ஆசிரியரைத் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தகுமா?

அவ்வை மகள் 

வகுப்பறையில் மாணாக்கர்கள், பாடத்திலிருந்து விலகித் தாமே தமக்குள்   நடத்திக் கொள்ளும் “தள்ளிய” கல்வியும் தாளாக் கல்வியும் கற்பித்தலின் வெள்ளாமை எனக் கண்டோம். இது தரும் விளைவு மாணாக்கர்களின் தேர்ச்சியில் எதிரொலிக்கின்றது, எதிரொளிக்கின்றது என்பதும் கண்டோம். கல்வியில் இது ஒரு எதிரிடை வினை. இது ஒரு ஆற்றல் கசிவு, இது ஒரு காலவிரயம், இது ஒரு மனிதவளச் சேதாரம், இது ஒரு மூலாதாரப் பலவீனம்.  ஒட்டு மொத்தத்தில் இது ஒரு நிரந்தர இழப்பு, ஒரு நிரந்தர பாதிப்பு!

ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய அந்தத் தருணத்தில், அதைக் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டால் அதனைக் கற்றுக் கொள்ளும் அடுத்த வாய்ப்பு அரிதானது. கல்விக் கூடங்களில் காலம் என்பது மாணிக்கத்தை விடவும் மதிப்புக் கூடுதலானது. விரும்பினாலும் கூட ஒன்றை ஆசிரியர் இன்னொரு பீரியட் மீண்டும் நடத்தும் அமைப்பு இல்லை. கால அட்டவணைகள் அத்தனை நுணுக்கமாய் அமைந்திருக்கும். அப்படியே கொஞ்சம் உபரி நேரம் கிடைத்ததென்றால், அதனை மீள் பார்வைக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியுமே தவிர மறு கற்பித்தலுக்கு (re-teaching) அது போதாது.  இந்தக் கால நெருக்கடியினை உணரவல்லோர் யார்? ஆசிரியர்கள் மட்டுமே!

மாணாக்கர்கள் வகுப்பறைக்கு வாராமல் போவதை (absent), வருகைப் பதிவேட்டில் குறித்து வைத்துக் கொண்டு அதை மிகப் பெரியதொரு ஆவணமாகப் பயன்படுத்தும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும், வகுப்பறைக்குச் சரியாய் வாராத மாணாக்கர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, போதிய வருகைப் பதிவு இல்லாதபோது இறுதித் தேர்வுக்கு மாணாக்கர்களை அனுப்பாமல் நிறுத்தும் சட்டத்தையும் கையாள்கிறார்கள். தத்தம் பதவிகளையும், அது தரும் உரிமைகளையும், இத்தனைத் துல்லியத்தோடு பார்க்கும், பயன்படுத்தும் இவர்கள் வகுப்பறைக்கு வந்தும் கூடப் படிக்கவியலாது கற்பித்தலில் பொருத்தப்படாத் துண்டங்களாய்க் கற்பிக்கப் படாமல் கல்விக்குப் புறத்தே நிற்க வைக்கப்பட்டு “absent”  செய்யப்படுகின்ற மாணாக்கர்களுக்கு என்ன நஷ்ட ஈட்டைத் தருகிறார்கள்? வகுப்பறையில் அமர்ந்ததாலேயே இவர்களுக்கு அனைத்தும் கற்பிக்கப் பட்டது, இவர்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இவர்களை இறுதித் தேர்வுக்குஅனுப்புவது எவ்வாறு?

இவர்கள் மாணாக்கர்களுக்கு ஒரு நஷ்ட ஈடு தருவதாகவே வைத்துக் கொண்டாலும் கூட அது “தனது வாழ்நாள்” எனும் பொக்கிஷத்தையும் தனது பெற்றோரின் வாழ்நாள் திரட்டு எனும் ஒப்பற்ற செல்வத்தையும், எதிர்பார்ப்பையும்  காணிக்கையாக வைத்துக் கல்விக் கூடத்தை நாடிய மாணாக்கரின் நஷ்டத்தை எவ்வாறேனும் ஈடு செய்ய இயலுமா? சொற்பதம் கடந்த துயரம் அல்லவா இது? இவ்வாறு மௌன யுத்தத்தில் காலம் தள்ளும் எத்தனையோ மாணாக்கர்கள்! அவர்களின் பின்புலத்தில் ஆயிரம் குடும்ப அவலங்கள்!! 

நன்றாகப் படிக்கும் மாணவரே என்றாலும் கூட ஒரே ஒரு நாள் வாராமல் போனாலோ அல்லது வந்தும் ஏதோ மனநிலை மற்றும் உடல் உபாதைகளினால், வகுப்பெடுக்கும் ஆசிரியர் ஒரு மிகப் பிரமாதமான ஆசிரியர் என்றே ஆன போதும், நடத்தப்படும் பாடத்தில் கற்பித்தலில் ஈடுபட முடியாமல் போகுமானால் அது எத்தனைக் கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதனை அந்த மாணாக்கர் மட்டுமே அறிவார்.

எந்த ஒரு பாடமும், “learning continuum” எனப்படும் தொடர் சங்கிலியாக ஒவ்வொரு படியும் அமைக்கப்பட்டுப் பல படிகள் ஒன்றின் மேல் ஒன்று பொருத்தப்பட்டப் படிக்கட்டுகளாகக் கட்டுமானம் செய்யப் பட்டிருக்கும். இதனை “learning hierarchies”  என்கிறோம். இதில் சங்கிலி  இணைப்புக்கள் நிகழாது போகுமெனில் அல்லது சங்கிலி  இணைப்பு பலவீனமாய் ஏற்பட்டு உறுதியின்மையால் இற்றுப் போய்  விட்டுப் போகுமெனில் அங்கே கற்றல் சங்கிலி உருவாவதில்லை!!

விடுபட்டுப் போன ஒரு சங்கிலி இணைப்பைப் பிறகு உருவாக்குவதென்பதோ அல்லது சரியாய் உருவாகாத இணைப்பைப் பின்னாளில் பற்ற வைத்து ரிப்பேர் செய்வதென்பதோ சுலபமான செயல் அல்ல.

எனவே தான் ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு மணித்துளியையும் கல்விக்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பது அடிப்படையாகின்றது. “போனால் வராது” என்கிற முது மொழி எங்கெங்கு பொருந்துமோ தெரியாது. ஆனால் ஒரு மாணாக்கரின் கல்விக்கான, வகுப்புக் கால அளவைக்கு இது முழுக்க முழுக்கப் பொருந்தும். “காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது” என்பது ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, கற்பித்தலுக்கு, கற்றலுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது என்றே கூடச் சொல்லலாம். நான் இவ்வாறு சொல்வதற்குக் காரணம் உண்டு.          

ஒரு கல்விக்கூடத்தில் அது பள்ளியோ, கல்லூரியோ, பல்கலைக் கழகமோ அது எதுவாகினும், ஒரு கல்வியாண்டு (அல்லது கல்வி அரையாண்டு) என்றால் அங்கே மூன்று காலங்கள் உண்டு. இவற்றை முறையே, அளிக்கப்பட்ட காலம் (available time), ஒதுக்கப் பட்டுள்ள காலம் (allocated time), கற்பித்தலுக்கானக் காலம் (instructional time) என்கிறோம். 

அளிக்கப்பட்ட காலம் என்றால் என்ன? ஒரு ஆண்டு என்றால்,  உலகெங்கிலும் பொதுவாக, “அளிக்கப்பட்ட காலம்” என்பது 36 வாரங்கள் மட்டுமே.  இந்தியா எனும்போது 195 நாட்கள், அமெரிக்காவெனில் 180 நாட்கள் எனலாம். இதில் வகுப்பறைக் கற்பித்தலுக்காக “ஒதுக்கப்படும் காலம்” மட்டும் ஏறக்குறைய 150 மட்டுமே. மீதி 30 நாட்கள் இடைத் தேர்வுகள், இறுதித் தேர்வுகள், விடைத்தாள் திருத்துதல், முடிவு அறிவிப்பு, ஆசிரியர் வருகை, தயாரிப்பு, இன்ன பிறப் பணிகள், விழாக்கள் இத்யாதி எனப் போய் விடும். இந்த 150 நாட்களே, “கற்பித்தலுக்கான காலம்.”  இந்த 150 நாட்களில் ஏறக்குறைய 10 நாட்கள் ஆசிரியர் தன் வகுப்பிற்காய்த் தான் நடத்தும், குறு தேர்வுகள், சிறு தேர்வுகள், செமினார் ஆகியனவற்றுக்குப் போய் விடும். மீதம் உள்ளவை 140 நாட்கள். இந்த 140 நாட்களில், மொத்தம் எத்தனைப் பாடங்கள் உண்டோ அத்தனையையும் மாணவர்கள் கற்றாக வேண்டும். ஆசிரியர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் கற்பிக்கும் பாடம் ஒன்று மட்டுமே! ஆசிரியரின் சுமை என்கிற ஒன்றிற்கு இணையாக மாணாக்கர்களுக்கு இருக்கின்ற சுமையை நாம் தராசில் நிறுத்திப் பார்த்தால் புரியும், மாணாக்கர்களுக்கு இருக்கின்ற பாரமும் அழுத்தமும்!

அதுவும் கற்பித்தலுக்கான காலம் எனும் குறுகியக் கால அளவையில், அவர்களுக்குக் கிடைத்தே ஆக வேண்டியதைச், சிறப்பான கல்வி, செழிப்பான கல்வி கிடைக்கவில்லை என்றால் அந்தக் குழந்தைகள் எத்தனைத் திண்டாடிப் போகிறார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? 

வகுப்பறைக் கல்வியின்பால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, ஒரு வகுப்பறையில், கற்பித்தலுக்கான காலத்தில், ஏறக்குறையச் சரிபாதி நேரம் கற்றல் நிகழாத கற்றல் தொடர்பில்லாத நேரமாகப் போகிறது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தப் பேருண்மை காட்டுவது என்ன? மாணாக்கர்களுக்குக் கற்றலுக்கெனக், கறாராக ஒதுக்கியிருக்கின்ற, குறைந்த பட்சமேயான காலத்தில் பாதியளவு வீணடிக்கப் படுகின்றது என்பதே! வகுப்பறை நேரம் என்பது மாணவர்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கின்ற நேரம்! அது மட்டுமல்ல. ஒரு மாணவன்/மாணவி ஒரு கல்விக்கூடத்திலே ஒரு வகுப்பறையிலே கல்விக்காக வந்து அமருகிறான்/அமருகிறாள் என்றால் அந்த வருகைக்குப் பின்னே வெகு பலப் பிரயத்தனங்களும், தயாரிப்புகளும், அவனது/அவளது தனிப்பட்டத் தியாகங்களும் பெற்றோரின் உற்றோரின் தியாகங்களும் அடக்கம். ஒரு குழந்தை பள்ளிக்கோ கல்லூரிக்கோ வருகிறான் அல்லது வருகிறாள் என்றால் அந்த வரவிற்குப் பேருந்து, ரயில் சேவைகள் தொடங்கிப் பால்காரர், தயிர்க்காரி, காய்க்காரி எனச் சுற்றுப்பட்டில் சேவை செய்யும் ஓராயிரம் பேர்கள் உண்டு.

விடுமுறையில்லாத ஒரு நாள் காலையில் பள்ளி துவங்கும் சற்று முன்னர், ஒரு பள்ளிக்கு அருகில் சென்று, சாலையோரம் விட்டேர்த்தியாக நின்றபடி அந்தச் சூழலைக் கவனித்தால் புரியும். அங்கே திரண்டு நிற்கும் சமுதாய இயக்கம்! இந்த இயக்கம் எது கருதி? இந்தத் துடிப்பு எது நோக்கி? இந்த ஆர்வம் எதைப் பார்த்து? இந்தச் சமுதாயத்தின் எதிர்காலப் பிரஜைகளான இந்தப் பிஞ்சுகள் கற்றவர்களாக வல்லவர்களாக, நல்லவர்களாக வளர்ச்சி மாற்றம் அடைய வேண்டுமென்ற ஆன்ம வேண்டுதலல்லவா இது?     

இவ்வாறு மாணவர்கள் வகுப்பறையை வந்தடைந்து அங்கு அமரும் அதி அற்புதமான வகுப்பறைக் காலத்திலே அவர்கள் இன்னென்னவற்றைக் கற்க வேண்டும் தேர்ச்சி நிலை அடைய வேண்டும் என்று பாடத்திட்டமும் (syllabus) தனித்தனிப் பாடங்களின் வரைவும் (curriculum map) இயம்புகின்றன. அதனை அவர்கள் தெளிவுறக் கற்குமாறு செய்வதற்காகவே வகுப்பறைக்கு ஆசிரியர் அனுப்பப்படுகிறார்.             

எனவே கல்வி எனும் நிகழ்வில் மாணாக்கர்களுக்கு இருக்கின்ற உரிமை, எதிர்பார்ப்பு, நிறைவு, என்பவை மட்டுமே கல்விக் கூடங்களின் கற்பிப்போரின் ஒரே குறிக்கோளாக இருக்க முடியும்!! ஏனெனில் இது ஒரு சமுதாயப் பணி!!    

 வகுப்பறை என்பது சிறு சமுதாயம் என்கிறோம். அவ்வாறெனில் ஒரு சமுதாயத்தின் தன்மையை வகுப்பறையில் காண முடியும். காண வேண்டும் என்பது கடப்பாடு. ஒரு சமுதாயத்திலே எத்தனைத் தனிமனித வேறுபாடுகள் உள்ளனவோ அத்தனை வேறுபாடுகள் மாணவர்களிடையே காணப்படுவது இயற்கை என்று சென்ற பகுதியில் அறிந்தோம். இந்தத் தனிப்பட்ட பண்புகளை அறிந்துணர்ந்து அவர்களுக்குக் கல்வி புகட்ட வேணுமென்பது ஆசிரியரின்  தலையாய  பணி.    அப்படியென்றால் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் வேண்டுமே! இது என்ன நடக்கின்ற காரியமா? என நீங்கள் வினவுகிறீர்கள். நல்ல கேள்வி. ஆனால், உண்மையில் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் வேண்டுமென்பதில்லை.    

மாணவர்கள் குழுமியிருக்கும் நிலையில் அவர்களைக் குழுவாக நிறுத்தி, அவர்கள் ஒவ்வொருவரும் கற்குமாறு தனித்துவ நிலையில் பாடம் புகட்டுவதுதான் ஆசிரியப் பணியின் பெற்றியும் வெற்றியும்!

இது சாத்தியமே!!     

சிறிதோ பெரிதோ எதுவாகினும் சமுதாயம் எனும் போது அது ஒரு தொகுதி என்பதை நாமறிவோம். ஒரு சமுதாயம் பொதுவாக எவ்வாறு இருக்கும்? இயங்கும்? எனும் ஒரு அடிப்படை வினாவை இப்போது எழுப்புவது பொருத்தமாக இருக்கும். சமுதாயம் எனும் எந்த ஒன்றையும், இயல்பு விகித அமைப்பு எனும் ஒரு வரைபடத்தின் மூலம் விளக்குவார்கள். இதனை “Normal Distribution Curve”  என்பார்கள் (படத்தில் காண்க).        

இந்த வரைபடத்தின் மூலம் நாமறிவது யாதெனில், எந்த ஒரு குணாதிசயத்தை எடுத்துக் கொண்டாலும், அந்தக் குணாதிசயம் ஒரு சமுதாயத்தில், இயல்பு விகித அமைப்பிலேயே காணப்படும் என்பதேயாம். இதனை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குவது நல்லது.

அழகு எனும் ஒரு குணாதிசயத்தை எடுத்துக் கொள்வோம். இயல்பு விகித அமைப்பு வரைபடத்தின் படி, உலகில் 68%   பேர் அழகில் சராசரியர்களாகவே இருப்பார்கள். 9.2% பேர் சராசரியை விட ஒரு படி கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள், 9.2% பேர் சராசரியை விட ஒரு படி குறைவான அழகுடையவர்களாக இருப்பார்கள், 4.4.% பேர் சராசரியை விட ஒன்றரை மடங்குக் கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள்,  4.4.% பேர் சராசரியை விட ஒன்றரை மடங்குக் குறைவான அழகுடையவர்களாக இருப்பார்கள், 1.7% பேர் சராசரியை விட இரு மடங்குக் கூடுதலான   அழகுடையவர்களாக இருப்பார்கள், 1.7%  பேர் சராசரியை விட இரு மடங்குக் குறைவான  அழகுடையவர்களாக இருப்பார்கள், 0.5% பேர் சராசரியை விட இரண்டரை மடங்குக் கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள், 0.5% பேர் சராசரியை விட இரண்டரை மடங்குக் குறைவான  அழகுடையவர்களாக இருப்பார்கள், 0.1% பேர் சராசரியை விட மூன்று மடங்குக் கூடுதலான அழகுடையவர்களாக இருப்பார்கள், 0.1% பேர் சராசரியை விட மூன்று மடங்குக் குறைவான அழகுடையவர்களாக இருப்பார்கள். சமுதாய மக்களின் குணாதிசயங்கள் காட்டும் அதே அமைப்பு தான் வகுப்பறை மாணவச் சமுதாயமும் காட்டுகிறது. முன்னதிலிருந்து தானே பின்னது வருகின்றது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!!

ஒரு கரண்டி நிறைய மக்களைச் சமுதாயத்திலிருந்து எடுத்து வகுப்பறைக்குள் வைத்தால் எப்படி இருக்கும்? அவ்வாறு வைத்தது போன்ற “மாதிரி” (sample population) தான் வகுப்பறை!! எனவே கல்வியாளர்கள் நிறைந்த ஆய்வுகளுக்குப் பிறகு இயல்பு விகித அமைப்பு வரைபடத்தின் படியே வகுப்பறை இயங்குவதை உறுதி செய்திருக்கிறார்கள்.     

இப்போது, மாணாக்கர்களின் பொதுக் குணாதிசயத்தைப் புரிந்து கொள்வது எத்தனை எளிது பாருங்கள்!!

இங்கு எடுத்துக் காட்டாக நாம் எடுத்துக் கொண்ட “அழகு” எனும் குணாதிசயத்திற்குப் பதிலாகக் “கற்பிப்பதைப் புரிந்து கொள்ளும் திறன்”, “கேள்விக்குப் பதிலுரைக்கும் திறன்”, எனக் கற்றல் தொடர்பான பல்வேறு குணாதிசயங்களை மாற்றி மாற்றிப் பொருத்திக் கொண்டே போகலாம்.

இவ்விதமான இயல்பு விகிதக் “கற்றல்” குணாதிசய அமைப்போடு தான்  ஒவ்வொரு வகுப்புக்குள்ளேயும் மாணவர்கள் வருகிறார்கள். இந்த அமைப்பை மாணவர்களின் நுழைவுப் பண்புகள் (input characteristics)  என்கிறோம். ஆனால், பாடத்திட்டத்தின்படி ஒரு பாடம் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாணவரும் இன்னென்ன அறிவு (knowledge), இன்னென்ன புரிந்து கொள்ளல் (understanding), இன்னென்ன திறன் (skill),  இன்னென்ன மனப்பாங்கு (attitude) ஆகியவற்றோடு வெளி நடக்க வேண்டும் என்று தனித்தனிப் பாட வரைவு காட்டுகிறது. இதனைச் செல்கைப் பண்புகள் (output characteristics) என்கிறோம். நம் வகுப்புக்குள்ளே நுழையும் மாணவர்களுக்கு எத்தனை வலிவோடு எத்தனை ஆற்றலோடு, எத்தனை விசுவாசத்தோடு எத்தனைப் பரிவோடு எத்தனைத் துடிப்போடு கற்பித்தால் அவர்கள் கற்றலில் சிறந்து தனித்தனிப் பாட வரைவு காட்டுகிற செல்கைப் பண்புகள் அடையப் பெற்றதோடல்லாது அரசின் பொதுத் தேர்விலும் சிறப்புறுவார்கள் என்பதுதான் ஆசிரியரின் பணி.       

இந்த இயல்பு விகித அமைப்பு வரைபடம் என்பது ஆசிரியப் பயிற்சியிலே ஒரு முக்கியமான பாடமாகும். இதனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாது நீர்த்தோ விடுத்தோ ஒரு ஆசிரியப் பயற்சி இருக்குமேயானால் அதைச் சாடுவது நன்று.

சமுதாய இலக்குகள் யாவுமே ஒரு கடைக்கோடிச் சாமானிய மனிதனுக்காக வடிவமைக்கப்படுபவை. கல்வி எனும் சமுதாய இலக்கில், வகுப்பறையில் பாடத்திட்ட இலக்குகளும் அவ்வாறானவையே. எவனொருவன்/எவளொருவள் கடைசிப் பெஞ்சில் அமர்ந்தபடி என்னால் “பட்டம் பெற இயலுமா?” என்ற மனக் கிலேசத்துடன் வகுப்பறை விட்டத்தையும், ஜன்னல் வழி, விண்ணில் சலசலக்கும் பட்டத்தையும் மாறிமாறிப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடிப் பதட்டத்துடன் அமர்ந்திருக்கிறானோ/ளோ அவனை/அவளைக், கனிவான கண்ணோட்டம் எனும் பேரொளி காட்டி, இணக்கமான அசைவுகளின் மூலம், தாயினும் சாலப் பரிந்து, கல்வி எனும் கரத்தால் அரவணைத்து, கற்பித்தல் எனும் கன்னல் சாற்றில் கரைந்த கற்கண்டாய்ச் சித்தாந்தங்களைப் பதமாய்ப் பரிமாற, அப்பரிமாறலில் அப்பரிமாற்றத்தில், கற்றல் பெற்று அக்குழந்தை உருமாற்றத்தோடு உளமாற்றமும் அடைந்து சமுதாயத்தின் பால் பற்று கொள்வான்/கொள்வாள் எனில் அந்த ஆசிரியரைத் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தகுமே! தகுமே!                  

இன்னமும் பேசுவோம்,

அவ்வை மகள் 

 

படத்திற்கு நன்றி: http://serc.carleton.edu/econ/experiments/how.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆசிரியரைத் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் வைத்துப் பார்ப்பது தகுமா?

  1. இந்த் கட்டுரையை வரவேற்று, சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். எனக்குக் கல்வித்துறை பீஷ்மர் ஜான் டீவி ~ learning hierarchy ~டொனால்ட் ஷான் ~கிரிஸ் ஆர்கிரிஸ் ~பீட்டர் செஞ்சே. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கல்வி அளிக்கும் திறன், மற்ற தடுமாற்றங்களில், காணாமல் போய்விட்டது. அந்த சூழ் நிலையில் learning hierarchies, அளிக்கப்பட்ட காலம் (available time), ஒதுக்கப் பட்டுள்ள காலம் (allocated time), கற்பித்தலுக்கானக் காலம் (instructional time), நுழைவுப் பண்புகள் (input characteristics), இன்னென்ன அறிவு (knowledge), இன்னென்ன புரிந்து கொள்ளல் (understanding), இன்னென்ன திறன் (skill),  இன்னென்ன மனப்பாங்கு (attitude), செல்கைப் பண்புகள் (output characteristics) ஆகியவற்றை திட்டமிட்டு, கையாண்டால், கல்வியின் திறன், பயன், வாழ்வியல் எல்லாம் உயரும். என் வழி சற்றே மாறுபட்டது. 1. ஆசிரியர் தொழில் செய்கிறார். தொழில் வணக்கத்துடன் சரி. அதீதமாக தொழுதால், மண்டைக்கனம் ஏறிவிடுகிறது, இங்கே. அடக்குமுறை தாண்டவம் ஆடுகிறது.மாணவரின் புரிந்துகொள்ளலை மேன்படுத்தவேண்டும்; ஆசிரியர் அதற்கு இசைந்து நடக்கவேண்டும்.உருப்போடும் வழக்கம், மதியிழந்த மதிப்பீடு விதிகள் விலக்கப்படவேண்டும்.Creativity is key.இன்னம்பூரான்08 02 2012 

Leave a Reply

Your email address will not be published.