அன்னையும், பிதாவும்…..
அன்றாடம் வாழ்க்கை நமக்கு பல்வேறு பாடங்களைக் கற்பித்தாலும், ஒரு குழந்தை பிறந்தது முதல் முதுமைப்பருவம் எய்தி மண்ணிலிருந்து மறையும் வரை ,ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏதோ ஒரு வழிகாட்டி நம்மை வழிநடத்திக் கொண்டுதான் இருக்கிறது. வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ எத்தனையோ வழிகாட்டிகள் நம் வெற்றிப்பாதையில்! ஞானிகளும், மேதைகளும், மூத்தோரும் , முனிவரும், சித்தரும் மட்டுமே வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் தேநீர் கடைக்காரரும், காய்கறி விற்பவரும், சிறார்களும் இப்படி யார் வேண்டுமானாலும் ஏதோ ஒரு வகையில் நமக்கு வழிகாட்டிகளாகலாம். ஒரு சிறு எறும்பு நமக்கு சேமிப்பை உணர்த்துகிறது. தேனீயோ ஓயாத உழைப்பை உணர்த்துகிறது. பகிர்ந்து உண்ணுதலுக்கு காகமும், நன்றியுணர்விற்கு நாயும் , இப்படி ஐந்தறிவு மிருகங்கள் கூட நமக்கு வழிகாட்டிகளாகலாம். நமக்கு வேண்டுவதெல்லாம் இதையெல்லாம் பாகுபாடின்றி திறந்த மனதுடன் உள்வாங்கிக் கொள்வதுதான்! வெற்றிப்பாதையை விரிவடையச் செய்யும் வல்லமையை அளிக்கக் கூடியதாக இருப்பது அத்தகைய வழிகாட்டிகள்தான் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் நண்பர் பெருவை பார்த்தசாரதி ’நல்வாழ்க்கைக்கு உதவும் வழிகாட்டிகள்’ என்ற தலைப்பில் மாதமிரு முறை தொடராக எழுத முன் வந்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே!
ஆசிரியர்.
நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – பகுதி – 1
நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள் – பகுதி -2
பெருவை பார்த்தசாரதி
பெற்றோர்:
ஒரு தாய், தனது வயிற்றிலே கருவை பத்து மாதங்கள், பலவித ஆசைகளுடன் சுமந்து ஒரு மகவைப் பெற்றெடுக்கும் போது, அந்தத் தாய்க்கும், தகப்பனுக்கும் கிடைக்கும் மகிழ்சிக்கு அளவுகோல் என்பது கிடையாது. அந்த மகிழ்ச்சி என்பது பெயரளவிலேயே நின்றுவிடாமல், அக்குழந்தையை நல்ல சூழ்நிலையில் வளர்த்து, மாமனிதனாக ஆக்கவேண்டும் என்ற ஆர்வமும் தொடர்ந்து வந்தால்தான், அதன் ஆயுள் நீடிக்கும்.
ஒரு குழந்தை வளர்ந்து பெரியவனாகும் போது, அந்த மனிதனின் குணநலன்களைத் தீர்மானிப்பது எது? அவனுக்கு எத்தகைய சூழ்நிலையை பெற்றோர்கள் அமைத்துத் தருகிறார்கள் என்பதைப் பொருத்தே அமையும். மரபணுவும் இதற்குத் துணை நிற்கும். மரபணுவின் தாக்கம் எப்படி இருந்தாலும், பெற்றோர்களின் சிறந்த வளர்ப்பு முறையால் மரபணுத் தன்மையை சிறிதளவேனும் மாற்றிக்காட்டமுடியும். பிள்ளைப் பருவம் முதல், வாலிபப்பருவம் வரையில், அவனுடைய வாழ்க்கைக்கு முதல்வழிகாட்டியாக இருப்பவர்கள் பெற்றோர்களே.
மேலும் பெற்றோர்களின் குணநலன்கள் மற்றும் பழக்க வழக்கங்கள், தங்களின் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையாக அமையும் விதத்தில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பொதுவாக வளர்ந்து வரும் குழந்தைகளின் செயல்பாடுகள், பெரும்பாலும் அதன் பெற்றோர்களின் பழக்கவழக்கங்களைப் பொருத்தே அமையும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. பள்ளிக்கூடங்களிலிருந்து, வீடு திரும்பும் சில குழந்தைகள் வீட்டிற்குள் நுழையும்போதே, ‘ஸ்கூல்பேக்’ ஒருபுறம், ‘ஷு’ ஒருபுறம், ‘டிபன்ஃபாக்ஸ்’ இன்னொருபுறம் என்று ஆங்காங்கே வீசி எறியும். இந்தப் பழக்கமெல்லாம் எங்கிருந்து வருகிறது?….
யார் சொல்லிக்கொடுத்தார்கள்?……
தனது அப்பா அலுவலகத்திலிருந்து வந்தவுடன் எப்படி நடந்து கொள்கிறார் என்பதே, அக்குழந்தையின் அடிமனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. தானும் தந்தையைப்போல் செய்வது தவறில்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குடிகாரன், தினமும் அதிகாலையில் ஆறு மணிக்கே கள்ளுக்கடைக்குச் செல்வதை, இளம்பிராயத்திலிருந்து கவனித்து வரும் அவனது குழந்தை பின்னால் வளர்ந்து பெரியவனாகும்போது, தம் ஆழ்மனதில் உறுத்திக்கொண்டிருந்த தகப்பனின் செயல்பாடுகள், ஒரு நாள் வெளியே தலைகாட்டும். வெகு விரைவில் தகப்பனின் அந்த கள்ளுக்கடைப் பழக்கம் அவனையும் தொத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
“தாயைப் போல பிள்ளை”
“நூலைப் போல சேலை”
என்பது போல, பெற்றோர்களின் குணாதிசயங்களைப் பொருத்தே, குழந்தையின் செய்கைகளும் அமையும். பெற்றோர்கள் எந்த வகையான செய்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதைச் சார்ந்தே குழந்தைகளின் சிந்தனையும் வளரும். குழந்தைகளின் ஒரு குறிப்பிட்ட பருவம் வரை, தாய் என்பவள் வழிகாட்டியாகச் செயல்படுவாள். பிறகு தந்தை என்பவர் கடைசி வரை வழிகாட்டுபவராக இருக்க வேண்டும்.
குழந்தைகளின் மனதில் தோன்றும் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மறைந்திருக்கும் ஆற்றல்களை ஆராய்ந்து, அறிந்து, வெளியுலகுக்கு கொண்டுவருவதில், ஆசிரியர்களைவிட பெற்றோர்களே முதலிடம் வகிக்கிறார்கள். ஏனென்றால், ஆசிரியரைவிட, பெற்றோர்கள்தான் அதிக நேரம் குழந்தைகளோடு உறவாடுகிறார்கள். குழந்தை வளர்ப்புக் கலையில், பெற்றோர்களின் அணுகுமுறை என்பது மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம்.
பையன்:: அப்பா…. எனக்கு கியர் சைக்கிள் வேணும்ப்பா?, தெனமும் 2 கிலோ மீட்டர் டியூஷனுக்கு போக வேண்டிருக்கு.!……
அப்பா:: கொட்டிக்க மட்டும் தெரியுது, சாப்பிட்டு கொழுத்துக் கெடக்கிற, ஒரு 2 கிலோமீட்டர் நடக்கத் தெரியலையோ…? நடந்தா உடம்புக்கு நல்லது.
பையன்:: நா பெரிய ஆளா வரணுன்னு, ஸ்கூல் டைம் போக, எல்லாப் பாடத்துக்கும் தனித்தனியே ஒவ்வொரு டியூஷன்லேயும் என்னப் போட்டு வச்சிருக்க? அவ்வளவுக்கும் போகனுன்னா பஸ்ஸ நம்பி பிரயோஜனமில்லப்பா? டைம் வேஸ்டாகுதுப்பா!…..
அப்பா:: அந்தக் காலத்தில நாங்கலெல்லாம், நாலு கிலோமீட்டர் நடந்து போய்தான் படித்தோம். சைக்கிளெல்லாம் கேக்காத, படிச்சா படி இல்லன்னா, மாடு மேய்க்கப் போ…
பெற்றோர்களின் இது போன்ற அணுகுமுறைகள்தான், குழந்தைகளின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் அதிக தாக்கம் ஏற்படுத்துகின்றன. ‘இந்த மாதம் நிறைய செலவுகள் இருப்பதால், அடுத்த 2 மாதத்தில் வாங்கித்தருகிறேன்’ என்று யோசித்து நிதானமாகப் பதில் சொல்லியிருக்கலாம் அல்லவா? தங்கள் குழந்தைகள் பிற்காலத்தில் பெயர் சொல்லக்கூடியவர்களாக வரவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள், முதலில் தங்களிடம் உள்ள குறைகளைக்ன்களைந்து எறியத் தயங்கக் கூடாது.
ஒரு பணக்காரத் தம்பதிகளுக்கு 14 குழந்தைகள், எல்லாக் குழந்தைகளையும் அன்போடு கவனித்தாலும், ஒரு சில குழந்தைகளின் திறமைகளை ஆரம்பத்தில் அவர்களால் எளிதில் கண்டுகொள்ள முடியவில்லை. 14வது குழந்தை அடிக்கடி ஸ்கூல் போக மறுத்து, உடல் உபாதை என்று பொய் சொல்லியதும், ஆங்கில ஆசிரியர் நடத்தும் பாடத்தில் அவ்வளவாக ஈடுபாடு இல்லையென்றும் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது. பள்ளிப்பருவத்திலேயே பாட்டு எழுதுவதிலும், எழுதிய பாட்டை பாடுவதிலும் அதிக அக்கறை காட்டியது. ஒரு நாள் தான் எழுதிய பாட்டுகளை எல்லாரிடத்திலும் படித்துக் காட்டுகிறான்.
முதல் நாள் அப்பாவிடம் ஆவலோடு படித்துக் காண்பிக்கிறான்.
அப்பா: யார் எழுதிக்கொடுத்தது?
பையன்: யாரும் எழுதிக் கொடுக்கவில்லை! நானே எழுதியது.
அப்பா: எனக்குப் பிடிக்கல, இதெல்லாம் சோறுபோடாது, ஒழுங்கா படி, அதுதான் வாழ்க்கைக்கு உதவும்.
பையன்: எனக்குப் பிடிக்குதுப்பா!…தொடர்ந்து கவிதை எழுவேம்ப்பா?..
அப்பா: போடா பொல்லாத கவிதை? ஆவேசப்பட்டார் தந்தை.
ஒரு நாள் தன் நெருங்கிய நண்பரிடம் காண்பிக்கிறான். நான் எழுதிய கவிதையைப் பாரேன் நண்பா?..
அடுத்தநாள் நண்பனிடத்தில் காண்பிக்கிறான்:
நண்பன்: எங்கே காப்பி அடிச்ச?..
‘எங்கேயும் காப்பியடிக்கல’, ‘என் சிந்தனையில் உதித்தது’.
மற்றொரு நாள், தனது அண்ணனிடத்தில் அதே கவிதையை காண்பிக்கிறான்:…
அண்ணன்: உன் நண்பன் எழுதிக்கொடுத்தானா?…
இன்னொரு அண்ணன்: ‘சிந்தையிலே உதித்தது, கருவிலேயே வளர்ந்ததுன்னு’, பொய் சொல்றான். கேலி செய்த அண்ணன்மார்கள் சிரிக்கிறார்கள்.
மீண்டும் ஒரு நாள் அதே கவிதையை அன்னையிடம் காண்பிக்கிறான்.
எழுதிய கவிதையை இனிமையான குரலில் பாடிக்காண்பித்த தனது 8 வயதுக்குழந்தையை, மார்போடு அணைத்து, முத்தமிட்டாள் அவன் அன்னை.
அன்றுதான் அந்தப் பாலகனுக்கு, தம் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை வந்தது.
பின்னாளில் நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தார். எழுதியதை பலருக்கும் படித்துக் காண்பித்தார். பையனின் திறமையை ஆரம்பத்தில் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாத தந்தை, நாளடைவில் தனது 14 வது குழந்தையின் அறிவுத்திறனை வளர்க்க அரும்பாடுபட்டார். பெற்றொர்கள் கொடுத்த ஊக்கத்தினால் அந்தச் சிறுவன் பின்னாளில் “கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்” என்ற பெருமைக்கு உரியவரானார்.
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில், அவர் எழுதிய “கீதாஞ்சலி” என்ற பாடலுக்கு “நோபல்” பரிசு கிடைத்தது. மற்றொரு பாடல் இந்தியாவின் தேசிய கீதமானது, இன்னொன்று வங்காள தேசத்தின் தேசியப் பாடலானது.
தாகூரின் திறமையைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டதால், உலகம் அவரை அறிந்து கொண்டது.
ஒரு சாதாரண மனிதன் ஒரு பொருளை சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்கிறான்,
அதே பொருளை ஒரு கவிஞன் சற்று கூர்ந்து பார்க்கிறான்.
மற்றொருவன் விஞ்ஞானி, அந்தப் பொருளை ஊடுருவி அதற்குள்ளே என்ன இருக்கிறது என்பதை தீவிரமாக ஆராய்கிறான். பிறகு அந்தப் பொருளுக்குள்ளே புதைந்து இருக்கும் புதையல்களை வெளியுலகுக்கு கொண்டு வந்து மற்றவர்கள் அறியாதமுடியாததை அவர்களுக்கு அறியவைக்கிறான்.
இங்கே மூன்றாவதாக வருகின்ற விஞ்ஞானிதான் “பெற்றோர்கள்”, பொருள் என்பதுதான் தங்களது “குழந்தைகள்”.
ஒரு பச்சிளம் குழந்தை, பெற்றோர்களின் அரவணைப்பில் ஆசிபெற்று, ஒவ்வொரு பருவத்திலும் தனது பெற்றோர்கள் தரும் ஊக்கத்தை முழுவதுமாகப் பெறும்போதுதான் அவன் மனிதனாக வாழமுடியும் என்பதை
‘மனிதனாக வாழவேண்டும் மனதில் வையடா’
‘வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா’
என்று மக்கள் கவிஞரின் உயரிய சிந்தனையில் பாடல் வரிகளாகத் தோன்றி, தமிழர்களின் மனதிலிருந்து நீங்காத திரையிசைப் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தொடருவோம்.
படத்திற்கு நன்றி:
http://www.scientificamerican.com/article.cfm?id=pass-it-on-children-can-inherit-herpes
Very nice.
nanbar sarathy ezhuthia katturai migavum arumai !
sarathy sir , ur writeup in vallamai.com is very good ! keep writing !
NICE WRITE UP AND PARENTS SHOULD ENCOURAGE THE CHILDREN”S TALENT