அலையும் விழிகள்.
ஆசை ஆசையாய்
அலைந்து அள்ளியாயிற்று.
கடவுள் தந்த ஆடை
கழன்று போகும் தருணத்தில்
கொள்வதற்குக்
கைகளும் இல்லை.
காற்றைச் சுமக்கப்
பைகளும் இல்லை.