நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-4

4

பெருவை பார்த்தசாரதி

பள்ளிக்கூடங்கள்: (சென்ற இதழின் தொடர்ச்சி) 

பள்ளிக்கூடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றியச் செய்திகளைப், படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ, யாரையாவது கேட்டு அறிந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமோ யாருக்கும் வராது?. ஏனென்றால் எல்லோரும் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.          

இன்றைய பள்ளிக்கூடங்களில் செயல் படுத்தப்படும் கல்வி முறைகளில் இன்னும் பல மாற்றங்கள் வர வேண்டும் என்பதே வரலாறு படைத்த அறிஞர்களின் அறிவுறுத்தல் ஆகும். தற்காலத்தில் மாணவர்களின் செயல்திறம் அதிகமாக இருந்தாலும் ஒழுக்கமும் பண்பும் மிகக் குறைந்து காணப்படுகிறது என்பதால்தான் டாக்டர். அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளும், அறிஞர்களும் பள்ளிகளை மையமாக வைத்து, மாணவர்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறந்த மாணாக்கர்களை உருவாக்கி, இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக்கும் முயற்சிக்கு உறுதுணையாகத் தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களே அடிப்படைத் தேவை என்பதைக் கருத்தரங்களில் உரையாற்றும் போதும் வலியுறுத்தி வருகிறார்கள். 

பாடங்களை மனனம் செய்து, வெறும் மதிப்பெண்களை மட்டுமே பெற்றுத் தருகின்ற கல்வி நிறுவனங்களுக்குள் போட்டி நிலவுகின்ற இன்றையச் சூழ்நிலையில், வாழ்வியல் கல்வியைத் தரும் பள்ளிகள் இருக்கிறதா என்றால், ஒரு 40 வருடத்துக்குப் பின்னோக்கித்தான் செல்ல வேண்டி இருக்கும். இன்று மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லித் தரும்போதே நல் ஒழுக்கங்களையும் சொல்லித் தரும் பள்ளிகள் இருக்கிறதா என்ற கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. 

தரமான பள்ளிகளில் படித்து, வரலாற்றிலே இடம் பெற்று, உயர் பதவிகளையும் பட்டங்களையும் பெற்றுக் கொண்டிருக்கும் சில அறிஞர்கள், தங்கள் காலத்திலேயே, தங்கள் கண் எதிரிலேயே, பணம் ஈட்டும் நோக்கோடு, அதே பள்ளிக்கூடங்கள் இன்று மிகவும் சீர் கெட்ட நிலைக்குச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து வேதனை அடைய முடிகிறதே தவிர தடுக்க முடியவில்லை. இம்மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை எண்ணிக் கண்ணை மூடிக் கொள்ள வேண்டிய நிலைதான் தற்போது உள்ளது என்ற கருத்தை ஊடகங்களும் அவ்வப்போதுச் செய்திகளாக வெளியிடுகின்றன.         

கட்டாயக் கல்வி என்பது ஒருபுறம் இருந்தாலும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், தானாக முன்வந்து கல்வி பயிலும் பண்டையக் கல்வி முறையில் பலன் உண்டு என்பதை அறிந்த சில கல்வி நிறுவனங்கள், தங்கள் பெயரிலே “குருகுலம்”. “ஆஷ்ரமம்”,  “வித்யாலயா” சேர்த்துக் கொண்டுச் சிறப்பாகச் செயல்பட முனைவது நம் கண்ணில் தெரிகிறது. பாடங்களை மனதில் திணிக்காமல், மனனம் செய்யாமல், சுயஅறிவோடு, சுயசிந்தனையோடு கற்பிக்கின்ற வித்தையைச் செய்து காட்டும் இம்மாதிரிப் பள்ளிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதையும் பலரும் அறிவர்.  குருகுலக் கல்வியில் புதிதாகச் சேரும் மாணவனின் ஆர்வத்தைச் சோதித்து, அவன் எந்தத் துறையில் ஆர்வம் காட்டுகிறானோ, அந்தத் துறைக்கு மட்டுமே அதிகக் கவனம் செலுத்தி அதிமேதாவியாக்க ஆசான்கள் பாடுபட்டார்கள். விருப்பமில்லாத பாடத்தைப் படிக்கும் நிலையிலிருந்து மாணவனுக்கும் விடுதலை கிடைத்தது. ஆனால் இன்றைய நிலை வேறு. விருப்பமில்லா விட்டாலும் ஒரு குறிப்பிட்டத் துறையைச் சேர்ந்த ஒரு பாடத்தைக் கட்டாயமாக அனைவரும் படிக்க வேண்டிய நிலை நீடிப்பதால், ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதில் நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பது இந்திய அறிஞர்களின் கருத்து.

சென்ற வருடம் (2011) கணிதத்தில் 200 க்கு 200 மதிப்பெண்கள் வாங்கி, அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு, அப்பல்கலைக் கழகம், மாணவர்களின் சிந்தனைத் திறனைச் சோதிக்க, கணிதத்தில் தனியாக ஒரு தேர்வு வைத்ததில், பல மாணாக்கர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாது திணறியதைப் பத்திரிகைச் செய்தி ஒன்றில் வெளியிட்டியிருந்தார்கள். பள்ளிகளில் மாணவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டுமே தவிர, வெறும் மனனம் செய்வதால் பிற்காலத்தில், ஆராய்ச்சி போன்ற பல விஞ்ஞானத் துறைகளில் சிறந்து விளங்க முடியாது என்பதே இவர்கள் நடத்திய சோதனையின் முடிவு.          

இந்த நூற்றாண்டை இந்திய அரசாங்கம் “கணித நூற்றாண்டு” என்றும் டிசம்பர் 22 ஆம் தேதியை கணித மேதை ராமானுஜம் நாள் என்றும் அறிவித்து அவருக்கு உலகப் புகழைத் தேடித் தந்திருக்கிறது. கணித மேதை அவர்கள் ஆங்கிலத்திலே பல முறை தோல்வியடைந்தாலும் கணிதத்தில் மேதையானார் என்பதை உலகம் அறியும். சிந்திக்கும் திறன் இயற்கையிலேயே அமைந்திருந்தாலும், தனக்கு விருப்பப் பாடமானக் கணிதத்தை, இரவு பகலாக உழைத்து, மேன்மேலும் திறமையை வளர்த்து கணிதத்தில் பல விந்தைகளைச் செய்து காண்பித்து ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். தான் படித்த பள்ளிக்குப் பெருமை தேடித் தந்தார்.  அவர் கண்டுபிடித்த கணக்கு வித்தைகளில் ஒன்றுதான் இன்று ATM (Automatic Teller Machine) என்று சொல்லக் கூடிய தானியங்கிப் பணப் பட்டுவாடா செய்யும் இயந்திரம் இயங்க மூலக்காரணியாக உள்ளது.  ஏடிஎம்மில் பணம் எடுக்கும் ஒவ்வொருவரும் அவரை நினைவு கொள்ள வேண்டிய நேரம் இது. 

தரமான பள்ளிக்கூடம் என்று எதை வைத்துச் சொல்வது என்ற குழப்பம் ஒரு புறம். இது தவிர, போலிக் கல்வி நிறுவனங்களை அடையாளம் காண முடியாமல், அக்கம் பக்கத்தில் குடியிருப்போர் ‘தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிதான் உயர்ந்தது’ என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதும், நல்ல பள்ளிகளை அடையாளம் காண்பதற்குச் சிக்கலாக அமைந்து விடுகிறது.  

ü இதற்கு யார் காரணம்?

ü பள்ளிகளா? மாணவர்களா?

ü அல்லது அரசாங்கமா?

ஒவ்வொரு பெற்றோரும் சிந்தித்துப் பள்ளிக்கூட வாயிலிலேயே தினமும் விவாதித்துக் கொண்டிருக்கிற விடை தெரியாத கேள்விகள் இது.         

இப்படித்தான் ஒவ்வொருவரின் தொடக்க வாழ்க்கையும், பள்ளிப் பருவத்திலேயிருந்தே பல எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது. ஒருவர் நல்ல சூழ்நிலையில் வளர்ந்து, பெரியவராகி, பெயர் சொல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டுமானால், அதைத் தொடங்கும் இடம், ஒரு நல்ல பள்ளி யாகத்தான் இருக்க முடியும் என்பது நாமறிந்த உண்மை. ஒரு சமுதாயம் நல்ல விதமாக அமைய வேண்டுமானால், அது நன்மக்களைக் கொண்டே அமையும், அந்த நன்மக்களை உருவாக்குவது என்பது, ஒரு சிறந்த பள்ளிக்கூடத்தால் மட்டுமே முடியும். பள்ளிக்கூடங்களில் சிறப்பாகப் பணியாற்றுகின்ற ஆசிரியர்களை வைத்தே அந்தப் பள்ளிகளின் தரத்தை எடை போட முடியும்.

Ø இன்று முதல் நாம் ஒர் உயிரைக் காக்கப் பாடுபட வேண்டும்? என்று ஒரு மருத்துவரும்,

Ø சமுதாய முன்னேற்றத்துக்காகவும், மற்றவரின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்று, பெரிய பொறுப்புகளைப் புதிதாக ஏற்றுக் கொண்டிருக்கும் ஒருவரும்,

இது போலப் பலரும் இப்புத்தாண்டில் பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டிருப்பதைப் போல, “கல்வியோடு, ஒழுக்கத்தையும், பண்பையும் கற்பித்து, சிறந்த மாணாக்கர்களை உருவாக்கி “நல்ல பள்ளிக்கூடம்” என்ற பெயரை மக்கள் மத்தியில் வாங்கப் பாடுபடுவேன்” என்று ஆசிரியர்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும். 

பள்ளிக்கூடங்களின் செயல் தரத்துக்கு ஆசிரியர்களின் பங்கு என்ன? அவர்கள் மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்பதை ஐந்தாவது இதழில் தொடருவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’ – தொடர்-4

  1. அருமையான பகிர்வு, ஆனால் இன்றைய நிலையில் அரசியல்வாதிகள் கல்வி சீர்திருத்தத்தை அனுமதிக்க மாட்டார்கள், ஏனெனில் கல்வி என்பது அவர்களை பொருத்தமட்டில் ஒரு பணம் காய்க்கும் மரம். இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும், கட்சி பேதமின்றி, ஆளுக்கு ஒனறு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங
    கள் நடத்தி வருகின்றனர். கல்வியை அரசு மற்றும் தேசியமயமாகக் வேண்டும். சேவை மனப்பான்மை கொண்ட ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டு அவர்களுக்கு நல்ல சம்பளமும வழங்கப்பட வேண்டும.

  2. அன்பின் பூபேஷ் குமார்,
    அரசியல்வாதிகளை கல்விக்கூடத்திலிருந்து மக்கள் தான் விரட்டி அடிக்கவேண்டும். அது முடியும்.
    கலோனியத்தை எதிர்த்து நிறுவப்பட்ட காசி விஸ்வ வித்யாலயாவும், சாந்திநிகேதனும் சான்றுகள். செட்டி நாடு நகரத்தார் பள்ளிகள் மற்றொரு சான்று.

  3. it was a worthful article for every Indian citizen……. each and every indian should remember for our country’s growth..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.