துளசி மாலையும் இருமுடியும்
விசாலம்
சபரிமலைக்குப் போகும் குருசாமி, கன்னிசாமி மற்றும் விரதமிருந்து வருடா வருடம் போய் வரும் பக்தர்கள் கழுத்தில் இருப்பது துளசி மாலை. மலைக்கு விரதமிருந்து போகும் பக்தர்கள், இரு வேளையும் பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண்டும். அதுவும் மார்கழி மாதக் குளிரில்.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும்
துளசி மாலை அலங்கரிக்கும்.
இந்தத் துளசி மாலை அணிவதற்கு ஒரு புராணக் கதையும் இருக்கிறது. ஐயப்பன் ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்தவர். ஹரிதான் மோஹினி ரூபமாக வந்தார். பஸ்மாசுரனை வதைக்க எடுத்த ரூபம். பஸ்மாசுரன் தன் கையையே தன் தலையில் வைத்து மரணமடையச் செய்தவள் அந்த மோஹினி.
தேவ அசுரர்கள் அமிருதம் பெறப் பாற்கடலைக் கடைய, அதிலிருந்து அமிருதம் வந்தது. அதை எல்லோருக்கும் வழங்க, திருமால் மோஹினியாக வர, ஹரன் அவள் அழகில் மயங்கி, அவளுடன் சேர ஆசைப்பட்டார். மோகினி தான் இன்னொரு தடவை மோகினியாக வரும் போது அவர் விருப்பம் நிறைவேறும் என்று முன்பு சொல்லியிருந்தாள். அதன் தருணம் இப்போது வந்தது. பஸ்மாசுரனை வதைத்த பின் ஹரன், ஹரியான மோகினியுடன் சேர, ஹரிஹர புத்திரன் தோன்றினார்.
இப்போது துளசி மாலைக்கு மீண்டும் வருவோம். ஹரிஹரசுதனின் தாய், மோகினி. உண்மையாக விஷ்ணு அல்லவோ. அதனால் விஷ்ணுவிற்குப் பிடித்தமான துளசி மாலை அணியப்படுகிறது. தவிர துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள் அல்லவா. ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
என் நண்பர் ஒருவர் சபரி மலைக்குப் போவதற்கு முன் இருமுடி கட்டும் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். நானும் மிகவும் ஆர்வமாக இதைக் காணப் போயிருந்தேன். இருமுடியில் முன் புறம் ஒரு பையும் பின் புறம் ஒரு பையும் இருக்கிறது. முன்புறப் பையில் முதலில் சுபமாக மஞ்சள், பின் குங்குமம் வைத்த பின் தீபம் ஏற்றத் திரி, நெல்பொரி, அவல் காணிக்கை என்று சில பொருட்களை வைத்திருந்தனர். அத்துடன் மிகவும் முக்கியமாக ஒரு தேங்காயும் இருந்தது. அந்தத் தேங்காயின் சிறப்பு என்னவென்றால் அந்தத் தேங்காயினுள் பசும்நெய் விடப்படுகிறது. தேங்காயினுள் ஒரு துவாரம் இட்டு, அதற்குள் நெய் ஊற்றிப் பின் அது கீழே சிந்தாமல் நன்கு அடைத்துவிடுகிறார் குருசாமி.
பின்னால் இருக்கும் பையில் அரிசி, பருப்பு, மஞ்சள் பொடி, வெல்லம், ஏலக்காய், முந்திரிப் பருப்பு, திராட்சை என்று பிரயாணத்தின் போது சில கோயில்களில் பிரசாதம் செய்ய உபயோகமான பொருட்கள் வைக்கப்படுகின்றன.
சபரி யாத்திரையில் இந்த இரணடு பைகளில் ஒன்று குறைந்துகொண்டே வரும். அதுதான் பின்புறப் பை. ஆனால் முன்புறப் பை ஐயப்பனைத் தரிசிக்கும் வரை தொடரும்.
பின்புறப் பை குறைவதை, நமது ஆணவம், தன்முனைப்பு, கர்வம், தன்நலம்…. போன்றவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது என எடுத்துக்கொள்ளலாம். முன்புறப் பையில் இருக்கும் தேங்காயும் அதனுள் இருக்கும் நெய்யும் ஐயப்பனை அபிஷேகம் செய்யவும் அதனால் நம்முள்ளே இருக்கும் விளக்கு எரிந்து, ஒளியுடன் பிரகாசிக்கும் நிலையும் ஏற்படுகிறது என்லாம்.
ஏன் இந்த இரு முடி சுமக்க வேண்டும்?
ஐயப்பன் தாயின் தலைவலியைத் தீர்க்க.
“புலிப்பாலைக்கொண்டு வா”என்ற உத்தரவுக்குப் பணிந்து, தன் தாயைக் காப்பாற்றக் கானகம் சென்றார். அவரது வழிப் பயணத்திற்குத் தேவையான பொருட்களை இருமுடியில் சுமந்துகொண்டு சென்றார். இதை ஞாபகப்படுத்திக்கொள்ளத்தான்
ஐயப்பன் விரதம் வைக்கும் பக்தர்கள், இருமுடியைச் சுமக்கிறார்கள்.
===========================
படத்திற்கு நன்றி: web.singnet.com.sg