அமெரிக்காவில் பற்றாக்குறை!

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஅமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு. இந்த நாட்டில் பற்றாக்குறை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. பெரும் பணக்காரர்கள், தாங்கள் வாங்கும் கடனைத் தங்களால் அடைத்துவிட முடியும் என்று நம்பி மேலும் மேலும் கடனை வாங்கிப் பின் அதை அடைக்க முடியாமல் போய், திணறித் தங்கள் சொத்துகளை எல்லாம் விற்கும் நிலைக்கு ஆளாவதைப் பார்த்திருக்கிறோம், இல்லையா? அந்த நிலைமைக்குத்தான் அமெரிக்கா போய்க்கொண்டிருப்பதாக அமெரிக்காவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்கா என்ற நாடு உருவாக்கப்பட, பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறப் போரிட வேண்டியிருந்ததால், அமெரிக்கா கடனில் தொடங்கியது. பின்னர் 1789இல் அமெரிக்காவின் அரசியல் சட்டம் (Constitution) எழுதப்பட்டு, அமெரிக்கா முறையான நாடாக செயல்படத் தொடங்கிய போது,  அமெரிக்காவிற்கு இருந்த கடன் 75 மில்லியன் டாலர்கள். நாடு கடனில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்த அன்றைய அரசியல் தலைவர்கள், 1835இல் அமெரிக்காவின் கடனை முழுவதுமாக நீக்கிவிட்டனர். ஆனால் ஆண்டுகள் போகப் போக அமெரிக்காவின் கடன் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட ஆரம்பித்தது.

புதிய நாடான அமெரிக்கா தன்னை நிலைப்படுத்துக்கொள்ள, அமெரிக்கக் கண்டத்தில் ஃபிரான்ஸ் பிடித்து வைத்திருந்த இடங்களையும் ஸ்பெயின் பிடித்து வைத்திருந்த இடங்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள எண்ணி, அந்த நாடுகளோடு போரிட்டது. இந்தப் போர்களை நடத்த அமெரிக்காவிற்குப் பணம் தேவைப்பட்டது. 1861இல் உள்நாட்டுப் போர் மூண்டபோது நிறைய செலவு ஏற்பட்டாலும், 1913இல் அமெரிக்காவின் கடன் தேசப் பொருளாதார உற்பத்தித் தொகையில் (Gross Domestic Product) ஏழு சதவிகிதம்தான்.

US-GreatSealஅதன் பிறகு, முதல் உலக யுத்தம், பின் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதாரச் சரிவு ஆகிய இரண்டினாலும் அமெரிக்காவின் கடன் சுமை ஏறினாலும், அப்போதைய கடன், பொருளாதார உற்பத்தித் தொகையில் 44 சதவிகிதம்தான். அதன் பிறகு இரண்டாவது உலக யுத்தத்தில் அமெரிக்கா கலந்துகொண்டதால் அமெரிக்காவின் கடன் சுமை மெதுவாக ஏறிக்கொண்டு போய் உற்பத்தித் தொகையில் 122 சதவிகிதத்தைத் தொட்டது. இருப்பினும் அப்போதைய ஜனாதிபதிகளும் அமெரிக்க காங்கிரஸ் அங்கத்தினர்களும் பொறுப்பாக நடந்துகொண்டு அமெரிக்கக் கடனை வெகுவாகக் குறைத்தனர். நாட்டின் போருக்குப் பின் வந்த வளமும் அதற்குப் பெருந்துணை செய்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபட்டதால், அதில் உயிர் நஷ்டத்தோடு பொருள் நஷ்டமும் ஏற்பட்டது. 1965இல் அமெரிக்காவின் கடன், மீண்டும் ஏறுமுகமாகி அதன் உற்பத்தித் தொகையில் 47 சதவிகிதத்தை எட்டியது. மறுபடியும் அமெரிக்க அரசின் பொறுப்பான நடவடிக்கையால் இந்தக் கடன் 33 சதவிகிதமாகக் குறைந்தது.

1980இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகளால் அவர் பதவிக்கு வந்தபோது 909 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்கக் கடன் 1988இல் 2.6 ட்ரில்லியனைத் தொட்டது. ரீகன் பொருளாதாரக் கொள்கை (Reaganomics), அரசின் கட்டுப்பாடு சமூகத்தில் மிகவும் குறைவாக இருக்க வேண்டும், சந்தையில் அதிகப்படுத்தும் பணப் புழக்கத்தால் நாட்டில் வளம் கூடும், எல்லோருக்கும் இது நன்மை பயக்கும் என்பதுதான். இந்தப் பொருளாதாரக் கொள்கை நாட்டில் ஏற்றத் தாழ்வை அதிகரித்தது மட்டும் அல்லாமல், வரி வருமானத்தைக் குறைத்து நாட்டின் கடன் சுமையையும் அதிகரித்தது. அவருக்குப் பிறகு பதவியேற்ற முதல் புஷ்ஷின் பதவிக் காலம் 1992இல் முடிந்த போது அமெரிக்காவின் கடன், நான்கு ட்ரில்லியன் ஆகியது.

1992இல் பதவியேற்ற கிளிண்டனின் பொருளாதாரக் கொள்கைகளால் கிளிண்டன் 2000-த்தில் பதவி விலகியபோது உபரித்தொகை உள்ள பட்ஜெட் (surplus budget) இருந்தது. அவருடைய காலத்திற்குப் பிறகும் உபரித் தொகை பட்ஜெட் நீடித்துக்கொண்டே போனால் அதன் பிறகு 25 வருடங்களில் அமெரிக்காவின் கடனை முழுவதுமாக அடைத்துவிடலாம் என்று அவர் கணித்தார்.

ஆனால் கிளிண்டனுக்குப் பிறகு பதவியேற்ற இரண்டாவது புஷ் காலத்தில் பட்ஜெட் பற்றாக்குறை அதிகமாக ஆகக் கடனும் கூடியது. புஷ் மிகப் பெரிய பணக்காரர்கள் உட்பட எல்லோருக்கும் வரி விகிதத்தைக் குறைத்ததால் அரசின் வருமானம் குறைந்தது. ஆனால் அதே சமயத்தில் ஆஃப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீது தொடுத்த யுத்தத்தால் அரசின் செலவு மிகவும் ஏறியது. 2001, செப்டம்பர் 11ஆம் தேதி தீவிரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கிய பிறகு அமெரிக்க அரசு உருவாக்கிய நாட்டைப் பாதுகாக்கும் துறையாலும் (Department of Homeland Security)  நிறைய செலவு ஏற்பட்டது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மன, உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட மெடிக்கேர் (Medicare) என்னும் திட்டத்தை விரிவுபடுத்தியதாலும் அரசிற்கு நிறைய செலவு ஏற்பட்டது. இதற்கு மேல், வருமானத்திற்கு மேல் செலவழிக்க அமெரிக்க மக்களும் பழகிவிட்டதால் புஷ் காலத்தில் அமெரிக்காவின் கடன் பளு மிக அதிகமாகியது.

இவர் காலத்தில்தான் வீடுகள் வாங்க அமெரிக்க மக்களுக்கு, அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் தகுதிக்கு மேல் கடன் கொடுத்து வங்கிகள் நஷ்டமடைந்து, அந்த வங்கிகளைக் காப்பாற்ற அரசு வங்கிகளுக்கு மீட்புத் தொகை (Bailout money) கொடுக்க வேண்டியதாயிற்று. 2001இலும் 2003இலும் ஆரம்பித்த ஆஃப்கானிஸ்தான், ஈராக் யுத்தங்கள் நீண்டுகொண்டே போய் அதனாலும் அரசின் செலவு கூடிக்கொண்டே போனது.
புஷ் 2000த்தில் பதவியேற்றபோது 5.6 ட்ரில்லியனாக இருந்த கடன், 2008இல் அவர் பதவி விலக ஆறு மாதங்கள் இருந்தபோது 8.7 ட்ரில்லியனாகக் கூடி, பதவி விலகியபோது 11 ட்ரில்லியன் ஆகியது. புஷ்ஷைப் பதவியில் அமர்த்தி அவருக்குப் பின்னால் இருந்து அவரை ஆட்டுவித்த பெரும் பணக்காரர்களான வலதுசாரிகள் தங்கள் நலனைக் காத்துக்கொள்ளவும் எண்ணெய் வளம் அதிகமாக இருந்த நாடுகளை அமெரிக்காவின் அதிகாரத்தில் வைத்துக்கொள்ளவும் போட்ட திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்தன.

அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறையை மாற்றி உபரித் தொகை பட்ஜெட்டாக மாற்ற, அமெரிக்க அரசு எதுவும் செய்யவில்லை என்றால் அமெரிக்காவின் கடனுக்குரிய வட்டித் தொகை இன்னும் ஐந்து வருடங்களில் அமெரிக்க ராணுவ பட்ஜெட்டை விட அதிகமாகிவிடுமாம். இதை உணர்ந்துள்ள பொருளாதார நிபுணர்கள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப் பல இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

பதினோரு ட்ரில்லியன் டாலர் கடன் பட்டிருந்த அமெரிக்காவைக் காப்பாற்ற 2009இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒபாமா அரசின் வருமானத்தை எப்படிக் கூட்டலாம், செலவுகளை எப்படிக் குறைக்கலாம் என்று தீட்டிய திட்டங்களை முறியடிப்பது போல், 2010 டிசம்பர் 18ஆம் தேதி முடிந்து போயிருக்க வேண்டிய, புஷ் பணக்காரர்களுக்குக் கொடுத்த வரிச் சலுகையை, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஒபாமாவைப் பணியவைத்து, எப்படி நீட்டித்துக்கொண்டார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

=========================

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

About நாகேஸ்வரி அண்ணாமலை

முனைவர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க